Saturday, September 15, 2018

அம்மா என்றழைக்காத உயிரில்லையே, அம்மாவை வணங்காது உயர்வில்லையே நேரில் நின்று பேசும் தெய்வம், பெற்ற தாயன்றி வேறொன்று ஏது….

அம்மா என்றழைக்காத உயிரில்லையே, அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம், பெற்ற தாயன்றி வேறொன்று ஏது….
------------------------------------
பட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் சுற்றிக் கொண்டிருந்த போது அவருடைய தாயார் மரணமடைந்தார். "அவருடைய ஈமச்சடங்கை எங்கிருந்தாலும் நானே நேரில் வந்து கவனிப்பேன்" என்று வாக்களித்திருந்தார். அதன்படி, சரியான நேரத்தில் சுடுகாட்டிற்கு வந்து அவருடைய தாயின் தகனத்திற்காக அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு பச்சை வாழை மட்டைகளையும் இலைகளையும் கொண்டு சிதையடுக்கி, "ஐயிரண்டு திங்களாயங்கமெலா நொந்து பெற்று" என்று பாடத் தொடங்கி, தம் தாயாரை தீயுண்ணச் செய்து தம் தாய்க்கு செய்ய வேண்டிய பணியை செய்தார்.

அப்போது அவர் பாடிய பாடல்கள் அனைவராலும் மிகவும் ஈர்க்கப்பட்டது.

பட்டினத்தார் தாயாருக்குத் தகனக்கிரியை செய்யும்போது அவர் பாடிய பாடல்கள்.

1. ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் - செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி ? 

2.முந்தித்தவம் கிடந்து முந்நூறு நாள் அளவும்
அந்திபகலாச் சிவனை ஆதரித்துத் - தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன் ? 

3. வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும், தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து - முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டுவேன் ? 

4. நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே - அந்தி பகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றும் தாய் தனக்கோ
மெய்யிலே தீமூட்டுவேன் ? 

5. அரிசியோ நான் இடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் - உருசியுள்ள
தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ
மானே என அழைத்த வாய்க்கு ? 

6. அள்ளி இடுவது அரிசியோ ? தாய் தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ ? கூசாமல் மெள்ள
முகம்மேல் முகம்வைத்து முத்தாடி “என்றன்
மகனே" என அழைத்த வாய்க்கு ? 

7. முன்னை இட்ட தீ முப்புரத்திலே;
பின்னை இட்ட தீ தென் இலங்கையில்;
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்க! மூள்கவே!

8. வேகுதே தீயதனில் வெந்து பொடி சாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ! - மாகக்
குருவிபறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை.

9. வெந்தாளோ சோணகிரி வித்தகா! நின்பதத்தில்
வந்தாளோ! என்னை மறந்தாளோ - சந்ததமும்
உன்னையே நோக்கி உகந்துவரம் கிடந்துஎன்
தன்னையே ஈன்றெடுத்த தாய் ? 

10. வீற்றிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்!
நேற்றிருந்தாள்; இன்று வெந்து நீறானாள்; - பால்தெளிக்க
எல்லீரும் வாருங்கள்! ஏதென்று இரங்காமல் 
எல்லாம் சிவமயமே யாம்!

துறவியே ஆகிப் போனாலும் ஒவ்வொரு ஆண்மகனும் தம் தாய், தந்தையருக்கு செய்யும் கடமைகளை மறவாது நிறைவேற்றி முன்னோர்கள், ஞானிகள், சித்தர்கள் ஆகியோரின் ஆசிகளை பெற்றுய்வோம்.

(இன்று (15/09/2018) என் தாயார் மங்கத்தாயாரம்மாள் தன்னுடைய 97வது வயதில் மறைந்து ஓராண்டு நிறைவாகிறது. இன்று அவருடைய நினைவு நாள்.)

#பட்டினத்தார்
#என்_தாயார்
#மங்கத்தாயாரம்மாள்
#My_Mother
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
15-09-2018

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...