#திருப்பாவை
#கோதைமொழி 12.மார்கழி
“ *மனத்துக்கு இனியானை பாட நீ வாய் திறவாய்* ”
கனைத்து, இளம் கற்றெருமை, கன்றுக்கு இரங்கி,
நினைத்து, முலை வழியே, நின்று பால் சோர,
நனைத்து, இல்லம் சேறாக்கும்! நற் செல்வன் தங்காய்!
பனித் தலை வீழ, நின் வாசற்கடை பற்றிச்,
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற,
மனத்துக்கு இனியானைப் பாடவும், நீ வாய் திறவாய்!
இனித்தான் எழுந்திராய்! ஈதென்ன பேர் உறக்கம்?
அனைத்து இல்லத்தாரும் அறிந்து, ஏல்-ஓர் எம் பாவாய்!
கனைத்து, இளம் கற்றெருமை, கன்றுக்கு இரங்கி = மாஆஆஆஆ என்று கனைக்கிறது! இந்த எருமையே ஒரு இளமை எருமை! அதற்கு ஒரு கன்று!
நினைத்து, முலை வழியே நின்று பால் சோர = அந்தக் கன்றை நினைத்த மாத்திரத்தில், பால் தானாகச் சொரிகிறது!
நனைத்து, இல்லம் சேறாக்கும்! = பால் கறக்க ஆளில்லாத வேளை! இப்படித் தானாகவே பால் கசிந்தும் சொரிந்தும் கொண்டு இருந்தால்? அந்த வீடே சேறாகி விட்டது! பால் சேறு! பாற்கடல் தெரியும்! இது பாற்சேறு!
நற் செல்வன் தங்காய் = நல்ல செல்வனின் தங்கையே!
நற்செல்வன் = நப்பின்னையின் அண்ணன்! அவள் நற்+பின்னை! இவன் நற்+செல்வன்!
குழந்தைகளுக்குச் சூட்ட அழகான தமிழ்ப் பெயர்கள் அல்லவா - *நப்பின்னை* , *நற்செல்வன்* !
இவனை ஸ்ரீதாமன் என்றும் வடமொழியில் சொல்லுவார்கள்! ராதையின் அண்ணன்! ஸ்ரீதாமன் = நற்செல்வன்! அதே பொருள் தான் வருகிறது ரெண்டு பேருக்குமே!
இந்த நற்செல்வன் கண்ணனின் மனத்துக்கு அவ்வளவு பிடித்தமானவன்! மிகவும் மென்மையான பையன்!
*கண்ணன்-நற்செல்வன் உறவு வெறும் ஆருயிர்த் தோழமை மட்டுமே அல்ல! அதையும் தாண்டி ஒரு ஜென்ம-ஜென்ம பந்தம் இருவருக்குள்ளும்* !
வெண்ணெய் களவாடும் போது எப்பமே உடன் இருப்பவன் ஸ்ரீதாமன் (எ) நற்செல்வன்! கண்ணன் மாட்டிக் கொள்ளும் போது, அவனைத் தப்புவிக்க, தான் அடி வாங்கிக் கொள்வானாம்! வெண்ணெய்க் கட்டியின் மேல் சில சமயம் காரம் தடவி வைப்பார்களாம் சில அம்மணிகள்! அன்றிலிருந்து தான் தின்று பார்த்துவிட்டு, அப்புறம் தான் அந்த எச்சில் கட்டியைக் கண்ணனுக்குத் தருவானாம் நற்செல்வன்! இப்படி ஒரு பந்தம்!:)
துழாய்க்காட்டை (பிருந்தாவனத்தை) விட்டு, கண்ணன் மதுரைக்குப் போகிறான்! எல்லாக் கோபிகைகள் கிட்டேயும் விடைபெற்றாகி விட்டது! ஆனா இந்த நற்செல்வனை மட்டும் அன்னிக்குன்னு பார்த்து எங்கு தேடியும் காணோம்!
கண்ணன் மனசு அடிச்சுக்குது! தன் "உயிர்" கிட்ட சொல்லாம கொள்ளாம எப்படிப் போவது? இந்த அண்ணன் பலராமன் வேறு அவசரப்படுத்துகிறான்! ஆற்றங்கரைக்கு வந்தாகி விட்டது!
ஆகாஆஆஆ! ஆங்கே நற்செல்வன்! மரத்தின் அடியில் கலங்கிய கண்களுடன்!
கண்ணன் ஓடியே போய் செல்வனைக் கட்டிக் கொள்கிறான்!
பிரிய வேண்டுமே என்ற பிரிவு ஆற்றாமை இரு தோழர்களின் நெஞ்சிலும்! கண்ணன் வழக்கம் போல பொய் சொல்கிறான்!
"நாளைக்கே திரும்பி வந்துடுவேன் நற்செல்வா!"
"பொய்! கம்சன் பொல்லாதவன்! அவனை ஒரே நாளில் எல்லாம் உன்னால் ஒன்னும் செய்ய முடியாது! என்னைக் கூட அழைத்துப் போ என்றாலும், அதுக்கு வந்திருக்கும் மதுரைப் பெரியவர் முட்டுக்கட்டை போடுகிறார். நான் என்ன செய்ய கண்ணா?"
"டேய், நாளை இல்லீன்னா நாளன்னைக்கு! இல்லீன்னா இன்னும் ஒரு நாள்! எப்படியும் வந்துருவேன்-டா!"
"சரி, உனக்காக இந்தக் கரையில் தினமும் வந்து வந்து காத்துக்கிட்டே இருப்பேன்! சரியா?"
போனவன் போனவன் தான்! காத்துக்கிட்டு இருந்தவன், காத்துக்கிட்டு இருந்தவன் தான்!
பெற்றோர், உற்றோர், ஏன் கோபியரே விட்டுவிடு என்று சொன்ன போதும், விடாமல் கண்ணனுக்குக் காத்துக் கொண்டே இருந்தான்! பலப்பல ஆண்டுகள் ஓடி விட்டன! இறுதியில் கண்ணனால் ஆட்கொள்ளப்பட்டான்!
கோபிகைகளைக் காட்டிலும் அதிக ப்ரேமை கொண்டவன் நற்செல்வன்! கோபிகைகளாவாது கண்ணனிடத்தில் மயங்கி அவன் தீண்டலை வேண்டி நின்றார்கள்! ஆனால் இவனுக்கோ அந்த முகாந்திரமும் இல்லை! கைங்கர்ய ப்ரேமை! அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?
அதனால் தான் சென்ற பாட்டில் "கறந்து" என்று கோபிகைகளைக் காட்டிய கோதை, இந்தப் பாட்டில் பால் "தானாகவே சொரிகிறது" என்று சொல்லி நற்செல்வனைக் காட்டுகிறாள்!
* கோவலர் பொற்கொடியான கோபிகைக் "காதல்" = கற்றுக் கறவை கணங்கள் பல "கறந்து"
* நற்செல்வன் "அன்பு" = நினைத்து, முலை வழியே, நின்று பால் "சோர"
அன்"பால்" சொரியும் நற்செல்வன்-ஸ்ரீதாமன் திருவடிகளே சரணம்!
பனித் தலை வீழ, நின் வாசற் கடை பற்றி = காலை இளம் பனி எங்க தலை மேல வந்து விழுகிறது! இருந்தாலும் உன் வாசற்கடையில் வந்து நிக்குறோம்! இதுக்காக வாச்சும் எழுந்திருடீ!
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற = இராவணப் பெருந்தகை! அரக்கன் என்றோ அசுரன் என்றோ அவனை ஆண்டாள் வையவில்லை! இராவணனைக் கோமான் என்கிறாள்! மனத்துக்கு இனியான் என்று போற்றுகிறாள்!
மனத்துக்கு இனியானை = இராமன் மனத்துக்கு இனியான்! ரம்மியம்=ராமன்!
ரம்யதி இதி ராமஹ: ரமந்தே அஸ்மின் இதி ராமஹ: மனிதனாய் இராமனும் தவறுகள் செய்தான்! ஆனால் மறைக்கவில்லை! ஒப்புக் கொண்டு கழுவாய் தேடினான்!
* ஊருக்கு உபதேசம் செய்யப் போகிறான் கிருஷ்ணாவதாரத்தில் = கீதை!
முதலில் ராமாவதாரத்தில் தான் நடந்து காட்டிவிட்டு, பிற்பாடு ஊருக்கு உபதேசம்!
*கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ* ? என்கிறார் நம்மாழ்வார்! உண்மை விளிம்பியான மாறனே அப்படிச் சொல்கிறார் என்றால் அது சும்மா இல்லை!
பாடவும், நீ வாய் திறவாய்! = அவனைப் பாடுகிறோம்! நீ வீட்டு வாயையும் திற! உன் வாயையும் திற! திறந்து எங்களுடன் சேர்ந்து பாடுவாய்!
இனித்தான் எழுந்திராய்! ஈதென்ன பேர் உறக்கம்? = இன்னுமா எழவில்லை? அப்படி என்ன உனக்குப் பெரும் தூக்கம்?
அனைத்து இல்லத்தாரும் அறிந்து = அக்கம் பக்கம் எல்லா வீட்டுக்கும் தெரியப் போவுது உன் தூக்க மகாத்மியம்!
பாடவும், நாம் வாய் திறப்போம்! பாடும் பணியே பணியாய் அருள்வாய்!
ஏல்-ஓர் எம் பாவாய்! ஏல்-ஓர் எம் பாவாய்!
ஆண்டாள் திருவடிகளே சரணம்!
#திருப்பாவை
#கோதைமொழி
No comments:
Post a Comment