Tuesday, May 22, 2018

மமதை பிடித்த ஆளவந்தார்களின் துப்பாக்கிச் சூடு தொடர்கதையாகிவிட்டது

#Bansterlite
*







.*
*அன்றைக்கு தூத்துக்குடி முத்துக் குளித்தது. இன்றைக்கு தூத்துக்குடியில் குண்டு பொழியுது.*
----------------------
ஸ்டெர்லைட் போராட்டத்தில் தூத்துக்குடி நகரமே கலவரக்குடியாக மாறி போராடும் மக்களிடம் அத்துமீறி போலீசார் நடந்துக் கொண்டுள்ளனர்.ஆறுக்கு மேலான அப்பாவிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. 

இந்த தென்பாண்டி கரிசல் மண் என்றைக்கும் போராட்டத்தின் விளைநிலமாகும். கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், பாரதி, சுப்பிரமணிய சிவா போன்றோர் உலவிய மண் தான் இந்த மண். 

இந்த வீரமண் உரிமைப் போராட்டத்தின் உயிரோட்டமான பூமி. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் விவசாயிகள் உரிமைப் போராட்டத்தின் போது திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் ஒரு விவசாயி சுட்டுக் கொல்லப்பட்டார். 

அதன்பின் தூத்துக்குடி, சங்கரன்கோவில் வட்டாரங்களில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் 1972ஆம் ஆண்டு கோவில்பட்டி நகரத்தில் 3 விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 
மதுரையில் எம்.ஜி.ஆர் உலகத் தமிழ் மாநாடு நடத்திய காலக்கட்டத்தில், 1980ஆம் ஆண்டு 31, டிசம்பர் அன்று என்னுடைய கிராமமான குருஞ்சாக்குளத்திலேயே விவசாயப் போராட்டத்தில் 8 விவசாயிகளை போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் தமிழக அரசு சாகடித்தது. 1993 வரை நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் கோவில்பட்டியில் இறுதியாக நடந்த இந்த கொடுமையின் போது நான் சென்னை உயர் நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூட்டில் இறந்த ஜோசப் இருதய ரெட்டியாரை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டுமென்று தாக்கல் செய்தேன். நீதிபதி கே.எஸ்.பக்தவத்சலம் ஏற்றுக்கொண்டு மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டார். இதுதான் கடைசியாக தூத்துக்குடி மாவட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு ஆகும். 1970 யிலிருந்து 1993 வரை ஏறத்தாழ தமிழகத்தில் 48 விவசாயிகள் தமிழக காவல் துறையால்  துப்பாக்கிச் சூட்டில் கொல்ல ப்பட்டுள்ளனர்,

அதன்பின், அந்த மாவட்டத்தில் இன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராக போராடிய மக்களின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டால் 6 பேர் கொல்லப்படுள்ளனர். 

உரிமைக்காக போராடும் மக்களை சுட்டு கொன்று குவிக்கும் அரசு மக்கள் அரசு இல்லையே. தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு, ஏனைய போராட்டங்களால் தமிழகத்தில் சாகடிக்கப்பட்டவர்கள் கணக்கு வேறு. இப்படி மனிதாபிமானம், மனிதநேயம் இல்லாதவர்கள் எந்த பதவியில் இருந்தாலும் நாற்றமெடுத்த கேடுகெட்ட பதவிதான். என்ன செய்வது ஆட்சியாளர்கள் மாற வேண்டும். இன்றைக்கு தூத்துக்குடியில் நடந்த இந்த துயர சம்பவம் தமிழகத்தில் தொடர்ந்து நடந்து கொண்டு தான் வருகிறது. இந்த வேதனைகளுக்கு என்றைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமோ என்று தெரியவில்லை. நல்லவர்கள் எவரும் பொறுப்புக்கு வர முடியாத நிலையில் இன்றைக்கு தேர்தல் களங்கள் உள்ளது. நல்லவர்களை தான் மக்கள் தேர்ந்தெடுப்பதில்லையே......
ஏனென்றால் தகுதியே தடை.

#தூத்துக்குடி
#ஸ்டெர்லைட்
#விவசாயிகள் போராட்டத்தில்
#Sterlite
#Tuticorin
#தகுதியே_தடை
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
22-05-2018

No comments:

Post a Comment