Sunday, July 28, 2019

#பாலஸ்தீனம் #இஸ்ரேல்

கடந்த 1947-இல் ஐ.நா. #பாலஸ்தீனத்தை, வெளியிலிருந்து அங்கு வந்து குடியேறிய யூதர்களுக்கும் அங்கேயே 1400 ஆண்டுகளாக வசித்துவந்த பாலஸ்தீனர்களுக்கும் இடையே பிரித்துக் கொடுப்பதென்று முடிவுசெய்தது. தங்கள் பாலஸ்தீனம் முழுவதும் தங்களுக்கே வேண்டும் என்ற எண்ணத்தில் பாலஸ்தீனர்கள் ஐ.நா.வின் அந்த ஏற்பாட்டை ஒத்துக்கொள்ளாமல் யாசர் அராபத் உட்பட எல்லா பாலஸ்தீனத் தலைவர்களும் முழுப் பாலஸ்தீனத்தையும் கைப்பற்றுவதென்று முடிவுசெய்து அதற்காகப் போராடினார்கள். யூதர்கள் தங்களுக்கென்று ஐ.நா. ஒதுக்கிய இடங்களில் இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கிக்கொண்டதோடு பாலஸ்தீனர்களோடும் மற்ற அரபு நாடுகளோடும் பல போர்கள் புரிந்து எல்லாவற்றிலும் அவர்களே ஜெயித்து பாலஸ்தீனர்களுக்கென்று ஐ.நா. ஒதுக்கிய இடங்களிலும் நிறைய இடங்களைப் பிடித்துக்கொண்டார்கள். யூதர்களின் ஆதிக்கம் பாலஸ்தீனத்தில் அதிகரித்துக்கொண்டே போனபோது அராபத் போன்ற தலைவர்கள்கூட முழுப் பாலஸ்தீனத்தையும் யூதர்களிடமிருந்து கைப்பற்ற முடியாததின் நிதர்சனத்தை உணர்ந்து வன்முறையில் போராடுவதை விடுத்து ஆஸ்லோவில் ஏற்பட்ட சமாதான ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டனர். ஆனால் பாலஸ்தீனர்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்த நேத்தன்யாஹு இஸ்ரேல் பிரதமராகப் பதவியேற்றார். இவர் ஆஸ்லோ ஒப்பந்தத்தை நிறைவேற்றவே இல்லை. அதுவரை பாலஸ்தீனர்களிடமிருந்து பறித்துக்கொண்ட இடங்களை விடுவதாகவும் இல்லை. பாலஸ்தீனர்களுக்குரிய இடமான வெஸ்ட் பேங்கில் யூதர்களுக்காக குடியிருப்புகளைக் கட்டிக்கொண்டே போனார். 2019 ஏப்ரல் 9-இல் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக வெஸ்ட் பேங்கையே இஸ்ரேலின் இறையாண்மைக்குக் கீழ் கொண்டுவரப் போவதாக அறிவித்த பிறகு நினைத்த அளவு வெற்றிபெறவில்லை என்றாலும் 35 சீட்டுகள் பெற்று இன்னும் சில கட்சிகளைச் சேர்த்துக்கொண்டு அரசு அமைக்கப் போகிறார். 120 அங்கத்தினர்கள் உள்ள க்னெசட் என்னும் இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் 35 சீட்டுகளே வாங்கிய இவர் ஆட்சி அமைத்தாலும் அது நிலைக்குமா என்று சந்தேகமாக இருக்கிறது. மேலும் இவர் மேல் ஊழல் குற்றச்சாட்டுக்கள் நிறைய இருக்கின்றன. இதனாலும் பதவி பறிபோகும் வாய்ப்பு இருக்கிறது.
ஒரு குற்றவாளி பதவி ஏற்கும்போது அப்பாவி பாலஸ்தீனர்கள் தினம் தினம் பயந்து பயந்து வாழ்கிறார்கள். கல்யாண ஏற்பாடுகளைச் செய்யும் ஒரு கம்பெனியை வெஸ்ட் பேங்கில் நடத்தும் சமர் தீத்தியும் அவருடைய மகள் தீனா தீத்தியும் வெஸ்ட் பேங்கின் எதிர்காலம் என்னவாகும் என்று கவலைப்படுகிறார்கள். இங்கு இஸ்ரேலை எதிர்த்து ஆயுதம் தாங்கிப் போரிட்டவர்கள் சிலர் சிறையில் இருக்கிறார்கள்; இன்னும் சிலர் தாங்கள் பட்டபாடெல்லாம் வீணா என்று மனம் வெதும்புகிறார்கள். மூத்த தலைமுறையினர் வெஸ்ட் பேங்கும் காஸாவும் தங்களுடைய சுதந்திர நாடாக திகழும் என்று நம்பிக்கொண்டிருந்தனர். ஆனால் இளைய தலைமுறையினருக்கோ சோதனைச் சாவடிகளும் அவை அவ்வப்போது அடைக்கப்படுவதும்தான் தெரியும். ஒரு பாலஸ்தீனர் தன் தந்தையை மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்ல வேண்டுமென்றால் சில நிமிஷங்களில் சென்றுவிடலாம். ஆனால் இஸ்ரேல் அரசிடமிருந்து பெர்மிட் வாங்குவதற்கு சில வாரங்கள் ஆகலாம்.
வெஸ்ட் பேங்கையும் இஸ்ரேல் தன் இறையாண்மையின் கீழ் கொண்டுவந்துவிட்டால் வெஸ்ட் பேங்க் பாலஸ்தீனர்கள் இஸ்ரேலில் இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தப்படுவார்கள். இஸ்ரேல் தென் ஆப்பிரிக்காபோல் ஒரு இன ஒதுக்கல் நாடாக மாறிவிடும். அப்போது அது உலகின் நிந்தனையிலிருந்து எப்படித் தப்பித்துக்கொள்ளும் என்கிறார்கள் சில பாலஸ்தீனர்கள்.
நேத்தன்யாஹு வெஸ்ட் பேங்கை இஸ்ரேலோடு இணைத்துக்கொண்டால் இஸ்ரேலில் பாலஸ்தீனர்கள் பெரும்பான்மை ஆகிவிடுவார்கள். அப்போது இஸ்ரேல் ஒரு யூத நாடாக மட்டும் இருக்க முடியாது. பாலஸ்தீனர்களுக்கு இஸ்ரேலில் முழு குடிமையுரிமைகளும் கொடுக்கவில்லையென்றால் இஸ்ரேல் ஒரு குடியரசாக விளங்க முடியாது. இஸ்ரேல் ஒரு யூதக் குடியரசாக விளங்க வேண்டும் என்பது நேத்தன்யாஹு போன்ற இஸ்ரேல் தலைவர்களின் விருப்பம். ஆனால் அவர்களின் இந்த விருப்பம் நிறைவேறாது. அதனால் பாலஸ்தீனர்களை பாலஸ்தீனத்தை விட்டே வெளியேற்றிவிட வேண்டும் என்பது இஸ்ரேலின் அரசியல் தலைவர்களின் நீண்ட நாள் திட்டம். இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு இடமாகப் பிடித்துக்கொண்டு வருவதைப் பார்த்தால் நீதிக்குத் தலைவணங்காத இந்த யூதர்கள் அதையும் செய்வார்கள்போல் தெரிகிறது.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...