ராசிமணல்
--------------
காவிரியில் தமிழகத்திற்கு கர்நாடகம் தண்ணீர் தர மறுக்கிறது. கர்நாடகத்தில் 222 மி.மீ மழை சராசரியாக பெய்கிறது. அங்குள்ள 231 அணைகளில் 580 டி.எம்.சி நீரை எடுக்கலாம். தமிழகத்தில் 116 அணைகளில் 170 டி.எம்.சி தண்ணீரை சேமிக்கலாம். இந்த நிலையில் தமிழகத்தினுடைய காவிரி நீரை தற்காத்துக் கொள்ளவும், நீர்வளத்தை மேலும் பாதுகாக்கவும் ராசிமணல் திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட வேண்டும். சுமார் 300 கோடி ரூபாயில் 100 டி.எம்.சி தண்ணீர் வரை இந்த அணையில் தேக்கலாம். ராசிமணல் அணையை 1961ஆம் ஆண்டு கட்டவேண்டுமென்று அன்றைய முதல்வர் காமராஜரால் அடிக்கல் நாட்டப்பட்டது. எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் சட்டமன்றத்தில் பழ.நெடுமாறனால் இந்த பிரச்சனை எழுப்பப்பட்டது. அப்போது இதற்கான ஆவணங்களை எல்லாம் தயாரித்துக் கொடுத்த நிகழ்வுகளெல்லாம் நினைவுக்கு வருகிறது.
அப்போது இது குறித்தான தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழகத்திற்கு வரும் நீர்வளத்தை தேக்கிப் பயன்படுத்திக் கொள்ள நமது உரிமையை நிலைநாட்டதான் ராசிமணல் திட்டம். அதேபோல, மேகதாட்டு கட்டவும் கர்நாடகத்திற்கு உரிமை இல்லை என்று அன்று சட்டமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது. அந்த தீர்மானத்தை மத்திய அரசின் அனுமதிக்கு கொண்டு சென்றபோது அது கிடப்பில் போடப்பட்டது. ராசிமணல் அணையின் சுற்றளவு 40 கி.மீ, நீளம் 250 மீட்டர், உயரம் 20 மீட்டர் ஆகும். மேகதாட்டுவில் இருந்து ஒகேனக்கல் வரை 60 கி.மீ. தூரம்.
அதற்கடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட வனத்துறை பகுதி வருகிறது. இதன் அருகாமையில் தமிழகத்தின் எல்லைப் பகுதியான ராசிமணல் அணைத் திட்டம் அமைய வேண்டும். இதன் மேல்பகுதியில் 18 கி.மீ தொலைவில் இருபுறமும் மலைகள் உள்ளன. இதனால் எதிர்பாராத அளவில் நீர்வரத்து ராசிமணலில் எளிதாக வந்து சேரும். இந்த அணை கட்டப்பட்டால் வருடத்திற்கு 230 டி.எம்.சி. நீர் வீணாகபோகும். மழை,வெள்ளநீர் உள்பட சேமிக்கலாம். தருமபுரி, கிருண்ஷகிரி மக்களுக்கு இத்திட்டம் பயன்படும்.
எனவே தமிழகம் தொலைநோக்கோடு, இந்த திட்டத்தினை நிறைவேற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
15-07-2019
No comments:
Post a Comment