கோவை கம்பன் பி.ஜி.கருத்திருமன் -
P. G. Karuthiruman.
______________________________________________
தமிழக சட்டமன்றத்தில் எதிர்கட்சித் தலைவராகவும், பட்டிமன்ற நடுவராகவும், நாவலராகவும் , கம்பனின் கவிரசத்தை இனிய குரலில் விளக்கும் வல்லமை கொண்டவர்தான் பி.ஜி.கருத்திருமன்.
ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் பகுதியில் நன்செய் புளியம்பட்டியில் பிறந்து, தன்னுடைய விவசாயத்தையும் கவனித்துக்கொண்டு, அரசியல், இலக்கியம் என நாடறிந்த நல்லவராக, 1960-70களில் தமிழகச் செய்தித்தாள்களில் இடம்பிடித்தவர். நம்பியூர் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகவும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் அவர் ஆற்றிய பணிகள் பொது நலன் சார்ந்தே அமைந்தது.
கல்லூரிகாலங்களில் இவரை பழைய சட்டமன்ற விடுதியில் இருந்த காங்கிரஸ் சட்டமன்ற கட்சி அலுவலகத்தில் சந்திப்பதுண்டு. இன்றைக்கு அந்தப் பகுதியில் தான் தலைவர் கலைஞரால் புதிய பசுமையான சட்டமன்ற வளாகம் கட்டப்பட்டது.
இந்த இடத்தில் ஒன்றைச் சொல்லவேண்டும் பி.ஜி.கருத்திருமன், மூக்கையா தேவர், ம.பொ.சி, அன்பில் தர்மலிங்கம் ஆகியோர் ஒருசேர அங்கிருந்த வராண்டாவில் சந்தித்துப் பேசிக்கொண்டதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் கோவில்பட்டி சோ.அழகிரிசாமி அவர்களோடு சென்றபோது கவனித்ததுண்டு.
அன்றைக்கு மாற்று முகாமில் இருந்தாலும் அரசியல் நாகரிகத்தோடு அனைவரும்பழகுவதும் நட்பு, சகோதரத்துவத்தோடு அரசியல் மனமாச்சர்யங்களைக் கடந்து இவர்களுடைய பேச்சுகள் இருந்ததை கவனிக்க முடிந்தது. இன்றைக்கு இதையெல்லாம் பார்க்கமுடியுமா?
1970காலகட்டங்களில், எங்களைப் போன்ற மாணவர்களை அழைத்துக்கொண்டு, வாலாஜா சாலையிலுள்ள அண்ணாசிலைக்கு எதிர்புறம் இருந்த கிருஷ்ணா உடுப்பி ஹோட்டலில் பிரசித்தி பெற்ற ரவா இட்லியும், காபியும் வாங்கிக் கொடுத்து உபசரிப்பார். அரசியலையும், கம்பனையும், தமிழையும் எங்களிடம் வகுப்பெடுப்பது போல அவர் பேசுவார்.
என்னை “கோவில்பட்டி தம்பி” என்று பிரியத்தோடு அழைப்பார். திரு.அகிலன் அவர்களின் புதல்வர் அகிலன் கண்ணன் நடத்தும் “தமிழ்புத்தகாலயம்”
‘கம்பர்’ என்ற தலைப்பில் இவருடைய படைப்பை 1970களில் வெளியிட்டது.
அதில் கையெழுத்திட்டு எனக்கொரு பிரதியைத் தந்தார். அப்பிரதி தற்போது பழையதாகி தாள்களும் பைண்டிலிருந்து வெளிவந்து தனித்தனியாகி பழைய புத்தகமாகி விட்டது. கருத்திருமன் அவர்களின் கம்பன் நூல் மறுபதிப்பு வரவில்லையே என்ற வருத்தம் என்போன்றவர்களுக்கு இருந்ததுண்டு.
கம்பனின் கவியும் அதனுடைய பொருளும், கருத்தும் அந்நூலில் அற்புதமாக வடித்திருந்தார். அந்த நூலைப் பாராட்டி முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். இராதாகிருஷ்ணன், பெருந்தலைவர் காமராஜர், திருவாங்கூர் திவான் சர்.சி.பி.இராமசாமி அய்யர், சி.சுப்பிரமணியம் ஆகியோர் அணிந்துரைகளில் தங்கள் கருத்துகளைச் சொல்லியிருந்தனர்.
கம்பராமாயணத்தில் உள்ள 12,000பாடல்களில் 1008பாடல்களில் கம்பனின் இராமகாதையை முற்றிலும் அறியக்கூடிய வகையில் சுருக்கமாகச் சொன்னவர்தான் இந்த கோவை கம்பன். பி.ஜி.கருத்திருமன். வர்த்தமான் பதிப்பகம் தற்போது “கம்பர் : கவியும் கருத்தும்” என்று இந்நூலை மறுபதிப்பு செய்து வெளியிடுவதென்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.
இன்றைக்கு சட்டமன்றத்தில் குழாயடிச் சண்டைகள் போல சண்டைகள் நடக்கும்போது, எதிர்கட்சித் தலைவராக கருத்திருமன் வைத்த கருத்துகள் யாவும் ஆரோக்கியமானவை. விமர்சனங்களை வைக்கும் போது நாகரிகமாகவும், லாவகமாகவும், சற்று வேடிக்கையும் கிண்டலுமாக எடுத்துவைப்பார்.
ஒருமுறை திரு.கருத்திருமன் அவர்கள், “அடைந்தால் திராவிட நாடு, இல்லாவிட்டால் சுடுகாடு என்றீர்கள், இப்போது சுடுகாட்டிலா உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அன்றைய முதல்வர் தலைவர் கலைஞர் அவர்கள் நான், “சுடுகாட்டில் இல்லை, உங்களோடு உட்கார்ந்து கொண்டிருக்கிறோம்!” என்று கூறினார். அவையினரோடு சேர்ந்து கருத்திருமனும் சிரித்துக் கொண்டே அமர்ந்துவிட்டார்.
அண்ணாவின் ஆட்சிகாலத்தில் உணவுக்குப் புளித் தட்டுப்பாடு ஏற்பட்டது. அன்று புலிப் பிரச்னைகள் இந்த அளவுக்குக் கிடையாது. புளிப் பிரச்னைதான் அதிகம். மிகக் கூடுதலான விலைக்குக் கூட தமிழகத்தில் புளி கிடைக்கவில்லை. அந்த நேரம் காங்கிரசின் ஆட்சியில் இருந்த கர்நாடகத்தின் மைசூர் பகுதிகளில் புளி ஏகபோகமாக விளைந்து இருந்தது.
முதல்வரும் எதிர்க் கட்சித்தலைவரும் கலந்து பேசி மைசூரில் இருந்து மத்திய அரசு மூலம் தமிழகத்துக்கு தட்டுப்பாடு இன்றி புளி கொண்டுவர உதவினர். இதனால் புளிப் பஞ்சம் நீங்கியது. இதுபற்றி ஒரு முறை சட்டமன்றத்தில் விவாதம் நடைபெற்ற போது, திரு. பி.ஜி. கருத்திருமன் எழுந்து , “ புளிப் பிரச்னை யாரால் தீர்க்கப் பட்டது ?” என்று கேட்டார்.
உடனே அண்ணா எழுந்து “ புளிப் பிரச்னை தீர்ந்தது புளிய மரத்தின் உதவியால் “ என்றார். சட்டமன்றத்தில் சிரிப்பலைகள் தொடர கருத்திருமனும் சிரித்தார். இப்போது போல் யாரும் மேசைகளைத் தட்டவில்லை. அப்போது இருந்த இதுபோல் அரசியல் நாகரிகம் இப்போது உண்டா?
கருத்திருமன் அவர்களுடைய புதல்வர் பிரகாசன் என்னுடைய உறவினர் கோவை திரு.பி.வெங்கடேஷ் அவர்களுடைய நெருங்கிய நண்பர். கருத்திருமன் அவர்களுடைய பண்புகளை அவருடைய குடும்பத்தார்களிடமும் இன்றைக்கும் காணமுடிகிறது.
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் முக்கிய தளபதிகளில் ஒருவராக திரு.கருத்திருமன் இருந்தார். தமிழக சட்டமன்றத்தில் அவருடைய கருத்துகளை கருத்திருமன் பிரதிபலித்தார்.
இப்படிப்பட்ட கருத்திருமன்கள் அன்று காங்கிரஸில் இருந்தார்கள்.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
23-07-2019.
#KsRadhakrishnan #KSR_Posts #PGKaruthiruman #கருத்திருமன்
No comments:
Post a Comment