Saturday, July 20, 2019

எப்போதும் உள்ளூர்வாசிகள் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.


இன்று (20-07-2019) காலை காஞ்சிபுரத்தை சேர்ந்த தம்பி கார்த்திக் சந்திக்க வந்தார். இரண்டு மாதத்திற்கு ஒருமுறை இல்லம் தேடி வந்து மகிழ்ச்சியாக உரையாட வருவது வாடிக்கை. இன்றைக்கு வரும்போது கையோடு கலை அம்சத்தோடு சேர்ந்த அத்தி வரதர் படத்தை என்னிடம் அளித்தார். எப்போதும் வரும்போது வெறும் கையோடு இல்லாமல் பழங்கள், குளிப்பதற்கு பயன்படுத்தும் கைத்தறித் துண்டுகள் என சிலவற்றை கொண்டு வந்து அன்புடன் கொடுத்தார். அவர் அரிசி வியாபாரி. அரிசி மூட்டையோடு ஒரு முறை வந்தபோது, நான் எனது கிராம நிலத்திலிருந்து வரும் அரிசியை தான் சாப்பிடுவேன் என்று சொன்னேன். அவர் இந்த ஒரு முறை இதை பயன்படுத்துங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொண்டார். அப்படி என்மீது அவருக்கு ஒரு அன்பு.

அத்தி வரதர் படத்தினைக் கொடுத்தவுடன் என்ன உங்கள் ஊரில் அத்திவரதரை தரிசிக்க சென்றீர்களா? என்றேன். நான் போகவில்லை என்றார். ஏன் என்றதற்கு கூட்டம். அதுபோக, பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். இப்படித்தான் குற்றாலத்தில் உள்ள நண்பர்களிடம் அருவியில் குளிக்கச் சென்றீர்களா என்றால் அங்கே போக எங்கே நேரமிருக்கு என்பார்கள். திருநெல்வேலிக்காரரிடம் கேட்டால் இருட்டுக் கடை அல்வா தானே சாப்பிட்டுக்கலாம் என்பார்கள். அதேபோல, எங்களின் தோட்டத்தில் கரும்பு விளையும். அந்த கரும்பை சாப்பிடுவதற்கு ஆர்வம் எனக்கு சிறுவயதில் ஏற்பட்டதில்லை. சங்கரன்கோவில் ஆடித் தபசு விழாவிற்கு கிராமத்திலிருந்து போனால் அங்கே வசிக்கும் உறவினர்கள் அவ்வளவு ஆர்வமாக உடன் வராததை பார்த்துள்ளேன். கழுகுமலை விசாகமும் இதே நிலைதான்.

எப்போதும் உள்ளூர்வாசிகளுக்கு எந்தவொரு தடபுடலான நிகழ்வுகளோ, மற்றவர்களை ஈர்க்கும் விடயங்களோ பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை என்பது உளவியல் ரீதியான நிலைப்பாடாகும்.

#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
20-07-2019

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...