Monday, December 30, 2019

திருப்பாவை #கோதைமொழி 14.மார்கழி

#திருப்பாவை
#கோதைமொழி 14.மார்கழி 

“ *சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக் கையன்”* 

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவி உள்,
செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து, ஆம்பல் வாய் கூம்பின காண்!
செங்கல் பொடிக் கூறை வெண் பல்-தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்!

எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
நங்காய், எழுந்திராய்! நாணாதாய், நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக் கையன்
பங்கயக் கண்ணானைப் பாடு, ஏல்-ஓர் எம் பாவாய்.

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவி உள் = உங்க புழக்கடைத் தோட்டக் குளத்திலே!

புழக்கடை = புழை+கடை! கடை-ன்னா கடைசி; புழை-ன்னா குறுகிய வாயில்!
வாவி = சிறு குளம், நீர் நிலை! கிணற்றைக் கூட வாவி-ன்னு சொல்லுவாங்க! 

செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து, ஆம்பல் வாய் கூம்பின காண் = செந்தாமரை மலர்கள் பூக்கின்றன! ஆம்பல மலர்கள் குவிந்து மூடுகின்றன!
 
செங்கல் பொடிக் கூறை, வெண் பல்-தவத்தவர் = செங்கற்பொடி போல சிவப்பா, காவி நிறத்துல கூறை ஆடை! கூறைப் புடைவை-ன்னு சொல்றோமே அது போல! அந்தக் காவியைத் தரித்த பல-தவத்தவர்கள்! பல்-முனிவர்கள்! அவர்கள் தவம் வெண்மையான (தூய்மையான) தவம்! வெண் மனசு போல வெண் தவம்!

தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார் = சங்கு ஊதி வழிபடனும்-ன்னு கோயிலுக்குப் போகத் தொடங்கி விட்டார்கள் அந்த முனிவர்கள்! 
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும் = ஏதோ பெருசா, எங்களை எல்லாம் வந்து எழுப்பறேன்-ன்னு முன்னே சொன்னியே! 
நங்காய்! எழுந்திராய், நாணாதாய், நாவுடையாய் = ந.நா.நா!
நங்கையே! நாணம் இல்லாதவளே! நாக்கை மட்டும் நீட்டி நீட்டி, தேனொழுகப் பேசுறவளே! எழுந்திரு!

சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக் கையன் = சங்கு-சக்கரம் ஏந்தும் வலிமையான கைகளை உடைய நம் பெருமாள்!
சக்கரம் முதன்மையான ஆயுதம் என்றாலும், சொல்லும் போது "சங்கு-சக்கரம்" என்று தான் சொல்கிறார்கள்! ஆண்டாளும் அப்படியே சொல்கிறாள்! இளங்கோவடிகள் மட்டும் பகை அணங்கு ஆழியும் பால் வெண் சங்கமும் என்று "சக்கர-சங்கை"க் காட்டுகிறார்!

சக்கரத்தின் பெயர் சு+தர்சனம்! சங்கின் பெயர் பாஞ்ச சன்னியம்! நமக்கு மட்டுமில்லை, எம்பெருமானுக்கே காப்பாக இருப்பவை இவை! இவைகளை விழிப்பாக இருந்து அவனைப் பார்த்துக் கொள்ளச் சொல்கிறார்! உறகல், உறகல் ஒண்சுடர் ஆழியே,சங்கே!-என்று சங்கு சக்கரத்தைத் தூங்கக் கூட விட மாட்டேங்கிறார் நம்ம பெரியாழ்வார்!

பங்கயக் கண்ணானைப் பாடு = அந்தத் தாமரைக் கண்ணானைப் பாடு!

ஏல்-ஓர் எம் பாவாய்! ஏல்-ஓர் எம் பாவாய்!

#திருப்பாவை
#கோதைமொழி


No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...