Wednesday, May 16, 2018

மனிதநேயம்

*மனிதநேயம்*
-------
மண்ணின் மீது மனிதனுக்காசை
மனிதன் மீது மண்ணுக்காசை
மண் தான் கடைசியில் ஜெயிக்கிறது 
————————————————
இந்த பூமி பந்தில் வாடகைதாரர் போல வாழ வந்துள்ளோம். வாழ்க்கை என்பது நிம்மதியாக ஆரோக்கியமாக இதயசுத்தியான மகிழ்ச்சியோடு, வாழத்தான். ஒவ்வொரு நிமிடமும் இயற்கை தந்த அருட்கொடை வாழ்க்கையைக் அமைதியோடு கொண்டாடத்தான். அதை விட்டுவிட்டு ஏதோ நிரந்தரமாக இந்த பூமியில் இருக்க போவது போல நம்முடைய நேர்மையான கடமைகளை ஆற்றாமல் பகைகளும், சூழ்ச்சிகளும், வன்மங்களும் புரிவதால் என்ன பயன்?  

வாழ்க்கை என்பது ஒரு படிப்பினை. இந்த புரிதலோடு வாழ்க்கையை இனிமையாக அனுபவிக்க வேண்டும்.. வாழ்க்கை என்பது வாழ்ந்து காட்ட வேண்டிய சில அப்பியாசங்கள் கூட. அந்த அப்பியாசங்கள் வாழ்க்கையின் அத்தியாயங்களாகத் தொடர்ந்து மனிதனை ஆளுமையாக ஆக்கி வராலற்றுப் பக்கங்களில் இடம்பெறச் செய்கின்றது. அந்த வகையில்,
வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். அந்த திறந்த புத்தகம் மற்றவர்களுக்கு வேதமாக அமைந்திட வேண்டும். 

பொது தளத்தில் இயங்குகின்றவர்கள் வரைமுறையற்ற முறையில் பேசுவதும், அடுத்தவர்களை புண்படுத்துவது என்பது மனித வாழ்க்கைக்கு உகந்ததல்ல. ஏதோ பிறக்கின்றோம், வாழ்கின்றோம், நம்மால் இயன்றவற்றை செய்கிறோம், மண்ணுக்குள் செல்கிறோம் என்பதை மனதிற்குள் கொள்ள வேண்டும். 

இன்றைக்கு சிலர் , ஏதோ குறுக்கு வழியில் பதவிகளை பெற்று மகிழ்ச்சியாக இருந்தாலும், அவர்கள் செய்த எதிர்வினைகள் எதிர்கால வரலாற்றில் போலபாட் (Polepot) போல இடம் பெறும் . நல்லவர்கள், வல்லவர்கள், ஆற்றலாளர்கள் பதவிச் சுகத்துக்கு வரவில்லை என்றாலும், அவர்கள் செய்த களப்பணிகள் வரலாற்றில் நிற்கும். நல்லவர்களும், வல்லவர்களும், ஆளுமையான திறமைசாலிகள் எல்லாம் சிலநேரங்களில் தோல்வியை சந்திப்பது மட்டுமல்ல, தொடர்ந்து அவர்களது பணிகளை பெற்றுக் கொண்டு வஞ்சிக்கவும் படுகிறார்கள் . ஆனால் அவர்களுக்கு வரலாற்றில் தோல்வி இல்லை.

ரஷ்ய வரலாற்றில் லெனின்தானே இன்றைக்கு போற்றப்படுகிறார். 
இன்றைக்கு கோபர்சேவையோ, புட்டினையோ யாரும் கணக்கில் எடுத்துக் கொள்வதே இல்லையே. உலகத்தை ஆண்ட பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் இன்றைக்கு பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ளது. பொதுவுடைமை என்று பேசிய சீனா தாராளமயமாக்கும் கொள்கைக்கு சிவப்பு கம்பளம் விரித்துவிட்டது. என்பதுகளில் வளர்ந்த ஜப்பானால் இன்று வளரமுடியவில்லை. இப்படி ஏற்ற இறக்கங்கள் தான் நாடுகளுக்கும் மட்டுமல்ல தனிநபருக்கும் கூட. 

உலகத்தில் சர்வாதிகாரிகளாக இருந்த ஹிட்லர், இடி அமீன், முசோலினி, கிம் ஜாங் போன்றோர்கள் எல்லாம் தங்களை நிரந்தரமானவர்கள் என்று நினைத்துக் கொண்டு ஆடிய ஆட்டங்களை இயற்கை பறித்துக் கொள்ளவில்லையா?
யாரும் நிரந்தர மனிதர்களாக இல்லையே. 

கவிஞர் கண்ணதாசனுடன் நெருங்கிப் பழகியவன் அடியேன். அவர் அடிக்கடி இந்த கருத்தைச் சொல்லுவார்.
"*தினமும் காலையில் வைணவர்கள் ஏன் திருமண் இடுகிறார்கள், சைவர்கள் ஏன் திருநீறு பூசுகிறார்கள். ஒரு எச்சரிக்கை தான். எப்படியும் ஒருநாள் இந்த மண்ணுக்கு தான் செல்ல போகிறாய். எனவே முடிந்தவரை நல்லனவற்றை செய்ய வேண்டும்.

இதே கருத்துகள் தான் வள்ளுவத்திலும், விவிலியத்திலும், குரானிலும் வெவ்வேறு விதங்களில் சொல்லப்பட்டுள்ளது. இந்த உலகம் பூரனமாக வாழத்தானேயொழிய;
சண்டை, சச்சரவு, தேவையற்ற வாதப் பிரதிவாதங்கள், வக்கிரமான போட்டிகள் என்பதை சிலரின் திட்டமிட்ட
எண்ணங்கள்-வினைகளால் கங்கனம் கட்டிக்கொண்டு செய்வதில் எந்த, ஆக்கப்பூர்வமான முடிவுகளும் நிச்சயமாகக் கிடைக்காது. அது அழிவையும், மனிதப் பண்புகளையும் சீரழித்துவிடும்.

இந்த உலகத்திற்கு  வந்துள்ளோம், வாழ வேண்டும், வெற்றிபெற வேண்டும், மனித நேயம் போற்ற வேண்டும், ஆரோக்கியமாக வாழ்ந்து கடமைகளைச் செய்து வாசிப்பும், புரிதலைக் கடமையாக கொண்டு வாழ்வோம். உலகம் அற்புதமான பூங்கா. மானிடம்  சஞ்சரிக்கும் சரணாலயம். இந்த பூமி ஒருபுறத்தில் சுற்றுச்சூழலால் பாதிக்கப்படுகிறது, மறுபுறம் மனித நேயமற்ற செயல்களால் அழிவை நோக்கி செல்கிறது. இந்த கொடுமையை தடுப்பது ஒவ்வொருவரின் பிறப்பின் கடமையாகும்.

‘புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலியில்லை… புத்திசாலியில்லை’

‘மண்ணின் மீது மனிதனுக்காசை
மனிதன் மீது மண்ணுக்காசை
மண் தான் கடைசியில் ஜெயிக்கிறது இதை மனம் தான் உணர மறுக்கிறது. ‘

#Human_Life
#Humanity
#மனித_நேயம்
#மனித_வாழ்வு
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
16-05-2018

No comments:

Post a Comment