Thursday, November 7, 2019

கம்யூனிஸ்ட்_தலைவர் #சோ_அழகர்சாமி.. ..

#கம்யூனிஸ்ட்_தலைவர் #சோ_அழகர்சாமி.. ..
-------------------------------------
கடந்த 06.11.2014அதிகாலை படுக்கையிலிருந்து எழுந்தவுடன், எங்கள் கோவில்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர், மறைந்த சோ.அழகர்சாமி அவர்களின் நினைவு வந்தது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி தலைவராகவும், சட்டமன்றத்தில் அக்கட்சியின் தலைவராகவும் இருந்தவர் சோ.அழகர்சாமி. சட்டமன்றத்தில் விவசாயிகள், பாட்டாளிகள் என பல முக்கியப் பிரச்சினைகளை எடுத்து வைப்பார். 



1960-’70களில் விவசாயத்தில், புன்செய் பயிராகும் இடங்களில் விளையாத காலங்களில் வரி ரத்து, ஜப்தி எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.  குறிப்பாக காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஏர் மாடுகள் ஜப்தி செய்யப்பட்டதைக் கண்டித்தும், கோவில்பட்டி தாலுகாவில் ஏலம் விடுவதை கண்டித்தும் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டம் தீவிரமானதை கண்டு அரசு பணிந்தது. பவுண்டில் அடைக்கப்பட்ட ஏர் மாடுகள் இரண்டையும், ஜப்தி செய்த வீட்டிலேயே திருப்பிக் கட்டும்படி நடந்த போராட்டம் சோ.அழகர்சாமி தலைமையில் நடைபெற்றது. அப்பகுதி விவசாயிகள் இதனால் நிம்மதி அடைந்தனர்.

நான் சட்டக் கல்லூரியில் படித்த காலங்களில், சட்டமன்ற விடுதியில் உள்ள அவரது அறையில் தங்கியது உண்டு. என்னோடு அன்பாகவும், பாசமாகவும் பழகுவார். 30 ஆண்டுகளுக்கு முன் என்னுடையத் திருமணத்தை தலைவர் கலைஞர் நடத்தி வைத்தபோது, திருமண பணிகளை பழ.நெடுமாறன், வைகோ, நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் போன்றவர்களோடு, சோ.அழகர்சாமி  அவர்களும் இணைந்து, வருகை தந்த விருந்தினர்களை அழைத்து உபசரித்தார். என் திருமணத்திற்கு வந்திருந்த விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், அழகர்சாமி அவர்களை வித்தியாசமாகப் பார்த்தார். 

ஏனெனில், அழகர்சாமி கதர் சட்டை, கதர் வேட்டி, தோளில் சிவப்புக் கலர் கதர் துண்டு அணிந்திருந்ததைப் பார்த்து, ‘என்ன இவர் கம்யூனிஸ்டா? அல்லது காந்தியவாதியா?’ என பிரபாகரன் கேட்டார். நான் அவரிடம், ‘அவர் ஒரு போராளி. எப்பொழுதும் சிரித்துக் கொண்டே பேசுவார். சாதாரண மக்களோடு பழகக் கூடியவர். எங்கள் பகுதியில் இதுமாதிரி சட்டை வேட்டியைத்தான் கிராமத்து மக்கள் அணிவார்கள்’ என்றேன்.

1977 தேர்தலில் திரு.ஆர்.நல்லகண்ணுவும், நானும் அவருக்காக கோவில்பட்டி தொகுதி, குருவிகுளம் ஒன்றியத்தில் கருப்பு, மஞ்சள் வர்ணமிட்ட வாடகைக் காரில், அக்காலத்தில் பயன்பாட்டில் இருந்த குழாய் வடிவ ஒலிபெருக்கி மூலம் பிரசாரம் செய்தோம். ஆனால், சோ.அழகர்சாமி அவர்களை எதிர்த்தே, 1989 சட்டமன்ற தேர்தலில், கோவில்பட்டி தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட வேண்டிய நிலைமை எனக்கு ஏற்பட்டது. அப்போது எட்டயபுரத்தில் உள்ள அவருடைய வீட்டிற்கு சென்றபொழுது,  அவரும், அவருடைய மனைவி தாயம்மாள் அவர்களும், எந்த மனக்கோணலும் இல்லாமல், அதே அன்பும், பாசமும் காட்டி வரவேற்றதை மறக்க முடியாது. அப்போது என்னோடு, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர், காந்தியவாதியான சங்கரபாண்டியாபுரம் சீனிவாச நாயக்கர் உடன் வந்தார்.
அந்த நேரத்தில் அழகர்சாமி அவர்கள், என்னிடம் பெருந்தன்மையோடு, ‘என்னப்பா நீ ஜெயிச்சா என்ன, நான் ஜெயிச்சா என்ன. எல்லாம் ஒண்ணுதாம்ப்பா’ என்றார். கோவில்பட்டி வட்டாரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் எஸ்.எஸ். தியாகராஜன், கோடங்கால் கிருஷ்ணசாமி, குளத்துள்ளாப்பட்டி ராமசாமி போன்ற பல வலுவான தளபதிகளும், அழகர்சாமி அவர்களுக்கு துணையாக இருந்தனர். அழகர்சாமி அவர்களைப் பற்றிய விரிவான பதிவுகளை, என்னுடைய ‘நிமிர வைக்கும் நெல்லை’ நூலின், விரிவுபடுத்தப்பட்ட அடுத்த பதிப்பில் பதிவு செய்ய உள்ளேன்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
#ksrpost
7-11-2019.


No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்