Wednesday, May 9, 2018

விவசாயிகள் போராட்டம்.

விவசாயிகள் போராட்டம் குறித்து படைப்பாளி வண்ணநிலவன்
-------------------------------------

“மன்னார்குடி ரங்கநாதன் என்பவர் தான் பல ஆண்டுகளாக காவிரிப் பிரச்சனைக்காக கோர்ட் மூலம் போராடி வருகிறார். எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் பிரபலமான விவசாயிகள் சங்கத் தலைவரான ஜி.நாராயணசாமி நாயுடுவிற்குப் பிறகு, புதிதாக கிளம்பியுள்ள பி.ஆர்.பாண்டியன் என்று ஏராளமானவர்கள், நான்தான் விவசாயிகளின் பிரதிநிதி என்று தோளில் பச்சை துண்டு போட்டுக் கொண்டு அன்றாடம் தமிழ்நாடில் வலம் வருகிறார்கள். ஆளோடு ஆளாய் இந்த அய்யாக்கண்ணுவும் விவசாயப் பிரபலங்களின் வரிசையில் நுழைந்துவிட்டார்.”      - படைப்பாளி வண்ணநிலவன் (துக்ளக் இதழில்)

இந்த வார துக்ளக் இதழில் வண்ணநிலவன் அவர்கள் குறிப்பிட்டுள்ள இந்த கருத்து யதார்த்தமானது தான். நாங்களெல்லாம் நாராயணசாமி நாயுடுவோடு விவசாயப் போராட்டங்களில் 1971லிருந்து போராடியபோது இந்த பி.ஆர்.பாண்டியனும், அய்யாக்கண்ணுவும் எங்கிருந்தார்கள் என்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் 48 உயிர்கள் 1993 வரை தமிழக அரசின் காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் காவு வாங்கியபோது இவர்கள் எங்கிருந்தார்கள்? என்னுடைய சொந்த கிராமத்திலேயே 1980ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில், மதுரையில் எம்.ஜி.ஆர் உலகத் தமிழ் மாநாடு நடத்திய காலக்கட்டத்தில், விவசாயப் போராட்டத்தில் 8 விவசாயிகளை போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் தமிழக அரசு சாகடித்தது. கிட்டத்தட்ட 1993 வரை நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் கோவில்பட்டியில் இறுதியாக நடந்த இந்த கொடுமையின் போது வைகோவும், நானும் தான் முன்னின்று போராடி சென்னை உயர் நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூட்டில் இறந்த ஜோசப் இருதய ரெட்டியாரை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டுமென்று தாக்கல் செய்தேன். நீதிபதி கே.எஸ்.பக்தவத்சலம் ஏற்றுக்கொண்டு மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்ட செய்திகளைப் போன்று பல விவசாயப் போராட்டச் செய்திகள் உள்ளன. நான் எழுதி வெளியிடவிருக்கும் தமிழக விவசாயிகள் சங்கப் போராட்ட வரலாற்று நூலில் இதையெல்லாம் பதிவு செய்து வருகிறேன். தங்களுடைய இருப்பைக் காட்டிக் கொள்ள இப்படி எல்லாம் பச்சைத் துண்டை போட்டுக் கொள்வதை எதிர்கால வரலாறு நிச்சயமாக ஏற்காது. செல்லமுத்து போன்றவர்கள் எல்லாம் நாராயணசாமி நாயுடுவுடன் இருந்தவர்கள். இன்றைக்கும் இருக்கிறார்கள். எதற்கும் அஞ்சாத நாராயணசாமி நாயுடுவே அவ்வளவு போர்குணத்தோடு போராடி விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை மீட்க முடியாமல் உடல் நலக் குறைவால் காலமானார். அவர் இன்னும் சில காலம் இருந்திருந்தால் விவசாயிகள் வாழ்வில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கும்.
விவசாயிகள் போராட்டத்தின் இலக்கணத்தை வகுத்தவர் சி.நாராயணசாமி நாயுடு அவர்கள். இன்றைக்கு ஏனோ ஒரு சிலர் ஒப்புக்கு விவசாயிகள் போரட்டம் நடத்தி ஊடகங்களில் செய்தி வந்தால் போதுமென்று நினைப்பது அபத்தமானது. விவசாயிகள் போராட்டத்தை நடத்த வீரியமான, தகுதியான பலர் அமைதியாக இருக்கின்றனர். அவர்களும் போராட்டக் களத்திற்கு வரவேண்டும்.

#தமிழக_விவசாயிகள் 
#சி_நாராயணசாமி_நாயுடு
#விவசாயிகள்_மீது_துப்பாக்கிச்_சூடு
#TN_Farmers
#c_narayanasamy_naidu
#Tn_police_firing_on_farmers
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
09-05-2018


No comments:

Post a Comment