Friday, January 10, 2020

மம்தாவைப்_பற்றி.....

#மம்தாவைப்_பற்றி.....

ஓரளவு அகில இந்திய அரசியலை 1960-70 களிலிருந்து அறிந்தவன். மேற்கு வங்கத்தில் பிரியரஞ்சன்தாஸ் முன்சியோடு நெடுமாறனுக்கும் எனக்கும் நல்ல பரிச்சயம் உண்டு. 
மேற்கு வங்கத்தில் அப்போது மேற்கு வங்க முன்னாள் முதல்வர் சித்தார்த்த சங்கர் ரே( இந்திரா காந்தி அவசர நிலையை அறிவிக்க உடன் இருந்து பனியற்றியவர் உச்ச நீதி மன்ற வழக்கறிஞர்)மத்திய முன்னாள் அமைச்சர் கனி காண் சவுத்ரி, பிரணாப் முகர்ஜி,  மத்திய முன்னாள் அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்சி என 1970களில் காங்கிரஸ் நான்கு பிரிவுகளாக இயங்கி வந்தது. அப்போது நான் கல்கத்தாவிற்கு சென்ற போது, மம்தா  மாணவி பருவத்தில் இருந்தார். அப்போதே அவர் ஆராவராங்களும் கூச்சல்களும் போடுவார் என இவர்கள் பேசிக் கொள்வதுண்டு. தனக்கென்று ஒரு அரசியல் பாணியை  மம்தா  வைத்துக் கொண்டவர் என சொல்வதுண்டு. சித்தார்த்த சங்கர் ரேயின் மனைவி. மாயா ரே 1976ல் கோவில்பட்டிக்கு வந்த போது பரிச்சயமானார். அவர் ஒருமுறை மம்தாவை ஆங்கிலத்தில் , “இந்த பெண் இவ்வளவு கூச்சலிடுகிறது” என்று சொன்னது நினைவுக்கு வருகிறது. இன்றைக்கு மம்தா சோனியா காந்தி அவர்கள் நடத்தும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கூட்டத்திலும் கலந்துக் கொள்ளவில்லை என்று செய்தி வருகிறது. அவருடைய பாணியிலேயே அவர் செல்வார் என்றுதான் கடந்த காலத்தில் அவருடைய அரசியல் செயல்பாடுகள் உணர்த்துகிறது. இதில் குற்றமோ குறையோ சொல்ல முடியாததைப் போல அவர் சரியான  பாதையில் தான் செல்கின்றாரா என்பதையும் சொல்ல முடியவில்லை. புரிந்துக் கொள்ள முடியாத சிக்கலானவர் மம்தா.

இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானார்ஜி கூறுகையில் "நான் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், என்ஆர்சிக்கு எதிராகவும் தொடர்ந்து போராடுவேன்.
காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் மாநிலத்தில் செய்யும் கேவலமான அரசியல் காரணமாகவே, நான் அகில இந்திய நிலைபபாட்டிற்கு மாற காரணம். ஜனவரி 13 அன்று நடைபெறும் சிஏஏ எதிர்ப்பு மற்றும் என்ஆர்சிக்கு எதிரான கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என முடிவு செய்துள்ளேன் (அன்று சிறப்பு சட்டசபை கூட்டத்தொடரில் மம்தா பங்கேற்கிறார்).

ஏனெனில் நேற்று(புதன்கிழமை) மாநிலத்தில் நடந்த சம்பவங்கள் காரணமாக இனி அவர்களுடன் இணைந்து கூட்டத்தில் பங்கேற்பது சாத்தியமில்லை. நேற்று இடதுசாரி தொழிற்சங்கங்கள் அழைத்த வேலைநிறுத்தத்தின் போது பேருந்துகள் பல சேதமடைந்தது, சிபிஎம் ஒரு சாலை முற்றுகையிட்டு மறியல் செய்து ஸ்தம்பிக்க வைத்தது.

குடியுரிமை (திருத்த) சட்டத்திற்கு எதிரான எனது போராட்டம் தொடரும். இந்த சட்டத்தையும் என்.ஆர்.சி யையும் வங்காளத்தில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்" இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

சிறப்பு தீர்மானம்
சட்டமன்றத்தில் சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சிக்கு எதிராக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுமாறு சிபிஐஎம் மம்தாவையும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக விமர்சித்தது. இதற்கு மம்தா பானர்ஜி ஏற்கனவே தனது எதிர்ப்பைக் குரல் கொடுத்ததாகவும், இப்போது ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய அவசியம் இருப்பதாக உணரவில்லை என்றும் கூறினார். அத்துடன் "சிஏஏவை எவ்வாறு எதிர்த்துப் போராடுவது என்பது பற்றி நீங்கள் என்னிடம் சொல்லத் தேவையில்லை" என்று மம்தா ஆவேசம் அடைந்தார்.

கதையையே  மாற்றியது
புதன்கிழமை, 24மணி நேர நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளித்ததற்காக இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸை தாக்கினார். "அரசியல் இருப்பு இல்லாதவர்கள் வேலைநிறுத்தங்களை அழைக்கிறார்கள்," என்று மம்தா குறிப்பிட்டார், திரிணாமுல் தொழிலாளர்கள் மற்றும் இடது உறுப்பினர்களுக்கு இடையிலான வன்முறை மற்றும் மோதல்களுக்கு இடையே வேலை நிறுத்தத்தை செயல்படுத்த முயற்சிப்பதாகவும் மம்தா நேற்று குற்றம்சாட்டினார்.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
10.01.2020

#மம்தா

#ksrposts
#ksradhakrishnanposts
#mamta_banerjee


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...