Friday, October 6, 2017

தென்பெண்ணை ஆற்றுநீர் பிரச்சனை - தடுப்பணைகள் கட்ட விவசாயிகள் வலியுறுத்தல்

தென்பெண்ணை ஆற்றுநீர் பிரச்சனை
தடுப்பணைகள் கட்ட விவசாயிகள் வலியுறுத்தல்

தென் மாநிலங்களில் ஓடும் ஆறுகளில் முக்கியமானது ஆறு தென்பெண்ணை. இது கர்நாடக மாநிலம், சிக்கபல்லபூர் மாவட்டம், நந்தி மலையில் ற்பத்தியாகிறது. சுமார் 112 கிலோமீட்டர் பயணம் செய்து சிங்க சாதனப்பள்ளி வழியாக தமிழக எல்லைக்குள் நுழைகிறது. பின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களினூடே பயணித்து கடலூரில் கடலில் கலக்கிறது.

கர்நாடகாவில் இருந்து வரும் தென்பெண்ணை ஆற்று தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் 1955ல், தமிழக எல்லையான ஒசூர் அருகே, கெலவரப்பள்ளி அணை கட்டப்பட்டது. இதில் 481 மில்லியன் கன அடி தண்ணீரை தேக்கி வைக்க முடியும்.

இந்த அணையில் இருந்து, 21.99 கி.மீ., நீளமுள்ள வலது கால்வாயும், 25.5 கி.மீ நீளமுள்ள இடது கால்வாயும் வெட்டப்பட்டு, 2005 முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால், இப்பகுதியில் உள்ள 22 கிராமங்களில் சுமார் 8,000 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

தடுப்பணைகள் 10 கட்ட வேண்டும்.

கெலவரப்பள்ளி அணையில் நீர் நிரம்பும் போது, அங்கிருந்து திறக்கப்படும் தண்ணீர், 60 கி.மீ ஓடி கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி அணையை வந்தடைகிறது. இடையில், 10 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. அதில் சேமிக்கப்படும் நீரால் 1,083 ஏக்கர் பாசனம் பெறுகிறது. தென்பெண்ணை ஆற்றில் இருந்து, மருதாண்டப்பள்ளி ஏரி, துரை ஏரி ஆகியவற்றுக்கு கால்வாய் வசதி செய்யப்பட்டுள்ளது. ‘ஒசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை தாலுக்காவில் உள்ள ஏரிகளில், தென்பெண்ணை ஆற்று தண்ணீரை நிரப்ப வேண்டும்என, விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும் கூட ஏரிகளுக்கு தண்ணீர் திருப்பி விடப்படுவதில்லை.

கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி அணை நிரம்பி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டால், காவேரிப்பட்டினம், நெடுங்கல் அகரம், இருமத்தூர் வழியாக தர்மபுரி மாவட்டத்தில் 48 கி.மீ. பயணித்து ஈச்சம்பாடி அணைக்கு செல்லும். கே.ஆர்.பி அணையின் மொத்த கொள்ளளவு 1,666 மில்லியன் கன அடியாகும். அணையின் மொத்த நீர்மட்டம், 52 அடி.

அணையில் இருந்து வலது மற்றும் இடதுபுற கால்வாயில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வலதுபுற கால்வாய் கால்வேஹள்ளி, காவேரிப்பட்டினம், பென்னேஸ்வர மடம், ஜெகதாப் வரை18.2 கி.மீ வரை செல்கிறது.

 இந்நிலையில் வலதுப்புற கால்வாயை, தர்மபுரி மாவட்டத்துக்கு நீட்டிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, 2013ல் ஜெகதாப்பில் இருந்து 13 கி.மீட்டருக்கு கால்வாய் வெட்டி, காரிமங்கலம், திண்டல், சாதிநாயக்கன்பட்டி, ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இதே போல், 14.2 கி.மீ. உள்ள இடதுபுற கால்வாயில் திறந்துவிடப்படும் தண்ணீர், பாளேகுளி வரை செல்கிறது.

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது தண்ணீர் வீணாக செல்வதால், பாளேகுளி வரை, ஏரியில் இருந்து சந்தூர் ஏரி வரை, புதிய கால்வாய் வெட்டி பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, 2014ல் பாளேகுளி ஏரியிலிருந்து நாகரசம்பட்டி, வீரமலை, புட்டனூர் வழியாக சந்தூர் ஏரி வரை 11 கீ.மீ., க்கு கால்வாய் வெட்டப்பட்டு தண்ணீர் செல்கிறது. மேலும், காவேரிப்பட்டினம் அடுத்த நெடுங்கல் தடுப்பணையில் இரந்த 11,2 கி.மீ., கால்வாயில் பாரூர் பெரிய ஏரிக்கு தண்ணீர் செல்கிறது. இதன் மொத்த கொள்ளளவு, 248 மில்லியன் கன அடியாகும். இந்த ஏரியில் இருந்து பல கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன.

பாரூர் ஏரியிலிருந்து கால்வாய் வழியே, பெகொண்டாபுரம் ஏரி மற்றும் பாளேதோட்டம் ஏரி வரை தண்ணீர் செல்கிறது. கே.ஆர்.பி., அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரால், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் சுமார் 24 ஆயிரம் ஏக்கர்கள் பாசன வசதி பெறுகிறது.
கே.ஆர்.பி., அணை நிரம்பி தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் அதிகளவில் திறந்து விடும்போது கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும்.

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் அகரத்தில் உள்ள நெடுங்கல் அணைக்கட்டு வழியாக, தர்மபுரி மாவட்டம், எச்.ஈச்சம்பட்டி அணைக்கட்டிற்கு வந்தடைகிறது. இந்த அணைக்கட்டால், 41 கிராமங்களில் 6,250 ஏக்கர் பாசனம் பெறுகிறது.
இந்த அணைக்கட்டில் இருந்து வெளியேறும் தண்ணீர் 57 கி.மீ., க்கு தர்மபுரி எல்லையான கீழ் செங்கப்பாடி வழியாக, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு செல்கிறது.

வீணானது 32 டி.எம்.சி 2015 மழை காலத்தில்...

எச். ஈச்சம்பாடி அணைக்கட்டில் இருந்து கீழ்செங்கப்பாடி வரை, தென்பெண்ணையாற்றின் குறுக்கே குமாரம்ப்பட்டி, தாம்பல் ஆகிற இடங்களில் இரண்டு தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் தலா, 115.99 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

தென்பெண்ணையாற்றின் குறுக்கே, தருமபுரி மாவட்டம், மொரப்பூரை அடுத்த எம். வெளாம்பட்டியில், செனாக்கல் என்ற பெயரில் தடுப்பணை கட்டவேண்டும் என, அப்பகுதி விவசாயிகளும், பொது மக்களும் 40 ஆண்டுளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இங்கு தடுப்பணை கட்டப்பட்டால் அரூர், மொரப்பூர், ஊத்தங்கரை பகுதிகளில் சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 10 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுவதுடன் அங்கு நிலவி வரும் குடிநீர் பிரச்சனைக்கும் நல்ல தீர்வு கிட்டும்.

மேலும் கீழ்செங்கப்பாடி பகுதியிலும் தடுப்பணை கட்ட வேண்டுமென, அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்கடந்த 2015ம் ஆண்டு பெய்த மழையின் போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சுமார் 32 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்தது குறிப்பிடத்தக்கது.

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டத்தில் 140 கி.மீ., க்கு பாயும் தென்பெண்ணையாறு, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணைக்கு செல்கிறது. சுமார் 7321 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டதும், 119 அடி உயரமும் கொண்ட சாத்தனூர் அணை 1958ல் கட்டப்பட்டது. இந்த அணையால் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டத்தில், இடதுபுறக் கால்வாயால் 24 ஆயிரம் ஏக்கரும், வலதுபுற கால்வாயால் 21 ஆயிரம் ஏக்கரும் பாசன வசதி பெறுகிறது.

சாத்தனூர் அணை கூட்டு குடிநீர் திட்டத்திற்கான நீர்த் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருக்றது. மேலும் அணை பராமரிப்பு, நீர் ஆவியாதல், அணை மண் தூர்வினால் ஏற்படும் நீர் இழப்பு போக, குறைந்தளவே நீர் திறந்து விடப்படுகிறது. இந்த நீர் ஏரிகளில் நிரப்பவும், பாசனத்திற்கும் முழுமையாக பயன்படுகிறது.

கடந்த 2005ம் ஆண்டுக்கு பின் சாத்தனூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர், கடலில் கலக்கவில்லை. மழை அதிகமாக பெய்து, அதிகளவு நீர் அணைக்கு வந்தால் மட்டுமே கடலில் கலக்கும் நிலை ஏற்படும் என்று திருவண்ணாமலை மத்திய பெண்ணாறு வடிநில கோட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

குடிநீர்
மேலும் திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு பகுதியில், 5000 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. மேலும், 88 ஏரிகளில் தேக்கி வைக்கப்படும் நீரால், 5100 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. திருவண்ணாமலை நகரம், தானிப்பாடி, சாத்தனூர் மற்றும் வாணாபுரம் ஆகிய கூட்டு குடிநீர் திட்டத்திற்கு, 322 மில்லியன் கன அடி நீரும் பயன்படுத்தப்படுகிறது.

இது போக, நீர் இருப்பை பொறுத்து, பாசனத்திற்கு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வெள்ள காலங்களில் அணை நிரம்பினால், அங்கிருந்து திறக்கப்படும் உபரி நீர் விழுப்புரம் மாவட்டத்தின் வழியாக கடலூரில் வங்கக் கடலில் கலக்கிறது.

தென்பெண்ணையாற்றின் குறுக்கே போதியளவில் தடுப்பணைகள் கட்டப்படாத காரணத்தினால் தான் வெள்ள காலங்களில் அதிகளவு தண்ணீர் பயன்பாடின்றி கடலில் கலக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது என்று விவசாயிகள் குமுறுகின்றனர். பல ஆண்டுகளாக தென்பெண்ணையாற்றின் குறுக்கே பல்வேறு பகுதிகளில் தடுப்பணைகள் கட்ட கோரிக்கை வைத்துக் கொண்டே இருக்கின்றனர்.

தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் முறையாக ஆய்வு செய்து கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை தடுப்பணைகள் கொண்டு கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

#தென்பெண்ணையாறு
#south_pennar
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

05-10-2017

No comments:

Post a Comment

*ஈழவேந்தன் Eelaventhan

#*ஈழவேந்தன் மறைவு*.. ———————————— என்னுடன் 1985 - 86 பிப் வரை தங்கி இருந்தார். சொந்த ஊர்  ஈழம் பருத்திதுறை. இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்...