#உழவர்_தலைவர் #நாராயணசாமி_நாயுடு அவர்களின்
இன்று (21-12-2019)
35 வது நினைவு நாள்,
————————————————
“மாட்டு வண்டிகள் இந்திய விவசாயிகளின் பாட்டன் டாங்குகள்”
என்று New York Times போன்ற உலகப் பத்திரிக்கைகள் எழுதக் காரணமான,
கோயம்புத்தூர் விவசாயிகளின் மாபெரும் மாட்டுவண்டி போராட்டத்தை
வெற்றிகரமாக ஜூன் 1972ல் நடத்திய நாராயணசாமி நாயுடுவை
தலைவராகக் கொண்டு, முதன்முதலாக
“தமிழக விவசாயிகள் சங்கம்”
துவங்கப்பட்ட தினம் 13 நவம்பர் 1973.
1970ல், அன்றைய தமிழக அரசு, மின் கட்டணத்தை, யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக உயர்த்தி அறிவித்தது. இதை எதிர்த்து கோயம்புத்தூர் மாவட்ட விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர். 1970ம் ஆண்டு மே 9ல் பல்லாயிரக்கணக்கான மாட்டு வண்டிகள் மற்றும் டிராக்டர்களில் விவசாயிகள், கோயம்புத்தூரில் பேரணி நடத்தினார்கள். நகரம் அதிர்ந்தது. உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தைத் திரும்பப் பெறாவிட்டால், ஜூன் 15ல் அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டமும், ஜூன் 19ல் பந்த்தும் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
போராட்டத்தின் உச்சத்தில், அரசாங்கம் ஒடுக்குமுறையை ஏவி, மூன்று விவசாயிகளின் உயிரைப் பறித்தது. அதனால் ஏற்பட்ட விளைவுகள் அரசைப் பணியவைத்தன. மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ஒரு பைசா குறைக்கப்பட்டது. கடன் வசூல், தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது. இதன் காயங்கள் ஆறுவதற்கு முன்பாகவே, மாநில அரசு, மீண்டும் மின்சாரக் கட்டணத்தை 9 பைசாவிலிருந்து 12 பைசாவுக்கு உயர்த்தி, 01.01.1972 முதல் புதிய கட்டணத்தை அமல்படுத்த உத்தரவிட்டது. இதை எதிர்த்து கோவை மாவட்ட விவசாயிகள் முதலில் கிளர்ந்தெழுந்தனர். 1972 மார்ச்சில் 12 கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்து, நிறைவேற்றக் கோரினார்கள் விவசாயிகள். 15.04.1972குள் நிறைவேற்றக் கெடு விதித்தார்கள்.
மே 9ல் மறியல் தொடங்கியது. போராடிய விவசாயிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். நகரவாசிகள் தினமும் வாங்கும் காய்கறிகளையும் பாலையும் விவசாயிகள், நகரங்களுக்கு அனுப்புவதை 02.06.1972 முதல் 04.06.1972 வரை நிறுத்தினார்கள். இதன் மூலம் தட்டுப்பாடு ஏற்படுத்தி, அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுத்தனர்.
இதற்கும் அரசு பணியாததால் கோவை விவசாயிகள், அன்று புதுமையாக, மாட்டு வண்டிப் போராட்டத்தை நடத்தினார்கள். மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மாட்டு வண்டிகள், கோயம்புத்தூரின் பிரதான சாலைகளிலும், தெருக்களிலும், அரசு அலுவலகங்களுக்கு முன்பும் நிறுத்தப்பட்டன. கோயம்புத்தூர் நகரமே ஸ்தம்பித்தது. அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ‘தி நியூயார்க் டைம்ஸ்’ உள்ளிட்ட உலகப் பத்திரிகைகள் விவசாயிகளைப் பாராட்டி, ‘மாட்டு வண்டிகள், இந்திய விவசாயிகளின் பாட்டன் டாங்குகள்’ என்று இந்தப் போராட்டச் செய்தியை வெளியிட்டன. இதற்குக் காரணமாக இருந்த பல தலைவர்களில் நாராயணசாமி நாயுடு, கிருஷ்ணசாமி கவுண்டர், டாக்டர் சிவசாமி போன்றோர் குறிப்பிடத் தக்கவர்கள். அப்போது, இதன் மாணவர்
அமைப்பை பல கல்லூரிகளில் அமைத்தேன்.
போராட்டத்தின் விளைவை உணர்ந்த அரசு, பணிந்தது. நாராயணசாமி நாயுடு தலைமையில் 1972 ஜூலை 13-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை அரசுடன் பேச்சு வார்த்தை நடந்தது. அதன்படி, ஜூலை 19 ல் ஒப்பந்தம் ஏற்பட்டது. தற்காலிகமாக, மின் கட்டண உயர்வு பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டது. மின் கட்டணத்தில் யூனிட் ஒன்றுக்கு ஒரு பைசா குறைக்கப்பட்டது. சிறையில் இருந்த அனைத்து விவசாயிகளும் விடுவிக்கப்பட்டார்கள்.
பின்னர் ‘தமிழக விவசாயிகள் சங்கம்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு நாராயணசாமி நாயுடு இதன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
#உழவர்_தலைவர் #நாராயணசாமி_நாயுடு-
கே எஸ் ராதாகிருஷ்ணன்
#ksrposts
#ksrpostings
21-12-2019.
No comments:
Post a Comment