Saturday, October 14, 2017

காமராஜர், நெல்லை, தினமலர் – சில நினைவுகள்…

பெருந்தலைவர் காமராஜர் இருக்கும் இந்த படத்தை பார்த்து சற்று பின்னோக்கி நினைவுகள் நகர்ந்தன. காலச்சக்கரங்கள் வேகமாக ஒடுகின்றது.

காமராஜர், திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு பயணியர் விடுதியில் தினமலர் நெல்லை பதிப்பை படிக்கின்ற காட்சி இந்தப் புகைப்படத்தில் உள்ளது. இந்த பயணியர் விடுதியை கட்டும் இடத்தை பொருநை ஆற்றங்கரையில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் காமராஜரே முடிவு செய்தார். இங்கு தங்குவதற்கு காமராஜர் பெரிதும் விரும்புவார்.

தினமலர் அப்போது நெல்லையில் மட்டும்தான் அச்சானது. அதன்பின் இரண்டாவது பதிப்பாக திருச்சியில் தொடங்கப்பட்டது. இதன் நிறுவனர் ராமசுப்பைய்யர் தினமலரைத் முதன்முதலாக திருவனந்தபுரத்தில் பேராசிரியர் வையாபுரி பிள்ளை 1951இல் துவக்கி வைத்தார். அதன்பின் தினமலர் பத்திரிக்கை அலுவலகம் நெல்லைக்கு மாற்றப்பட்டது.

தச்சநல்லூர் இரயில்வே கிராஸிற்கு கீழ்புறமுள்ள சிகப்பு செங்கல் கட்டிடமாக இன்றைக்கும் காட்சி தரும் (டயர் உற்பத்தி செய்யும் ஆலை பின்னாளில் அங்கு அமைந்தது) அந்த வளாகத்தில் தினமலர் முதன்முதலாக நெல்லையில் குடி கொண்டது. அதன்பின் தான் இப்போதுள்ள வண்ணாரப்பேட்டை வளாகத்துக்கு மாற்றப்பட்டது. துவக்கத்தில் மலையாளம், நாஞ்சில் நாட்டு பாணியில் தினமலரின் தமிழ் நடை இருந்தது.

திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்தினையும், நெல்லை மாவட்டம் செங்கோட்டை தாலுக்காவையும் தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்ற பிரச்சனையில் தினமலரும் தினத்தந்தியும் (நெல்லை பதிப்பு) குரல் எழுப்பியது. இதன் நிறுவனர் ராமசுப்பைய்யர் போராட்டங்களுக்கு கைகொடுத்தது மட்டுமல்லாமல் அன்றைய அமைச்சர் பக்தவச்சலத்தை அழைத்து பாளையங்கோட்டை அரசினர் விடுதியில் குமரி மாவட்ட பிரமுகர்களோடு பேச்சுவார்த்தை நடத்தவும் முயற்சிகளை மேற்கொண்டார். தினமலர் ஆரம்பக் கட்டத்தில் 60,000 பிரதிகளுக்கு மேல் விற்பனையானது. இதை குறித்தான செய்திகள் எல்லாம் கோவில்பட்டி பத்திரிக்கைகள் ஏஜெண்ட் சண்முகம் பிள்ளை என்னிடம் சொன்னதுண்டு.


இப்படியான தினமலர் குமரி, ஒன்றுபட்ட நெல்லை மாவட்டம், அன்றைய ஒருங்கிணைந்த இராமநாதபுர மாவட்ட பகுதிகளான விருதுநகர், சாத்தூர், சிவகாசி, இராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதிகளில் அதிகமாக விற்றது. நெல்லை செய்திகளை பிரத்யேகமாக தந்த இந்த தினமலர் நாளிதழை காமராஜர், நெல்லை அரசு சுற்றுலா மாளிகையில் படிக்கும் காட்சி இது. காமராஜர் அமர்ந்திருக்கும் அந்த சோபா நீண்ட நாட்களாக எனக்கு தெரிந்தவரையில் 1985 வரை அங்கிருந்தது என்று என் நினைவுகள். ஏனெனில் காமராஜர் நெல்லைக்கு வந்தால் நிச்சயமாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அன்றைய பொதுச் செயலாளர் பழ. நெடுமாறன் உடனிருப்பார். அவர் இருந்தால் நானிருப்பது வாடிக்கை. எனவே இந்த புகைப்படத்தை பார்த்தவுடன் அந்த பழைய நினைவுகள் வந்தன.

இன்னொரு செய்தி,

காமராஜர் விருதுநகரில் தோற்றபின்பு, நாகர்கோவில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று செய்திகள் கசியும்பொழுது நாகர்கோவிலில் இருந்து பொன்னப்ப நாடார், ஜேம்ஸ், சிரோன்மணி போன்ற குமரி மாவட்ட காங்கிரஸ் தலைவர்களை அழைத்து இந்த சுற்றுலா மாளிகையில் ஆலோசனை செய்ததுண்டு. அந்த தேர்தலுக்கு பொறுப்பாளர்களாக நெடுமாறன், ஏ.பி.சி. வீராபாகு, குமரி அனந்தன் (அன்றைய இளைஞர் காங்கிரஸ் தலைவர்) போன்றவர்கள் பெருந்தலைவர் காமராஜருக்கு துணையாக இருந்தனர்.

#காமராஜர்
#தினமலர்
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
14/10/2017

No comments:

Post a Comment

"OPERATION RUDRAM".

  "OPERATION RUDRAM".