—————
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப்போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம்போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறைதருவான்
பாரோர் புகழ படிந்தேலோர் எம்பாவாய்
பொருள்
மார்கழித்திங்கள்-- மார்கழிமாதத்தில்
மதிநிறைந்த-- முழுமதிநிறைந்த
நன்னாளால் -- நல்லநாளில்
நீராட --நீராட
போதுவீர்-- வரவிரும்புபவர்களே
போதுமினோ-- வாருங்கள்
நேரிழையீர் -- ஆபரணங்களை அணிந்தவர்களே
சீர்மல்கும்-- செல்வம்மிகுந்த
ஆய்ப்பாடி-- ஆயர்பாடியிலுள்ள
செல்வ- செல்வவளம்மிக்க
சிறுமீர்காள் --இளம்பெண்களே
கூர்வேல்--கூரியவேலையுடைய
கொடுந்தொழிலன்-- (ஸ்ரீகிருஷ்ணனைக்காக்க) கொடுந்தொழிலைச்செய்த
நந்தகோபன்குமரன் -- நந்தகோபனுடையமகனும்
ஏரார்ந்தகண்ணி-- அழகியகண்களையுடைய
யசோதை -- யசோதையின்
இளஞ்சிங்கம்-- இளஞ்சிங்கம்போன்றவனும்
கார்மேனிச்--கருத்தமேனியும்
செங்கண் -- செந்தாமரைப்பூப்போன்றகண்களையுடைய
கதிர்மதியம்-- சூரியனையும் சந்திரனையும்
போல்முகத்தான்-- ஒத்தமுகத்தையுடைய
நாராயணனே-- ஸ்ரீமந்நாராயணன்தான்
நமக்கேபறை -- நமக்கு கைங்கர்யபேற்றை
தருவான்-- அளிக்கக்கூடியவன் எனவே
பாரோர்-- உலகத்தார்
புகழ--பாராட்டும்படி
படிந்து --பணிவுடன்
ஏலோரெம்பாவாய்-- நோன்புமேற்கொள்ள வாருங்கள்
கருத்து
மார்கழிமாதத்தில்நீராடிகாத்யாயினிவிரதம் (பாவைநோன்பு )
மேற்கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூரை கோகுலமாக்கி தன்
வயதையொத்த பெண்களுடன் ஸ்ரீமந்நாராயணனுக்கு
தொண்டாற்ற ஸ்ரீஆண்டாள்அழைக்கிறாள்.தன்னலமற்ற
தொண்டுதான்முக்திபெற உரியவழிஎன்பதை உணர்த்தும்
பாடல்இது, ஸ்ரீமன் நாராயணனை அடைவதற்கு அவனே உபாயம் என்ற கருத்தும் இப்பாசுரத்தில் வலியுறுத்தப்படுகிறது தைத்ரியோபனிஷத்திலும் ஹரிவம்சத்திலும் இக்கருத்து குறிப்பிடப் படுகிறது..
No comments:
Post a Comment