இசைமேதை முத்துசாமி தீட்சிதரும், சாத்தூர் கரிசல்காடும், எட்டையபுரமும்.
------------------------------------------
சமீபத்தில் எட்டையபுரத்திற்கு சென்றபோது, இசை ஆளுமை முத்துசாமி தீட்சிதர் நினைவு வந்தது. அவர் பெயரில் எட்டையபுரம் பேருந்து நிலையத்தின் அருகில் நினைவு மண்டபம் அமைந்துள்ளது. தஞ்சாவூர் தீரத்துகாரருக்கு வானம் பார்த்த கரிசல் பூமி எட்டையபுரத்திற்கு என்ன சம்மந்தம் என்று உடன் வந்தவர்கள் கேட்டனர். அவரைக் குறித்து எட்டையபுரத்துக்கான தொடர்புகளை விரிவாக என்னுடைய நிமிர வைக்கும் நெல்லை என்ற நூலில் கடந்த 2004இல் குறிப்பிட்டிருந்தேன்.
அவர் எட்டையபுரத்திற்கு செல்லும் வழியில் சாத்தூர் பகுதியில் விவசாய நிலங்கள் பாலம் பாலமாக வறட்சியில் இருந்ததை பார்த்து வேதனைப்பட்டார். அங்கு வறண்டு கிடந்த கரிசல் காடுகளைக் கண்டு மனமுருகி ‘ஆனந்த மருதார் கர்ஷினி அம்ருதவர்ஷினி’ ராகம் பாடியபொழுது மழை பெய்த இடமானது எட்டையபுரம் மற்றும் கொல்லப்ட்டி ஜமீன்களுக்கு எல்லையாக இருந்த பகுதியாகும். அதற்கு எல்லைக்காடு என்று அழைக்கப்பட்டது. இந்த நிலம் அவரது பாலுசாமி தீட்சிதருக்கு கைமாறியது. அப்போது எட்டையபுரம் சமஸ்தானத்தின் திவானாக ராமச்சந்திர பிள்ளை இருந்தார். அவர் வேப்பிலைப்பட்டி சத்திரத்தில் வசித்து வந்தார். இன்றைக்கும் அந்த 60 ஏக்கர் நிலத்தில் பருத்தி மிளகாய் விளைகின்றன.
முத்துசாமி தீட்சிதரும், அவரின் சகோதரர் பாலுசாமி தீட்சிதர் எட்டையபுரம் சமஸ்தானத்தால் ஆதரிக்கப்பட்டவர். எட்டையபுர சமஸ்தானம் முத்துசாமி தீட்சிதரை தனிக்கவனம் எடுத்து மரியாதையோடு நட்பு பாராட்டினர். அதுபோலவே, உமறுப்புலவர், சுப்பிரமணிய பாரதியார், நாவலர் சோமசுந்த பாரதி போன்றவர்களும் இந்த சமஸ்தானத்தால் கௌரவப்படுத்தப்பட்டனர். இசை, இலக்கியம், கல்வி, நலத்திட்டங்களை பேணிக்காத்தது தான் எட்டையபுரம் சமஸ்தானம். எட்டையபுரம் சமஸ்தானத்தை குறித்தான விரிவான பத்தியை தினமணியில் 2015இல் எழுதியுள்ளேன்.
#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
14-07-2019
No comments:
Post a Comment