Tuesday, December 24, 2019

திருப்பாவை #கோதைமொழி

08.மார்கழி 
 " *தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்* 

 *ஆ-வா  என்று ஆராய்ந்து, அருள் ஏல்-ஓர் எம் பாவாய்* "

கீழ் வானம் வெள்ளென்று, எருமை சிறு வீடு
மேய்வான், பரந்தன காண்! மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து, உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம்! கோதுகலம் உடைய

பாவாய், எழுந்திராய்! பாடிப் பறை கொண்டு!
மாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய,
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்,
ஆ-வா என்று ஆராய்ந்து, அருள் ஏல்-ஓர் எம் பாவாய்!

கீழ் வானம் வெள்ளென்று = அதிகாலையில், கீழ் வானம் வெளுக்குது! 

எருமை சிறுவீடு மேய்வான், பரந்தன காண் = மாடுகள் மேய்ச்சலுக்கு அனுப்பப்படுகின்றன? வயலுக்கு அல்ல! பக்கத்திலேயே இருக்கும் சிறு வீட்டுக்கு கழட்டி விடப்படுகின்றன!

மிக்குள்ள பிள்ளைகளும் = மீதி இருக்கும் பொண்ணுங்க எல்லாம் 

போவான் போகின்றாரைப் போகாமல் காத்து = பாவம், நோன்புக்குப் புறப்பட்டுப் போக  இருந்த அவர்களையும, கொஞ்சம் இருங்கடீ-ன்னு காக்கச் செய்து!

உன்னைக் கூவுவான் வந்து நின்றோம் = எல்லாம் உனக்காகத் தான்! எல்லாரும் ஒன்னா போகலாம்-னு தான்! 

கோதுகலம் உடைய பாவாய், எழுந்திராய் = கோதுகலம்-ன்னா என்ன? சிறப்பு ப்ரியம்! சிறப்பு மகிழ்ச்சி! "குதூகலம்" என்ற வடமொழிச் சொல்லை, "கோதுகலம்" ஆக்குறாளோ ஆண்டாள்?

பாடிப் பறை கொண்டு = பாடிக்கிட்டே எழுந்திரு! அரி-அரி-ன்னு சொல்லிக்கிட்டே எழுந்திரு! நோன்புக்கு வேண்டிய பறையைப் பெற வேண்டுமே-ன்னு ஆசையோடு எழுந்திரு!
 
மாவாய் பிளந்தானை = மா (பறவை) = பறவையின் வாயைப் பிளந்தான் கண்ணன்! 

மல்லரை மாட்டிய = கம்சனின் அவையில், இரு பெரும் மல்லர்களை, மல்யுத்தத்தில் வென்றான்! "மல்"லாண்ட திண் தோள் மணிவண்ணா!

தேவாதி தேவனை = அனைத்து தேவதைகளையும் தன்னுள்ளே கொண்டவன்!
"பிற" தேவதைகளைத் தாழ்த்தாத "பர" தேவதை! முனியே, நான்முகனே, முக்கண் அப்பா என்று எல்லோரும் அவன் திருவடிவத்தில் இருக்கிறார்கள்!
விஸ்வரூப தரிசனம்! சிறு-கர்ம தேவதைகளான அக்னி முதற் கொண்டு, பெரும் புகழ் கொண்ட மகேஸ்வர சிவபெருமான் வரை, எல்லாரும் அவன் வடிவத்திலேயே இருக்கிறார்கள்!

தேவதைகளுக்கு எல்லாம் தேவதை! கடவுளர்க்கு எல்லாம் கடவுள்! பர+பிரம்மம்!
கட+உள் = எல்லாரையும் கடந்தும் உள்ளான்! எல்லார் உள்ளுக்குள்ளும் உள்ளான்!

தேவாதிதேவனைச் சென்று நாம் சேவித்தால் = இந்தத் "தேவாதிதேவன்" தான் தேவராசப் பெருமாளாய், தேவப் பெருமாளாய், காஞ்சிபுரத்தில் நின்று சேவை சாதிக்கிறான்!

சென்று நாம் சேவித்தால் = அவரை நாம்போய் இன்றைக்கு சேவிப்போம் வாருங்கள்! 

ஆ-வா என்று = கூட்டத்தில் நம்மைப் பார்த்த மாத்திரத்தில் அவருக்கு செம ஷாக்!
அடப்பாவி, நீயா வந்திருக்க? ரொம்ப தான் பிகு பண்ற ஆளாச்சே நீ? நீ எப்படிறா என்னைப் பாக்க வந்தே? "ஆ!" என்கிறான்!

 பின்னர் அன்போடு "வா!" என்கிறான்!!

"ஆராய்ந்து" அருள் = கேட்டதையெல்லாம் கேட்டபடியே கொடுத்து விடாது, நாம் கேட்டது நல்லதா? உலகத்துக்கு நல்லதா? மற்றவர்க்கும் நல்லதா? ஏன், நமக்கே நல்லதா? என்று "ஆராய்ந்து" அருள்பவன்!

ஏல்-ஓர் எம் பாவாய் = தேவாதி தேவனை ஏல் (ஏற்றுக் கொள்ளுங்கள்)!

 தேவாதி தேவனை ஓர் (நினைத்துக் கொள்ளுங்கள்)!

ஆண்டாள் திருவடிகளே சரணம்!
தேவாதி தேவன், தேவப் பெருமாள் திருவடிகளே சரணம்!
வரதா! வரதா! ஹரி ஓம்!

#திருப்பாவை
#கோதைமொழி

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...