Thursday, December 19, 2019

குடியுரிமை_சட்ட_திருத்தம் #இலங்கை_அகதிகள்_குறித்தான_சில #விடயங்கள்

#குடியுரிமை_சட்ட_திருத்தம்
#இலங்கை_அகதிகள்_குறித்தான_சில #விடயங்கள்-#புரிதலுக்காக.
————————————————
இலங்கையில்  1983 இனக்
கலவரத்திற்கும் அதற்கு முன்பும் நடந்த மோதலின் விளைவாக இந்தியாவிற்கு 2,50,000 ஈழத் தமிழர்கள் தங்கள் சொத்துக்களையும் உடமைகளையும் விட்டு குழந்தைகளோடு ரணப்பட்டு இந்தியாவிற்கு வந்தனர். இதில் அகதிகளாக 95,052 பேர் அகதிகளாக அடையாளங் காணப்பட்டு தமிழகமெங்கும் 114 அகதிகள் முகாமில தங்க வைக்கப்பட்டனர். இதுவரை 31,372 அகதிகள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு திரும்பியுள்ளனர். இது மட்டுமல்லாமல் 35,000 ஈழத் தமிழர்கள் அகதிகள் முகாமில் இல்லாமல் முகாமை விட்டு வெளியேயும் தங்கியுள்ளனர்.
தற்போது இந்த அகதிகள் முகாம் 107 ஆக குறைந்துள்ளது.தற்பொழது ஒவ்வொரு அகதிக்கும் ரூ.1000 உதவித் தொகையாக அரசு வழங்கின்றது.இது
பூடான், திபெத்து அகதிகளுக்கு வழங்ப்
படுவதை விட குறைவே.

இதில் 12,000 பேர் முள்ளிவாய்க்கால் போருக்கு பின் 2009ல் இருந்து இன்று வரை திரும்பிய ஈழத்தமிழர்களின் எண்ணிக்கை ஆகும்.

திரும்ப இலங்கைக்கு செல்ல வேண்டும் என்று ஈழ அகதிகள் இந்திய அரசிடம் 3815 பேர் கோரிக்கை வைத்து மனு செய்துள்ளனர்.  இந்த முகாமில் இதுவரை 26,289 குழந்தைகளும் பிறந்துள்ளன. இதுவரை 3812 பேர் கல்வி கற்று வெவ்வேறு துறைகளில் பட்டதாரிகளாக தேர்வு பெற்றுள்ளனர்.
இன்றைக்கு 60,052 பேர் மொத்தத்தில் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் ஈழத் தமிழர்கள் வாழ்கின்றனர் என்ற ஒரு கணக்கு இருக்கின்றது. சென்னை உயர்நீதி மன்றத்தில் தங்களுக்கு குடியுரிமை வேண்டும் என்று 13 பேர் ரிட் மனு தாக்கல் செய்து அந்த மனுக்களை நீதிமன்றம் நிராகரித்தது.

இதில் இன்னொரு முக்கிய பிரச்சினை என்னவென்றால் இந்திய அரசாங்கம், ஐநா அகதிகள் குறித்தான ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. அந்த ஒப்பந்தத்தில் உறுப்பு நாடாக இருந்தால் அகதிகளை தனது நாட்டு குடிமக்களாக பதிவு செய்துக் கொள்ள தார்மீக உரிமை உண்டு. ஐநா அகதிகள் ஒப்பந்தத்தில் உறுப்பு நாடாக கையெழுத்து இடாததால் சிக்கலும் உள்ளது.

இன்றைக்கு ஈழத்தமிழர் குடியுரிமைப் பிரச்சினையோடு பழைய வரலாற்று நிகழ்வையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இலங்கையில் காபி, டீ தோட்டங்களில் பணி செய்ய 1921ம் ஆண்டு ஆங்கில அரசாங்கம் திருச்சி, புதுக்கோட்டை, இராமநாதபுரம், காரைக்குடி, தூத்துக்குடி என பல பகுதிகளில் இருந்து 6 லட்சம் பேரை வேலையாட்களாக அழைத்துச் சென்றது. அதே போல 1936லும் 1,23,000 பேர் தமிழகத்திலிருந்து தோட்டத் தொழிலுக்காக இந்திய பிரஜைகளை அழைத்துச் சென்றது.

இவர்கள் தான் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு மலையக காபி டீ தோட்டங்களில் பல ஆண்டுகளாக பணிசெய்து இலங்கையிலேயே இரண்டு மூன்று சந்ததிகள் அந்த நாட்டு குடிமக்களாகவே வாழ்ந்தனர். ஆனால் அவர்களுக்கு இலங்கை பிரஜா உரிமை வழங்கப்படவில்லை. இலங்கை விடுதலைப் பெற்ற பின் இந்த 7,23,000 பேரை வெறும் 5000 பேருக்கு தான் இலங்கை குடியுரிமை வழங்கப்பட்டது. இது ஒரு பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது. இந்திய பிரதமர் சாஸ்திரி இலங்கை பிரதமர் சிரிமாவோ இது குறித்து 1964ல் ஒரு ஒப்பந்தம் கையெழத்தனது. அதன்படி இலங்கையில் பிரஜா உரிமை மறுக்கப்பட்ட தோட்ட தொழிலாளர்களை திரும்பவும் தமிழகத்திற்கு அனுப்புவது என்று தவறான முடிவுகள் மேற்கொள்ளப்பட்டபோது அது குறித்தான எதிர்ப்புகளும் கண்டனங்களும் எழுந்தன. இந்த பிரச்சினையில் மேலும் 1977ல் ல் இந்திய பிரதமர் இந்திரா காந்தியும் சிரிமாவோவும் அமர்ந்து பேசி பழைய ஒப்பந்தத்தின் முடிவுகளை திரும்பவும் ஏற்றுக் கொள்ளப் போவதாக உறுதி செய்தனர்.

இலங்கையில் தமிழ் இனம் அழிக்கப்பட்டது இன்று வரை அவர்களுடைய உரிமைகளும் பறிக்கப்படுகின்ற நிலையில் ஈழத்தில் உள்ள தமிழர்களுடைய மக்கள்தொகை எண்ணிக்கை சரிவடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கிய கடமையாகும்.

ஈழ அகதிகள் இந்தியாவில் குடியுரிமை வேண்டும் என்று விருப்பபடுவர்களுக்கு அவசியம் குடியுரிமை வழங்கப்பட வேண்டும். இங்குள்ள அகதிகள் இலங்கைக்கு செல்ல வேண்டும் என்றால் அவர்களிடம் இந்தியாவில் வாழ்ந்த காலத்திற்கான கட்டணத்தை  வசூலிக்காமல் பாதுகாப்பாக,எளிதாக இலங்கைக்கு அனுப்பி வைப்பது இந்திய அரசின் கடமையாகும்.

அப்படி இலங்கைக்கு திரும்பியவர்களை தமிழர்கள் வாழும் வடக்கு கிழக்கு மாநிலங்களில் நிம்மதியாக வாழ இலங்கை அரசிடம் இந்திய அரசு உத்திரவாதத்தையும் பெற வேண்டும்.

இலங்கையில் 1983 இனக்கலவரத்திற்கு பிறகு இந்தியாவுக்கு வந்து இங்கே தொழில், உறவு ரீதியாக வாழ்கின்றவர்களுக்கு அவசியம் இந்திய அரசு குரியுரிமை வழங்க வேண்டியது ஐநா மனித உரிமை சாசனத்தின் கீழும், சர்வதேச சட்டங்களின் படியும் உரிமை உண்டு என்று இந்திய அரசு கவனிக்க வேண்டும்.

இந்த புள்ளிவிவரங்கள் ஏனென்றால் இலங்கை தீவில் தமிழ் மக்களுடைய மக்கள் தொகை குறைந்து வருகிறது என்பது நல்லதல்ல. மரபு ரீதியான அந்த மண்ணின் மைந்தர்கள். இலங்கை தமிழர்களுடைய சொந்த நாடு (traditional homeland) என்ற உண்மை என்றைக்கும் நிரந்தரமாக இருக்க தமிழர்களுடைய மக்கள் தொகை குறைந்துவிடக் கூடாது என்பது தான் கவனிக்க வேண்டிய விடயம். இரண்டாம் இடத்தில் இருந்த தமிழரின் மக்கள் தொகை எந்த காலமும்,எந்த நிலையிலும் குறைந்து விடக்கூடாது.இந்த சிக்கலில் உள்ள தன்மைகளை வெளிப்படுதுவதற்காக இந்த பதிவு.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
19.12.2019

#ஈழத்தமிழர்
#இந்திய_குடியுரிமை_சட்டம்
#ksrposts
#ksradhakrishnanposts


No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...