Tuesday, December 31, 2019

திருப்பாவை #கோதையொழி

#திருப்பாவை 
#கோதையொழி 15 மார்கழி

" *வல்லீர்கள் நீங்களே, நானே தான் ஆயிடுக* "

 -"திருப்பாவையிலும் திருப்பாவை"

எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ!
சில்லென்றழையேன் மின் நங்கைமீர்! போதருகின்றேன்!
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தானாயிடுக!
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்தெண்ணிக் கொள்
வல்லானைக் கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை, மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.

குறிப்பு: கோபியரை துயிலெழுப்பும் பத்து (6-15) பாசுரங்களில் இது கடைசிப் பாசுரம். சென்ற பாடல் வரை ஆண்டாள் கோபியரை துயிலெழுப்பிக் கொண்டிருந்தாள். முதல் முறையாக இப்பாடலில் உறக்கம் விட்டெழுந்த கோபி ஒருத்தியுடன் ஆண்டாள் உரையாடுவதைக் காணலாம். ஒன்றை கவனிக்க வேண்டும், உறங்கும் கோபியரை எழுப்ப கோதை நாச்சியாரே 10 பாசுரங்கள் பாந்தமாய் பாட வேண்டியிருந்தது 🙂 இப்போது எழுந்தவளும் உடனே தயாராகாமல் என்ன பேச்சு பேசுகிறாள் பாருங்கள் !

பொருளுரை:

எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ!
[எழுப்புபவர்] "இளங்கிளி போல பேச்சுடையவளே! இன்னமும் உறங்குகின்றாயோ?"

சில்லென்றழையேன் மின் நங்கைமீர்! போதருகின்றேன்!
[எழுந்திருப்பவர்] "அறிவார்ந்த என் தோழிமாரே! 'சில்' என்று மிக்க கூச்சலிட்டு என்னைக் கூப்பிட வேண்டாம். இதோ வந்து கொண்டே இருக்கிறேன்"

'மிளகாய் (சில்லென்று) போல காரமான சொற்கள் கூறி என்னைக் கூப்பிடாதீர்கள்' என்று நேரடியாகவே பொருள் கொள்ளலாம் 🙂

வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்[எழுப்புபவர்] "திறம்பட நீ உதிர்க்கும் உறுதிமொழிகளையும் உன் பேச்சு திறனையும் நாங்கள் வெகு காலமாகவே அறிவோமே"

வல்லீர்கள் நீங்களே நானே தானாயிடுக!
[எழுந்திருப்பவர்] "நீங்கள் தான் பேச்சுத் திறனுடையவர்கள்! சரி விடுங்கள், நீங்கள் கூறியபடி நானே வாயாடியாக இருந்து விட்டுப் போகிறேன்"

ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை[எழுப்புபவர்] "விரைவாகத் தயாராகி எங்களுடன் சேர்ந்து கொள். வேறு எதைப் பற்றி இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறாய்?"

எல்லாரும் போந்தாரோ?
[எழுந்திருப்பவர்] "எல்லாப் பெண்களும் வந்துவிட்டார்களா?"
போந்தார் போந்தெண்ணிக் கொள்
வல்லானைக் கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை, மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.
[எழுப்புபவர்] "அனைவரும் வந்து விட்டனர். நீயே வந்து எண்ணிப் பார்த்துக் கொள்ளேன்! (கம்சனின் மாளிகையின் வாசலில் தன்னை மிதித்தழிக்கக் காத்திருந்த) குவலயாபீடம் எனும் யானையைக் கொன்று, கம்சன், சாணூரன், முஷ்டிகன் ஆகிய பகைவர்களின் அகந்தையை அழித்தவனும், மாயச்செயல்கள் புரிந்து நம்மை ஆட்கொள்ளுபவனும் ஆன கண்ணனின் புகழைப் பாட விரைவில் எழுந்து வருவாயாக"

பாசுரச் சிறப்பு:

பெரியோர் இப்பாசுரத்தை "திருப்பாவையிலும் திருப்பாவை" என்று போற்றுவர். அதற்கு முக்கியக் காரணம், "நானே தான் ஆயிடுக" என்ற வாக்கியமாம். இதற்கு ஆழ்ந்த உட்பொருள் உள்ளது. எளிமையாகச் சொன்னால், இல்லாத குற்றத்தை ஒருவர் நம் மீது சுமத்தும்போது கூட, அதை மறுக்காமல் நமது குற்றமென்று இசைவதே ஒரு வைணவனின் குணமாகும் என்ற தாத்பர்யத்தை இந்த ஒரு வாக்கியம் சொல்லி விடுகிறது!

இதற்கு முன்னால் வந்த 9 துயிலெழுப்பும் பாசுரங்கள் போல் அல்லாமல், இப்பாசுரம் உரையாடல் நடையில் பாடப்பட்டு, மிக சுவையாக, பாகவத கைங்கர்யம் (அடியார் சேவை) பகவான் சேவையினும் சிறந்தது என்பதை வலியுறுத்துகிறது!

பகவத் சேவையும், அவனது திருவடியில் சரணடைதலும் "சிற்றம் சிறுகாலே வந்துன்னை சேவித்து" என்று திருப்பாவையில் இறுதியில் (29வது பாசுரத்தில்!) தான் ஆண்டாளால் கொண்டாடப்படுகிறது. அதற்கும் முன்னாலே இந்த 15வது பாசுரத்திலேயே, கோதை நாச்சியார் பாகவத சேவையைக் கொண்டாடி, சரணாகதித்துவத்தில் பாகவத சேவையின் உன்னதப் பங்கை சொல்லி விடுகிறார்!

அடியாருக்கு அடியாராக இருப்பவரே பகவானுக்கு உகந்தவர், நெருக்கமானவர்! திருப்பாணாழ்வார் கூட அரங்கனை "அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன்" என்று தானே போற்றிப் பாடுகிறார்.

குருகையூர் கோன் நம்மாழ்வார் தனது திருவாய்மொழியில், அடியார்க்கு அடியாராக இருப்பதில் உள்ள பெருஞ்சிறப்பை, அவருக்கே உரித்தான பக்திப் பேருவகையோடு பாடியிருக்கிறார்!அடியார்ந்த வையமுண்டு* ஆலிலை அன்ன வசஞ்செய்யும்,*
படியாதுமில் குழவிப்படி* எந்தைபிரான் தனக்கு,*
அடியார் அடியார் தம்* அடியார் அடியார் தமக்கு*
அடியார் அடியார் தம்,*அடியார் அடியோங்களே.
3.7.10

மேலே உள்ள பாசுரத்தில் "அடியார்" என்பது ஏழு முறை சொல்லப்பட்டிருப்பது, "சப்த பர்வ தாஸ்யத்வம்" எனப்படுகிறது. அதாவது, ஏழு பிறப்புகளிலும் வைணவ அடியார்க்கு தொண்டு செய்யும் பாக்கியத்தை வரமாக பரமனிடம் வேண்டுவது இதன் உள்ளுரையாம்!வாய்க்க தமியேற்கு* ஊழிதோறூழி ஊழி*மாகாயாம்-
பூக்கொள் மேனி நான்குதோள்* பொன்னாழிக்கை என்னம்மான்*
நீக்கமில்லா அடியார்தம்* அடியார் அடியார் அடியார் எங்கோக்கள்*
அவர்க்கே குடிகளாய்ச் செல்லும்* நல்ல கோட்பாடே. 
8.10.10

மேலும், அடியவர் சேவை என்பது உபதேசத்தால் விவரிக்க முடியாதது. அதைக் கடைபிடிப்பவர்களாலேயே அதை உணர முடியும். அதனாலேயே, பாசுரத்தை 'அடியவர் சேவை' பற்றிய ஒரு அறிவுரையாகப் பாடாமல், சம்பாஷணை வடிவில் சொல்லி, அடியவர் சேவையின் சிறப்பை குறிப்பில் உணர்த்துகிறார்.

அடியார் குழாம் சூழ, பரமனின் திருவடிகளைப் பற்றி வழிபடுவதையே ஸ்ரீவைஷ்ணவம் மிக உயரியதாகக் கருதுகிறது. அவ்விஷயத்தையும், இப்பாசுரம் குறிப்பில் உணர்த்துவதாகக் கொள்ளலாம். ஆண்டாளின் தந்தையான பெரியாழ்வாரே, "எங்கள் குழாம் புகுந்து கூடு மனமுடையீர்" என்று அடியவர்களை அழைத்திருக்கிறார் தானே 🙂
ஒரு உத்தம ஸ்ரீவைஷ்ணவனின் பத்து குணாதிசயங்கள் இப்பாசுரத்தில் சொல்லப்பட்டுள்ளன.

எல்லே இளங்கிளியே - நற்பேச்சு

இன்னும் உறங்குதியோ - அடியவர் அருகில் இருக்கையில், அவர் சேவையை விடுத்து வேறு எந்த செயலிலும் ஈடுபடலாகாது

சில்லென்றழையேன் மின் - அடியவருடன் உரையாடும்போது, சுடு சொற்களை பயன்படுத்துவது தகாது!

நங்கைமீர்! போதருகின்றேன் - அடியவரை மரியாதையுடனும், அடக்கத்துடனும் அணுக வேண்டும்

வல்லை உன் கட்டுரைகள் - அடியவர், நம்மீது சொல்லும் குறைகளை பிணக்கின்றி மனதார ஏற்றுக் கொள்ள வேண்டும்!

வல்லீர்கள் நீங்களே நானே தானாயிடுக! - இல்லாத குற்றத்தை ஒருவர் நம் மீது சுமத்தும்போது கூட, அதை மறுக்காமல் நமது குற்றமென்று இசைய வேண்டும்

ஒல்லை நீ போதாய் - அடியவரை ஒரு கணமும் பிரியலாகாது, அவர்களை காக்க வைக்கலாகாது!

உனக்கென்ன வேறுடையை - வைணவ சாத்திரங்கள் சொல்லும் வழிமுறைகளிலிருந்து மாறாமல் நடத்தல் வேண்டும், நம் மனம் போனபடி அல்ல!

எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்தெண்ணிக் கொள் - அடியவர் கூட்டத்தைக் காண்பதும், அதில் சேர்வதுமே பரமனைப் பற்றுவதற்கான உபாயமாகும்!

வல்லானைக் கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க வல்லானை, மாயனைப் பாட - பரந்தாமனின் கல்யாண குணங்களைப் போற்றிப் பாடுவது, அடியவரை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என்பதால், இதுவே, அடியவர் சேவையின் உன்னத விஷயமாகக் கொண்டாடப்படுகிறது.

இப்பாசுரத்திற்கு இன்னொரு உள்ளுரையும் உண்டு.

இளங்கிளியே - சம்சார பந்தத்தில் உழலும் பக்தன்

இன்னம் உறங்குதியோ - பல பிறவிகள் எடுத்தும், ஆச்சார்யனிடம் புருஷார்த்தம் (ஞானம்) பெற முடியாத தன்மை

எல்லே - ஆச்சர்யத்தை (அதாவது, உலகப்பற்று, அஞ்ஞானம் ஆகியவற்றில் உழலும் பக்தனுக்குக் கூட கற்றறிந்த அடியவர் சம்பந்தம் ஏற்படப் போகும் ஆச்சர்யத்தை) குறிப்பில் உணர்த்துவதாம்!

நங்கைமீர் - ஞானமிக்க அடியார்களே!

சில்லென்றழையேன் மின் - எனது அஞ்ஞானத்தால் தவறிழைப்பின், அதற்காக கடிந்து கொள்ளதீர்

போதருகின்றேன் - சத்விஷயங்களில் (பகவத், பாகவத, ஆச்சார்ய சேவை) என்னை ஈடுபடுத்திக் கொள்கிறேன்.

வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும் - வைணவ ஆச்சார்யர்கள் சொன்ன நற்கதைகளையும், உபதேசங்களையும் மனதில் நிறுத்தி

வல்லீர்கள் நீங்களே - அடியவர் நீங்களும் சத்விஷயங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்

நானே தான் ஆயிடுக - மனதில் வைராக்கியம் இன்றி, விஷய சுகங்களில் நான் திளைக்கிறேன்

ஒல்லை நீ போதாய்! (குழுமியுள்ள அடியவர்கள் கூறுவது) - வைராக்கியத்தோடு உலகப் பற்றைத் துறந்து, கைவல்யத்தைக் காட்டிலும் மோட்ச சித்தியே சிறந்தது என்றுணர்ந்து, பகவத் சேவைக்கு வருக!

எல்லாரும் போந்தாரோ - மற்ற அடியவர் அனைவரும் இவ்வழியைத் தான் அனுசரிக்கிறார்களா ?

போந்தார் போந்தெண்ணிக் கொள் (குழுமியுள்ள அடியவர்கள் கூறுவது) - ஆமாம், அடியவர் அனைவரும் பகவத்-பாகவத சேவையின் வாயிலாக பேரின்பத்தை நாடுவதே உயரியது என்றுணர்ந்து விட்டனர். நீ வெளியே வந்தால், அது உனக்கும் புரிந்து விடும்!

வல்லானைக் கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க வல்லானை, மாயனைப் பாட - நம் தீவினைகளை அழித்து, நம்மை மாயையிலிருந்து விடுவித்து, தறிகெட்டு அலையும் நம் புலன்களை நெறிப்படுத்தி, பகவத்-பாகவத சேவையில் நம்மை ஈடுபடுத்தி நம்மை ஆட்கொள்ளவிருக்கும் பரமனின் திருவடியைப் போற்றிப் பாடுவோமாக!*****************************

எட்டடிகள் கொண்ட பாசுரத்தில் சூடிக் கொடுத்த நாச்சியார் எத்தனை செய்திகளை தருகிறார், பாருங்கள். அதனால் தான், நாலாயிரத்தில் (திவ்ய பிரபந்தத்தில்) கோதைப் பிரபந்தங்கள் உயர்வானதாகப் போற்றப்படுகின்றன. அவை இரண்டில் (நாச்சியார் திருமொழி, திருப்பாவை) திருப்பாவைக்கே வைணவ பாரம்பரியத்தில் உயரிய இடம் தரப்பட்டுள்ளது! அது போல, பாவை முப்பதில், இப்பாசுரமே மிக மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது!

இப்பாசுரம் கடைக்குட்டி ஆழ்வாரான திருமங்கையாழ்வாரின் திருப்பள்ளியெழுச்சி என்று கூறுவது ஐதீகம். அதற்கான விளக்கத்தைப் பார்ப்போம்!

ஆண்டாள் இப்பாசுரத்தில் கடைபிடிக்கும் (அடியவரிடையே)சம்பாஷணை முறையை, திருமங்கையாரும், "மானமரு மென்னோக்கி" என்ற பதிகத்தை (10 பாசுரங்கள்) இரண்டு ஆய்ச்சிகளுக்கு இடையே நிகழும் சம்பாஷணையாகப் பாடியுள்ளார்!மானமரு மென்னோக்கி* வைதேவியின் துணையா,*
கானமரும் கல்லதர்போய்க்* காடுறைந்தான் காணேடீ*
கானமரும் கல்லதர்ப்போய்க்* காடுறைந்த பொன்னடிகள்,*
வானவர்தம் சென்னி* மலர்க்கண்டாய் சாழலே!

கலியப் பெருமானை "இளங்கிளியே" என்பது மிகப் பொருத்தமே, இவர் தான் ஆழ்வார்களில் இளையவர், அத்துடன் தன்னைக் கிளியாக பல பாசுரங்களில் வருணித்துக் கொண்டவர். அதை விட முக்கியமாக ஒரு கிளி செய்வதைப் போல, நம்மாழ்வாரின் உபதேசத்தை இவ்வுலகுக்கு திரும்ப உரைக்க அவதாரம் கொண்ட (மாறன் தமிழ்மறைக்கு ஆறங்கம் கூற அவதரித்த)திருமங்கையாரை "இளங்கிளியே" என்று தாராளமாக அழைக்கலாம் தானே 🙂

"வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்" எனும்போது ஆண்டாள் திருமங்கையார் அவதரிப்பதற்கு முன்னமே (பண்டே!) அவரது (பெரிய திருமொழி இயற்றப்போகும்!) புலமையை மனதார பாராட்டுகிறார்!

"உனக்கென்ன வேறுடையை" என்று ஆண்டாள் பாடுவது, பெரிய திருமொழி தவிர கலியபெருமான் அருளப் போகும் இரண்டு பிரசித்தி பெற்ற திருமடல்களை ஞாபகம் வந்ததால் என்று கொள்ளலாம்!

எல்லாரும் போந்தாரோ? - திருமங்கையார், தனக்கு முன்னால் மற்ற ஆழ்வார்கள் அனைவரும் அவதாரம் எடுத்து விட்டனரா என்பதை ஆண்டாளிடம் வினவுவதாகக் கொள்ளலாம்!

வல்லானைக் கொன்றானை - குவலயாபீடம் என்ற கம்சன் அனுப்பிய யானையை அழித்த கண்ணனின் லீலையை திருமங்கையாழ்வார் பல பாசுரங்களில் பாடியுள்ளார் என்பது கவனிக்க வேண்டியது.

"அவரிவை செய்கறிவார் அஞ்சனமாமலை போலே", "கவல யானை கொம்பொசித்த கண்ணனென்னும்", "வேழனும் பாகனும் வீழ" (திருவல்லிக்கேணி பற்றிய பாசுரத்தில் உள்ளது இது) என்பவை சில உதாரணங்கள்.விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும் * வேழமும் பாகனும் வீழ*
செற்றவன் தன்னை புரமெரி செய்த* சிவனுறு துயர்களை தேவை*
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு* பார்த்தன் தன் தேர்முன் நின்றானை*
சிற்றவை பணியால் முடி துறந்தானைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே*

மாற்றாரை மாற்றழிக்க வல்லானை, மாயனைப் பாட - பகைவரின் அகந்தையை அழிப்பதற்கு வேண்டி எம்பெருமான் லீலைகள் பல புரிபவன். அவற்றில் ஒன்று தான், கோவர்த்தன கிரியை குடையாகப் பிடித்து, மாக்களையும், ஆயரையும் காத்து, இந்திரனின் கர்வத்தை சாதுர்யமாக அடக்கியது. திருமங்கையார் இந்த கிருஷ்ண லீலையால் மிகவும் கவரப்பட்டதால் தான், தனது பெரிய திருமொழியை, "குன்றமெடுத்து ஆநிரை காத்தவன் தன்னை" என்று முடிக்கிறார்! அது போல, திருநெடுந்தாண்டகத்தை, "குன்றெடுத்த தோளினானை" என்று நிறைவு செய்கிறார்! கோதை நாச்சியாரும், ஆழ்வாருக்குப் பிடித்த அதே கிருஷ்ண லீலாவை ஞாபகப்படுத்தி இப்பாசுரத்தை நிறைவு செய்கிறார் 🙂
ஆண்டாள் திருவடிகளே சரணம்!

#திருப்பாவை 
#கோதையொழி


No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...