நண்பர் மணாவின் முகநூல் பதிவில் கடந்த 04/05/2000 தேதியிட்ட குமுதம் இதழுக்காக தலைவர் கலைஞரிடம் எடுத்த பேட்டியின் ஒரு பகுதியை வெளியிட்டுள்ளார். அவரும் இதை படித்தீர்களா என்று என்னை நேற்றிரவு தொடர்பு கொண்டார். அந்த பேட்டியின் ஒரு பகுதி வருமாறு.
இந்த பேட்டியில் குறிப்பிடப்பட்ட பிஜு பட்நாயக் ஒரிஸ்ஸா மாநிலத்தின் மாபெரும் தலைவர். ஜனதா கட்சியின் நிறுவனர்களில் அவரும் ஒருவர். முன்னாள் விமான ஓட்டி. இவர் விமானம் ஓட்டினால் பண்டித நேரு ரசிப்பார். இவர் யாரையும் அசால்ட்டாக பேசினாலும் அது ரசிக்கக்கூடிய அளவில் தான் இருக்கும் நமது நாஞ்சிலாரைப் போல. பிஜு பட்நாயக்கின் மகனான நவீன் பட்நாயக் தற்போது ஒடிசாவின் முதலமைச்சராக உள்ளார். அவரது மகளான ஜிட்டா மேத்தா ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர் ஆவார். அவரது மூத்த மகனான பிரேம் பட்நாயக் டெல்லியைச் சார்ந்த தொழிலதிபர் ஆவார். இவரைப் பற்றி விரிவாக ஒரு தனிப் பதிவு இட வேண்டும். சமீபத்தில் அவருடைய நூற்றாண்டு விழா நடந்து முடிந்தது.
----------------------
பரண் :
தி.மு.க.வையும், அ.தி.மு.க.வையும் இணைக்க நடந்த முயற்சி
#
4.5. 2000 தேதியிட்ட குமுதம் வார இதழில் கலைஞரை நான் சந்தித்துப் பேட்டி எடுத்த போது அவரிடம் கேட்ட ஒரு கேள்வி.
'' முன்பு பிஜூபட்நாயக் பிரிந்து கிடந்த திராவிடக்கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சித்தார். சமீபத்தில் கூட ஒரு வார இதழில் தி.மு.க.வும், ம.தி.மு.க.வும் இணைய முயற்சி என்று செய்தி வெளிவந்தருக்கிறது. அம்மாதிரி இணைப்புக்கான சாத்தியம் இருக்கிறதா?
கலைஞரின் பதில் : 1980 ல் பிஜூபட்நாயக் சென்னைக்கு வந்து தி.மு.க, அ.தி.மு.க இரு கட்சிகளையும் இணைக்க முயற்சித்தார்.
என்னிடம் '' என்ன நிபந்தனைகள்?'' என்று கேட்டார்.
'' நான் சொல்கிற நிபந்தனைகளை ஒப்புக்கொள்ள முடியுமா?'' என்று கேட்டபோது 'சொல்லுங்க'' என்றார்.
'' அ.தி.மு.க, தி.மு.க என்று இரண்டு கட்சிகள் இருக்கக் கூடாது. அண்ணா உருவாக்கிய தி.மு.க தான் இருக்க வேண்டும். அண்ணா படத்தைத் தான் கொடியில் போட்டிருக்கிறார் எம்.ஜி.ஆர். அந்தக் கொடியை நான் ஏற்றுக் கொள்கிறேன். தி.மு.க. என்ற பெயரை எம்.ஜி.ஆர் ஏற்றுக் கொள்ளவேண்டும். அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் அதே பொறுப்பிலேயே இருக்கட்டும். அதில் எனக்கு மாறுபாடில்லை. இணைந்தபிறகு கட்சிப்பொறுப்புகளை முடிவு செய்து கொள்ளலாம்.
இன்னொரு கடுமையான நிபந்தனை.
எம்.ஜி. ஆர். ஒன்பதாயிரம் ரூபாய்க்குள் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு என்று சட்டம் கொண்டுவந்தார்.
அதை வாபஸ் வாங்க வேண்டும். இது தான் நிபந்தனைகள்'' என்று நான் சொன்னதும் பிஜூபட்நாயப் என்னைக்கட்டிப்பிடித்துக் கொண்டு '' இது தான் நிபந்தனைகளா? நாளைக்கே முடிச்சிடுறேன்'' என்று சொல்லிவிட்டு, எம்.ஜி.ஆர் உட்பட மற்ற தலைவர்களைச் சேப்பாக்கம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். எம்.ஜி.ஆருக்கு ஆச்சர்யம்.
'' என்னை முதலமைச்சராக நீடிக்கச் சொல்கிறாரா கலைஞர்?'' என்று திரும்பத் திரும்பக் கேட்டிருக்கிறார்.
பிறகு இரு கட்சிகளும் ஒரே நாளில்நூறு மைல் இடைவெளியில் உள்ள நகரங்களில் செயற்குழுவைக் கூட்டித் தீர்மானம் போட்டு இணைவதாக
முடிவாகி விட்டது. செயற்குழுவுக்கான தேதி மட்டும் தான் அறிவிக்க வில்லை.
அன்றைக்கு மாலையில் வேலூரில் எம்.ஜி.ஆருக்குக் கூட்டம். அங்கு
பேசும்போது அவர் '' இணைப்பு கிடையாது'' என்று பேசினார். அதற்குள் அவருடைய மனதை 'யாரோ' கலைத்துவிட்டார்கள். கலைத்தது யார் என்று எனக்குத் தெரியும். அதை இப்போது நான் சொல்ல விரும்பவில்லை. ' இரு கட்சிகளும்' ஒன்று சேர்ந்தால் தங்களது பிழைப்பு போய்விடும்'' என்பதற்காகச் சிலர் இணைப்புக்கான முயற்சியைக் கெடுத்துவிட்டார்கள். இல்லாவிட்டால் 1980 தேர்தல் சமயத்திலேயே தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் ஒன்றாகி இருக்கும்.''
கேள்வி ; '' ஆனால் இனிமேல் எதிர்காலத்தில் தி.மு.க.வும், ம.தி.மு.க. இரண்டு கட்சிகளும் இணைவதற்கான தேவை இருக்கிறதா?''
கலைஞர் : தேவை இருக்கிறதோ இல்லையோ, திராவிட இயக்கத்தில் இருந்தவர்கள் துண்டு துண்டாகி இருக்கிறோம். பல பிரிவுகளாக இருக்கிறோம். எல்லோரும் ஒரே உணர்வுடன் ஒற்றுமையாக இருந்தால் நன்றாகத் தானிருக்கும். ஆனால் இப்போது அது ஒரு கனவாகத் தானிருக்கிறது''.
No comments:
Post a Comment