Saturday, November 28, 2020

 

#இந்தியாவின்_பெண்_முதல்(வி)#வர் #சுசேதா_கிருபாளினி.
————————————————-




அம்பாலா, ஹரியானாவில் 25 சூன் 1908 ஆண்டு பிறந்தவர். இவரது தந்தையான எஸ். என். மஜீம்தார் மருத்துவரும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவரும் ஆவார். தன்னை விட முப்பது வயது மூத்தவரான கிருபாளினி அவர்கள் மீது காதல் கொண்டு பல எதிர்ப்புகளை எதிர்கொண்டு திருமணம் செய்துக் கொண்டவர். இவரது அரசியல் பணிகள், போராட்டங்கள் மட்டுமல்லாது ஆச்சார்யா கிருபாளினி அவர்களின் பணியும் , நற்பெயரும் இணைந்து இவரை உ.பியின் முதல்வர் பதவியில் அமர வைத்தது. இவரை எனது வாழ்நாளில் இரண்டு முறை சந்தித்து இருக்கின்றேன். கிருபாளினி மகளிர் இடஒதுக்கீடு தேவை ஆனாலும் பெண்கள் ஒவ்வொருத் துறையிலும் போட்டித்தன்மையுடன் பங்கு பெறவேண்டும் என வலியுறுத்துவார். தமிழகத்தின் தற்காப்பு கலையான சிலம்பாட்டத்தை முறைப்படி கற்றுக் கொண்டவர். காந்தியுடன் அனுக்கமான முறையில் போராட்டங்களில் கலந்துக் கொண்டாலும் தவறான முடிவுகளை இவரும், ஜோசப் குமரப்பாவும் எதிர்த்தனர்.


சுசேதா கிருபாளினி குறித்து தி இந்து பத்திரிக்கையில் வந்துள்ள கட்டுரை
( எனது கட்டுரை அல்ல).

இந்திய மாநிலங்களில் முதல்வராகப் பொறுப்பேற்ற முதல் பெண் சுசேதா கிருபளானி... சுதந்திரப் போராட்ட வீராங்கனையும் கூட! சுசேதா, 1908ல் ஹரியானாவில் உள்ள அம்பாலாவில் பிறந்தார். இந்திரபிரசாத், செயின்ட் ஸ்டீபன் கல்லூரிகளில் படிப்பை முடித்தார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணிபுரிந்தார். ஆச்சார்யா கிருபளானியுடன் சுசேதாவுக்குத் திருமணம் நடைபெற்றது. இருவரும் இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தனர்.

‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டம் தீவிரமாகிக் கொண்டிருந்தபோது, காந்தியுடன் செயல்பட்டார் சுசேதா. கஸ்தூரிபாய் காந்தியின் நினைவு அறக்கட்டளைக்கு அமைப்புச் செயலாளராக சுசேதாவை நியமித்தார் காந்தி. அந்த அமைப்பின் செயலாளர் தக்கர் பாபாவுடன் இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டார் சுசேதா. 1946ல், பாகிஸ்தான் பிரிவினையின் போது, காந்தி நவகாளி யாத்திரை மேற்கொண்டார். அப்போது அந்த யாத்திரை முழுவதும் காந்தியுடன் பங்கேற்றார் சுசேதா.

1947 ஆகஸ்ட் 15... இந்தியா சுதந்திரம் பெற்ற அன்று, ‘வந்தே மாதரம்’ பாடலை அரசியலமைப்பு அவையில் பாடினார் சுசேதா. 1952ல் உத்தரப் பிரதேசத்தில் இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் சுசேதா. 1963ம் ஆண்டு டெல்லி அரசியலில் இருந்து விலகி, உத்தரப்பிரதேச முதல்வராகப் பொறுப்பேற்றார். ‘இந்திய மாநிலங்களில் முதல்வராகப் பொறுப்பேற்ற முதல் பெண்’ என்ற பெருமை சுசேதாவுக்குக் கிடைத்தது. அவர் ஆட்சியில் இருந்த போது, மிகப்பெரிய வேலை நிறுத்தம் நடைபெற்றது. அதைத் திறமையாகக் கையாண்டு, மீண்டும் வேலையை ஆரம்பிக்க வைத்தார் சுசேதா.

பின்னர், சுசேதாவும் ஆச்சார்யா கிருபளானி யும் தீவிர அரசியலில் இருந்து விலகி, ஓய்வெடுத்துக்கொண்டனர். வீட்டு வேலைகளை கவனித்துக்கொண்டு, அவ்வப்போது தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை கட்டுரைகளாக எழுதி, பத்திரிகைகளில் வெளியிட்டார் சுசேதா. தன்னுடைய சேமிப்பையும் சொத்தையும் ‘லோக் கல்யாண் சமிதி’க்கு வழங்கி விட்டார். அது ஏழைகளுக்கு மருத்துவ உதவி செய்து வரும் நிறுவனம்.1974 டிசம்பர் 1... சுசேதா உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். புத்திசாலித்தனமாகவும் கடினமாகவும் வேலை செய்யக்கூடிய சுசேதா, மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். அவரைப் போன்ற எளிமையான முதல்வரை இனி பார்க்க முடியுமா?

#சுவேதாகிருபாளினி
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
29-06-2020

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...