அறிவாளிகள் மத்தியில் இப்படியும் புரியாத உலகம்.
-------------------------------------
பிரபல ஆங்கில தினசரி ஏட்டின் சிறப்புச் செய்தியாளர் ஒருவர் இன்று காலை சில சந்தேகங்களையும், தரவுகளையும் கேட்டுத் தொடர்பு கொண்டார். அவருடைய கேள்வி, பேச்சுப் போக்குகள் எல்லாம் தரமற்ற தகுதியற்ற, எந்த விசய ஞானமும் தெரியாத, காசு கொடுத்து ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களைப் பற்றி பிரம்மிப்பாக அப்போது பேசி வந்தார்.
உடனே மிஸ்டர், நீங்கள் எத்தனை வருடம் இந்த பத்திரிக்கைத் தொழிலில் இருக்கிறீர்கள் என்று கேட்டேன். ஒரு பதினைந்து ஆண்டுகள் இருக்கும் என்றார். மகிழ்ச்சி என்றேன். நான் அடுத்து அவரிடம், சென்னை ராஜதானியின் அன்றைய பிரிமீயர் (அதாவது முதலமைச்சர்) ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் பணிகள் தெரியுமா? என்றேன். தெரியாது. பெரைக் கேள்விப்பட்டுள்ளேன் என்றார். அவர் தானய்யா சுதந்திர இந்தியாவில் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக இடஒதுக்கீட்டை கொண்டு வந்தார். அதற்காக அன்றைய பிரதமர் நேருவையே எதிர்த்து பேசினாரே.
அதுமட்டுமல்லாமல், தனது பதவியையே துச்சமென்று தூக்கியெறிந்துவிட்டு வடலூர் வள்ளலார் மடத்திற்க்கு சென்றுவிட்டார். சரி. தமிழ்நாட்டு அணைகளை எல்லாம் திட்டமிட்டது ,தமிழில் கலைகளஞ்சிய தொகுதிகளை,தமிழ் பயிற்சி மொழி அறிமுகம் படித்தியது ரெட்டியார் தானய்யா. விவசாய முதல்வர், சமூகநீதியின் முதல்வர், பாட்டாளியின் முதல்வர் என பெயர் பெற்றவர்களுடைய சாதனைகளை எல்லாம் தெரிந்து கொள்ளாமல் பெயர் மட்டும் தான் தெரியும்னு பேசறீங்களே நீங்களெல்லாம் என்றேன்.
அடுத்து முதல்வராக இருந்த இராஜபாளையம் குமாரசாமி ராஜாவைப் பற்றி தெரியுமா? என்றேன். தெரியாது என்றார். அவர் நேர்மையின் முதல்வர். தனது கோடிக்கணக்கான சொத்துக்களை பொதுநலத்திற்காக அர்ப்பணித்தவரய்யா. அவர் ஒரிசாவின் கவர்னராகக் கூட பொறுப்பில் இருந்தாரய்யா. பண்டித நேரு அவரை அணுகிய போது அவரிடமே மறுத்து தனது ஊரில் பெரிய நூலகமும், கலைக் கூடமும், வேறு பணிகள் இருப்பதால் எனக்கு வேண்டாமென்று மறுத்தும், நேருவின் சலியாத வேண்டுகோளால் அந்த பதவியை ஏற்றார். தமிழறிஞர்களான கி.வா.ஜெகந்நாதன், மு.வரதராசனார், பெரியசாமி தூரன், ஜெகந்நாத ராஜா மற்றும் இசைவாணர்களோடு விவாதித்துக் கொண்டே இருப்பது இவருடைய வாடிக்கை. கவர்னராக இருந்த போது ஆங்கிலம் தெரிந்திருந்தாலும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் பிறமாநிலத்தில் தமிழில் உரை நிகழ்த்திய ஒரே மாமனிதர் குமாரசாமி ராஜா.
ஓமந்தூர் ரெட்டியாரையும், குமாரசாமி ராஜாவைக்கூட எதிர்த்த கபோதிகளும், பொது வாழ்வில் அன்றைக்கு இருந்தார்கள்.
சரி, வஉசியைப் பற்றித் தெரியுமா? என்றேன். தெரியும். படித்துள்ளேன் என்றார். அவரைப் பற்றி சொல்ல வேண்டியதை பத்திரிக்கையாளர் சொல்லவில்லை. நான் கோபமாக பெரிய செல்வந்தர் வீட்டு புதல்வரய்யா. தன் சொத்துக்களை எல்லாம் விற்று தூத்துக்குடியில் வேலை நிறுத்தத்தில் ஆங்கில அரசால் பாதிக்கப்பட்டு பசியில் இருந்தவர்களுக்கெல்லாம் பசிப்பிணி நீக்கும் மருத்துவர் இல்லம் போல அவர் வீடு இருந்தது தெரியுமா? அவருடைய வாழ்வின் கடைசி நாட்களில் சீமான் வீட்டு பிள்ளை பருத்திக் கொட்டை, பிண்ணாக்கின் எண்ணெயை விற்று தன்னுடைய ஜீவனத்தை நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். கோவில்பட்டியில் காலில் செருப்பில்லாமல், கிழிந்த கோட்டை ஊக்கியை வைத்து தைத்து வக்கீலாக கோர்ட்டுக்குச் சென்ற துயரக் காட்சிகளை எல்லாம் தெரியுமா? என்றேன்.
சேலம் வரதராஜுலு நாயுடு பற்றித் தெரியுமா என்றேன். அவர் தெரியாது என்றார். கேட்டுக்கோங்க. பெரிய பணக்காரர். பஸ் கம்பெனி வைத்து நடத்தினார். பிரிட்டிஷ்காரர்களுக்கு வரி கட்டவில்லை. சேலம் மாவட்டத்தில் உள்ள அவருடைய ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களையும், பஸ்களையும் பிரிட்டிஷ் அரசாங்கம் பறிமுதல் செய்தது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவருடைய சொந்த பெரிய பங்களாவும் பறிமுதலுக்குள்ளானது. திருநெல்வேலி சதி வழக்கில் வஉசியை வழக்கில் இருந்து விடுதலை செய்ய இவர் தான் காரணக்கர்த்தா. பெரியார், ராஜாஜி, காமராஜர், பசும்பொன் தேவர் போன்றோருக்கெல்லாம் வழிகாட்டியவர். வரதராஜுலு நாய்டு ஓர் இதழாளரும் கூட. தமிழ் நாடு பத்திரிகையை நிறுவியவர். இந்தியன் எக்ஸ்பிரஸ் கூட அவர் ஆரம்பித்ததுதான். காரமான நடையில் எழுதுவார்.
காந்தி ஒரு முறை சொன்னார். தமிழ்நாடு சுதந்திர போராட்டம் நாயுடு, நாயக்கர், முதலியார் கைகளில் உள்ளது என்று ஜாதிப் பெயரோடு கூறினார். அவர்கள் யாரெனில் நாயுடு என்றால் சேலம் வரதராஜுலு நாயுடு, நாயக்கர் என்றால் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் (பெரியார்), முதலியார் என்றால் திரு.வி.கலியாணசுந்தரம் (திரு.வி.க). அப்படிப்பட்டவர் இறுதிக் காலத்தில் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் விழுப்புரத்தில் விஸ்வ ஹிந்து பரிசத் தயவில் வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
எல்லாம் சரி. காயிதே மில்லத் யாரென்றாவது தெரியுமா என்ற போது அவருடைய கம்மியான குரலில் தெரியும் சார் என்றார். அவரைப் பற்றி சொல்லுங்க என்றேன். சார், அவரு திருவல்லிக்கேணியில தான குடியிருந்தாரு என்றார். நான் அவருடைய நினைவிடம் வேண்டுமானால் அங்கிருக்கலாம். அவருடைய சொந்த ஊர் திருநெல்வேலி பேட்டை. கேராளாவில் மலப்புரத்தில் வெற்றிப் பெற்று நாடாளுமன்றத்திற்கு சென்றவர். அவர் தேர்தலில் வேட்பு மனுத் தாக்கல் செய்துவிட்டு இப்போதிருப்பதைப் போல வீடு வீடாகச் சென்று நான் உங்கள் வீட்டுப் பிள்ளை. எனக்கு ஓட்டுப் போடுங்க என்று கேட்க மாட்டார். தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாட்களில் கூட்டங்களில் மக்களைச் சந்தித்து, இந்த தொகுதியில் போன முறை போட்டியிட்டு வெற்றி பெற்றேன். இந்தந்த பணிகளைச் செய்துள்ளேன் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிடுவார். தமிழகத்தில் பிறந்து கேரளத்தில் தடங்கல் இல்லாமல் அவருடைய வெற்றி செய்தி மட்டுமே வரும். வெற்றி பெற்ற பின் கயிற்றுக் கட்டிலில் வாரத்துக்கு இரண்டு நாட்கள் தனது தொகுதி மக்கள் எப்போது வேண்டுமானலும் சந்திக்கலாம். அகில இந்திய முஸ்லீம் லீக் தலைவர் என்ற நிலையில் டெல்லியில் ஒரு நாள் இருப்பார். சென்னையில் ஒரு நாள் இருப்பார். சொந்த ஊரான திருநெல்வேலி பேட்டையில் இரண்டு நாட்கள் இருப்பார். இப்படித் திட்டமிட்டு பொது வாழ்க்கையில் இருந்தவர் தான் காயிதே மில்லத். திருநெல்வேலி கல்லூரியில் படிக்கும் போது, திருநெல்வேலி ஜங்சன் பேருந்து நிலையத்தில், கருப்பு குல்லாயும், கருப்புக் கோட்டும் போட்டு பேருந்திற்காக காத்திருப்பார். பல முறை பார்த்திருக்கிறேன், ஒரு சில முறை அவரிடம் பேசியும் உள்ளேன். அவர் அகில இந்தியத் தலைவர். அவரைப் போய் திருவல்லிக்கேணியில குடியிருந்தவர் தான என்று சாதாரணமாகச் சொல்லிட்டீங்களே என்றேன்.
அடுத்து கம்யூனிஸ்ட் ஆளுமை ஜீவாவைப் பற்றித் தெரியுமா? அற்புதமான பேச்சாளர், சட்டமன்றத்தில் முழங்கியவர். மாற்று உடை கூட இல்லாமல் தாம்பரத்தில் குடிசையில் வாழ்ந்தவர். கன்னித் தமிழை நன்கறிந்தவர்.
கக்கனைப் பற்றித் தெரியுமா என்றபோது மதுரை ஜில்லா தானே என்று அரைகுறையாகச் சொன்னார். அவருடைய பணிகள் ஏதாவது தெரியுமா என்று கேட்டேன். காமராஜர் அமைச்சரவையில் உள்துறை அமைச்சர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஒடுக்கப்பட்ட மக்களை அழைத்துக் கொண்டு மதுரை வைத்தியநாதய்யர் பிரவேசம் செய்த முயற்சிக்கு முழுக்காரணமானவர் தான் கக்கன் என்பது தெரியுமா? என்றேன். மதுரை ராஜாஜி மருத்துவமனை, அன்றைய எர்ஸ்கின் மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் ஒருவர், கட்டாந்தரையில் பாயில் படுத்து சிகிச்சைப் பெற்றதையெல்லாம் இந்த காலத்தில் நினைத்துப் பார்க்க முடியுமா? என்றேன். அப்படியா சார் என்றார். அப்படித் தான் என்றேன்.
கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த கே.டி.கே. தங்கமணியைத் தெரியுமா என்றதற்கு தெரியாது என்றார். நீண்டகாலமாக, தமிழக சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தவர். லண்டனில் சென்று பாரட் லா படித்தவர். பணக்காரக் குடும்பம். இவ்வளவு வாய்ப்புகள் இருந்து ஒரு மஞ்சள் பையில் 4 முழ வேட்டி, ஒரு வெள்ளைச் சட்டை, துண்டை வைத்துக் கொண்டு அவரே அதை பார் சோப்பில் துவைத்துக் கட்டிக் கொள்வார். சட்டமன்றத்தில் அவர் பேசிய வாதங்கள் எல்லாம் இன்றைக்கும் சட்டமன்ற ஆவணங்களில் உள்ளன என்றேன். ஒரு காலத்தில் எதிர்க் கட்சித் தலைவராக இருந்த ‘கோவைக் கம்பன்’ கருத்திருமண் அவர்களைத் தெரியுமா என்றேன். தெரியாது என்றார். பட்டுக் கோட்டை அழகிரி,திமுகவைச் சேர்ந்த சி.பி.சிற்றரசைத் தெரியுமா என்றேன். தெரியாது என்றார். சரிய்யா. திருத்தணியை மீட்டுத் தந்த மா.பொ.சியை யாவது தெரியுமா என்றேன். தெரியும் சார். படித்திருக்கிறேன் என்றார்.
இதற்கு மேல் ஏதாவது பேசினால் அந்த மனிதர் பொறுமையிழந்து பேசிவிடுவார் என்பதால், இவர்களைப் பற்றி எல்லாம் வாசித்துப் புரிந்து கொள்ளுங்கள். அதற்குப் பிறகு தான் இன்றைய தமிழ்நாடு அரசியலைப் பற்றிய போக்குகளுக்கு எல்லாம் நீங்கள் வரலாற்று ரீதியாக கருத்துக்களைப் பதிவு செய்யமுடியும். அதுதான், உண்மையான பத்திரிக்கையாளருக்குரிய கடமையும், பொறுப்பும் ஆகும் என்றேன். இன்றைக்கு வியாபார அரசியலில் காசு கொடுத்து வெற்றி பெற்று எம்.பி., எம்.எல்.ஏ., டேக் தன் வசமிருந்தாலே ஏதோ கொண்டாடப்ட வேண்டியவர்களாக கருதுகிறார்கள்.
இந்த தறுதலைகளுக்கு தமிழ்நாடு வரலாறும் தெரியாது, பூகோளமும் தெரியாது, பொருளாதாரமும் தெரியாது. இந்த ஞான சூனியங்களை நம்பினால் தமிழ்நாட்டிற்கு எல்லா கேடுகளும் வரத்தானே செய்யும். முட்டாள் அரசியல் வியாபாரிகளை நம்பி தமிழ்நாடு அழிந்து கொண்டு வருகின்றது. தகுதியே தடை என்று இருக்கும்போது ஆற்றலாளனும், நேர்மையாளனும் பொதுத் தளத்திற்கே வரமுடியவில்லையே? தளமும், களமும், மண்ணும் தகுதியற்றவர்களை ஆதரிக்கும் போது பேய் அரசாண்டால், பினந்தின்னும் சாத்திரங்கள் தானே. இப்படியான நிலையில் எவ்வளவு தான் போராடி உயிரை மாய்த்தாலும், நம்முடைய உரிமைகளை மீட்க முடியுமா?
இந்த அரைமணி நேர சம்பாஷனையில் அந்த பத்திரிக்கையாளர் நண்பர், சார் இந்த தகவல்களையெல்லாம் நான் இப்போது தான் தெரிந்து கொண்டேன். மகிழ்ச்சி சார் என்று சொன்னபோது, இந்த விழிப்புணர்வு அவருக்கு இப்போது ஏற்பட்டது மகிழ்ச்சியா? அல்லது நல்லவைகளை அறியாமல் இன்றைக்கும் உலகம் இப்படி இருக்கிறதே என்ற மனக் கவலையா? என்பதை எனது மனதால் உணர முடியவில்லை.
•••••
மேலும்,இன்றைய தேர்தல் களம் திசைமாறிச் செல்கிறது. மக்களாட்சியின் விழுமியங்கள் மங்கி வருகின்றன.மக்களாட்சி தான் மிக மோசமான ஆட்சி முறை என்றாலும் அதைவிட்டால் நமக்கு வேறு வழி இல்லை. ஏனெனில் பிற ஆட்சி முறைகள் மன்னராட்சி, ராணுவ ஆட்சி, தனிமனித சர்வாதிகார ஆட்சி ஆகிய அனைத்தும் மிக மிக மோசமானவை என்று ஜனநாயகத்தை ஆதரித்து விளக்கம் தந்தார் பிரிட்டனின் போர்க்காலப் பிரதமர், பேச்சாற்றல்மிக்க சர் வின்ஸ்டன் சர்ச்சில். மனிதர் ஒவ்வொருவரும் அடிப்படையில் நல்லவரே. சந்தர்ப்பவசத்தால் அவர்களது சிந்தனையில், செயலில் தவறு நிகழலாம். ஆனால் அவர்களை திருத்த முடியும். சரியான பாதைக்குத் திருப்ப முடியும். மனிதர்களை உள்ளடக்கிய சமுதாயத்தின் முடிவு எப்போதும் சரியாகவே இருக்கும் என்று மனிதனின் மீதும் மனித சமுதாயத்தின் மீதும், ஜனநாயகத்தின் மீதும் அழுத்தமான நம்பிக்கை கொண்டிருந்தார் மகாத்மா காந்தி.
மக்கள் பணி செய்வதற்கும், தியாகம் புரிவதற்கும் தயாராக இருப்பவர்கள் பொதுவாழ்க்கைக்கு வரவேண்டும் என்றார் பண்டித ஜவஹர்லால் நேரு,.மக்களாட்சி என்ற கட்டமைப்பு இந்தியாவில் மாறவில்லை. ஆனால் அதில் களங்கமும், கரும்புள்ளியும் விழுந்து வருகின்றன. உலகரங்கில் அதன் மாண்பு குறையவில்லை. ஆனால் அதில் மாசு கொஞ்சம் கொஞ்சமாக படிந்து வருகிறது, அதன் உயரம் அப்படியே உள்ளது, அது வெளிப்படுத்தும் ஒளி மங்கி வருகிறது. அன்று இந்தியாவில் படிக்காதவர்கள் எண்ணிக்கை 85 சதவீதம். இன்று கல்வி கற்றவர் எண்ணிக்கை 85 சதவீதம். படிப்பறிவில் வியக்கத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால் நாடாளுமன்ற நெறிமுறைகளை பேணிக்காப்பதில் அது பிரதிபலிக்கிறதா என்றால் இல்லை என்றே பதில் வரும்.
முதலாவதாக பொது வாழ்வில் தியாகம்,ஊருக்கு உழைக்கும் உயரிய பண்பு, அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவை தான் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான காரணிகளாக அமைந்தன. ஆனால் இன்றோ பணம்,ஆள்பலமும், அதிகார பலமும் அல்லவா வெற்றிக்கு வழிகோலுகின்றன.
இரண்டாவதாக நேர்மை, சுயநலமற்ற களப்பணி,அறிவாற்றலும், பேச்சாற்றலும் அரசியல் தளத்தில் நின்று பளிச்சிட்டன. அவை அடிப்படைத் தகுதிகளாக அமைந்தன. பண்டித ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் பட்டேல், அபுல் கலாம் ஆசாத், ராஜாஜி, ஜெயபிரகாஷ் நாராயணன், ஜோதிபாசு, சியாமா பிரசாத் முகர்ஜி, அம்பேத்கர், ராம் மனோகர் லோகியா, மோகன் தாரியா, ஜே.பி.கிருபளானி, கிரன் முகர்ஜி, பி.சி.ராய் போன்ற தேசிய தலைவர்கள் தங்களது அறிவார்ந்த பேச்சாற்றலில் தான் பிரகாசித்தார்கள்.
தமிழகத்தில் தீரர் சத்தியமூர்த்தி, திரு.விக, வழக்குரைஞர் செங்கல்வராயன், தோழர் ஜீவா, பி. ராமமூர்த்தி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், முன்னாள் முதல்வர்களான அண்ணா,கலைஞர மற்றும் கவிஞர் கண்ணதாசன்,எழுத்தாளர்கள் நபா,ஜெயகாந்தன் என பலர் தங்கள் நாவண்மையாலும் நல்ல பண்புகளாலும் நாட்டு மக்களை கவர்ந்தனர். மக்கள் பிரச்சினைகளை பேசுவதற்கான இடம்தானே சட்டப்பேரவையும் நாடாளுமன்றமும். ஆனால் கூச்சல் போடுவதும், குழப்பம் விளைவிப்பதும் மட்டுமே நடந்துவருகிறது.
மூன்றாவதாக செயல் திறத்தால் செல்வாக்கை வளர்த்துக் கொண்டவர்கள். அவர்களில் ஒருவர்தான் காமராஜர். தமிழகம் முழுவதும் சுற்றியதாலும், ஒரு காலகட்டத்தில் நோய்வாய்ப்பட்டதால் தொகுதிக்கு போகாமல் வெற்றி பெற்றவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். கோமதி சங்கர தீட்சிதர் என்ற தேசபக்தர் எளிய சமூக சேவகர். அவர் இருக்கும்வரை அம்பாசமுத்திரம் தொகுதி அவரிடம் தானே இருந்தது. எல்லோருக்கும் நல்லவர் என பெயர் இடத்தை எஸ்.ஆர். நாயுடு எந்த கட்சியில் இருந்தும், எந்த சின்னத்தில் நின்றும் வெற்றி பெற்றவர்.
கலைஞர் , எம்.ஜி.ஆர் போட்டியிட்ட இடங்களில் எல்லாம் வெற்றி பெற்றவர்கள் தான்.
தென் ஆப்பிரிக்காவிலிருந்து மகாத்மா காந்தி 1915 இல் இந்தியா திரும்பினார். அவர் தாயக மண்ணை மிதித்த உடன் தனி அரசியல் இயக்கம் தொடங்கவில்லை. மாறாக ஒரு ஆசிரமம் ஆரம்பித்து சமுதாயத்துக்கு பயன்படும் வகையில் ஆமதாபாத்திற்கு அருகில் சபர்மதி நதிக்கரையில் அமைந்தது.
அன்றைய காலகட்டத்தில் தலைவர்களின் பேச்சில் ஒரு கண்ணியம் தென்பட்டது. தமிழகத்தில் 1957 பொதுத் தேர்தலில் அறிஞர் அண்ணாவை பண்டித ஜவகர்லால் நேருவுக்கு நிகராக இணையாக ஒப்பிட்டுப் பேசி புகழ்ந்தார் ஒரு கழக பேச்சாளர். நேருவை எவ்வாறு ஒப்பிடலாம் என கண்டன குரல்கள் எழும்பின. அதைக்கேட்டு அண்ணா சொன்னார், “நான் கொட்டிக்கிடக்கும் செங்கற்கள். நேரு பெருமகனோ கட்டி முடிக்கப்பட்ட கோபுரம். என்னை அவருடன் ஒப்பிடுவது எப்படி சரியாகும்” என்றார். விருதுநகர் தேசபந்து மைதானத்தில் ஒரு இளம் காங்கிரஸ் பேச்சாளர், தியாகசீலர் பசும்பொன் தேவரை மறைமுகமாக ‘பித்தளைக்கு பெயர் பசும்பொன்னா’ என்று கேட்டுவிட்டார். அதற்கு காமராஜர் கண்டனம் தெரிவித்ததோடு, “ஐயா தேவர் பசும்பொன் மட்டுமல்ல, ஒரு பத்தரை மாற்றுத் தங்கம். என் வழிகாட்டியும் ஆவார்” என புகழ்ந்தார்.
கோவில்பட்டி வ.உ.சி மைதானத்தில் தேசிய இளைஞன் ஒருவன், “ராமமூர்த்தியை கால் ஊனமானவர் என்றேனா, ஜீவாவை காது கேளாதவர் என்றேனா” என்று கூறிவிட்டார். இத்தகைய தரக்குறைவான பேச்சுக்கு ஒழுங்கு நடவடிக்கை எடுத்தார் அன்றைய கட்சித் தலைவர். மேடை நாகரீகம் அன்று அவ்வாறு மிளிர்ந்தது. தலைமையிடம் கண்டிப்பு காணப்பட்டது.
ஆனால் இன்று தேசிய அளவிலும், மாநில அளவிலும் தரக்குறைவான பேச்சுகள், தனிநபர் விமர்சனங்கள், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. இவை எல்லாம் வளர்ச்சியின் அடையாளங்களா? நாகரீக ஜனநாயகத்தின் நல்ல குறியீடுகளா?
தேர்தல் களம் திசைமாறிச் செல்கிறது. மக்களாட்சியின் விழுமியங்கள் மங்கி வருகின்றன.
விதியே, விதியே தமிழ் சாதியே.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
19-7-2019.
No comments:
Post a Comment