தமிழக எல்லைகள் வரையறுக்கப்பட்டு மொழிவாரி மாநிலமாக இன்றைய தமிழகம் அமைக்கப்பட்டு நாளையோடு 61 ஆண்டுகள் (நவம்பர் 1, 2017) ஆகிறது. நவம்பர் 1, 1956ம் ஆண்டு இன்றைய தமிழகம் அதன் எல்லைகளோடு பிரிக்கப்பட்டு அமைந்தது.
'தமிழகம் 50' விழாவை 10 ஆண்டுகளுக்கு முன் மயிலை பாரதிய வித்யா பவனில் விழா எடுத்தேன். 'தமிழ்நாடு 50' என்ற எனது நூலும் வெளியிடப்பட்டது.
அவர் விழாவில் வடக்கு எல்லை போராட்ட தியாகிகளான சிலம்புச் செல்வர் ம.பொ.சி, விநாயகம், மங்கலங்கிழார் போன்றோரும், தெற்கெல்லை குமரி மாவட்டத்தை தமிழகத்தோடு இணைக்க பாடுபட்ட பி.எஸ்.மணி, மார்ஷல் நேசமணி, குஞ்சன் நாடார், ரசாக், தாணுலிங்க நாடார், பொன்னப்ப நாடார், சிதம்பர நாதன் நாடார், போன்றவர்களையும், நெல்லை மாவட்ட செங்கோட்டையை தமிழகத்தோடு இணைய போரிட்ட கரையாளர் அவர்களையும், தமிழ்நாடு என்று பெயர் வேண்டும் என்று உண்ணா நோன்பிருந்த தியாகி சங்கரலிங்கனார் ஆகியோரின் படங்களும் திறக்கப்பட்டது.
இதே நாளை ஆந்திரம் விசால ஆந்திரம் என்றும், கேரளம் நவகேரளம் என்றும், கர்நாடகா சம்யுக்த கர்நாடகம் என்றும், மகாராஷ்டிரம் சம்யுக்த மகாராஷ்டிரம் என்றும், குஜராத் மகா குஜராத் என்றும் கொண்டாடுகின்றன.
ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை இந்த நாள் அமைந்தது குறித்து இதுவரை கவனிக்கப்படவில்லை. 2005ல் ஆனந்த விகடனில் இதுகுறித்து நான் எழுதிய கட்டுரையும் வெளியான பின்; நான் எடுத்த விழாவிற்கு பிறகே இதுகுறித்து தமிழக மக்கள் அறிந்து கொண்டனர்.
தொடர்ந்து 10 ஆண்டுகளாக இந்த நிகழ்வினை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தியும் கலந்து கொண்டும் வருகிறேன். நாளை ( 01/11/2017 ) நடக்கும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் மயிலை பாலு தலைமையில் ‘மொழிவழி மாநிலம் அமைந்த நாள்’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அந்நிகழ்ச்சியில் நானும், நண்பர் ஆழிசெந்தில்நாதனும் கலந்து கொள்ளவிருக்கிறோம்.
அனைவரும் வருக.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
31-10-2017
No comments:
Post a Comment