#காவேரி*#மேட்டூர்_திறந்தும்_பயனில்லை...! #கடைமடை_விவசாயிகள்_கவலை*
————————————————-
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆற்றில் வந்தாலும் வயலுக்கு தண்ணீர் வராததால் குறுவை சாகுபடிப் பணிகளைத் தொடங்குவதில் விவசாயிகளிடையே தயக்கம் நிலவுகிறது.
மேட்டூர் அணையிலிருந்து 9 ஆண்டுகளுக்குப் பிறகு குறுவை சாகுபடிக்காக உரிய நாளான ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, கல்லணையிலிருந்து ஜூன் 16ஆம் தேதி திறந்துவிடப்பட்ட தண்ணீர் கடந்த வாரம் கடைமடைப் பகுதிக்குச் சென்றடைந்தது.
டெல்டா மாவட்டங்களில் உள்ள காவிரி, வெண்ணாறு உள்ளிட்ட முதன்மை ஆறுகளில் தண்ணீர் சென்றாலும், வயலை சென்றடையக்கூடிய பாசன வாய்க்கால்களில் நீரோட்டம் முழுமையாக இல்லை. இதனால், ஆற்றுப் பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் குறுவை சாகுபடிப் பணியைத் தொடங்குவதற்குத் தயங்குகின்றனர்.
காவிரியில் 10,000 கன அடி வீதமும், வெண்ணாற்றில் 9,000 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 4,000 கன அடி வீதமும் என முழுக் கொள்ளளவு இருக்கிறது. இதில், குறைந்தபட்சம் 70 - 80 சதவீதமாவது தண்ணீர் திறந்துவிடப்பட்டால்தான், பாசன வாய்க்கால்களுக்குத் தண்ணீர் செல்லும். இதற்கு மேட்டூர் அணையிலிருந்து குறைந்தது 18,000 கன அடி வீதமாவது தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும்.
ஆனால், மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 10,000 கனஅடி வீதம் மட்டுமே தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதேபோல, கல்லணையிலிருந்து திங்கள்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு காவிரியில் 3,189 கன அடி வீதமும், வெண்ணாற்றில் 3,005 கனஅடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 1,500 கனஅடி வீதமும் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
கல்லணை திறக்கப்பட்டு, 15 நாள்களாகியும், பெரும்பாலான பாசன வாய்க்கால்களில் நீர்வரத்து முழுமையாக இல்லை. குறைந்த அளவே வரும் நிலையில் நீரோட்டமும் மெதுவாக இருப்பதால் வயல்களுக்குத் தண்ணீர் ஏறவில்லை. எனவே, குறுவை பருவத்துக்குத் தண்ணீர் திறந்துவிடப்பட்டாலும், ஆற்றுப் பாசன விவசாயிகளுக்குப் பயனில்லாமல் இருக்கிறது.
குறுவை சாகுபடியில் இனிமேல் நாற்றுகள் பறிக்கப்பட்டு, நடவுப் பணி மேற்கொள்ளப்படும். எனவே, ஆற்றுப் பாசனத்தை நம்பி குறுவை சாகுபடி செய்யக்கூடிய அனைத்து வயல்களுக்கும் தண்ணீர் தேவைப்படுகிறது. குறுவை சாகுபடியில் நடவுப் பணியை ஜூலை 15ஆம் தேதிக்குள் முடித்தால்தான் வடகிழக்குப் பருவ மழையில் சிக்காமல், குறுவைப் பயிரைக் காப்பாற்ற முடியும். எனவே, மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு குறைந்தது 15,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனார்.
இல்லாவிட்டால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியில் இலக்கான 3.50 லட்சம் ஏக்கரை எட்டுவது கேள்விக்குறியாகிவிடும். ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு குறுவை பருவத்துக்குத் தண்ணீர் திறந்துவிடப்பட்டும், பயனில்லாமல் போய்விடும் என்ற அதிருப்தி விவசாயிகளிடையே நிலவுகிறது.
கல்லணைக் கால்வாயில் குறைந்தது விநாடிக்கு 3,500 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டிய நிலையில், தற்போது 1,200 - 1,300 கன அடி வீதம்தான் விடப்படுகிறது. இதனால், கிளை வாய்க்கால்களில் தண்ணீர் முழுமையாகச் செல்லவில்லை. கல்யாண ஓடையில் விநாடிக்கு 900 கன அடி வீதம் தண்ணீர் விட்டால்தான், அதிலுள்ள மேலும் 2 கிளை வாய்க்கால்களுக்குத் தண்ணீர் செல்லும். ஆனால், கல்யாண ஓடையில் தற்போது விநாடிக்கு 300 கன அடி வீதம் மட்டுமே விடப்படுகிறது. இதனால், இந்த ஓடையில் ஆம்பலாப்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்குத் தண்ணீர் சென்றடையவில்லை. ஒரத்தநாடு வட்டத்தில் முன்பகுதியில் மட்டுமே தண்ணீர் வருகிறது. பின்பகுதிக்கு இன்னும் சென்றடையவில்லை.
ஆனால், கல்லணைக் கால்வாயில் தண்ணீர் அதிகமாகத் திறந்துவிடப்பட்டால் கரை உடைப்பு ஏற்படுகிறது. எனவே, குறைந்தது விநாடிக்கு 2,200 கன அடி வீதமாவது தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும். நீர்மேலாண்மை சரியாகச் செய்தால், தண்ணீரை வீணாக்காமல் வயலுக்குக் கொண்டு செல்ல முடியும்.
ஆற்றிலிருந்து வாய்க்கால்களுக்குத் தண்ணீர் ஏறவில்லை. வாய்க்கால்களுக்குத் தண்ணீர் வந்தால்தான் வயலில் பாயும். காவிரி, குடமுருட்டியைச் சார்ந்த 80 சதவீத வாய்க்கால்களில் தண்ணீர் வரவில்லை. படுக்கை அணை அருகிலுள்ள வாய்க்கால்களில் மட்டுமே தண்ணீர் ஏறுகிறது. இதனால், குறுவை சாகுபடிப் பணியைத் தொடங்க முடியவில்லை. எனவே, மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 18,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டால்தான் வயலுக்குத் தண்ணீர் வரும்.
#காவேரி*#மேட்டூர்_திறந்தும்_பயனில்லை...!
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
30-06-2020
No comments:
Post a Comment