Saturday, September 8, 2018

தற்சார்பு மரபு விவசாயம் – 2 - கலாச்சாரம், தேசிய இனம் குறித்து பேசுபவர்கள் நம் மரபுரீதியான விவசாயத்தை பற்றி ஏன் பேச மறுக்கிறார்கள்?

தற்சார்பு மரபு விவசாயம் – 2 ----------------- கலாச்சாரம், தேசிய இனம் குறித்து பேசுபவர்கள் நம் மரபுரீதியான விவசாயத்தை பற்றி ஏன் பேச மறுக்கிறார்கள்? -----------------------------------
ஜே.சி.குமரப்பா அமைதியான பொருளாதாரம், வன்முறை போக்கான பொருளாதாரம் என இரண்டு விடயங்களை சொல்கின்றார். தற்சார்போடு ஒரு சமூக அமைப்பு தேவையான அளவிற்கு அத்தியாவசியமான பண்டங்களை உற்பத்தி செய்து தன்னிறைவோடு அமைதியாக எந்த சிக்கலின்றி வாழ்வது அமைதி பொருளாதாரம் என்றும், விவசாய உற்பத்தியை அதிகமாக பெருக்கி கடன் வாங்கி மனித உழைப்பில்லாமல் சக்திமிகுந்த வேளாண் இயந்திரங்களை நம்பி விவசாயம் செய்யும்போது அதனால் சிக்கல்கள் தான் எழும். வேலைவாய்ப்புகளும் பலருக்கு பறிக்கப்படும். இதில் அதிகமான பொருளீட்ட வேண்டுமென்ற நப்பாசையில் இம்மாதிரியான விவசாயப் பணிகளை செய்தால் கேடுகளை தான் சந்திக்க வேண்டியிருக்கும் என்று குமரப்பா கூறுகின்றார்.


பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்தில் பிரிட்டனில் உள்ள மான்செஸ்டர் நகரத்தில் பருத்தி ஆடைகளை உற்பத்தி செய்யும் மூலப்பொருட்கள் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. ஐரோப்பாவில் நடந்த தொழில் புரட்சியால் ராட்சத இயந்திரங்கள் உருவெடுத்து ஐரோப்பா, இங்கிலாந்தில் பெருந்தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. அமெரிக்க சுதந்திரப் போர் நடைபெற்ற காலத்தில் இங்கிலாந்திற்கு அமெரிக்காவில் இருந்து பருத்தி ஏற்றுமதி நின்றுபோயின. இந்நிலையில் இந்தியாவில் உள்ள விவசாயிகளை ஊக்குவித்து பருத்தியை உற்பத்தி செய்து இங்கிலாந்திற்கு அனுப்ப பிரிட்டிஷார் கடும் முயற்சிகளை மேற்கொண்டனர். இதற்காகவே அரசாங்கத்தில் பருத்தி உற்பத்தியைக் குறித்தான தனித் துறையையே உருவாக்கினர். இதற்கான மண் வளம், உற்பத்தி வளத்தை எப்படியெல்லாம் சீராக்கலாம் என்று பிரிட்டிஷார் சம்மந்தப்பட்ட வட்டராங்களுக்குச் சென்று பணியாற்றினர். கோவில்பட்டியில் கூட ஆங்கிலேயர்கள் முகாமிட்டு பருத்தி உற்பத்திக்கான அனைத்து பணிகளையும் முடுக்கிவிட்டனர். கோவில்பட்டி, விளாத்திக்குளம், ஒட்டப்பிடாரம், சாத்தூர், சிவகாசி, இராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் பகுதிகளில் தனி கவனம் செலுத்தி பருத்திகளை வாங்கி தூத்துக்குடி துறைமுகமாக இங்கிலாந்துக்கு அனுப்புவதற்கென்று ஐந்தாறு ஆங்கிலேய அதிகாரிகள் அக்காலத்தில் நியமிக்கப்பட்டனர்.
தூத்துக்குடியில் இன்றைக்கும் அழைக்கப்படுகின்ற கிரேட் காட்டன் ரோடு மேற்சொன்ன வட்டாரத்தில் விளையும் பருத்தியை தூத்துக்குடி துறைமுகத்திற்கு எடுத்துச் செல்வதற்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட சாலையாகும்.
இதே போல, சென்னை சைதாப்பேட்டையில் சுமார் 350 ஏக்கர் நிலப்பரப்பில் 1863இல் பருத்தி உற்பத்திக்கு மட்டுமல்லாமல் விவசாயப் பன்ணை ஒன்று அமைக்கப்பட்டு அது சரியான விளைச்சல் இல்லாமல் மூடப்பட்டது.

இந்த காலக்கட்டத்தில் இங்கிலாந்து விவசாய நிபுணர்கள் வோல்கர், மாலீசன் போன்றவர்கள் எல்லாம் இந்தியாவிற்கு வரவழைக்கப்பட்டு மரபுரீதியான விவசாயத்தை ஒழித்து ஆங்கிலேயர் பாணியில் எப்படி தங்களது லாபத்திற்காக அணுகுவது என்பதை குறித்து பல்வேறு களப்பணிகளும் மேற்கொண்டனர்.
ஆங்கிலேயர்கள் இந்திய மக்கள் நாம் சொல்வதையெல்லாம் கேட்பார்கள். இவர்களிடம் நீர்வளம், மண்வளம் போன்ற புரிதல் கிடையாது என்ற கருத்து நிலவியதால் முழுமையாக மரபுரீதியான விவசாயத்தை மாற்றவேண்டுமென்று கங்கணம் கட்டி ஆங்கிலேய அரசு பணியாற்றியது. அதற்கு முதல் அச்சாரம் லார்டு கர்சன் 1905இல் இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தை (IARI – Indian Agricultural Research Institute) அமைத்தனர். இங்கு இங்கிலாந்து பாணியில் ஆய்வுகளும் பயிற்சிகளும் தொடங்கின. இந்தியாவின் மரபுரீதியான விவசாயப் பாணிகள் அங்கு ஒதுக்கப்பட்டது. அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனியில் அமைந்தது போல வேளாண் ஆய்வுகள் இங்கு செயல்படத் துவங்கின. ஒவ்வொரு மாகாணத்திலும் இதற்கான வேளாண்மைக் கல்லூரிகளும், ஆய்வுக் கூடங்களும், பயிற்சிக் கூடங்களும் அமைத்து சிறிது சிறிதாக மரபு ரீதியான தற்சார்பு விவசாயத்திலிருந்து மாற்றி நம் பாரம்பரிய நடைமுறைகளையே பாழ்படுத்தினர்.
இப்படி இங்கிலாந்திலிருந்து வரவழைக்கப்பட்ட நிபுணர்கள் இங்கு வந்து இதற்கான பயிற்சிகளையும் அளித்தனர். அப்படி வந்தவர் தான் ஆல்பர்ட் ஹோவார்ட். செயற்கை உரங்கள், பூச்சிக் கொல்லிகள் போன்ற முறைகள் இந்த சமயத்தில் தான் கடைபிடிக்கப்பட்டன. பிரிட்டிஷார் அமைத்த இந்த ஆராய்ச்சி மையங்களில் இயற்கை உரங்கள், மண்புழு, ஆவரை, கொழிஞ்சி பற்றியெல்லாம் புறந்தள்ளினர். கால்நடைகளுக்கு வழங்கப்படும், பருத்திக் கொட்டை, பிண்ணாக்கு எல்லாம் வழங்காமல் மாற்று உணவுகளை தரவேண்டுமென்று வலியுறுத்தினர். கிணற்று பாசனம், குளத்துப் பாசனத்தை பற்றியும் ஆங்கிலேயர்கள் இந்த ஆராய்சி மையங்களில் அக்கறை காட்டவில்லை. விஞ்ஞான ரீதியிலான புத்தகங்களைக் கொடுத்து வெறும் அலுவலகங்களில் அமர்ந்துக் கொண்டு இவர்களுடைய விவசாயப் பணிகள் நடந்த வண்ணம் இருந்தன. இப்படித்தான் விவசாயக் கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும், விவசாய ஆய்வு மையங்களும் தோன்றின. செயற்கையான பஞ்சங்களை உருவாக்கினர். அரிசி கிடைக்கவில்லை. சாதாரண மக்கள் உண்ணும் கலியன் சம்பா கூட கிடைக்காமல் ஆங்கில அரசு பார்த்துக் கொண்டது. இப்படி உணவு தானியத் தட்டுப்பாடு, வறட்சிகள் என திட்டமிட்டு ஆங்கிலேய அரசாங்கம் தங்களுடைய நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள குறியாக இருந்தது. மோட்டா ரக அரிசி தரும் நெல் வகைகளை கிடைக்காமலும் அன்றைய ஆங்கில சர்க்கார் பார்த்துக் கொண்டது. தாங்கள் விரும்பியபடியே இந்தியாவில் விவசாயம் இருக்க வேண்டுமென்ற ஒரே நோக்கோடு தங்களுடைய காரியங்களை சாதித்துக் கொண்ட விளைவு தான் நம்முடைய பாரம்பரிய மரபுரீதியான விவசாயத்திலிருந்து விரட்டப்பட்ட துவக்கமாகும்.

நாம் பூமத்திய ரேகைக்கு அருகே இருப்பதால் பல்வேறு புவியியல் கண்ணோட்டத்தோடு நம்முடைய மரபுரீதியான விவசாயங்கள் அமைந்தன. அந்த வகையில் மேல் நோக்கிய நாள், கீழ்நோக்கிய நாளில் செய்ய வேண்டிய விவசாயப் பணிகளை குறித்து மரபுரீதியாக கடைபிடித்தோம். அமைப்பு ரீதியாக இது நம் மண்ணுக்கேற்ற விவசாயமாக இருந்ததை ஆங்கிலேயர் பாழ்படுத்திவிட்டு சென்றதன் நீட்சியாக அதை மேலும் பாழ்படுத்த பசுமைப் புரட்சியை கொண்டு வந்தோம்.
நம்மிடம் இருக்கும் இயற்கை பொருட்கள், கால்நடைக் கருவிகள், தாவர இலைகள் ஆகியவற்றை பயன்படுத்தி மிக குறைந்த செலவில் பயிர் செய்யும் முறையை கைவிட்டதால் தான் கடன்வாங்கி இன்றைக்கு கடனாளியாகி, இந்தியா முழுவதும் 5 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இதற்கெல்லாம் யார் காரணம் என்று சற்று திரும்பிப் பார்த்தால் நம்முடைய மரபு ரீதியான விவசாயத்தை கைவிட்டதே காரணமாக தெரிகிறது.
ஜே.சி.குமரப்பா 1956இல் இதையெல்லாம் மனதில் உள்ளடக்கி பெரும் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் நிலத்தடி நீர் என்பது பூமியை ஈரமாக வைக்க இயற்கையின் அருட்கொடையாகும். வனங்கள் எப்படி பூமியை காயாமல் வைக்கிறதோ அதே போல நிலத்தடி நீரும் பூமியைப் பாதுகாக்கிறது. ஆனால் நிலத்தடி நீரை கட்டுப்பாடில்லாமல் வெளியேற்ற பிரிட்டிஷ் அரசாங்கம் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து பெருஞ்சிக்கலுக்கு நம்மை தள்ளிவிட்டது. எதிர்காலத்தில் நிலத்தடி நீர் இல்லாமல் போனால் நாடு பாலைவனமாக தான் பார்க்க முடியும். குடிநீருக்கே பிரச்சனையாகிவிடும் என்றார்.
மரபுரீதியாக ஒருபக்கம் விவசாயத்தை கைவிட்டோம். பாசன நிலத்தடி நீரையும் தொலைத்தோம். இந்த நிலைமை 80 ஆண்டுகளுக்கு முன்னாலேயே பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலேயே துவங்கிவிட்டது. மரபுரீதியான விவசாயத்தையும் ஆங்கிலேயர்கள் கெடுத்தார்கள். நீர்மேலாண்மையையும் நாசப்படுத்திவிட்டனர் என்று ஜே.சி. குமரப்பா, கே.ஏ.முன்ஷி ஆகியோர் தொலைநோக்கு பார்வையில் தங்களுடைய ஆதங்கங்களை வெளிப்படுத்தினர். இப்படி நம்முடைய பாரம்பரிய நடைமுறைகளை பறிகொடுத்தோம். கலாச்சாரம், தேசியம் பேசுபவர்கள் மரபுரீதியான விவசாயத்தை ஏன் பேச மறுக்கிறார்கள் என்பது தான் வேதனையான விடயம்.

-தொடரும்...


#தற்சார்பு_விவசாயம் #மரபுரீதியான_விவசாயம் #பசுமைப்_புரட்சி #உத்தமர்_காந்தி #கே_எம்_முன்ஷி #பூமிதான_இயக்கம் #Mahatma_Gandhi #குமரப்பா #Green_Revolution #KSRPostings #J_C_Kumarappa #KSRadhakrishnanpostings 08-09-2018 கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...