#பாலாற்றின் குறுக்கே 40 அடியாக உயர்த்தப்படும் தடுப்பணையால் தமிழகத்திற்கு ஒரு சொட்டு கூட தண்ணீர் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது. பாலாற்றின் குறுக்கே ஆந்திர மாநிலத்தில் 22 அடியாக உள்ள தடுப்பணைகளை 40 அடியாக உயர்த்திக் கட்டும் பணியில் ஆந்திர அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமென்று தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தின் முக்கிய நதிகளில் ஒன்றான பாலாற்றின் மூலம் வடமாவட்டங்களில் 4.25 லட்சம் எக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. இந்த நிலையில், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு கணேசபுரம் பகுதியில் பாலற்றின் குறுக்கே புதிய தடுப்பணையை கட்ட முயன்றது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது. இதையடுத்து 2009ஆம் ஆண்டு மத்திய நீர்வள குழுமத்துடன் 2 மாநில அரசுகளும் கலந்து பேசி சுமூக முடிவு காண வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. இதையடுத்து ஆந்திர அரசு பல்வேறு இடங்களில் தடுப்பணைகளை கட்டும் பணியை தொடர்ந்தது. இந்த நிலையில் தமிழக அரசு கடந்த 2011ஆம் ஆண்டு மீண்டும் ஒரு மனுத்தாக்கல் செய்தது.
ஆந்திர அரசை கண்டித்து தமிழக அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், பாலாறு பாதுகாப்பு சங்கங்கள் ஆகிய அமைப்புகள் போராட்டங்களை நடத்தின. இதனால் ஆந்திர அரசு தற்காலிகமாக அந்த பணிகளை நிறுத்தியது. அதன்பிறகு, தமிழக அரசு தொடர்ந்து வழக்கை நடத்தாததால், கடந்த 2016ஆம் ஆண்டு ஆந்திர அரசு பெரும்பள்ளம், எஸ்.எம்.பள்ளம், சாமுண்டிபள்ளம், ஒக்கல்ரேவ் ஆகிய இடங்களில் பாலற்றின் குறுக்கே 5 அடியில் தடுப்பணைகளை கட்டத் துவங்கியது. தமிழக - ஆந்திர எல்லைப் பகுதியான வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த புல்லூர் கனகநாச்சியம்மன் கோயிலின் அருகே 5 அடி உயரமாக இருந்த தடுப்பணையை 12 அடியாக உயர்த்திக் கட்டியது.
இதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், அப்போது ஆந்திர முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடுவின் ஆட்சியில், பாலற்றின் குறுக்கே இருந்த அனைத்து தடுப்பணைகளின் உயரத்தையும் 12 அடியாக உயர்த்தி தற்போது அது 22 அடியாக உயர்த்திக் கட்டியுள்ளது.
இந்த நிலையில் 22 தடுப்பணைகளையும் தற்போது 40 அடியாக உயர்த்திக் கட்ட அந்த மாநில அரசு ரூபாய். 43 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. ஆந்திர மாநில தேர்தல் முடிந்தவுடன் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தடுப்பணைகளை கட்டும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
ஆந்திர மாநிலம் குப்பம் மண்டலத்துக்குட்பட்ட கிடிமாணிபெண்டா செல்லும் சாயின் அருகேயுள்ள கங்குத்தி ஊராட்சியில் பாலற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் உயரம் 40 அடியாக அதிகரிக்கப்படும் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடையும் நிலையில் உள்ளது. இதுபோல, மற்ற தடுப்பணைகளையும் விரைவாக கட்டி முடிக்கும் எனத் தெரிகிறது. எனவே பெருமழை பெய்தாலும் இனி தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காத நிலை உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஆந்திர அரசு இத்தனை தடுப்பணைகளை கட்டியுள்ள நிலையில் தமிழக அரசு 2 தடுப்பணைகள் குறித்து மட்டுமே உச்சநீதிமன்றத்தில் பேசி வருகிறது. தற்போது உள்ள வழக்கில் 22 தடுப்பணைகளின் ஆதாரத்தையும் திரட்டி உரிய முறையில் வாதத்தை முன்வைக்க வேண்டும். வழக்கை துரிதமாக நடத்தி இரு மாநில முதல்வர்களும் கலந்து பேசி பாலாறு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
அதேபோல, பாலாறு விவகாரத்தில் நதிநீர் ஆணையம் ஒன்றை அமைக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்த பாலாற்றின் தண்ணீரை நம்பியே வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, உள்ளிட்ட மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகள் உள்ளது. எனவே தமிழக அரசும், மத்திய அரசும் இதை கவனிக்குமா?
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
30-07-2019
No comments:
Post a Comment