தமிழ் புதினங்களின் முன்னோடி மாயூரம் முனிசீப் வேதநாயகம் பிள்ளை நினைவு தினம்
இவர் தமிழ் நாவலின் தந்தை என அழைக்கப்படுபவர். இவர் தமிழின் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரத்தையும், சுகுண சுந்தரி கதையையும் படைத்தவர்.
பிரதாப முதலியார் சரித்திரம் அற்புதச் சம்பவங்கள் நிறைந்த ஒன்று. சத்தியபுரி என்னும் கிராமத்திலுள்ள நிலமானியக் குடும்பங்கள் இரண்டின் இணைவு பற்றியது அதன் கதைக் கரு. சாதாரணக் குடும்பக் கதைதான் இது என்றாலும், இடம்
பெறுகின்ற நிகழ்ச்சிகள், திடீர் சம்பவங்கள் போன்ற பல அம்சங்களால் துப்பறியும் கதை போலவும், தலைவி ஞானாம்பாள் மாறுவேடத்தில் சென்று அரசாளுதல் முதலியன செய்தலால் வரலாற்றுப் புதினம் போலவும், கிளைக்கதைகள் நீதிக் கருத்துகள் இடம்பெறுதலால் நீதிக்கதை போலவும் அமைந்துள்ளது.
சுகுணசுந்தரி கதை, கதைத்தலைவியை ஓர் அரசன் கவர்ந்து செல்கிறான். தலைவி வழியில் கன்னி மாடத்தில் புகுந்து கொள்கிறாள். அரசன் தேடிக் கண்டுபிடிக்கிறான். அதற்குள் அந்த அரசனுடைய ஆட்சியை அமைச்சன் கைப்பற்ற முயல்கிறான். போராட்டங்கள் வளர்கின்றன.
இவரின் முதல் நாவல் சமூக நாவலுக்கு வித்திட்டது என்றால், இவரின் அடுத்த நாவலான சுகுண சுந்தரி கதை வரலாற்று நாவலுக்கு அடிகோலியது எனலாம்.
தமிழ்க் கவிதைகளின் புதிய பாணிக்கு வேதநாயகம் பிள்ளை வித்திட்டார் என்றால் அது மிகையில்லை. இவர், வீணை வாசிப்பதிலும் வல்லவர்.
இவரது சமகாலத் தமிழ் அறிஞர்களான மீனாட்சிசுந்தரம் பிள்ளை, வடலூர் ராமலிங்க அடிகளார், திருவாவடுதுறை மடத்தின் மகாசன்னிதானம் சுப்ரமணிய தேசிகர், கோபாலகிருஷ்ண பாரதியார் ஆகியோரிடம் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தார். 1805 முதல் 1866 வரையிலான நீதிமன்றத் தீர்ப்புகளை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்து "சித்தாந்த சங்கிரகம்" என்ற நூலை வெளியிட்டார்.
சட்டவிதிகளைத் முதன்முதலாகத் தொகுத்து ஆங்கிலத்தில் வெளியிட்டார். நீதிமன்றத் தீர்ப்புகளை முதன்முதலில் மொழிபெயர்ப்பு செய்த பெருமைக்குரியவரும் இவரே.
தமிழ் உரைநடையை வளம்பெறச் செய்த முன்னோடிகளில் தலைசிறந்தவராக வேதநாயகம் பிள்ளை கருதப்படுகிறார்
இவர், இந்துவாகப் பிறந்திருந்தாலும், கிறிஸ்தவ மக்களுக்கும் தொண்டாற்றினார். கிறிஸ்தவ வழிபாட்டுப் பாடல்கள், கிரேக்கம், லத்தீன் மற்றும் ஆங்கில மொழிகளிலேயே இருந்தன. தமிழ் கிறிஸ்தவர்கள் தமிழிலேயே பாடல்களைப் புரிந்துகொண்டு வழிபட வேண்டும் என்பதற்காக, திருவருள்மாலை, திருவருள் அந்தாதி, தேவமாதா அந்தாதி, தேவ தோத்திர மாலை, பெரியநாயகி அம்மைப் பதிகம் போன்ற இலக்கியங்களைப் படைத்தார். மனிதநேயத்திலும் மகத்தான மனிதராகவே திகழ்ந்தார். அந்தக் காலக்கட்டத்தில் தமிழகத்தில் பெரும்பஞ்சம் ஏற்பட்டபோது, தனது சொத்துகள் அனைத்தையும் தானமாகக் கொடுத்தார். குழந்தைத் திருமணம், உடன்கட்டை ஏறும் வழக்கம் போன்றவற்றை கடுமையாக எதிர்த்தார். தமிழ் இலக்கிய வரலாற்றில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தினார். மறுமலர்ச்சிக் கவிஞர், சமூக சீர்திருத்தவாதி எனப் போற்றப்பட்ட மாயூரம் வேதநாயகம் பிள்ளை, தன்னுடைய 63-ஆவது வயதில் 21.07.1889 அன்று இவ்வுலகைவிட்டு மறைந்தார்.
No comments:
Post a Comment