Monday, December 9, 2019

ஜனநாயகம் குறித்தான விவாதம்.



-------------------------------------

Against Democracy 
- Jason Brennan

Democracy for Realists
- Christopher H. Achen & Larry M. Bartels

என்ற இரண்டு நூல்களை கடந்த சில நாட்களில் படித்து முடித்தேன். ஜனநாயகம், அரசியலமைப்பு, குடியரசு, நாடாளுமன்ற ஜனநாயகம், குடியரசுத் தலைவர், சமஷ்டி அமைப்பு, ஒற்றையாட்சி போன்ற அரசியல் விஞ்ஞானத்தில் உள்ள கருத்துகள், கோட்பாடுகள் குறித்தான தற்போதைய போக்கு குறித்து இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

ஜனநாயகம் நேர்மையாக இயங்க இன்றைக்கு சில முக்கிய முடிவுகளை எடுக்கவேண்டிய நிலையில் உலக சமுதாயம் உள்ளது. இது கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விடயங்கள் ஆகும்.




1.) ஜனநாயகம் என்பது மக்கள் தங்கள் உண்மையான, அவர்களுக்கு நேர்மையாக பணியாற்றக்கூடிய பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வேண்டுமென்றும், பெரும்பான்மை ஆதரவு இருக்கின்றதென்று தரமற்றவர்களையும், தகுதியற்றவர்களையும், கிரிமினல்களையும் ஆதரிப்பது உண்மையான ஜனநாயகம் இல்லை. மக்களின் குரலே மகேசன் குரல் என்பதற்கேற்ப மக்களும் தெளிவுடன் நல்ல ஆற்றல்மிகு மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்யவேண்டும். இன்றைய போக்கு அப்படியல்ல. ஆனால் ஒரு கட்டத்தில் இந்த சூழல் மாற்றப்பட வேண்டியதொரு அவசியத்திற்கு மக்களே தள்ளப்படுவார்கள்.

2.) நாடாளுமன்றம் முறையாக நடக்கிறதா? என்பதை மக்களின் கண்காணிப்பு அவசியம். தங்களை தேர்ந்தெடுத்துவிட்டார்களே என்று தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் தான்தோன்றித்தனமாக தங்களின் பதவிக் காலங்களில் நேர்மையற்ற முறையில் அத்துமீறினால் அவர்களை திரும்ப அழைக்கும் முறையை உருவாக்கவேண்டும். 

3.) நாட்டின் எந்த முக்கிய பிரச்சனை என்றாலும் மக்களின் கருத்துகளை அறியக் கூடிய வகையில் பொது வாக்கெடுப்பு (Referendum) முறையை கடைபிடிக்க வேண்டும்.

4.) ஜனநாயகத்தை பேணிக்காக்கும் மக்கள் பிரதிநிதிகள் தவறு செய்து குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டால் அரசியல் களத்திலிருந்து அவர்களை அப்புறப்படுத்த வேண்டும்.

5.) தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அந்த தொகுதியில் உள்ள வாக்காளர்களிடம் 6 மாதத்திற்கு ஒருமுறை ஒரு பொது தளத்தில் சந்தித்து தாங்கள் செய்த பணிகளை சொல்லிவிட்டு மக்கள் எழுப்புகின்ற வினாக்களுக்கு பதிலளித்து அதை வெளிப்படையாக தொகுதி மக்களுக்கு தெரிந்தால் தான் அவர் சரியாக தனது பணியை செய்தாரென்று அறிய முடியும். அப்படி மக்களுக்கு விருப்பத்திற்கு மாறாக ஒரு பிரதிநிதி இருந்தால் அவரை அப்பதவியிலிருந்து முறையான விசாரனையோடு அப்புறப்படுத்த வேண்டும்.

6.) ஜனநாயகத்தில் அனைவரும் அரசர்களாக இருக்கலாம். ஆனால், மக்களே தவறாக, அறியாமையாக, ஏதோவொரு சுயநலத்தோடு வாக்களித்தால் அது ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல. 

7.) மக்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்.

8.) தேர்தல்கள் நேர்மையாகவும், இன்றைக்குள்ள விஞ்ஞான மாற்றத்துக்கேற்ப தேர்தல் நடைமுறைகளை உண்மையான ஜனநாயகத்திற்கு வித்திடும் வகையில் நடத்திட வேண்டும். இதற்கு எந்தவிதமான மாற்றுக்கருத்துக்கும் இடமளிக்க கூடாது. இதில் சரியான, கண்டிப்பான அணுகுமுறைகளை கடைபிடிப்பது முக்கியமான காரணியாகும். அதுபோல ஜாதி, தனிப்பட்ட நோக்கங்களுக்காக ஆரம்பிக்கும் அரசியல் கட்சிகளை அங்கீகரிக்கவே கூடாது. காளான்கள் போல கட்சிகளின் எண்ணிக்கையும் வளர்ந்தால் ஜனநாயகத்திற்கு பெருங்கேடாகும்.

9.) அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் சுயலாபத்திற்கும், சுயபுகழ்ச்சிக்கும் ஆட்படும்போது அவர்களையும் முறையான சட்டப்பூர்வமான விசாரனைக்கு உட்படுத்தவேண்டும்.

10.) 'Hero Worship' என்ற தனிநபர் துதிபாடும் முறையையும், அரசியல் கட்சிகளின் அடிமைத்தனமான போக்கையும் அதன் மூலம் பதவிகள் பெறுவதையும் ஒரு காலும் அனுமதிக்க கூடாது. அரசியல் கட்சிகளின் உட்கட்சி ஜனநாயகம் உண்மையாக, நேர்மையாக இருக்க வேண்டும். இது குறித்து தேர்தல் ஆணையங்கள் கண்காணிக்கவும் வேண்டும். 

11.) ஊழல், தவறான நெறிமுறைகள், அணுகுமுறைகள், ஆட்சியின் நேர்மையற்ற போக்கு, உறவினருக்கு உதவுதல் (Nepotism) என்பதையெல்லாம் ஆளவந்தார்களிடம் இருந்தால் உடனே ஆட்சியை கலைக்கலாம். எகிப்தில் மக்களே திரண்டு போராடிய வரலாறுண்டு.

12.) தேசிய இனங்களில் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஜனநாயகம் அமைய வேண்டும்.

இப்படி பல கருத்துகள் அறிந்திருந்தாலும் இதுகுறித்தான விவாதங்களை இந்த நூலில் விரிவாக காணமுடிகின்றது. குறிப்பாக தகுதியற்ற ஒருவரை பெரும்பான்மையோர் ஆதரிக்கின்றார்கள் என்ற நிலையில் தவறாக தலைவர் என்று அவரை கொண்டாடுகின்றார்கள். அது ஜனநாயகத்துக்கு முரணானதென்று இந்நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போக்கினாலேயே ஜனநாயகத்தின் படிமங்கள் குறைந்து உண்மையான ஜனநாயகம் அழிந்துவிடுமோ என்ற அச்சத்தை வெளிப்படுத்துகின்றனர் இந்த நூலாசிரியர்கள். 

கிரேக்கத்தில் ஜனநாயகம் பிறந்தது. ரோமில் குடியரசு பிறந்தது. அவை பிறந்த இடங்களெல்லாம் இன்றைக்கு இடிந்த வரலாற்று சின்னங்களாக அமைந்து விட்டன. ஜனநாயகம் பிரிட்டனுக்கு சென்று நாடாளுமன்ற ஜனநாயகமாக உருவெடுத்து பல நாடுகளில் நாடாளுமன்ற (West Minister Form) அமைப்பு முறை நடக்கின்றது. குறிப்பாக பிரிட்டிஷ் காமன்வெல்த் நாடுகளில் இந்த நாடாளுமன்ற ஜனநாயக முறை நடைமுறையில் உள்ளது. 

குடியரசு ரோமிலிருந்து பிரெஞ்சு, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு சென்று குடியரசுத் தலைவர்கள் ஆட்சியில் பிரதான பங்கு வகிக்கின்ற குடியரசு ஆட்சிகள் (Presidential Form of Government) நடக்கின்றது. 

#ஜனநாயகம்
#குடியரசு
#அரசியல்
#அரசியலமைப்பு_முறை
#Democracy
#Republic
#Politics
#Political_system

#KSRadhakrishnanPostings 
#KSRPostings
கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
09-12-2019

No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...