Saturday, October 14, 2017

வழக்கறிஞர்கள் பணியை கண்ணியத்தோடு ஆற்றுங்கள் – சென்னை உயர்நீதிமன்றம்.


-------------------------------------

வழக்கறிஞர் பணியை “Noble Profession” (உன்னத - கீர்த்தியான பணி) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். வழக்கறிஞர்களை “Learned Friends” (கற்றறிந்தவர்கள்) என்று ஆங்கிலத்தில் அழைப்பதுண்டு. இந்த பணியில் 1970களில் நுழையும் பொழுது எனக்கெல்லாம் பெருமையும், மகிழ்ச்சியும் ஏற்பட்டது. மறைந்த வழக்கறிஞர் என்.டி.வானமாமலை, வழக்கறிஞர் ஆர்.காந்தி போன்றோரின் கீழ் பணியாற்றக்கூடிய வாய்ப்பும் கிடைத்தன. அப்போது வெள்ளை வெளேறென்ற சட்டையும், பாரட்லா என்ற கருப்பு நிறத்தில் வெள்ளைக் கோடிட்ட முழுக்கால் சட்டையும், கழுத்தில் வெள்ளை கழுத்துப் பட்டையும் அழுக்கில்லாமல் சுத்தமாக அணிய வேண்டும் என்று தான் எங்களுக்கெல்லாம் சொல்லப்பட்ட அறிவுரைகளாகும். கருப்பு கோட்டை அணிந்து கொண்டு வெளியே போகலாம். கருப்பு அங்கியை அணிந்து கொண்டு நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே செல்லக் கூடாது என்பார்கள்.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் மனுக்களை சிறப்பாகவும், பிழைகள் இல்லாமல் எழுதவும், தீர்ப்புகளின் விவரங்களை நினைவு கொள்வதும், உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் 25 நீதிமன்றத்திலும் நீதிபதிகளின் முன்னிலையில் இன்ன இன்ன வழக்குகள் என்று மட்டித் தாளில் (சாணித் தாள் என்பார்கள்) அச்சடித்து சீனியர் வீட்டுக்கு காலை 7 மணிக்கெல்லாம் வந்துவிடும். காலை சீனியர் வீட்டுக்கு சென்றால் அதை பக்க ரீதியாக ஒழுங்குபடுத்தி தைத்து நீதிமன்ற வாரியாக என்னென்ன நமது வழக்குகள் வருகின்றன என, ‘✓’என்று குறியிட வேண்டும். அந்த வழக்கு கட்டுகளை எடுத்து வைத்து அதற்கான குறிப்புகளை ஒழுங்குபடுத்தி அந்த வழக்கு சம்மந்தமான உச்சநீதிமன்ற தீர்ப்புகள் ஏதாவது இருக்கிறதா என்று தேடி எடுத்து வைக்க வேண்டும். இப்படி எல்லாம் அப்போது பணிகள் செய்த நினைவுகள் உண்டு.

இன்றைக்கு பொதுநல வழக்குகள், அடியேன் 1983லேயே நதிநீர் இணைப்பு வேண்டுமென்று வழக்கு தாக்கல் செய்து பிப்ரவரி 2012ல் அந்த தீர்ப்பை பெற்றதால் தான்ள இன்றைக்கு நதிநீர் இணைப்பு குறித்து மத்திய அரசு பணிகளில் இறஙகியுள்ளது. தூக்கு தண்டனை கூடாதென்று இன்றைக்கு சொல்கிறார்கள். அதையும் 1983லேயே உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனை என்று தீர்ப்பை உறுதி செய்து, கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்யப்பட்ட பின்பும் 2 வரித் தந்தியில் வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசை மூன்று நாட்களுக்குள் காப்பாற்றப்பட வேண்டுமென்ற நிலையில் சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றமும், குடியரசுத் தலைவரும் உறுதி செய்த நிலையில் 34 ஆண்டுகளுக்கு முன்பே அந்த தூக்குக் கயிறையே அறுத்தெறிந்தேன். இப்படி தேனி மாவட்ட கண்ணகி கோட்டம் பிரச்சனை, தமிழக மேலவை அமைதல், கைதிகளுக்கு வாக்குரிமை, விவசாயிகளின் ஜப்தி நடவடிக்கை கூடாதென்றும், கடன் நிவாரணங்கள் அமுல்படுத்த வேண்டுமென்றும், சுற்றுச்சூழலை பாதிக்கும் கூடங்குளம், சிவகாசி அருகே தமிழ்நாடு சிமெண்ட்ஸ், ஈழத்தமிழர் பிரச்சனை என 20க்கும் மேலான வழக்குகள் தாக்கல் செய்தது பெருமையாக இருந்தது. இதையெல்லாம் வழக்கறிஞர் என்ற நிலையில் தாக்கல் செய்தேன். 

ஆனால் இன்றைக்கு கருப்பு, வெள்ளை ஆடை அணிந்து, வழக்கறிஞர்கள் என்று கூறியபடி, கட்டப் பஞ்சாயத்து, கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சில ஆண்டுகளாக, தமிழகத்தில் இத்தகைய போக்கு நிலவுகிறது. நீதி நடைமுறையில் நம்பிக்கை இல்லாமல், இத்தகைய கறுப்பு, வெள்ளை உடை அணிந்தவர்களை நம்பி செல்வதற்கு, இந்த வழக்கு ஓர் உதாரணம். சொத்து பிரச்னைகளில் தலையிட, வழக்கறிஞர்கள் என கூறிக்கொள்ளும் இவர்களுக்கு, பணம் கொடுத்து ஏற்பாடு செய்கின்றனர்.

ஆந்திராவில் 200, கர்நாடகாவில் 125, சட்டக் கல்லுாரிகள் இயங்குகின்றன. இவ்வளவு எண்ணிக்கையில் சட்டக் கல்லுாரிகள் ஏன் தேவைப்படுகிறது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. கல்லுாரிகளுக்கே செல்லாமல், பலர் பட்டம் பெறுகின்றனர். கிரிமினல் நடவடிக்கை களில் இருந்து பாதுகாத்து கொள்ள, சட்டக் கல்லுாரிகளில் பெறும் பட்டங்களை, சிலர் பயன்படுத்துகின்றனர்.
'லெட்டர் பேடு' கல்லுாரிகளில் இருந்து, சட்டப் படிப்புக்கான பட்டங்களை வாங்கி, சிவில் பிரச்னைகளை தீர்த்து வைப்பதாக, கட்டப் பஞ்சாயத்தில் பலர் ஈடுபடுகின்றனர். எதிர் தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர்களை மிரட்டும் அளவுக்கு, இவர்கள் செல்கின்றனர். நீதிமன்றத்துக்குள்ளேயே இப்படி நடக்கும்போது, வெளியில் நடப்பதை, கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.சரியாக பரிசீலனை செய்யாமல், அதிக எண்ணிக்கையில், சட்ட கல்லுாரிகள் துவங்க, பார் கவுன்சில் அனுமதி வழங்குகிறது. 

சட்டம் படித்தவர்களுக்கு, வேலை இல்லாத நிலை உள்ளது. அவர்கள், கிரிமினல் நடவடிக்கைகளில் இறங்கும் சூழ்நிலை உள்ளது. தற்போதைய நிலைக்கு, பார் கவுன்சிலையும் குறை கூற வேண்டும். இப்போதாவது உணர்ந்து, பார் கவுன்சில் விழித்து எழ வேண்டும். வழக்கறிஞர்களின் பங்கு இல்லாமல், நீதி பரிபாலனம் நடக்காது. அவர்கள், நீதிமன்றங்களின் அதிகாரிகள். சில வழக்கறிஞர்கள் தான், கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். 

இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் எல்லாம், கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடு பவர்களை பற்றி தான்.எனவே, கீழ்கண்ட கேள்விகளுக்கு, பார் கவுன்சில் மற்றும் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும்.

* போலீஸ், ரவுடிகளுடன் சேர்ந்து, வழக்கறிஞர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனரா?
* வழக்கறிஞர்கள் தொடர்புடைய, கிரிமினல் வழக்குகளின் எண்ணிக்கை எவ்வளவு?
* சட்டக் கல்லுாரி மாணவர்களையும், கட்டப்பஞ்சாயத்து நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது, பார் கவுன்சில் மற்றும்போலீஸ் அதிகாரிகளுக்கு தெரியுமா?
* வழக்கறிஞர்களுக்கு எதிராக புகார்கள் அளித்தால்,அதை பதிவு செய்வதில்லையா; புகாரில் இருந்து அவர்களின் பெயர்களை நீக்கும்படி வற்புறுத்தப்படுகின்றனரா?
* வழக்கறிஞர்கள் என கூறி கொள்பவர்கள், உண்மையில் வழக்கறிஞர்கள் தானா; அவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய, போலீசார் பயப்படுவது ஏன்?
* தமிழகத்துக்கு வெளியில் இருந்து, சட்ட கல்லுாரிகளில் பட்டங்களை வாங்கி கொண்டு, கிரிமினல் நடவடிக்கைகளில் இருந்து பாதுகாப்பு தேடுவது பற்றி, போலீசுக்கும், பார் கவுன்சிலுக்கும் தெரியுமா?
* இந்தியாவில், 175 சட்ட கல்லுாரிகள் போதுமானது என கூறினாலும், எந்த அடிப்படையில், 800 எண்ணிக்கையில் இருந்த சட்ட கல்லுாரிகள், 1,200 ஆக உயர்த்த, பார் கவுன்சில் அனுமதி வழங்கியது; மேற்கொண்டு சட்ட கல்லுாரிகளுக்கு அனுமதி வழங்க, பார் கவுன்சிலுக்கு ஏன் தடை விதிக்க கூடாது?
* பத்து ஆண்டுகளிகுல், சட்ட கல்லுாரிகளில் எத்தனை மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்; எத்தனை பேர், பட்டம் பெற்றனர்; எத்தனை பேர், வழக்கறிஞர்களாக பதிவு செய்தனர்?
* போலீசாரும், வழக்கறிஞர்கள் என கூறி கொள்பவர்களும் சேர்ந்து, சொத்து பிரச்னைகளில் தலையிடுவதால், அதுகுறித்து வரும் புகார்களை விசாரிக்க, மாநில அரசு ஏன் ஒரு குழுவை நியமிக்கக் கூடாது?
* சட்டக் கல்லுாரிகளில், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், 'பயோ மெட்ரிக்' முறையை ஏன் கொண்டு வரக் கூடாது; வகுப்புகள் நடத்தாமல், உள்கட்டமைப்பு வசதியில்லாமல், எத்தனை கல்லுாரிகள், பட்டங்களை விற்கின்றன?
* சட்டக் கல்லுாரிகளில் சேருவதற்கு, பிளஸ் 2 படிப்பில் குறைந்தபட்சம், 75 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என, பார் கவுன்சில் ஏன் வரையறை செய்யக் கூடாது?
* வழக்கறிஞர்களின் தேவை பற்றி, ஒவ்வொரு மாநிலத்தில் இருந்து விபரங்களை பெற்று, அதன் பின், புதிய சட்ட கல்லுாரிகளுக்கு அனுமதி வழங்க, பார் கவுன்சில் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?

நீதிமன்றங்களில், 'பிராக்டீஸ்' செய்யும் வழக்கறிஞர்களை பாதுகாக்கவும், வழக்கறிஞர் தொழிலின் புனிதத்தை மீட்கவும், சட்ட கல்வியையும், வழக்கறிஞர் தொழிலையும் ஒழுங்குபடுத்தவும், இந்த நீதிமன்றம் முயற்சிகளை எடுக்கிறது என சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் நேற்றைக்கு முன்தினம் (12/10/2017) சொல்லியுள்ளது.

உச்சநீதிமன்றம் மூத்த வழக்கறிஞர்களுக்குகான தகுதிகளை அதே நாளில் வேறொரு வழக்கில் வரையறுத்துள்ளது. அதன் விவரமாவது.

• மூத்த வழக்கறிஞர் அந்தஸ்து அளிப்பது தொடர்பாக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான, ஒரு நிரந்தர குழுவே முடிவு செய்யும்
• இந்த குழுவில், உச்ச நீதிமன்றம் அல்லது மாநில உயர் நீதிமன்றங்களின் மூத்த நீதிபதி ஒருவர் இருப்பார். அட்டர்னி ஜெனரல் அல்லது அட்வகேட் ஜெனரல், பார் அசோசியேஷன் சார்பில், ஒரு பிரதிநிதியும், இந்த குழுவில் இடம் பெறுவர்
• மூத்த வழக்கறிஞர் அந்தஸ்து கோருவோர் தொடர்பான, அனைத்து ஆவணங்களையும், பரிந்துரைகளையும், இந்த குழு ஆய்வு செய்யும்
• முன்னதாக, இது தொடர்பான விபரங்கள், இணையதளத்தில் வெளியிடப்படும். ஆட்சேபனைகள் இருந்தால், அது பதிவு செய்யப்படும்
• வழக்கறிஞராக பணியாற்றிய காலம்; தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்குகள் எத்தனையில் இடம் பெற்றார்; தாக்கல் செய்த அல்லது பங்கேற்ற பொதுநல வழக்குகள் குறித்து ஆய்வு செய்யப்படும். இதுதவிர, நேர்முகத் தேர்வும் நடத்தப்படும்
• இதற்காக, நீதிமன்றங்களில் நிரந்தர செயலகம் அமைக்கப்படும்
• குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றம் முழு அமர்வு விவாதித்து, ஓட்டெடுப்பின் மூலம், மூத்த வழக்கறிஞர் அந்தஸ்தை அளிக்கும்.
இவ்வாறு அந்த அமர்வு கூறியுள்ளது.

#வழக்கறிஞர்_தொழில்
#Advocate_profession
#KSRadharkrishnanPostings
#KSRPostings
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
14/10/2017

No comments:

Post a Comment

நீங்கள் நீங்களாகவே இருக்கணும் …குறை ஒன்றும் இல்லை

ஏறக்குறைய மானவர் பருவத்தில் 17 வயதில் அரசியல  தொடர்பு ஏற்பட்டது. என்னுடைய நண்பர்கள் கிரிக்கெட், ஃபுட்பால்,வாலிபால் என விளையாடிக் கொண்டிருக்க...