Friday, December 13, 2019

குடியுரிமைச் சட்டமும், திமுகவின் நிலைப்பாடும்!

இலங்கை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை கடந்த 2009 மே மாதம் நடந்தபோது அரசியலிலிருந்து வதைப்பட்டு ஒதுங்கியிருந்தேன்.
அதே ஆண்டு ஜூலை மாதம். ஒரு நாள் காலை நேரம். தொலைபேசியில் என்னை அழைத்தார் தலைவர் கலைஞர்.
“என்னய்யா… பண்றே?”- வழக்கம் போலப் பேசினார்.
நான் புத்தகங்கள் எழுதிக் கொண்டும், ‘கதை சொல்லி’ இதழை நடத்திக் கொண்டிருப்பதையும் சொன்னேன்.
“ஏன்யா… இப்படி இருக்கே… நான் மு.கண்ணப்பன் கிட்டே உன்னைப் பத்திப் பேசியிருக்கேன்.. சீக்கிரம் இங்கே வந்து சேருய்யா” என்றார்.
இது குறித்து கலைஞருக்கு நன்றிக் கடிதமும் எழுதினேன்.
அந்தக் கடிதத்தைப் படித்துவிட்டு திரும்பவும், “எத்தனையோ பழைய நிகழ்வுகளை எல்லாம் எழுதியிருக்கப்பா” என்று சந்தோஷமாகச் சொன்னார் கலைஞர்.
ஆகஸ்டு 2009-ல் நான் தி.மு.க வில் சேர்ந்தபின் 13.08.2009 அன்று கலைஞர் என்னை வரச்சொன்னார்.
அவரைச் சந்திக்கப் போயிருந்தேன்.
அப்போது அவர், “அண்ணாவோட நூற்றாண்டு விழா வருது… காஞ்சிபுரத்தில் சிறப்பாக நடத்த இருக்கின்றோம்.
அந்த நிகழ்வில் அண்ணாவைப் பற்றி தமிழிலும், ஆங்கிலத்திலும் புத்தகங்களைக் கொண்டு வரணும்… நீ தான் அந்த இரண்டு நூலையும் எழுத வேண்டும்” என்றார்.
“இன்னும் ஒரு மாசம் தான் இருக்கு. அவகாசமில்லையே எப்படி என்னால் முடியும்?” என்று தயங்கிச் சொன்னேன்.
“உன்னாலே முடியும்ப்பா… எனக்குத் தெரியும். அதான் உன்னிடம் சொல்றேன். பார்த்துக்கலாம்… பலரிடம் நான் இதைச் சொல்லியும் அண்ணாவைப் பற்றி எழுதிக் கொண்டுவரக் கூட முடியாமல் இருக்கின்றார்கள். வேற வழியில்லை நீ தான் செய்யனும்” என்று உத்தரவு தோரணையில் சொல்லிவிட்டார். மறுக்க முடியவில்லை.
‘திமுக-சமூக நீதி’, ‘DMK-Social Justice’ என்ற தலைப்பில் தமிழிலும், ஆங்கிலத்திலும் அண்ணாவின் அட்டைப் படத்துடன் இந்த இரண்டு நூல்களும் இருபது நாட்களில் எழுதி முடித்து, திமுக தலைமைக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டது.
இந்த இரண்டு நூலுக்கும் கலைஞர் அணிந்துரையும் என்னைப் பற்றியும் சிலாகித்தும் எழுதியிருந்தார். கலைஞர் அவர்களின் செயலாளராக இருந்த ராஜமாணிக்கம் ஐ.ஏ.எஸ் (ஓய்வு) முன்னின்று அணிந்துரைகளைப் பெற்றுத் தந்தார்.
தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளிவந்த இந்த இரண்டு நூலையும் காஞ்சிபுரத்தில் நடந்த அண்ணா நூற்றாண்டு விழா மாநாட்டில் கலைஞர் வெளியிட, கழகத் தலைவர் எம்.கே.எஸ் முன்னிலையில் பேராசிரியர் பெற்றுக் கொண்டார்.
அப்போது நடந்த முக்கியமான விஷயத்தை இப்போது கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.
அண்ணாவின் நூல் தயாரிப்பு வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போது காஞ்சி மாநாட்டுக்கான வேலைகளும் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தன.
“மாநாட்டில் இலங்கைத் தமிழர்களைப் பற்றி என்ன தீர்மானம் கொண்டு வரலாம்?”-என்று என்னிடம் கேட்டார் கலைஞர். தீர்மானத்தை எழுதிக் கொடுக்கவும் சொன்னார்.
இந்தியாவுக்கு வந்திருக்கும் ஏராளமான ஈழத்தமிழர்கள் இரண்டாவது தலைமுறையாக இங்கு வாழந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதை வலியுறுத்திய தீர்மானத்தை நான் எழுதி கலைஞரிடம் கொடுத்தேன்.
உடனே செயலரான ராஜமாணிக்கத்திடம் காட்டி, அதை ஒழுங்குபடுத்தச் சொன்னார். அதன் பின் அண்ணா நூற்றாண்டு விழா மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
“இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள் விரும்பினால் இந்தியக் குடியுரிமை பெறலாம்.
ஒருவேளை இலங்கைக்குத் திரும்பவும் போக விரும்பினால் செல்லலாம்” என்றும் சொன்னவர் கலைஞர்.
எனவே, இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டதில் அவருக்குத் திருப்தி.
அதன்பின் கலைஞர் தலைமையில் நடந்த அமைச்சரைவைக் கூட்டத்திலும் இது விவாதிக்கப்பட்டது.
மேலும், இலங்கைத் தமிழர் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்ட ‘டெஸோ’ அமைப்பை மறுபடியும் 2012-ல் துவங்கி, டெஸோ கூட்டத்திலும் இதே தீர்மானத்தை நிறைவேற்றினோம்.
அப்போது மத்தியில் இருந்த மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அந்தத் தீர்மானத்தைக் கண்டுகொள்ளவே இல்லை என்பது மட்டுமல்ல, அப்படியே கிடப்பிலும் போட்டுவிட்டது.
அப்போது மத்திய அமைச்சராக இருந்த ப.சிதம்பரமும் அதை அப்போது கண்டுகொள்ளவே இல்லை என்பது தான் நடந்த உண்மை.
கலைஞர் வலியுறுத்தியபடி அன்றைக்குத் தனி மசோதா கொண்டு வரப்பட்டிருந்தால், இலங்கைத் தமிழர்கள் அன்றே குடியுரிமை பெறுவதற்கான வாய்ப்பு உருவாகியிருந்திருக்கும். காங்கிரஸ் தவறவிட்டுவிட்டது.
அத்துடன் “முள்ளிவாய்க்காலில் இறுதியாக நடந்த போரில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது அது தொடர்பான சரியான தகவல்கள் கூட முறையாக என்னிடம் சொல்லப்படவில்லை” என்றார் கலைஞர்.
பிறகு இலங்கையில் 2009-ல் நடந்த கொடுமைகளைக் காட்டும் குறுந்தகடுகளை தலைவர் கலைஞரிடம் நான் வழங்கினேன். மறுநாள் அதைப் பார்த்துவிட்டு என்னிடம், “பெரும் இன அழிப்பு நடந்திருப்பது தெரிந்ததும் தன்னால் சாப்பிடவோ, உறங்கவோ முடியவில்லை.
அப்படியொரு நிலைக்கு ஆளானேன்” என்றார் கலைஞர். பார்வதியம்மாள் வந்ததைக் கூட தனக்குத் தெரிவிக்காமல் மத்திய அரசே முடிவெடுத்து விட்டதாகவும் கலைஞர் கூறினார்.
இலங்கைத் தமிழர் குடியுரிமை தொடர்பான செய்திகள் அடிபட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில்-அன்றைய தி.மு.க.வின் நிலைப்பாடு என்னவாக இருந்தது என்பதை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காவே இதை இங்கு பதிவு செய்திருக்கிறேன்.
இப்படியான கடந்துவந்த செய்திகளை சொல்ல வேண்டியது பொறுப்பின் காரணமாக இதைப் பதிவு செய்கின்றேன்.
காலச்சக்கரங்களும் ஓடுகின்றன. செயல்பாடுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. கடமையைச் செய்வோம் என்ற நிலையில் நானும் 48 ஆண்டுகளாகப் பொதுவாழ்வில் கடந்து வந்து கொண்டிருக்கின்றேன்.
பல வேடிக்கை மனிதர்கள், முரண்கள், வெட்டிக் காட்சிகளையும் கடந்து, எந்தவிதமான பலாபலன்களும் இல்லாமல் சுகமான சுடுமணல் பயணத்தில் பணிகள் நடக்கின்றன.
இந்த கட்டுரையை https://www.thaaii.com/?p=23306 என்ற தளத்திலும் வாசிக்கலாம்.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...