Thursday, May 24, 2018

தூத்துக்குடியை கலவரக்குடியாக்கிய ஸ்டெர்லைட்

தூத்துக்குடியை கலவரக்குடியாக்கிய ஸ்டெர்லைட்
- வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்
தூத்துக்குடி ஸ்டெர்லைட்டால் கலவர பூமியாகிவிட்டது. ஈழப் படுகொலைகள், ஜாலியன் வாலாபாக், மனித நேயமற்ற பாசிச அணுகுமுறை வரலாற்றையெல்லாம் நினைவில் கொண்டு தூத்துக்குடியின் துயரக் கலவரங்களை அடையாளப்படுத்த வேண்டிய வேதனையான நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம். நச்சு கக்கும் ஸ்டெர்லைட் கடந்த 24 ஆண்டுகளுக்கு மேலாக தூத்துக்குடியில் அமைந்து அந்த வட்டார மக்களை பலவிதத்திலும் வாட்டி எடுக்கின்றது.
மகாராஷ்டிராவின் ரத்தினகிரியில் 1993ல் இயங்கிய ஸ்டெர்லைட்டின் காப்பர் ஆலையை உள்ளூர் விவசாயிகள் தாக்கி உடைத்தனர், 200 கோடி மதிப்புடைய கட்டுமானங்கள் சிதைக்கப்பட்டன. அல்போன்ஸோ மாம்பழங்கள் விளைவதற்கு ஸ்டெர்லைட் ஆலை நச்சு காற்று பாதமாக என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டு.

தாக்கிய விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஸ்டெர்லைட் அனுமதியை ரத்து செய்து அங்கிருந்து துரத்தினார் முதல்வர் சரத்பவார். அதன் பின்னர் குஜராத்தும், கோவாவும், கர்நாடகமும், கேரளமும் அனுமதி மறுத்த ஸ்டெர்லைட் 1994ல் தமிழகத்தில் தூத்துக்குடியில் புகுந்து பல உயிர்களை காவு வாங்கிவிட்டது. இதே போர் குணத்தோடு மராட்டிய மக்கள் ஜெய்தாப்பூரில் அமையவிருந்த அணு உலையையும் கடுமையாக எதிர்த்தனர். அங்கு அமைக்கப்பட்ட ஸ்டெர்லைட் நிர்வாகம் இந்த கடும் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் ஓட்டம் எடுத்தது. இறுதியாக தூத்துக்குடியில் புகுந்து சிக்கலை உருவாக்கியது. 

ஸ்டெர்லைட் போன்ற தாமிர உருக்கு ஆலைகள் மனித நடமாட்டம் அதிகமில்லாத தென் அமெரிக்க (லத்தீன் அமெரிக்கா) நாடுகளான சிலி போன்ற பகுதிகளில் தான் அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஒரு துறைமுக நகரம். இங்கு இது போன்ற நச்சுத்தன்மை வாய்ந்த தொழிற்சாலை அமைக்க வேண்டிய அவசியம் என்ன?

ஸ்டெர்லைட் நச்சு ஆலை அமைக்கப்பட்ட காலக்கட்டத்தில் தான் சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டியில் டாபர் - டூபான்ட் எனும் வாகனத்தின் டயர் தயாரிப்பு ஆலை அமையவிருந்தது. எங்களைப் போன்றவர்களின் தொடர் போராட்டங்களால் அந்த ஆலை அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது. ஆனால் எப்படியோ ஸ்டெர்லைட் ஆலை அமைந்துவிட்டது. கோவில்பட்டியில் கடந்த 24-2-1997 (காந்தி மைதானம்) என் தலைமையில் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு முதல் மறியல் போராட்ட விளக்க கூட்டத்தில் வைகோ அவர்கள் இது குறித்து உரையாற்றினார்.

இருப்பினும் ஸ்டெர்லைட் அன்றைய அரசால் அனுமதி அளிக்கப்பட்டு விதிகளை மீறி அமைக்கப்பட்டது. துவக்கத்தில் இந்த ஆலை அணில் அகர்வாலால் வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனத்தின் சார்பில் லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு தாமிர உற்பத்திக்காக நிறுவப்பட்டது. இந்த கழிவில் இருந்து சல்ப்யூரிக் அமிலமும், பாஸ்பாரிக் அமிலமும் வெளியாகும். தூத்துக்குடியில் அமைப்பதற்கான காரணமாக இந்த நிறுவனம் தூத்துக்குடி ஒரு துறைமுக நகரம், தாமிரபரணியில் தண்ணீர் கிடைக்கும் என்ற காரணங்களை தனது அனுமதி மனுவில் குறிப்பிட்டிருந்தது.

தூத்துக்குடி கடற்கரையில் இருந்து 25 கி.மீ எல்லைக்குள் எந்த ஆலையும் அமைக்க கூடாது என்ற விதியை தளர்த்தி அன்றைக்கு தமிழகத்தை ஆண்ட அதிமுக அரசு 15 கிமீக்குள் அமைத்துக் கொள்ள அனுமதியை வழங்கியது. ஆலையைச் சுற்றி 250 மீட்டர் சுற்றளவுக்கு பசுமை மிகுந்த அடர்த்தியான காடுகளையும் அமைக்கப்பட வேண்டும். அதையும் அந்த நிர்வாகம் நடைமுறைப்படுத்தவில்லை. சில நாட்களில் இந்த பசுமைக் காடுகள் அமைக்கும்  25 மீட்டராக தளர்த்திக் கொண்டது. 

ஸ்டெர்லைட் அமைந்தவுடன் போராட்டக்களம் தூத்துக்குடி மீனவர்கள் நடத்தினார்கள். வைகோ அவர்கள் இதை குறித்து தொடர் போராட்டங்கள், தொடர்ந்து 1996 மார்ச்சில் இருந்து இன்று வரை போராடி வருகின்றார். ஆண்டன் கோமஸ், ஜார்ஜ் பெர்னாண்டஸ், மீனவர் சமுதாயம் என்று பலரும் இதை எதிர்த்து குரல் கொடுத்தனர். உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற, பசுமைத் தீர்ப்பாயத்தின் வழக்குகள் என்று கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் மேலாகிவிட்டன. இதை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களின் விவசாய மக்களும் ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராடி வருகின்றனர். தாமிரத்தை உருக்கும் போது நச்சுக் கக்கும் புகையை மட்டுமல்ல விசவாயுகள் வெளிவந்து காற்றை மாசுப்படுத்தும். 

இதனால் புற்று நோய், நுரையீரல் பாதிப்பு, தோல் நோய்கள் என சகல நோய்களுக்கும் வாசலை அமைத்து விடும் இந்த ஸ்டெர்லைட் ஆலை. சுற்ற வட்ட கிராமங்களுடைய விவசாயமும் நாசமாகிவிடும். குமரெட்டியாபுரம், தெற்கு வீரபாண்டியபுரம், சில்வர்புரம் மற்றும் தூத்துக்குடி நகரவாசிகள் இதையெல்லாம் கண்டித்து 100 நாட்களாக போராடி காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி மக்கள் 20 க்கும் மேல் சாகடிக்கப்பட்டுள்ளனர். உண்மையான கணக்கை யாருக்கும் சொல்லவில்லை. மருத்துவமனையில் பலர் கவலைக்கிடமாக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 

அது மட்டுமல்லாமல் தூத்துக்குடி நகரத்திலும், அருகிலுள்ள கிராமங்களிலும் காவல் துறையினர் வீடு வீடாகச் அத்துமீறி உள்ளே நுழைந்து பொது மக்களைத் தாக்குகின்றனர். இப்படித் கொடூரமாக தாக்கிவிட்டு, சுட்டுக் கொல்லப்பட்டு இறந்த மக்களுக்கு 10 லட்ச ரூபாய் நஷ்டஈடு கொடுத்தால் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பம் ஆறுதலடைந்துவிடுமா? என்ன கேவலமான நிலை?
நியாயமாக உரிமைக்காக போராடும் பிரஜைகளின் மீது இப்படி வன்முறையை கட்டவிழ்த்து காவல் துறையினர் காட்டுமிராண்டித் தனமாக நடந்து கொள்வது பாசிசப் போக்கு தான். நானே நாடு என்று சொன்ன 14வது லூயி பிலிப்பை போல மக்களிடம் ஆட்சியாளர்கள் தண்டனை பெறுவார்கள். 
..................
படம்இ துதான் ஸ்டெர்லைட் தொடக்கம் ... அன்றைய முதல்வராக ஜெயலலிதா..



#BanSterlite

செய்தித்தொடர்பாளர், திமுக.,
நூலாசிரியர், 
இணையாசிரியர், கதை சொல்லி,
பொதிகை – பொருநை - கரிசல்
rkkurunji@gmail.com

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...