Monday, October 23, 2017

தலைவர் கலைஞரின் விசாலப் பார்வை

தி இந்துவின் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ வெளியான சூட்டில் கையில் கிடைத்தது. அதில் துவக்கப்பகுதியலே வெளிவந்த என்னுடைய கட்டுரையான ‘கலைஞரின் விசாலப் பார்வை’ என்ற தலைப்பு  ‘இந்திய மாநிலங்களின் உரத்த குரல்’ என்ற தலைப்பில் வந்துள்ளது. 
-வழக்கறிஞர். கே.எஸ். இராதாகிருஷ்ணன்.

அந்த கட்டுரை,

என்னுடைய ஒரு நிகழ்வில், 11/08/2009 அன்று கலந்து கொண்ட தலைவர் கலைஞர் அவர்கள், “தி.மு.கழகம் தேசிய இயக்கமாக நிலைக்கும் என்றும் இந்தியாவின் அரசியல் ஜாதகத்தைக இந்த இயக்கம் கணிக்கும்” என கலைஞர் அறிவிப்பு செய்ததை அன்றைக்கு பல பத்திரிக்கையாளர்களும் நண்பர்களும் என்னிடம் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்டனர். அந்த நண்பர்களுக்கு சொல்லிக் கொள்வதெல்லாம், இதற்கு முன்னும் பேரறிஞர்  அண்ணாவோ, தலைவர் கலைஞரோ அகில இந்திய அளவில் பிரச்சனைகள் ஏற்பட்டபோது முக்கிய முடிவுகளை அறிவித்துள்ளனர். சீனா இந்தியா மீது தாக்குதல் நடத்த வந்தபொழுது அண்ணா அவர்கள் திராவிட நாடு கோரிக்கையை தளர்த்தினார். அண்ணாவின் கொள்கைகளை அண்ணாவிற்கு பிறகு கழகத்தை பல நெருக்கடிகளுக்கு மத்தியில் 45 ஆண்டுகளாக தலைமையேற்று பீடுநடைப் போட்டு  நடத்துகின்ற தலைவர் கலைஞர் அவர்களுடைய பார்வையும் அகில இந்திய பிரச்சனைகளை தீர்க்கவும் மற்றும் அகில இந்திய தலைவர்களுக்கு வழிகாட்டியாகவும் உள்ளது. இதற்கு பல நிகழ்வுகளும், சம்பவங்களும் உண்டு. காங்கிரஸ் பிளவுண்டு இந்திரா தலைமையில் ஆளும் காங்கிரஸ் என்றும், நிஜலிங்கப்பா தலைமையில் ஸ்தாபன காங்கிரஸ் என்றும் 1960 களின் இறுதியில் ஏற்பட்ட பொழுது இந்திரா காந்தி அவர்களுடைய ஆட்சியை காக்க கலைஞர் அவர்கள் ஆதரவுக் கரம் நீட்டி அதரவை தெரிவித்ததனால் தான் அன்றைக்கு மன்னர் மான்ய ஒழிப்பு, பொதுவுடைமை தத்துவத்திற்கு ஏற்ற வகையில் வங்கிகள் அனைத்தும் தேசியமயமாக்கப்பட்டது. இதற்கு கலைஞர் அவர்களின் ஆதரவே காரணம். அவை அன்றைக்கு பிரதமர் இந்திராவின் ஆளுமைக்கு வலு சேர்க்கும் வகையில் அச்சாரம் போட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது. நடந்த பெரும்பாலான நாடாளுமன்ற தேர்தல்களில் தி.மு.கழகம் தோழமை கொண்டுள்ள கட்சிகள் தான் மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. இந்திரா காந்தி காலத்திலும், ஜனதா ஆட்சியில் மொரார்ஜி தேசாய் பிரதமரான போதும், அதன்பின் 1980 இல் இந்திரா மீண்டும் பிரதமரான போதும், 1990 இல் வி.பி.சிங் பொறுப்பேற்ற போதும், தேவேகவுடா, குஜ்ரால் ஆட்சி காலத்திலும், 1999 இல் வாஜ்பாய் பிரதமரான போதும், 2004ல் தொடங்கி 10  ஆண்டுகள் மன்மோகன் சிங் பிரதமராக நீடிப்பதற்கு கலைஞர் அவர்களின் பங்களிப்பும் தோழமையும் இதில் பிரதானமாகும். இது மாதிரியான மற்ற அகில இந்திய தலைவர்களின் பங்களிப்பு இல்லை, நாட்டில் நிலையான ஆட்சி அமைத்திட வேண்டிய முன்முயற்சிக்கு கலைஞருடைய அணுகுமுறையே காரணமாகும். 
மற்றொரு முக்கிய நிகழ்வு:
---------------------------------
தலைவர் கலைஞர் அவர்கள் தலைமைச் செயலகத்தை பழுது பார்க்க முனைந்தபோது அதற்குரிய அனுமதியை மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து பெற வேண்டுமென்றும் தமிழகத்தின் முதலமைச்சராகவே இருந்தாலும் தன்னுடைய விருப்பத்திற்கேற்றவாறு தலைமைச் செயலகத்தில் எந்த சீர்திருத்த பணிகளையும் செய்யமுடியாத நிலை. முதலமைச்சராக இருந்தும் மத்திய அரசின்  அதிகாரக் குவியல் என்ற நிலையில் தான் இந்த சிக்கல் என்று உணரத் தொடங்கினார் தலைவர் கலைஞர். அந்த தாக்கமே மாநில சுயாட்சி என்ற கோரிக்கையாகும். இதனால் தான் ராஜமன்னார் குழு அமைக்கப்பட்டது. டில்லியில் பத்திரிக்கையாளர்களிடம் 1969 மார்ச் 17ம் நாள், மத்திய – மாநில அரசுகள் அதிகாரங்கள் குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்படும் என்று தலைவர் கலைஞர் அவர்கள் அறிவித்தார். இந்த அறிவிப்பால் அகில இந்திய அளவில் ஒரு ஆரோக்கியமான விவாதம் நீண்டகாலமாக நடந்தது. இந்த அதிகாரப் பகிர்வு வெறும் தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களுக்கும் பொருந்தும் வகையில் இதுபற்றி ஆதராய நீதிபதி ராஜமன்னார் தலைமையில் டாக்டர். ஏ. லட்சுமணசாமி முதலியார், பி. சந்திராரெட்டி ஆகியோரை உறுப்பினர்களாக கொண்டு ஒரு குழு அமைக்கப்பட்டு மத்திய – மாநில உறவுகளும் அதனிடையே அதிகார பகிர்வு குறித்து ஆராய்ந்து சுமார் ஒன்றரை ஆண்டு காலம் இது குறித்தான கரத்துகளை அகில இந்திய அளவில் பல தரப்பினரிடம் கேட்கப்பட்டு ஒரு அற்புதமான அறிக்கையை 27/05/1971 இல் தலைவர் கலைஞரிடம் அந்த குழுவினர் வழங்கினர். 383 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கை இன்றைக்கும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற அரிய ஆவணமாகும். மத்திய – மாநில பிரச்சனைகள் எழும்போதெல்லாம் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும் ஒரு மகா சாசனமாக (Magna Carta) உள்ளது. இந்த ஆவணத்தை அகில இந்திய அளவில் அனைவரும் விரும்பி படித்து அதுகுறித்தான விவாதங்களும் அப்போது நடந்தன. ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகள் சில வருமாறு. 

1. அரசியலமைப்புச் சட்டத்தின் 7வது இணைப்பிலுள்ள அதிகாரப் பட்டியல்களின் பொருளடக்கத்தை மாற்றியமைத்து மாநிலங்களுக்கும் சட்டமியற்றும் அதிகாரத்தை வழங்கவேண்டும். இப்போது நீட் பிரச்சனையில் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதுவும் இந்த பட்டியல் பிரச்சனையை சார்ந்தது. 

2. கார்ப்பரேஷன் வரி, ஏற்றுமதி தீர்வைகள், சுங்க வரிகள் போன்ற வரிகளின் பங்கும் பகிர்வும் மாநிலங்களுக்கு அதிகரித்து வழங்க வேண்டும். மாநிலங்களுக்கு வருவாயை அதிகப்படுத்த வேண்டும். வரி சீர்திருத்தம் வேண்டும் என மாநிலங்களுக்கான நியாயமான நிவாரணங்கள், மானியங்கள் குறித்தான உரிமைகளை எந்த சிக்கலும் இல்லாமல் தாராளமாக வழங்கப்பட வேண்டும். 

3. திட்டக் குழு என்பது இப்போது இல்லை. ஆனால் அப்போது இருந்த திட்டக் குழுவானது மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் மாநிலங்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும். 
4. ஆளுநர் மாநில அரசுகளின் ஆலோசனையை பெற்றே நியமிக்கப்பட வேண்டும்.
5. அவசர நிலை பற்றி முடிவெடுக்கும் பொழுது, அந்த நெருக்கடி கால அறிவிப்பை பிரகடனப்படுத்தும் போது மாநிலங்களிடையேயுள்ள உறவு கவுன்சிலிடம் (Inter State Council) கலந்தாலோசித்து அறிவிக்கப்பட வேண்டும். 
6. நீதித்துறையில் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும்போது மாநில அரசு, ஆளுநர், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரின் கருத்துகள் முக்கியமாக கருதப்பட வேண்டும். 
7. மாநிலங்களவையில் அனைத்து மாநிலங்களுக்கும் சமமான எண்ணிக்கையில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். 
8. மாநிலங்களிடையே உள்ள நீர் தகராறுகளை உச்சநீதிமன்றம் முடிவு செய்து அதன் ஆணைகளை உடனடியாக மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். 
9. அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டுமென்றால் மாநிலங்களில் மூன்றில் இருபங்கு மாநில சட்டமன்றங்கள் அதை ஏற்க வேண்டும். 

இப்படி மைய அரசு நிர்வாகம் மாநிலங்களுடைய நீர் பகிர்வு, பொது ஒழுங்கு, வணிகம், மொழி, பொது ஊழியங்கள் என பல பரிந்துரைகளை ராஜமன்னார் குழு அளித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு இதை இரா. செழியன், முரசொலி மாறன் ஆகியோர் இடம்பெற்ற குழு ஆய்வு நடத்தி மத்திய அரசுக்கு அன்றைய திமுக அரசு அனுப்பியது. இதை பெற்றுக் கொண்ட பிரதமர் இந்திரா காந்தி இதன் மேல் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பதில் கடிதம் அனுப்பினார். ராஜமன்னார் குழு மத்திய, மாநில உறவுகளை ஆராயவும், மாநில சுயாட்சி கோரிக்கைகளில் உள்ள நியாயங்களை மெய்ப்படுத்தவும் அமைத்ததற்கு முன்பே 1967 ல் மத்திய அரசு மத்திய, மாநில உறவுகளை ஆய்வு செய்ய நிர்வாக சீர்திருத்த கமிஷனை அமைத்தது. மீண்டும் மத்திய அரசு 1969லும் மத்திய, மாநில உறவுகளை ஆராய ஒரு குழுவை அமைத்தது. அந்த குழுவின் பரிந்துரைகள் செயல்பாட்டுக்கு வரவில்லை. அதற்கு பின் இந்திரா அம்மையார் பிரதமராக இருந்தபோது 1984 வாக்கில் நீதிபதி சர்க்காரியா தலைமையில் மத்திய – மாநில உறவுகளை ஆராய குழு அமைக்கப்பட்டது. அதற்கு அடிப்படை காரணமே கலைஞர் அவர்கள் அமைத்த ராஜமன்னார் குழுவே ஆகும். சர்க்காரியா குழுவும் ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகளையும் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது. 

நீதிபதி சர்க்காரியா குழு இரண்டு தொகுதிகள் அடங்கிய விரிவான அறிக்கையை மத்திய அரசுக்கு அப்போது அளித்தது. இதில் இன்னொரு செய்தி என்னவென்றால் ஈழத்தமிழர் பிரச்சனையில் 1980 களில் திம்பு பேச்சுவார்த்தைக்கும் இந்த ராஜமன்னார் குழுவின் அறிக்கை அடிப்படை ஆவணமாக திகழ்ந்தது. அன்றைக்கு இந்த அறிக்கையின் நகல் கிடைக்காமல், அமிர்தலிங்கத்திற்கும் பாலசிங்கத்திற்கும் இந்த அறிக்கையை அடியேன் நகல் எடுத்துக் கொடுத்தேன். இந்த அறிக்கையும் திம்பு பேச்சுவார்த்தையில் பேசப்பட்டதோடு நார்வே பேச்சுவார்த்தையிலும் ஒரு ஆவணமாக இருந்த்து என்ற செய்திகள் வந்தது. இப்படிப்பட்ட அரிய பணிக்கு கர்த்தா தலைவர் கலைஞர் அவர்கள் தான். அகில  இந்திய அளவில் முக்கியத்துவம் பெற்ற இந்த அறிக்கை 1980 களில் மறைக்கப்பட்டது. சட்டப்பேரவை நூலகத்தில் கூட இந்த அறிக்கை கிடைப்பது அரிதாக இருந்தது. 

இது மட்டுமல்லாமல், அனைவரின் நினைவில் வாழும் அண்ணன் முரசொலி மாறனினி ‘மலர்க மாநில சுயாட்சி’ என்ற நூல் இந்த தத்துவத்திற்கே வேதமாகும். மாநில உரிமைகளை வென்றெடுப்பதில் அக்கறையும் ஆவலும் கலைஞருக்கு இருந்தாலும் இந்தியாவின் ஒன்றுபட்ட ஜனநாயகம் தழைக்க வேண்டும் என்ற நோக்கமே இந்த அறிவிப்பாகும. ராஜமன்னார் குழுவின் அறிக்கை வழங்கப்பட்ட 10 ஆண்டுகளுக்குப் பின் என்.டி.ராமாராவ் ஐதராபாத்தில் மாநில உரிமைகள் குறித்து நடத்திய மாநாடும், அம்மாதிரியே அசாம் கன பரிஷத் ஷில்லாங்கில் நடத்திய மாநாடும், அதற்குப் பிறகு ஸ்ரீநகரில் ஃபரூக்  ப்துல்லா நடத்திய மாநாட்டில் மத்திய
அரசிடம் வெளியுறவு, பாதுகாப்பு, தொலைத்தொடர்பு, நிதி போன்ற துறைகளை மட்டும் வைத்துக்கொண்டு மற்ற அதிகாரங்கள் மாநிலங்களுக்கு வரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் மேற்கு வங்க முதல்வர் ஜோதி பாசு அரசும் ராஜமன்னார் குழுவீன் அடிப்படையில் மாநிலங்களுக்கு அதிகாரங்கள் வேண்டும் என்று மத்திய அரசுக்கு வெள்ளை அறிக்கையை அனுப்பியது. பெங்களூருவில் அன்றைய கர்நாடக முதல்வர் இராமகிருஷ்ண ஹெக்டே தென்மாநில முதல்வர்கள் மாநாட்டினை இதுகுறித்து பேச கூட்டினார். இந்த நிகழ்வுகள் யாவும் தலைவர் கலைஞருடைய தொலைநோக்கு பார்வையில் ஏற்பட்ட பின்விளைவுகளே ஆகும். தலைவர் கலைஞர் போட்ட இந்த விதையால் மேற்கு வங்க அரசு 01/12/1977 இல் இதன் அடிப்படையிலேயே மத்திய, மாநில நிதி பகிர்வுகள் குறித்து ஒரு விரிவான அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியது. இதை தொடர்ந்து பிரிவு 356யை கொண்டு மாநில அரசை கலைப்பதை குறித்தான அறிக்கை மக்களவை செயலகம் 1996 இல் வெளியிட்டது. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது நீதிபதி வெங்கடாச்சலையா தலைமையில் அரசியலமைப்புச் சட்ட சீர்திருத்தங்களையொட்டி அறிக்கை வழங்கிய போது மத்திய, மாநில உறவுகள் குறித்தான பரிந்துரைகளையும் அந்த குழு 2002 இல்  அறிக்கையாக வழங்கியது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது 2010 இல் நீதிபதி பூன்ச் தலைமையில் மத்திய, மாநில உறவுகள் குறித்தான விரிவான அறிக்கையும், மத்திய பாதுகாப்பு படையினர் மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் ஒரு மாநிலத்திற்கு செல்லலாம் என்பது பற்றி இந்த குழு ஆய்வு செய்த்து. இப்படி பல குழுக்கள், பரிந்துரைகள். இதன் அடிப்படையே கலைஞர் அமைத்த ராஜமன்னார் குழு பரிந்துரைகள் தான்.  மாநில சுயாட்சி என்பது விடுதலைக்கு முன்பே விவாதிக்கப்பட்ட பிரச்சனையாகும். 1916 இல் மதன்மோகன் மாளவியா, சாப்ரூ, ஜின்னா போன்றோர் அடங்கிய 19 பேர் கொண்ட குழு அறிக்கை லக்னோவில் வெளியிடப்பட்டது. அதில் மாநில எல்லைக்குள் முழு சுயாட்சி வேண்டும் என்று கூறியிருந்தனர். அதுவே ‘லக்னோ ஒப்பந்தம்’ என்று அழைக்கப்படுகிறது. 03/04/1946 ஆம் ஆண்டு அபுல் கலாம் ஆசார் போக்குவரத்து, வெளியுறவு, பாதுகாப்பு போன்ற துறைகள் மத்திய அரசிடம் வைத்துக் கொண்டு மற்ற துறைகளை மாநிலங்களுக்கு வழங்கி தன்னாட்சியாக தரவேண்டுமென்று  5 அறிவுறுத்தியிருந்தார். 11/12/1944 இல் காங்கிரஸ் கட்சி அறிக்கையிலும் மாநிலங்களின் தன்னாட்சி என்று அறிவிப்பு செய்த்து. அதற்கு பிறகு இதுகுறித்து பலகாலம் விவாதிக்காமல் இருந்தது, அறிஞர் அண்ணா 1967ல் தேர்தல் அறிக்கையில் மாநில சுயாட்சியை வலியுறுத்தினார். இந்த அரிய தொடர் பணியை தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றி வருகிறார். நாட்டின் ஒருமப்பாட்டிற்கு பலம் சேர்க்கவே இக்கோரிக்கையாரும். இதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். மாநில திட்டக் குழு, நுகர்பொருள் வாணிபக் கழகம் என சில சுயாட்சி அமைப்புகளை மாநில நலன் கருதியும் முன் மாதிரியாக தலைவர் கலைஞர் அவர்கள் தன்னுடைய ஆட்சியில் அமைத்தார். 

மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற நிலையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் அமெரிக்காவில், சுவிட்சர்லாந்தில், மற்ற ஐரோப்பிய நாடுகளில் இருப்பதை போன்று தனிக்கொடி வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தினார். 
இதை குறித்து நாடாளுமன்றத்தில் 20/08/1970 இல் பிரதமர் இந்திரா காந்தி பதில் அளிக்கும் போது அமெரிக்கா போன்ற நாடுகளில் மாநிலங்களுக்கு தனிக்கொடி இருக்கின்றன. இது குறித்து மாநில முதல்வர்களிடம் தான் கலந்தாலோசிக்கப் இருப்பதாக கூறினார். மாநிலங்களுக்கு தனிக்கொடி அவசியமில்லை என்று ஸ்தாபன  காங்கிரஸும், அன்றைய ஜன சங்கமான இன்றைய பிஜேபியான எதிர்த்தது. அவர்கள் இதுகுறித்து சொன்னபோது ஒரு வேளை கம்யூணிஸ்ட்கள் மாநிலங்களில் ஆட்சியை அமைக்கும் பட்சத்தில் அருவாள், சுத்தியல் சின்னங்களை அடங்கிய சீன, ரஷ்ய கொடிகளை இங்கு கொண்டு வந்துவிடுவார்கள் என்று குறிப்பிட்டனர். இந்நிலையில் கலைஞர் அவர்கள் டெல்லியில் 27/08/1970இல் பத்திரிக்கையாளர்கள் முன் தமிழக அரசின் கொடி எப்படி இருக்கும் என்று தான் வடிவமைத்த படத்தை வெளியிட்டார். அந்த படத்தில் தேசியக்கொடி மேல் பக்கத்திலும், தமிழகத்தின் இலச்சினையான வட்டவடிவமான கோபுர முத்திரையை வலது பக்கத்தின் கீழ் முனையில் அமைவது போல் வடிவமைத்து வெளியிட்டார். இப்பிரச்சனையில் தீர்வு எதுவும் எட்டப்படாத நிலையில், தலைவர் கலைஞர் அவர்கள் அந்தந்த மாநில முதல்வர்கள் சுதந்திர தின விழாவில் தேசியக்கொடியை ஏற்றும் உரிமையை வழங்க வேண்டுமென்று வலியுறுத்தினார். இந்த கோரிக்கையை பிரதமர் இந்திரா ஏற்றுக்கொண்டார். இன்றைக்கு கர்நாடகாவின் கோரிக்கை இன்னும் வலுப்பெற்றால் தேசிய அளவில் இதற்கான தாக்கம் எப்படி இருக்கும் என்பது போகப் போகத் தான் தெரியும். ஏற்கனவே மைசூர் மாநில பிரச்சனை குறித்து 1960ல் எம். இராமமூர்த்தி சொல்லிய கருத்துகளால் அப்போது கர்நாடகத்தின் வடபகுதியான பெல்காமிற்கும், தென்பகுதியான மைசூர், பெங்களூரு பகுதிகளுக்கும் பிரச்சனைகள் நிகழ்ந்தன. பழைய மைசூரு சமஸ்தானத்திற்கும், மைசூரு மாநிலம் அமைப்பது குறித்த பனிப்போர்கள் 1947ல் கடுமையாக இருந்தன.  
ஆகஸ்டு 15, இந்திய விடுதலை நாளில் அந்தந்த மாநில முதல்வர்கள் கொடி ஏற்றும் உரிமையை 1974 இல் தலைவர் கலைஞர் போராடி பெற்றார். இதன் விளைவாக மற்ற மாநில முதல்வர்களும் தங்களுடைய மாநிலத் தலைநகரங்களில் தேசிய கொடியை ஏற்றும் உரிமையை பெற்றனர்.  ஐக்கிய முன்னணி ஆட்சியின் போது மத்தியில் தேவகவுடா ஆட்சி காலத்தில் மாநிலங்களில் இருந்து பெறுகின்ற வரிகளில் பங்கு சதவிகிதத்தை கூடுதலாக பெற்றது கலைஞருடைய சாதனையாகும்.

இந்தியா – பாகிஸ்தான் போரிலும் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் அதிகமாக தலைவர் கலைஞர் அவர்கள் போர் நிதி திரட்டி கொடுத்தது வரலாற்று செய்தியாகும். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதும் கார்கில் போரின் போதும் கலைஞர் அவர்கள் நிதி திரட்டி அனுப்பியதை அன்றைய பிரதமர் வாஜ்பாய் பாராட்டினார். இன்றைக்கு கலைஞருடைய வயதையொத்த மூத்த தலைவர்கள் வாஜ்பாய் மட்டுமே உள்ளார். இந்திய வரலாற்றில் கலைஞர் போன்று இந்திரா காந்தியிலிருந்து இன்றைக்கு இருக்கின்ற டாக்டர் மன்மோகன் சிங் போன்றவர்கள் வரை, பிரணாப் முகர்ஜி போன்ற குடியரசுத் தலைவர்கள் இருந்தவரை கடந்த 45 ஆண்டுகளில் அகில இந்திய அளவில் மதிக்கப்பட்ட தலைவர் கலைஞர். மத்திய அரசு 1990 வி.பி.சிங் காலத்தில் இருந்து மாநில கட்சிகளுடைய அமைச்சர்களின் பங்களிப்பென்பது தவிர்க்க முடியாத்ததாகிவிட்டது. தேசிய பார்வையோடு தமிழகத்தின் நலனையும் உரிமைகளையும் பெறத் தலைவர் கலைஞர் அவர்கள் சிந்தனை, மாபெரும் அரசியல் தத்துவமே. குளோபல் வில்லேஜ் என்று சொல்லக்கூடிய அளவில் உலகமே ஒரு கிராமமாக அமைந்துவிட்டது. தாராளமயமாக்கல், புதிய பொருளாதார கொள்கைகளின் அடிப்படையில் தலைவர் கலைஞர் அறிவித்த அறிவிப்பு ஒன்று  முக்கியத்துவம் பெற்ற செய்தியாகும். அந்த அளவில் மாநிலங்களுக்குள் ஒரு சகோதர பாசத்தோடு பிரச்சனைகளை தீர்ப்பது இன்றியமையாதது. அந்த அளவில் கலைஞர் அவர்களின் சமயோசிதத்தால் 19 ஆண்டுகள் பெங்களூருவில் திறக்கமுடியாத ஐயன் வள்ளுவர் சிலை திறக்கப்பட்டது. அதுபோன்று சென்னையில் கன்னட கவிஞர் சர்வக்ஞர் சிலையும் திறக்கப்பட்டது. இதுவே கலைஞர் அவர்களுடைய ராஜதந்திரத்திற்கும் பெருந்தன்மைக்கும் சான்றாகும்.  தலைவர் கலைஞர் விரும்பியபடி எதிர்காலத்திலும் இந்திய அரசியலில் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டால் உலகிற்கே வழிகாட்டும் பெரிய ஜனநாயக நாடாக இந்தியா அமையும். நாகாலாந்து, மணிப்பூர் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பிரச்சனைகள், காஷ்மீர் சிக்கல், பஞ்சாப் மாநில கோரிக்கைகள் என நாடு எதிர்கொள்கின்ற தேசிய இன எரியும் அக்னியை எப்படி அணைக்கப் போகின்றோம்
என்பது நமக்கான வினாவாகவே இருக்கின்றது.

பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், கலாச்சாரங்கள், பண்பாடுகள் என்ற மாறுபட்ட சூழலில் ‘பன்மையில் ஒருமை’ என்ற ஒருமைப்பாடு இந்தியாவில் தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டுமென்றால், பிராந்திய நலன்கள், வட்டார அபிலாஷைகளை பாதுகாத்து மாநில சுயாட்சியாக அமைந்தால் ஒரு  ஆரோக்கியமான கூட்டாட்சியாக இந்தியா விளங்கும். இதுவே தலைவர் கலைஞர் அவர்களின் விசாலப் பார்வை! இந்த பார்வை இந்திய ஒருமைப்பாட்டுக்கு வலுவைச் சேர்க்கும்!   

-செய்தித் தொடர்பாளர், திமுக, 
இணையாசிரியர், 
கதைசொல்லி, 
நூலாசிரியர். 

#தெற்கிலிருந்து_ஒரு_சூரியன்
#மாநில_சுயாட்சி
#கூட்டாட்சி
#திராவிட_இயக்கம்
#கலைஞர்
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
23-10-2017

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...