#நீங்கா_நினைவுகளாக_சரியாக_30ஆண்டுகளுக்கு_பின்னும்_இன்றும்
#நெஞ்சில்_பளிச்சிடுகிறது.......
————————————————-
கடந்த 1989இல் தமிழகத்தில் நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் திமுக வேட்பளாராக போட்டியிட்டேன். இந்த தேர்தலில் என்னை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக சமூக நீதி காவலர், முன்னாள் பிரதமர் வி.பி.சிங் இதே நாள் (27.12.2019) 27-12-1988 இல் வந்திருந்தார். கோவில்பட்டி காந்தி மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் என்னை ஆதரித்து வாக்குகள் சேகரித்தார். எட்டையபுரத்துக்கும் வந்தார். ஆனால் அந்த தேர்தலில் வெற்றிவாய்ப்பை இழந்தேன்.
உடன்வைகோஅவர்கள். இந்த தேர்தலில் எனக்கு பணியற்றிய
வழக்கறிஞர்கள் பின் நாட்களில் உச்ச நீதிமன்ற, உயர் நீதி மன்ற நீதிபதிகள் ஆனார்கள். எனது உதவியாளர்கள்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆனார்கள் . 30 ஆண்டுகள் கடந்துவிட்டது. நீங்கா நினைவுகளாக இன்றும் பளிச்சிடுகிறது.
#அன்றைய_தேர்தல்_களம்
———————————————
*#இன்றைய_பணம்_காசு_வியாபார #அரசியல்*
--------------------
எனக்கு ஓரளவு அரசியல் புரிந்த நிலையில் 1959 காலகட்டத்தில் தேர்தலில் மக்கள் சாதி, காசு பணம் பார்க்காமல் வாக்களித்தனர். இப்போது அப்படியான ஒரு நிலை இல்லை. ஒன்று சாதிபலம் அல்லது பணபலம் அல்லது புஜபலம் ஆகியவை இன்றைய அரசியலுக்கு அவசியமாகிவிட்டது.
ரூ. 20 நோட்டுக்களை டோக்கனாக பயன்படுத்தி ஒருவர் வெற்றி பெற்று விட்டதை வீரப்பிராதபம் என பேசுகின்றனர். எந்த வகை அரசியல் இது? ஓட்டுக்கு பணம் வாங்குவது வேறொரு தொழில் செய்வதற்கும் என்ன வேறுபாடு காணமுடியும்?
குடவோலை முறையை உலகுக்கு அறிமுகப்படுத்திய பண்டைய தமிழர்களின் அரசியல் நாகரீகத்தை கொச்சைப்படுத்தியதை வேடிக்கை பார்ப்பதே தவறு. ஆனால் சிலர் அதனை நியாபப்படுத்தி பேசுவது நாட்டிற்கு மிகவும் ஆபத்தானது.
இன்றைக்கு கொள்கையும், தியாகமும், நேர்மையும் அவசியமில்லை. பணமும், அடிதடி இரண்டும் இருந்தால் அரசியலுக்கு போதுமானது.
வள்ளுவனும் வாசுகியும் போல், நகமும் சதையும் போல் பணமும் அரசியலும் இணைந்தே இருக்கும். இது தான் அரசியல் சூத்திரம். யார் நினைத்தாலும் இதனை இனி மாற்ற முடியாது.
இனி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் வங்கிக் கடனை பெற்று வெற்றி பெற்ற பின் அதை திரும்பி செலுத்தும் சூழ்நிலை கூட வந்துவிடும்.
குடியாத்தம், 1954 இடைத்தேர்தலில் போட்டியிட்ட காமராசர் வெற்றி பெறுவதற்காக பணம் கொடுத்தார் என்பது கம்யூனிஸ்ட்களின் குற்றச்சாட்டு. காஞ்சிபுரத்தில், 1962 தேர்தலில் அறிஞர் அண்ணா போட்டியிட்ட போது அவரை எதிர்த்து போட்டியிட்ட நடேச முதலியார் வாக்குக்கு பணம் அளித்தார் என்பது குற்றச்சாட்டு. அதே காலகட்டத்தில் தஞ்சையில் போட்டியிட்ட தலைவர் கலைஞரை எதிர்த்து போட்டியிட்ட பரிசுத்தநாடார் வாக்குக்கு பணம் அளித்தார் என்பது குற்றச்சாட்டு.
எனக்கு தெரிந்த மங்கலான நினைவுகளில் ஒன்று. 1950-60 காலக்கட்டத்தில் தென்மாவட்டங்களில் இசைஞானி இளையராஜா அவர்களின் அண்ணன் பாவலர் வரதராஜன் பொதுவுடமை இயக்கத்தின் தொண்டராக கலைநிகழ்ச்சிகள் நடத்துவார். அந்த நிகழ்ச்சிகளில் காசுக்கு விலை போகாதீர்கள் என்றுப் பாடுவார்.
நான் 1970 முதல் 1998 வரை தேர்தல் களத்தில் முகவராகவும் வேட்பாளராகவும் களத்தில் இருந்துள்ளேன். அப்போதெல்லாம் வாக்குக்கு பணம் அளித்தது இல்லை. பூத் செலவுக்கு மட்டும் பணம் அளிப்பது வழக்கம். அதிலும் கூட சில பகுதிகளில் நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம் என பூத் கமிட்டி உறுப்பினர்கள் பணத்தை வாங்க மறுத்ததும் உண்டு. அவர்கள் கையில் திணிக்க முயன்று தோல்வியடைந்த அனுபவங்கள் அதிகம்.
திமுக சார்பில் 1989 பொதுத் தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் போது இவ்வளவு செலவுகள் கிடையாது. அப்படியிருந்தும் அப்போது 35,000 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பினை இழந்தேன்.
திரும்பவும், 1996 இல் கோவில்பட்டியில் அதே அளவு வாக்குகளை சேகரிப்பதற்கு நான் செய்த செலவோ சில லட்சங்கள் தான். அதே சமயத்தில், சென்னை பூங்கா நகர் தொகுதியில் 400 முதல் 500 வரை வாக்குகளையே பெற்ற வேட்பாளர் தஞ்சை கூத்தரசனுக்கும் மதிமுக தலைமை ஒரு இலட்சம் கொடுத்தது. ம.தி.மு.க.விலேயே அந்த தேர்தலில் அதிகபட்ச வாக்குகள் பெற்ற எனக்கும் ஒரு இலட்சம் தான் கட்சி கொடுத்தது. அந்த காலகட்டத்தில் தமிழக அளவில் மதிமுக 180 தொகுதிகளில் போட்டியிட்டது. மதிமுக சார்பில் 1996 தேர்தலில் போட்டியிட்டவர்களில் வைகோ விளாத்திகுளம் தொகுதியிலும், நான் கோவில்பட்டி தொகுதியிலும் ,தங்கவேலு சங்கரன்கோவில் தொகுதியிலும் போட்டியிட்டோம். நாங்கள் மூவர் மட்டுமே டெபாசிட்டை திரும்ப பெற்றோம். அதில் நான் மட்டுமே அதிகபட்சமாக 35,000 வாக்குகளை பெற்றேன். மற்ற மதிமுகவினர் அனைவரும் என்னைவிட குறைவான வாக்குகளையே பெற்றனர். அப்போதும் நான் வாக்குக்கு எவ்வித பணம் அளிக்கவில்லை.
பழ. நெடுமாறன் மதுரை மத்திய தொகுதி தேர்தல்களில் போட்டியிட்ட போதும், வைகோ சிவகாசி நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்ட போதும், கோவில்பட்டியில் கம்யூனிஸ்ட் தலைவர் சோ. அழகிரிசாமி போட்டியிட்ட போதும் இடை தேர்தல்களிம் பிரதான தேர்தல் பணிகளை ஆற்றியவன். நல்லகண்ணுவுடன் அழகிரிசாமிக்காக 1970களில் இணைந்து தேர்தல் பணி செய்ததெல்லாம் பழைய நினைவுகள். சென்னை மயிலை 1994இல் நடந்த இடைத்தேர்தல், ஜெயலலிதா 2002இல் போட்டியிட்ட ஆண்டிப்பட்டி இடைத்தேர்தல், சைதை இடைத்தேர்தல், 2012இல் சங்கரன்கோவில் இடைத்தேர்தல்கள் போன்றவற்றில் பல முக்கிய களப்பணிகளை ஆற்றியுள்ளேன். இதையெல்லாம் விளக்கமாக சொன்னால்தான் பலருக்கு புரியுமென்பதற்காக பதிவிடுகிறேன்.
இன்றைய காலக்கட்டத்தில் தேர்தலில் போட்டியிட மக்கள் பணியோ, மக்களுடன் நிரந்தர தொடர்போ, தியாகமோ, மக்களுக்கான போராட்டம் செய்தோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தங்களின் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ள எந்த தொழிலிலும் ஈடுபட்டு பொருளீட்டிக் கொண்டு தேர்தலுக்காக காத்திருக்கலாம். தேர்தல் அறிவித்த உடன் சேர்த்த பணத்தைக் கொண்டு வேட்பாளராக போட்டியிடலாம். சேர்த்த பணத்தைக் கொட்டி வெற்றி பெறலாம். இது தான் ஆர்.கே. நகர் தேர்தல் நிலை.
விஜய் மல்லையாவும், எம்.ஏ.எம். ராமசாமியும் கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யபட்டதின் பின்னணி என்ன, மக்கள் சேவையா? அவர்கள் மருத்துவக் கல்லூரி இடத்தை படிக்க காசு கொடுத்து வாங்குவதை போல, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விலைக்கு வாங்கினார்களே. அதற்கும் முன்னாள் பிரதமர் தேவேகவுடா துணைபோனாரே. இது தான் ஆரோக்கியமான பொதுவாழ்வா? அப்படியென்றால், மக்களின் நன்மைக் கருதி, மாநிலத்தில் நன்மைக்காக பொதுநல வழக்கு தொடர்ந்தும், தினந்தோறும் மக்கள் பிரச்சனைகளுக்கு செவிமடுத்து தங்களால் இயன்ற உதவியை உடலுழைப்பை அளித்து வரும் நாங்கள் எல்லாம் தேர்தல் அரசியலில் வெறும் பார்வையாளர்கள் தானோ? பணபலம் கொண்டவர்கள், சுயமரியாதை இழந்து கும்பிடு போடும் ஆசாமிகளை எங்களால் முந்த முடியவில்லை. பொதுநலம் சுமைதாங்கிகளும், பணநலத்தால் பாரமற்று இருப்பவர்கள் ஒரே பந்தயத்தில் ஓடுவது தான் இன்றைய அரசியல்.
நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுக - அதிமுகவுடன் ஏற்பட்ட கூட்டணியின் பலனாக 1998ஆம் ஆண்டு வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி எனக்கு ஒதுக்கப்பட்டு அதில் போட்டியிட என் பெயரை அறிவிக்க காத்திருந்த நேரத்தில் இன்னொருவருக்கு அந்த இடம் வழங்கப்பட்டது. எனக்கென்று அந்த தொகுதி வாங்கப்பட்டு அறிவிக்கும்போது மட்டும் புறக்கணிக்கப்பட்டது ஏன் என்று இன்றுவரை தெரியவில்லை. நான் என்ன உழைக்கவில்லையா?
பின்னர், 2002 ஆம் ஆண்டு மாநிலங்களவை தேர்தலில் எனது பெயரை மறைந்த முரசொலி மாறன் அவர்கள் என்னிடம் உங்கள் கோவில்பட்டி தொகுதியில் இருந்து உங்கள் வாக்காளர் விவர சான்றிதழ் வாங்கி வந்துவிடுங்கள் என்று என்னை பணித்தபின் திருமண வரவேற்பில் இருந்த வழக்கறிஞர் சண்முகசுந்தரத்தை அழைத்து அந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டது. முரசொலி மாறன் அவர்களும் இது குறித்து வருத்தப்பட்டதும் உண்டு. நான் ஏதோ இதை இட்டுக்கட்டி சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம். இதற்கு சாட்சியாக அன்றைக்கு சன் டிவியில் பணியாற்றிய கருப்பசாமி (இன்றைக்கு தந்தித் டிவியில் பணியாற்றுகிறார்) இருக்கின்றார். இவர் இந்த சம்பவத்தை குறித்து நன்கு அறிவார்.
இப்படி, தேர்தல் களம் என்பது உழைப்பு, தியாகம், கொள்கை என்பதில்லை. மாறாக ஒரு சதுரங்க விளையாட்டாக பதவிகள் பெறுவதாக மாறிவிட்டன. ஒரு நல்லகண்ணுவோ, மறைந்த இரா. செழியனோ, பேராசிரியர். அன்பழகனாரோ, நெடுமாறன் போன்றவர்கள் மூத்தவர்கள் என்றாலும் தேர்தல் களத்தில் தோல்வியைச் சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்களே. நடிகை வைஜெயந்தி மாலா போன்றோர் வெற்றி பெறுகிறார்கள்.
ஊழலில் திளைத்தவர்கள், கடுங்குற்றவாளிகள் எல்லாம் வெற்றி பெறுகிறார்கள். கண்ணதாசனுடன் நெருக்கமாக இருந்தவன் என்ற நிலையில் அவர் அடிக்கடி சொல்வார். நான் நாடறிந்தவன் தான், மக்களுக்கு எனது அறிமுகம் தேவையில்லை. ஆனால் தேர்தலில் நான் வெற்றிப் பெறுவேனா என்பதை என்னால் சொல்லமுடியாது என்பார்.
இப்படியான தேர்தல் பரிணாமப் போக்கில் ரூபாய் நோட்டில் டோக்கன் கொடுத்து இன்றைக்கு பத்தாயிரம் வரை ஒரு ஓட்டுக்கு கொடுக்க தயாராகிவிட்டார்கள். எதிர்வரும் தேர்தலில் இந்த மதிப்பு அதிகமாகத் தான் இருக்கும். இவ்வளவு பணம் கொடுத்து ஓட்டு வாங்கி இவர்கள் நாட்டை ஆளுவார்களா? அல்லது தேர்தல் அரசியலை வியாபாரமயமாக்கி வணிக அரசியலை ஒரு தொழிலாக்கிவிடுவார்களா?
பிறகெப்படி, மக்கள் நல அரசு, மக்கள் அரசு மக்களுக்காக உழைக்கக் கூடிய அரசாக இருக்கும்.
_*"மக்களால், மக்களுக்காக நடத்தப்படுவதே மக்களாட்சி"*_
_*"Government of the people, by the people, for the people, shall not perish from the earth"*_
என்ற லிங்கனின் வார்த்தைகளுக்கு அர்த்தமின்றி போய்விடும்.
ஆங்கிலத்தில் இன்னொரு பழமொழியும் உண்டு.
_*"Democracy - the freedom to elect our own dictators."*_
இது தான் இன்றைக்கு யதார்த்தமாகத் தெரிகிறது. அரசியல் என்பது தவம், அறம் என்பதை மறந்து தொழிலாக்கிவிட்டார்கள் அரசியல் வியாபாரிகள். ஆனாலும் ஆரோக்கிய அரசியலுக்காக இன்னும் போராடுகின்றவர்களும் இருக்கின்றார்கள். இருப்பினும், பணம், துட்டு, காசு, ஜாதி, புஜபலம் தான் இறுதியாக முடிவு செய்கிறது. இதையும் மீறி ஆரோக்கிய அரசியல் கோஷம் போர்குணத்தோடு என்றும் முழக்கிமிடும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நல்லவர்கள், வல்லவர்கள், ஆற்றலாளர்கள் அரசியல் சதுரங்கத்தில் அமைதியாக ஆடினாலும் என்றைக்கும் அவர்கள் வரலாற்றுப் பக்கங்களில் இடம் பெறுவர். ஆனால் அரசியல் வியாபாரிகள் சிலகாலம் பதவியில் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு இறுதியாக மண்ணுக்கு செல்லும் போது வரலாற்றில் மறக்கப்படுவார்கள்.
#வி_பி_சிங்
#தகுதியேதடை
#தேர்தல்_அரசியல்
#வியாபார_அரசியல்
#Trade_politics
#Electoral_Politics
#KSRadhakrishnanpostings
#KSRPostings
K S Radhakrishnan
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
27/12/2019
No comments:
Post a Comment