”#கார்ஷெட்டில்_குவிந்து_கிடக்கும் #அரிய_புத்தகங்கள்-சேகரித்திருக்கிற ரசனையான வாசகர் கோவிந்தராஜூ’’
*
வாசிப்பு குறைந்து கொண்டு வரும் இந்தக் காலத்திலும் வாசிப்பில் தீவிர வேகமும், தேடிச் சேகரிக்கும் மனமும் கொண்ட தரமான வாசகர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்.
டெக்கான் கிரானிக்கல் நாளிதழில் சென்னை ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் அடுக்குமாடிக்குடியிருப்பின் கீழ்ப்பகுதியில் உள்ள கார்ஷெட்டில் பழங்காலத்திய நூல்கள் அடைந்து கிடப்பதைப் பற்றி ஒரு ஸ்டோரி வெளிவந்திருந்தது.
அதையொட்டி இன்று காலை சென்னையிலுள்ள அந்த இடத்திற்குப் போனோம் நானும், பத்திரிகையாளர்களான நண்பர்கள் ப்ரியனும், மணாவும்.
போனதும் சிறிது நேரத்தில் அந்த அடுக்குமாடிக்குடியிருப்பின் கீழ்த்தளத்தில் உள்ள ஷட்டர் திறக்கப்பட்டதும் ஒரே புத்தகக்குவியல். எங்கு பார்த்தாலும் ஆங்கிலத்தில் அதிகமும், தமிழில் கொஞ்சமுமாக புத்தகங்கள், பத்திரிகைகள், ஸ்பெஷல் வெளியீடுகள், சிறப்பு மலர்கள் என்று ஒரே புத்தக நெடி.
அலமாரி எங்கும் வழியும் நிலையில் புத்தகங்கள். கீழே நடக்கும்போதும் இடறுகின்றன. வரலாறு, இலக்கியம், டெக்னாலஜி தொடர்பான புத்தகங்கள், ஆங்கில அகராதிகள், அந்தக்காலத்திய ரீடர்ஸ் டைஜெஸ்ட் , இம்பிரிண்ட் என்று பல்வேறு இதழ்த்தொகுப்புகள் என்று கடந்தகாலத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் அச்சு வாசனை கொண்ட நூல்கள்.
நடுவில் அழகான மரத்தாலான சாய்வு நாற்காலி. எதிரே ட்ரே.
பொங்கிய நிலையில் இருக்கும் நூலகத்தைப் போலிருக்கும் அரிய சேகரிப்பைச் செய்திருப்பவர் கோவிந்த ராஜூ. சென்னைக் காரர். நல்ல பணியில் இருக்கும் போதே புத்தகங்களை ஆர்வத்தின் காரணமாகச் சேகரித்திருக்கிறார். பல ஆயிரக்கணக்கில் சேர்ந்திருக்கின்றன புத்தகங்களும், பருவ இதழ்களும்.
ஏற்கனவே ஏராளமான புத்தகக் குவியலை மொத்தமாக ஒருவரிடம் விற்றிருக்கிறார். மீதமிருக்கும் புத்தகங்களே சில ஆயிரக்கணக்கில்.
நாம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே தான் படித்த ஆங்கிலப் புத்தகங்களைப் பற்றிச் சொல்கிறார். ஹிண்டு ராம் முதற்கொண்டு ராமச்சந்திர குஹா வரை வாசிப்பில் ஆர்வமானவர்கள் இங்கு வந்த்தைப் பற்றிச் சொல்கிறார்.
இவ்வளவு புத்தகங்கள் குவிந்திருக்கையில் ‘டஸ்ட் அலர்ஜி’ எதுவும் இல்லையா?-என்று கேட்டால் சிரிக்கிறார் 83 வயதான கோவிந்தராஜூ.
“ புத்தகங்கள் மேலே இன்டர்ஸ்ட் இருக்கிறதனாலே தான் அதை கலக்ட் பண்ணியிருக்கேன். இதிலே அலர்ஜி வருமா?”
டஸ்ட் அலர்ஜி இல்லாத புத்தகப்பிரியர்கள் இங்கு ஒரு நடை போய்விட்டு வரலாம்.
கல்கி ப்ரியன், மணாவுடன் சென்ற போது....
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
#ksrpost
6-11-2019.
No comments:
Post a Comment