#கவி
#ரசிகமணி _டி_கே_சி.
( 05-11-1948 அன்று நீதிபதி #Justice #மகராஜன் அவர்களுக்கு எழுதியதில் ஒரு பகுதி.)
••••••••••••
ஆனாலும், இந்த ஸ்டைலில் ஒரு சங்கடம் இருக்கிறது. அதாவது, எழுதுகிறவர்க்கு அது தெரியாது என்று சொல்லலாம். ஏனென்றால் அவருக்கே தெரியாமல் வருவது அது..
நாம் தெருவிலோ, வீட்டிலோ நடந்து போகிறோம். (மிலிட்டரி மார்ச் அல்ல) இயல்பாக நடக்கிறோம். அந்த நடையில் நூற்றுக்கணக்கான அம்சங்கள் இருக்கின்றன. ஏன் இருக்காது. உச்சியிலிருந்து உள்ளங்கால் வரையும் எத்தனையோ எலும்புக் கட்டுகள், தசைகள் , நரம்புகள் சேர்ந்து ஒரு கணக்குப்படி ஒத்து வேலை செய்கின்றன. நாம் ஒன்றுமே செய்யவில்லை என்று சொல்லலாம் ஆனால், அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் நடையின் தனிப்பண்பை உடனே கண்டு கொள்கிறார்கள். ஆயிரம் பேர் நடந்து போய்க்கொண்டிருக்கலாம், ஆனாலும், நம் முகத்தைப் பார்க்காமலே, நம்முடைய நடையை இனம் கண்டு கொள்கிறார்கள். நடையில் (உடம்பு சம்பந்தமாகத்தான்) எல்லாருக்கும் ஸ்டைல் வந்து விடுகிறது. காரணம் என்ன? பாடமாக வைத்து நடையைக் கற்பிப்பதில்லை.
ஆனால், எழுத்தில் ஸ்டைல் வரமாட்டேன் என்று சாதிக்கிறது. பள்ளிக்கூடத்துப் பயிற்சிதான் காரணம். மனுஷ தத்துவத்தை எடுத்து விட்டு எந்திர தத்துவத்தை மாணவர்களுக்குள் புகுத்தி விடுகிறது. இந்த எந்திர தத்துவத்தின் கோணல்கள் "முத்தி முத்தி"க் கடைசியில் பரிமேலழகர், நச்சினார்க்கினியர், பண்டிதமணிகளாக முடிகின்றன.
நடையில் ஸ்டைல் இருக்க வேண்டும் என்றால் ( கால் இருந்தால்ப் போதாது) உடலுக்குள் உயிர் இருக்க வேண்டும். அது போல எழுத்தில் ஸ்டைல் இருக்க வேண்டும் என்றால் (வார்த்தைகள் இருந்தால்ப் போதாது) உள்ளத்தில் உயிர் அதாவது உண்மை உணர்ச்சி இருக்க வேண்டும்."
-ரசிகமணி டி.கே.சி.
( 05-11-1948 அன்று நீதிபதி மகராஜன் அவர்களுக்கு எழுதியதில் ஒரு பகுதி.)
#ksrpost
6-6-2020
No comments:
Post a Comment