Thursday, November 7, 2019

மோகமுள் – தி.ஜானகிராமன், நாவல் பிறந்த கதை

#மோகமுள் –  தி.ஜானகிராமன்,
நாவல் பிறந்த கதை
————————————————-
 தி.ஜானகிராமன் ஏப்ரல் 7, 2011
ரோஜா முத்தையா நூலகத்தில் படிக்கக் கிடைத்த, 1961-ஆம் ஆண்டு வெளிவந்த கல்கி வார இதழில் இடம்பெற்றிருந்த தி.ஜானகிராமன் எழுதிய இக்கட்டுரையை, ஸ்கேன் செய்து அனுப்பிய திரு.லலிதா ராம் அவர்களுக்கு சொல்வனத்தின் நன்றிகள்.

கண்ணாடிப் பாட்டியைப் பல வருடங்களுக்குப் பிறகு ஒரு கல்யாணத்தில் பார்க்க நேர்ந்தது. “யார்றப்பா அது, ஜானகியாடா?” என்று கண்ணாடியை இரண்டு விரல்களால் தூக்கி விட்டுக்கொண்டே அருகில் வந்தாள்.





“ஆமாம் பாட்டி. சௌக்கியம்தானே?”

“சௌக்கியமா இருக்கறதுக்குத்தான் வழி பண்ணிக்க வந்திருக்கேன். பேப்பர்லே கதை போட்டுண்டு வறியே. அதுக்கெல்லாம் பணம் தருவாளோ! இல்லே, ராமையா பாகவதரைக் கூப்பிட்டுக் கதை பண்ணச் சொல்றாப்பலே தேங்காய் மூடியோ?…” என்று கூறி நிறுத்தினாள் பாட்டி.

“தேங்காய் விலைதான் ஏறிக்கிடக்கே, இப்போ! பணமாகவே கொடுத்துவிடுகிறார்கள்.”

“அது என்னமோப்பா! பாதிப் பணம் அப்பப்ப எனக்கு வரணுமே, வரலையேன்னு கேட்கிறேன். நான் கேட்கிறது நியாயம்தானே?” என்றாள் பாட்டி.

“எல்லாம் உங்க ஆசீர்வாதம்தானே!”

“அப்படிச் சொல்லிண்டே கிளம்பிப் போயிடலாம்னு பார்க்கறியா? என் பேச்சு, மூனாச்சி கதை, யோகாம்பா கதை, ரங்கு கதை – அவாளுக்குக் கொடுத்தாலும் கொடு. கொடுக்கப்பட்டாலும் போ – எனக்காவது கொடுக்கலாமோல்லியோ நீ…?”

பாட்டி கேட்டது வேடிக்கையாகத்தான். சொன்னது அவ்வளவும் உண்மை. எழுதத் தூண்டிய, வழி காட்டிய பல குருமார்களில் கண்ணாடிப் பாட்டிக்கு நான் தனி ஸ்தானம் கொடுத்திருக்கிறேன். காவேரி வண்டலில் செழித்தபயிர் கண்ணாடிப் பாட்டி. பேச்சில் அசாதாரணமான நயம், நகைச்சுவை, ‘சுருக்சுருக்’கென்று தைக்கிற கூர்மை, சில சமயம் என்ன அர்த்தத்தில் சொல்லுகிறாள் என்று இலேசில் கண்டுபிடிக்க முடியாத பூடகம், சொல்லாமல் சொல்லுகிற தொனி, அதிர்வேட்டு மாதிரியும், சிற்றிலை போலவும் பல தினுசுச் சிரிப்புகளை எழுப்பக் கூடிய ஹாஸ்ய வகைகள், எதைச் சொன்னாலும் தனக்கென்று ஒரு தனிப்பார்வை – பாட்டி ரொம்பப் பெரியவள்.

“மோக முள்” நாவலில் வருகிற பல பாத்திரங்களும் சம்பவங்களும் கண்ணாடிப்பாட்டியும் நானும் கண்டு ரசித்தவைதான். அவற்றையெல்லாம் ஒரு நாவலாக எனக்கு எழுதத் தோன்றியதே பாட்டியின் பார்வையை இரவல் வாங்கிக் கொண்டதனால்தான். பாட்டிக்கு எழுதப் படிக்கத் தெரியாது. ஆனால் அவளுக்குத் தெரிந்த கதைகளும், மன விசித்திரங்களும், சொல் ஜாலங்களும் இந்த உலகத்திலேயே சிலருக்குத்தான் கைவரும். பாட்டியின் கலைக்கண்ணில் ஒரு தவலை கூட நமக்கு லபிக்கவில்லையே என்று எனக்குத் தீராத குறை. “மோக முள்”ளில் சில அத்தியாயங்களைக் கிடைத்தபொழுது வாசிக்கச் சொல்லிக் கேட்டாளாம் பாட்டி. ஓரிரண்டு இடங்களை நன்றாக இருப்பதாக அவள் ஒப்புக்கொண்டு கூடவிட்டாள். ஆகவே மற்ற விமர்சகர்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை.

பள்ளிக்கூடத்தில் படித்த பத்து வருஷங்களில் ஞாபகம் இருக்கக் கூடியதாக ஒன்றுமில்லை. எப்பொழுது இச்சிறையிலிருந்து விடுபடப் போகிறோம் என்று ஆத்திரப்பட்டது ஞாபகம் இருக்கிறது. “உனக்குக் கணக்கு வராது. நீ கதை பண்ணத்தான் லாயக்கு. தொலை” என்று என் முகத்தில் பிரம்பை விட்டெறிந்த நாமமும், அம்மை வடு முகமும் கொண்ட மூன்றாம் வகுப்புக் கணக்கு வாத்தியார் ரங்காச்சாரியார், எனக்கு ஆசீர்வாதம் செய்தார். அந்த ஆசீர்வாதம்-

வகுப்புக் கட்டுரைகளில் சொந்தக் கை வரிசையைக் காட்டி அதிகப்பிரசங்கித்தனமாக அசடு வழிந்ததற்கு, சில வாத்தியார்கள் மற்றப் பையன்களுக்கு நடுவில் பரிஹாசம் செய்து மனத்தைக் கிழித்துப் போட்டதில் ஏற்பட்ட புண்கள்-

#தஞ்சாவூரில் அப்பொழுதெல்லாம் மூலைக்கு முலை சங்கீதக் கச்சேரிகள் அமர்க்களப்படும். சிவகங்கை அனுமார், வெங்கடேசப்பெருமாள் சன்னிதி அனுமார், மேலவீதி விசுவநாதர், மேலவீதிப்பிள்ளையார், தெற்குவீதிக் காளி அம்மன், வரகப்பையர் சந்தில் தியாகையர் பூஜித்த ராம விக்கிரகங்கள், நாணயக்காரச் செட்டித்தெரு ராமலிங்க மடம், பக்கத்தில் திருவையாறு – இத்தனை தெய்வங்களுக்கும் நடக்கிற உற்சவ சங்கீதக் கச்சேரிகளை ஒன்றுவிடாமல் ஐந்து வயதிலிருந்தே கேட்டுக் கொண்டிருந்த பழக்கம்-

நாலைந்து பேரிடம் சிறுவயதிலிருந்தே சங்கீதம் கற்கும் வாய்ப்புக் கிடைத்தது. கலைஞர்களுக்கு உரிய பேச்சின் அழகில் மயங்கினது –

உமையாள்புரம் சுவாமிநாதய்யரிடம் சில நாட்கள் சங்கீதம் சொல்லிக் கொள்ளப் போய்க்கொண்டிருந்தேன். மற்றவர்களைவிட சங்கீதத்தை உபாசணையாக, தியான மார்க்கமாக, அவர் கையாண்ட ஒரு தனிப்பண்பு, உலகத்தின் ஒலிகளையெல்லாம் நாதக் கடவுளின் பற்பல சைகைகளாகவும் விவகாரங்களாகவும் அவர் கண்ட விந்தையைத் துளியாவது பார்க்கக் கிடைத்த வாய்ப்பு-

#கும்பகோணத்தில் கல்லூரியில் படித்த நாலு வருடங்களும் பள்ளி வாழ்க்கைக்கு நேர்மாறாக இருந்தன. அவ்வளவு உற்சாகம். அவ்வளவு அமைதி. இலக்கியங்களைப் பரவலாகப் படிக்க வாய்ப்புக் கிடைத்தது. பரம ரசிகர்களாக இருந்த இரண்டு மூன்று ஆசிரியர்களின் தோழமை இந்த வாய்ப்பைப் பெருக்கிற்று. அந்தப் பூரிப்பு-

கல்லூரியில் எனக்கு இணைபிரியாத நண்பன் ஒருவன் உண்டு. எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் தெய்வமாக வணங்குவான். அதை ஒரு தனி மதமாக வளர்த்திருந்தான் அவன். அவனோடு நெருங்கிப் பழகப் பழக என் உள்ளத்தில் சபலத்துக்கும் தூய்மைக்கும் மூண்ட ஓயாத சண்டைகள்-

நான் குடியிருந்த தெருவில் ஒரு கிழவர் ஐம்பத்தைந்து வயதில் ஒரு பதினாறு வயதுக் கட்டழகியை (அழகான பெண்கள் யார் யாருக்கோ போய்ச் சேர்வதைப் பாருங்கள்)க் கலியாணம் செய்து கொண்டு வந்து முப்பத்திரண்டு வயதுப் பிள்ளையை அவன் மனைவி குழந்தைகளுடன் வீட்டை விட்டு விரட்டி, சரியாக ஒரு வருஷம் புது மனைவியோடு தனிக்குடுத்தனம் செய்துவிட்டு, திடீரென்று ஒருநாள் சிவபதம் அடைந்து விட்டார். அதை ஒரு வருஷம் பார்த்துக் கொண்டிருந்த ஆற்றாமை-

தஞ்சாவூர் ஜில்லாவில் ஒரு கிராமம். அங்கே ஒரு மிராசுதார் . சிறு பையனாக இருக்கும் பொழுதே முப்பது வேலிநிலத்துக்கு வாரிசாகிவிட்டான். தகப்பனார் இறந்து, நிலம் கைக்கு வந்ததுமே, பண்ணை முறையை உதறி எல்லா நிலங்களையும் குத்தகைக்குவிட்டு விட்டுச் சுகவாசியாக வாழத் தொடங்கினான். சுகவாசியென்றால் வேறொன்றுமில்லை. திண்ணையில் பெரிய கலியாண ஜமக்காளத்தை விரித்து, ஊரில் உள்ள சின்னவர் பெரியவர்களையெல்லாம் சேர்த்துக் கொண்டு சீட்டாட்டம். ஓயாத ஒழியாத சீட்டாட்டம். அரையில் வேட்டி நழுவியதைக் கூட உணராத சீட்டாட்டம். மற்ற நேரங்களில் திண்ணையில் மரச்சாய்வு நாற்காலியைப் போட்டு, சட்டத்தை நீட்டி அதன்மேல் காலைப்போட்டு, எப்பேர்ப்பட்ட பெரியவர்கள் வந்தாலும் (ரெவின்யூ இன்ஸ்பெக்டர், தாசீல்தாரைத் தவிர) அந்தக் காலை மடக்காமல், எழுந்து கொண்டுவிடாமல் படுத்திருப்பான். வம்பளப்பான். இந்த மாதிரி எத்தனையோ ஜன்மங்கள் தஞ்சாவூர் ஜில்லாவில் இருக்கின்றன. (மற்ற ஜில்லாக்கள் அவ்வளவாக எனக்குப் பழக்கமில்லை). இந்த ஜன்மங்கள் ஒன்றிரண்டைப் பார்த்த குழப்பம் –

தஞ்சாவூரில் நான் படிக்கும்பொழுது ஒரு நாள் நாலைந்து வடக்கத்தியர்கள் தம்புராவைத் தூக்கிக் கொண்டு வாசலோடு போனார்கள். என் தகப்பனாரும் நானும் திண்ணையில் நின்று கொண்டிருந்தோம். எங்கள் வாசலண்டை வந்த அவர்கள் என் தகப்பனாருக்குக் கும்பிடு போட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தார்கள். ஹாலில் உட்கார்ந்தார்கள். தம்புராவை மீட்டினான் ஒருவன். பெரியவர் ஒருவர் பாட ஆரம்பித்துவிட்டார். ஒரு மணி நேரம் உலகப் பிரக்ஞை அழிய அழியப் பாடினார் அவர். அவர் மகனும் சேர்ந்து கொண்டான். அந்தமாதிரி சாரீரங்களை நான் இதுவரையில் கேட்டதில்லை. அவ்வளவு கனம், அவ்வளவு இனிமை, அவ்வளவு சுருதி உணர்வு, விண்ணுக்கும் பாதாளத்துக்கும் அனாயாசமாக ஓடி, ஓடிப் பாய்கிற ஆற்றல்! கட்டி விழுந்த குழந்தையின் முனகல் போன்ற சில கர்நாடக வித்வான்களின் குரல்களும் நினைவில் வந்தன. பல வருஷங்கள் கழித்து, பிழை பொறுக்காமல் வடக்கத்தியர்களின் குரல்வளத்தைப் பற்றி ஒரு பிரபல கர்நாடக வித்வானுடன் தர்க்கம் செய்ய நேர்ந்தது. ‘குரல் இருந்தால் மட்டும் போதுமா’ என்று ஒரே வார்த்தையில் அலட்சியப் புன்னகையோடு அவ்வளவையும் ‘பைசல்’ செய்துவிட்டார் அவர்! ஒரு கிணற்றில் இத்தனை தவளைகளை எப்படி அடைத்திருக்கிறார் பகவான் என்று அப்போது ஓர் ஆச்சரியம் ஏற்பட்டது. அந்த ஆச்சரியம் –

என்னைவிட எட்டு வயது அதிகமான ஒரு பெண். நன்றாகப் படித்தவள். நல்ல வடித்தெடுத்த அழகு. அடிக்கடி அவளோடு பேசிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. ஆழ்ந்த அமைதியும், புத்திக் கூர்மையும், எதையும் கண்டு வியந்துவிடாத அழுத்தமும் நிறைந்த அவளை மரியாதையாகப் போற்றத் தொடங்கினேன். கடைசியில் அது மோகமாக மாறி, அவள் அதைத் தெரிந்துகொண்டு, என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் போய், ஒரு வருஷம் கழித்து யாரோ ஒரு மின்சார என்ஜினீயரைக் கலியாணம் பண்ணிக் கொண்ட செய்தியைக் கேட்டது –

இந்த எல்லாமாகச் சேர்ந்து, கொதித்து “மோகமுள்” என்ற நாவலாக ஆகிவிட்டது. முக்கியமானவற்றைச் சொல்லியாயிற்று.

எப்படி அதை எழுதினேன் என்று கேட்டால் பதில் சொல்ல முடியவில்லை. அந்த எல்லா ஞாபகங்களும் உள்ளே கிடந்தன. ஒருநாள் ஒரு வாரப் பத்திரிகையிலிருந்து மூன்று பேர்கள் வந்து ‘ஒரு தொடர்கதை எழுதுங்களேன்’ என்றார்கள். நாலைந்து தடவை வந்தார்கள். இந்த ஞாபகங்கள், என் ஆசைகள், நப்பாசைகள், நான் எப்படி இருந்திருக்க வேண்டும் என்று நினைத்தேனோ, பார்த்த மனிதர்கள் பாத்திரங்களாக எப்படி மாறவேண்டும் என்று விரும்பினேனோ, எல்லாமாகச் சேர்ந்து நாவலாக உருவாயின. மறுபடியும் எப்படி என்றால் அதற்குப் பதில் சொல்ல முடியவில்லை. ஏதோ உட்கார்கிறோம், எழுதுகிறோம். சில சமயம் தரதரவென்று எழுதமுடிகிறது. சில நாளைக்கு ஒரு வரிகூட எழுதமுடியவில்லை. நாட்கணக்கில் எழுதவே முடிவதில்லை. எழுத வந்தால்தானே! நாலு நாட்கள் வந்து நாட்கள் மண்டையை உடைத்துக் கொண்டு, கடைசியில் அழாத குறையாக, படுத்து விடுகிறது. காலையில் எழுந்திருக்கும் பொழுது பளிச்சென்று கோவில், சினிமாவுக்குப் போகிற ஸ்திரீகள் ‘குக்’கரில் வைத்துவிட்டுப் போகிற அரிசி மாதிரி, எல்லாச் சிரமங்களும் விடிந்து, தானாக எண்ணங்கள் பக்குவமாகி இருக்கும். வேகமாக, பேனா அதை எழுதிவிடுகிறது. அவ்வளவுதான்.

தொடர்கதை எழுதுவதைப் பற்றி விமர்சகர்கள் நல்ல அபிப்பிராயம் சொல்வதில்லை. எனக்குக்கூட அந்த அபிப்பிராயத்தில் சிறிது சார்பு உண்டு. ஆனால் நான் எழுதின மூன்று நாவல்களும் தொடர்கதைகளாக வந்தவைகள்தான். பாத்திரத்தில் பச்சைத் தண்ணீரில் கிடக்கிற காய்கறிகளை வேக வைக்க, தொடர்கதை எழுதச் சொல்லும் பத்திரிகாசிரியரின் தூண்டுதல் நல்ல தீயாக வந்து உதவிச் சமைத்துக் கொடுக்கிறது. நெருப்பை ஜாக்கிரதையாகப் பயன்படுத்துவது நம் பொறுப்பு.

என்ன, சமையல் உபமானமாகவே இருக்கிறதே என்று நீங்கள் கேட்கிறீர்களா? முன் ஜன்மத்தில் தவசிப் பிள்ளையாக இருந்தேனே, என்னவோ, யார் கண்டார்கள்?

(கல்கி – 27.08.1961)
••••••••••

மோகமுள் கதையின் கதை....... 

(வாழ்வது எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது! அதுவும் #காவேரிக்கு ஓரமாக இந்த இடத்தில் வாழ்வது எவ்வளவு ஆனந்தம்! காவேரி மண்ணில் வேர்விட்டு உரம் குடித்து வானில் ஓங்கிய பச்சை, வெயில், பட்சிகளின் ஆர்ப்பாட்டம் வாசலில் கறிகாய் கூவும் அங்காடிகளின் குரலினிமை - வாழ்வின் வெவ்வேறு ஸ்வரங்களாக இவை ஒலித்து, ஒரு சுருதி சுத்தமான காணமாகக் கேட்டன. இதை ஏதும் வந்து கெடுக்க முடியவில்லை.)
*********
//இப்ப கச்சேரி கச்சேரின்னு பறக்கறதுக்கு ஆயிடலை. நிறைகுடமா வித்தையைச் சம்பாதிச்சுண்டு ஆரம்பிச்சா தேவலைன்னு தோண்றது. பிஞ்சிலே பழுக்க வேண்டாமேங்கறதுக்காகச் சொல்றேன். வேறென்ன - எள்ளோடு எலிப்புழுக்கையும் எண்ணெய்க்குக் காயறாப் போல, அரைகுறைகள், வெந்தது வேகாதது எல்லாம் ஜவ்வாதுப் பொட்டை இட்டுண்டு, சாரைப் பாம்பு மாதிரி ஒரு ஜரிகைமடிப்பைக் கழுத்திலேபோட்டுண்டு கச்சேரி கச்சேரின்னு கிளம்பிவிட்டுது. கேட்பானேன்? பாம்புப்பிடாரன் கத்தறாப்பலதான் இருக்கும், அதெல்லாம் வேண்டாம்னு சொல்றேன். புரியறதோ? . . தண்ணியிலே இறங்காம எப்படி நீஞ்சறதுன்னு பலபேர் புத்தியைக் கலைப்பா. அதையெல்லாம் கேட்டா தளர்ந்து போயிடப்படாது . . . அந்தரங்கமாக் கேட்டா, உனக்குக் கச்சேரியே வேண்டாம்னு சொல்லுவேன், ஆத்மானந்ததுக்கு ஏற்பட்ட வித்தை. விலை பேசற வித்தையில்லை. தானே அனுபவிச்சு அனுபவிச்சு, நாலு நல்ல சிஷ்யனாப் பார்த்துக் கடைசியிலே அவன் தோளுக்கு எல்லாத்தையும் மாத்தி விட்டுப் போறதுதான் உத்தமமான காரியம். இதைத் தொழிலா வச்சிண்டா, நாம சேவகம் பண்றது மாத்ரமில்லை கேட்கிற எஜமான் போக்குக்கு நம்ம வித்தையும் மாத்திக்கணும். ஞானத்தை எதுக்காகச் சம்பாதிக்கிறது? ஞான சூன்யங்கள் சொல்றபடி ஆடறத்துக்கா? சத்யத்தை எதுக்காகத் தெரிஞ்சுக்கறது? பயமில்லாம பொய் சொல்றதுக்கா? ஏண்டாப்பா . . . என்னடாது, ஆசையிலெல்லாம் மண்ணை அள்ளிப் போடறானேன்னு வருத்தப்படறியோ? நீ கச்சேரி பண்றதை வாண்டாம்னு சொல்ல மனசு வல்லை. அவசரப்பட வாண்டாம்னு தான் சொல்றேன்.//

//தஞ்சாவூரில் அப்பொழுதெல்லாம் மூலைக்கு மூலை சங்கீதக் கச்சேரிகள் அமர்க்களப்படும். சிவகங்கை அனுமார் வெங்கடேசப் பெருமாள் சன்னிதி அனுமார் மேலவீதி விசுவநாதர் மேலவீதிப் பிள்ளையார் தெற்குவீதிக் காளி அம்மன் வரகப்பையர் சந்தில் தியாகையர் பூஜித்த ராம விக்கிரகங்கள் நாணயக்காரச் செட்டித் தெரு ராமலிங்க மடம் பக்கத்தில் திருவையாறு  இத்தனை தெய்வங்களுக்கும் நடக்கிற உற்சவ சங்கீதக் கச்சேரிகளை ஒன்றுவிடாமல் ஐந்து வயதிலிருந்தே கேட்டுக்கொண்டிருந்த பழக்கம். நாலைந்து பேரிடம் சிறுவயதிலிருந்தே சங்கீதம் கற்கும் வாய்ப்புக் கிடைத்தது. கலைஞர்களுக்கு உரிய பேச்சின் அழகில் மயங்கினது. உமையாள்புரம் சுவாமிநாதய்யரிடம் சில நாட்கள் சங்கீதம் சொல்லிக்கொள்ளப் போய்க்கொண்டிருந்தேன். மற்றவர்களைவிட சங்கீதத்தை உபாசனையாக தியான மார்க்கமாக அவர் கையாண்ட ஒரு தனிப்பண்பு உலகத்தின் ஒலிகளையெல்லாம் நாதக் கடவுளின் பற்பல சைகைகளாகவும் விவகாரங்களாகவும் அவர் கண்ட விந்தையைத் துளியாவது பார்க்கக் கிடைத்த வாய்ப்பு கும்பகோணத்தில் கல்லூரியில் படித்த நாலு வருடங்களும் பள்ளி வாழ்க்கைக்கு நேர்மாறாக இருந்தன. அவ்வளவு உற்சாகம். அவ்வளவு அமைதி. இலக்கியங்களைப் பரவலாகப் படிக்க வாய்ப்புக் கிடைத்தது. பரம ரசிகர்களாக இருந்த இரண்டு மூன்று ஆசிரியர்களின் தோழமை இந்த வாய்ப்பைப் பெருக்கிற்று.//

//பார்க்கிற்கு வெளியே, ஹோட்டல் வாசலில் மாட்டிய ஒலி பெருக்கியிலிருந்து இசை தவழ்ந்து வந்துகொண்டிருந்தது. வீணையின் இசை; ஏதோ தேர்ந்த விரலாகத்தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பைரவி ராகத்தை இவ்வளவு சுத்தமாக எப்படி வாசிக்க முடியும்? அரை நிமிடம் கேட்பதற்குள் பாபுவின் உள்ளமும் உயிரும் அதில் ஒன்றிவிட்டன. அவ்வளவு சுருதி சுத்தமாக இசைந்தது, அந்த கானம். கேட்ட மாத்திரத்திலேயே நெஞ்சையும் இதயத்தையும் தன் வசப்படுத்துகிற அனுபவம் நிறைந்த கானம். நிஷாதத்தை அசைத்து அசைத்து, மத்யமத்தைத் தொட்டுத் தொட்டுக் கோலமிட்ட அந்த வரிசை, உள்ளத்தை உலுக்கி, உடலைச் சிலிர்க்க அடித்தது. மநிதபதமா, நீதநீத நீத பதமாகரீ . . . ஆகா! வீணையை அப்படி வருடிய விரல்கள் எவ்வளவு புண்யம் செய்தவைகளோ! முதுகுத் தண்டில் ஒரு சிலிர்ப்பு ஊர்ந்து அவன் உடல் உதறிற்று. பதமா . . . என்று கெஞ்சி இறைஞ்சும் அந்த இசை அவனைக் குற்றம் சாட்டிற்று. அவன் செய்தது தவறென்று உணரவில்லையா என்று தீனமாக மன்றாடிக் கேட்டது. பழைய நினைவுகளை உதறிவிட்டு, மீண்டும் சங்கீதத்தின் இனிமையில் லயிக்க முயன்றான் பாபு.//
நன்றி-Kolappan Bhagavathy

#கும்பகோணம்
#தஞ்சாவூர்
#காவேரி


No comments:

Post a Comment

நூல்கள்…தன் நிலையில்…..

இணறைய தினமணி 6-1-2025.