Thursday, September 6, 2018

தொடர்ச்சி மலைத்தொடர்

கடந்த 02/09/2018 அன்று மேற்கு 



 ் பற்றி என்னுடைய பதிவை படித்துவிட்டு சிலர் மேலும் விரிவான விவரங்கள் வேண்டுமென்று கேட்டிருந்தனர்.
இந்தியாவில் ஆறு மாநிலங்களில் 1600 கி.மீ தூரம் நீண்டு 1,74,700 சதுர கி.மீ பரப்பில் விரிந்தும் இந்த மலைத்தொடர் உள்ளது. அரபிக் கடலில் எழும் குளிர் காற்று இந்த மலையின் மேல் வீசி தென்மேற்கு பருவமழை தென்னிந்தியாவில் பொழிகிறது. யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக 2012இல் ஐநா அறிவித்தது. மத்திய அரசு மாதவ் காட்கில் தலைமையில் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் சுற்றுச் சூழலை பாதுகாக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கலாமென்ற ஆய்வுக் குழுவை அமைத்தது. மாதவக் காட்கில் குழு தன்னுடைய அறிக்கையில் கடுமையான இருந்தால் தான் பாரம்பரியம் மிக்க மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும் என்று பரிந்துரைத்தது.
இந்த மலைத்தொடரில் பெரிய அணைக்கட்டுகள், கனிமச் சுரங்கங்கள், குவாரிகள் அமைக்கக் கூடாது என்றும், இதனை மூன்று மண்டலங்களாக பிரித்து பாதுகாக்க வேண்டுமென்றும் கூறியது. மின்சார உற்பத்தித் திட்டங்களும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் அமைக்கக் கூடாது என்று அந்த பகுதிகளை கண்டறிந்து கூறியது. இவ்வாறாக 73 விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் அந்தக் குழு தன்னுடைய அறிக்கையில் தெளிவுபடுத்தியது. இந்தக் குழுவின் அறிக்கையை கேரளம், கர்நாடகம் கடுமையாக எதிர்த்தன. தமிழக அரசு இதை குறித்து எந்த கருத்தையும் பதிவு செய்யவில்லை. மத்திய அரசும் மாதவ காட்கில் அறிக்கையை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளாமல் புறந்தள்ளி தள்ளுபடி செய்தது.
அதன்பின் கஸ்தூரி ரங்கன் தலைமையில் மேற்கு தொடர்ச்சி மலையைக் குறித்து ஆய்வு நடத்த ஒரு குழுவை அமைத்தது. கஸ்தூரி ரங்கன் குழு 2013இல் தனது அறிக்கையை மத்திய அரசிடம் வழங்கியது. இந்த அறிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. இந்த அறிக்கையின்படி 37% மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் பகுதியை சுற்றுச் சூழல் பாதுகாப்பு மண்டலத்துக்குள் கொண்டு வந்தது. அணைகள் கட்டுவது, குவாரிகள் அமைப்பது, பெரிய கட்டிடங்கள் அமைப்பதை எல்லாம் தடைசெய்யப்பட்டன. கேரளாவில் இதை எதிர்த்து பெரும் போராட்டங்களே நடந்தது. இந்நிலையில் கேரள, கர்நாடக, கோவா தங்களுடைய எதிர்ப்பு அறிக்கைகளை மத்திய அரசிடம் வழங்கியபோது தமிழக அரசு மட்டும் வழக்கப்படி 5 ஆண்டுகளாக மௌனம் காத்தது. 
மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழகத்தை பொறுத்தவரையில் 6,914 சதுரக் கிலோ மீட்டர் பரப்பு குமரி முனையிலிருந்து ஆனைமலை தொட்டபெட்டா வரை தமிழக எல்லையில் உள்ளது. இதனுடைய உரிமைகளை எப்படி பாதுகாப்பது என்று எந்தவித மேல் நடவடிக்கைகள் இல்லாமல் இருப்பது தான் வேதனை தருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் 50 பெரிய அணைகள், 126 ஆறுகள், குற்றாலம், பானதீர்த்தம், பாபநாசம் உள்ளிட்ட 29 பெரிய அருவிகள், கொடைக்கானல், ஊட்டி, மூனாறு போன்ற மலைவாசல் தளங்கள், பழனி மலை அதுமட்டுமல்லாமல் புலி, சிங்கம், யானைகள் பாதுகாப்பு சரணாலயங்கள் உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலை சிறிது சிறிதாக சுற்றுச் சூழல் சீர்கேடுகளால் அழிந்து வருகிறது. மத்திய அரசு இந்த இரண்டு குழுவின் பரிந்துரைகளின் மீது நடவடிக்கை எடுக்காமல் பாராமுகமாக உள்ளது.
தமிழக அரசும் மாநில அரசின் உரிமைகளை நிலைநாட்டாமல் மெத்தனப் போக்கில் இருக்கிறது. பசுமையாக இருந்த காடுகளை வெட்டிவிட்டோம், மலைகளை வெட்டி குவாரிகளாக்கிவிட்டோம். அங்குள்ள அமைதிப் பள்ளத்தாக்கை அமைதியில்லாமல் ஆக்கிவிட்டோம்.
இயற்கையின் அருட்கொடையான மேற்கு தொடர்ச்சி மலையில் வன வளங்களும், இயற்கையின் சீதனங்களையும் பாதுகாக்க வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு. மனிதர்கள் பிறப்பார்கள், இறப்பார்கள். ஒரு யாத்ரீகனாக மட்டுமே வருகிறோம். ஆனால் இயற்கையின் வளங்களாக இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்கள் என்றைக்கும் நிலைத்து நிற்பதை மானிடர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

#மேற்கு_தொடர்ச்சி_மலை
#Western_Ghats
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
06-09-2018

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...