Sunday, September 23, 2018

*தற்சார்பு மரபு விவசாயம் – 3*



*மானிடமே, உன்னை அழிக்கும் நஞ்சு வேளாண் உற்பத்திப் பொருட்களை தவிர்*
-------------------------------------
உலகம் முழுவதும் பன்னாட்டளவில் கையாளப்படும் சாகுபடி முறைகளும் ஒரே முறையில் இருக்க வேண்டுமென்ற நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது நல்லதல்ல. வேளாண் முறையில் மண் சார்ந்தவையாகவும், பகுதி சார்ந்தவையாகவும், மரபு சார்ந்தவையாகவும் இருக்க வேண்டும். எந்தவொரு பயிரும், விளைவிக்கும் முறையும், அதை பராமரிக்கும் விதமும் ஒரே மாதிரியாக பார்ப்பதும் தவறு. நம்முடைய நெல் விளைச்சலுக்கும், வாழைச் சாகுபடிக்கும் வேறு நாட்டில் உள்ளது போன்று நாமும் செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம். இது தவறான அணுகுமுறை. ஒவ்வொரு நாட்டுக்கும் தட்ப்வெட்ப முறைகளுக்கேற்ப பயிர்களும், சாகுபடிகளும் அமைய வேண்டும். 
மரபுரீதியான வேளாண்மை அல்லது சுயசார்பு இயற்கை வேளாண்மை என்ற சொன்னாலே அதை ஒதுக்குவதும், ஏதோ ஒரு மூட நம்பிக்கை போன்று பார்ப்பதில் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். தற்சார்பு மரபுரீதியான விவசாயத்தை பாதுகாக்க நம்மாழ்வார் போன்ற ஆளுமைகள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் ஏராளம். இதைதான் அன்றைக்கு ஜே.சி.குமரப்பா தற்சார்பு கிராம ரீதியான பொருளதார முறைகள் அமைய வேண்டுமென்றே வலியுறுத்தி வந்தார். 
விஞ்ஞான வளர்ச்சியின் காரணமான விவசாயத்திலும் அதில் புகுத்தி  விளைநிலத்திலின் பயிர்களையும் நாசப்படுத்திக் கொண்டோம். விவசாயம் என்பது இயற்கையின் அருட்கொடை. இயற்கை தந்த நிலம், மண், வருடந்தோறும் பெய்துவரும் மழையைப் பொருத்தே வேளாண்மை அமைகின்றது. விவசாயம் என்பது அரசு பரிபாலனண போல் அல்ல. இயற்கை, காலநேரத்தினைக் கொண்டு விவசாயம் அமைகின்றது. 

பசுமைப் புரட்சிக்குப் பின் இயற்கையை வென்றெடுத்து மரபற்ற முறையில் புதிய விதைகளை உருவாக்கி நம்முடைய பழமையான விவசாய முறைகளை நாசப்படுத்திக் கொண்டோம். இன்றைய விவசாய நடைமுறைக்கு பயிர்களை வளரவும், பாதுகாக்கவும், செயற்கையான ரசாயண உரங்களை நாடுகிறோம். 

என்.பி.கே உரங்களையும் பெரிதும் நம்புகிறோம். படித்து பட்டம் பெற்ற விவசாயப் பட்டதாரிகள் கூட மரபுரீயிலான விவசாயத்தினை புறந்தள்ளி, செயற்கை விவசாய முறைகளை தான் பரிந்துரைக்கின்றன. இராசயன உரங்கள் பூச்சிக் கொல்லி மருந்துகளை தான் சிபாரிசு செய்கின்றனர். இவர்களாலேயே மரபுரீதியிலான விவசாம் மறுதலிக்கப்படகிறது. இந்தியாவைப் பொறுத்தவகையில், ஆங்கிலேயர்கள் இந்தியா வந்தபின் விவசாயத்தில் சிறிது சிறிதாக வேதியியல் இடுபொருள்களை அறிமுகப்படுத்தி பயன்படுத்தத் துவங்கினர். உலகளவில் 19வது நூற்றாண்டின் தொடக்கத்திலேயே நவீன விவசாயம் என்பது அசுர வேகத்தில் தொடங்கியது. இது வளர்ச்சியின் திட்டங்களே என்று சொன்னாலும் நஞ்சைக் கக்கும் நடவடிக்கைகள் தான்.

உலகளவில் ஒவ்வொரு சூழ்நிலைகள் இருந்தாலும். அதற்கும் அளவுண்டு. அதற்காக விவசாயத்தில் அளவுக்கதிமான இரசாயண இடுபொருட்களை சேர்த்தால் அது அழிவிற்கு தான் வழிவகுக்கும். விஞ்ஞானி ஹம்ரேடேவிட் மண்ணின் வளம் என்? மண்ணின் தன்மை என்ன? என்று 1813இல் கண்டு வெளிப்படுத்தினார். அதன்பின் விஞ்ஞானி ஜஸ்டஸ் வான் லீபிக் தாவரங்களின் பகுதிகளில் இயற்கையான வேதிப்பொருட்கள் இருக்கின்றன. தேவையானவற்றை இயற்கையாகவே மண்ணில் இருந்து எடுத்துக் கொள்கிறது என்று கண்டறிந்தார். இந்த மண்ணின் வேதியியல் ஊட்டச்சத்துகள் இயற்கையாக இருக்க வேண்டும். செடிகளுக்கு தேவையான நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் இலை தழைகளில் இருந்து பெறலாம். இலை தழைகளின் வேர்களில் உள்ள முண்டுகளில் நைட்ரஜன் உள்ளது. பாஸ்பரஸ், பொட்டாசியம் இலைகளிலும், தண்டுகளிலும் கிடைக்கும். இது எப்படியென்றால் மனிதர்கள் எப்படி கீரையை உடம்புக்கு நல்லது என்று உண்கிறோமா அதுபோல இலைத் தழைகளிலிருந்து வளரும் வேளாண் பயிர்கள் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் இன்றைக்கு இதையெல்லாம் நாம் தள்ளிவிட்டு செயற்கையான என்.பி.கே உரங்களை உருவாக்குகின்றோம். நைட்ரஜன் வாயு நிலையில் இருந்தால் தான் தாவரங்கள் அதை நேரடியாக ஏற்றுக் கொள்ளும். ஹேபர், பாஸ் என்ற ஜெர்மன் நாட்டு விஞ்ஞானிகள் முதல் உலகப்போர் நடக்கும்போது நைட்ரஜன் வாயுவை வைத்து அமோனியாவின் உற்பத்தி முறையை கண்டுபிடித்தனர். இந்த கண்டுபிடிப்பு ஐரோப்பா அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சென்றடைந்தது. முதல் உலகப்போருக்குப் பின்னரே 1930களில் காற்றிலிருந்தே அமேனியா தயாரிக்கப்பட்டது இது எப்படி என்றால் மின்சக்தி ஆற்றலைக் செலுத்தி அமோனியா அதிகளவில் உற்பத்தியையும் கண்டறிந்தனர். இரண்டாம் உலகப்போரில் இந்த அமோனியா உற்பத்தி பன்மடங்கு உயர்ந்தது. செயற்கையான அமோனியா விவசாயத்தில் புகுத்தப்பட்டன. இந்த நிலையில் என்.பி.கே. என்ற நைர்டசுள் பொட்டாசியத்தை ஈடா அமோனியாவை கையாளவும் தொடங்கினர். வணிக ரீதியான அமேனியாவை உலகளவில் அறிவியல் ரீதியாக விவசாய கல்வி நிலையங்களில் அமோனியாவைப் பற்றி போலியான விழிப்புணர்வைக் காட்டி அதன் விளைவாகத் தான் யூரியா உரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 

பல்லாயிரம் ஆண்டுகளாக நம்முடைய சாகுபடி, பயிர் பாதுகாப்பு, கால்நடைகளை பேணுதல் போன்றவை இந்த மாதிரி செயற்கை உரங்களால், இரசாயனத் தீவணங்களால் திசைமாறியது. பருத்திக் கொட்டை, பிண்ணாக்கு எல்லாம் அரிய பொருட்களாக்கிவிட்டன. இந்த இடத்தில் ஒன்றை நினைவுப்படுத்த வேண்டும். சீமான் வீட்டுப் பிள்ளையான வ.வு.சி., கால்நடைகளின் மீது அக்கறை கொள்வார். தன்னுடைய இறுதிக் காலங்களில் வறுமையால் மிகவும் சிரமப்பட்டபோது, கால்நடைகளுக்கு தேவையான பருத்திக்கொட்டை, பிண்ணாக்கு ஆகியவற்றை விற்று பிழைப்பு நடத்துகின்றேன். அது ஒரு வகையில் கால்நடைகளுக்கு உணவளிக்கிறேன் என்ற புண்ணியமாவது எனக்கு கிடைக்கும் என்று சொன்னார். 

கடந்த 19ஆம் நூற்றாண்டு காலக்கட்டத்திலேயே கந்தகம், பைரேத்ரம் (pyrethrum) போன்ற வேதிப் பொருட்களை பயன்படுத்தி ஐரோப்பா, அமெரிக்காவில் பயிர் செய்யத் தொடங்கினர். பின்னர் அது உலகளல் பின்பற்றப்பட்டன. இந்த பயன்பாட்டில் இரசாயண உரங்களால் பாதிப்பு குறைந்தது தான். இதிலிருந்து பகாசுரமாக பெரியது தான் விவசாயப் வேதிப் பொருட்களுக்கான உற்பத்தி.

அடுத்து, இந்தியாவின் நிலைமைக்கு வருவோம். நாடு விடுதலைக்கு முன்பு இரசாயண உரங்கள் சிறியளவிலே அறிமுகமாகியது. ஆனால் இன்றைக்கு வேதியியல் உரங்களும் விதைகளும், பூச்சி மருந்துகளே இல்லாமல் விவசாயமே இல்லையென்று இந்தியாவினை அவலமான சூழ்நிலைக்கு தள்ளிவிட்டது. பூச்சி மருந்துகளும், இரசாயன உரங்களும் கட்டுபடியான விலையிலும் கிடைப்பதில்லை. அதை வாங்கி விவசாயிகளும் பயன்படுத்தினாலும் பெரியளவில் விளைபொருள் உற்பத்தியும் கிடைப்பதில்லை. இதுதான் பசுமைப் புரட்சி நமக்கு செய்த உபகாரம். இயற்கை விவசாயத்தை மறந்ததால் மண்வளம் பாதிக்கப்பட்டு அதை சரிசெய்ய முடியாத கேடுகள். இதை நாமே தேடிக் கொண்டோம். பாரம்பரிய விதைகளை நாம் பயன்படுத்தினால் மண் வளமும் பாதிக்காமல் இருப்பது மட்டுமல்ல, மண்ணுக்கும் அது பாதுகாப்பு. உதாரணத்திற்கு சம்பா மோசனம், 160 நாள் பயிரான நெல் நன்றாக வளர்ந்து வேர்பிடித்து மளமளவென்று காட்சி தரும். இப்படிப்பட்ட பயிர்களையும் விதைகளையும் தொலைத்தோம். இயற்கை உரங்களையும், அதன் நடைமுறைகளையும் ஒழித்தோம். ஜீவாமிர்தக் கரைசல், பஞ்சகவ்யம் ஆகிய பூச்சிக் கட்டுப்பாட்டிற்கும், பயிருக்கு உரமாக இருந்ததையும் புறந்தள்ளினோம். செயற்கையான இரசாயன முறைகளை நடைமுறைப்படுத்தியதால் இன்றைய விவசாயம் தோல்வி என்று சொல்ல முடியாது, நஞ்சை கக்கும் விளைப்பொருட்களை சாகுபடி செய்து அதை நாமே உண்டு நம் உடலை கெடுத்துக் கொண்டோம்.

இரசாயன உரங்கள், மரபு சாரா கலப்பு விதைகள், நீர்நிலைகளை அழித்தல் போன்ற நம்முடைய வினைகளால் நம்மை நாமே அழித்துக் கொண்டோம். இந்த நிலையிலிருந்து எப்படி மீள்வோம் என்பது பெருங்கேள்வியாக எழுந்துள்ளது. 

பாரம்பரிய தற்சார்பு விவசாயம் அறிவியலுக்கு விரோதமானது என்று சிலர் சொல்வது வேடிக்கை. இயற்கை என்பது அறிவியலின் அடிப்படை. மரபு சார்ந்த, தற்சார்பு விவசாயம் இயற்கையின் முறையிடையே செயல்படும்போது அது எப்படி அறிவியலுக்கு விரோதமாக முடியும். அறிவியல் என்றால் மானிடத்திற்கு நன்மை பயக்கக்கூடிய திட்டங்களை வழங்குது தான். ஆனால் விவசாயத்தில் நச்சு கக்கும் இடுபொருள்களை பயன்படுத்துவது தான் விவசாயத்திற்கும், மானிடத்திற்கும் விரோதமானது ஆகும். 

உள்ளபடியே நம்முடைய மரபுரீதியாக நிலத்தை கீழ்கண்டவாறு பயிர்செய்வதற்கு முன் பக்குவப்படுத்த வேண்டும்.

1. நிலத்தின் தன்மையை மாற்றி ஆட்டுகிடைகள் இயற்கை உரங்கள், மண்ணில் இடுவது,
2. விதைத்து தானியங்கள் முளைப்பதற்காக வசதியளிப்பது,
3. பயிர்கள் சரியாக வளர்வதற்கு ஏற்றவாறு நிலத்தை மேம்படுத்துவது,
4. களைகளை நிலத்திருந்து எடுப்பது
5. பாசன நீர் மற்றும் மழையை உறிஞ்சிக் கொள்ளும் நிலையில் நிலத்தை பக்குவப்படுத்துவது
6. திரும்பவும் எரு, உரம் முதலியவற்றை நிலத்தில் இடுவது
7. நிலத்தில் காற்றோட்டம் ஏற்படுத்துவது.

இந்த நிலைகளில் எல்லாம் மேற்கொண்டு மரபு ரீதியான விவசாய செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தினால் இரசாயன நச்சுக் கக்கும் விவசாய உற்பத்திப் பொருட்களிலிருந்து மானிடம் தப்பிக்கலாம். நம்மை நாமே காத்துக் கொள்ள தற்சார்பு விவசாயம் தான் தேவை என்ற உறுதியை ஒவ்வொருவரும் எடுக்க வேண்டும். இது காலத்தின் அவசியமும், கட்டாயமும் ஆகும்.

தடைதனை உடைத்திடுவோம் 
ஒரு விடைதனை அடைந்திடுவோம் 
மடைதனை உடைத்திடுவோம் 
ஒரு ஆற்றுவெள்ளம் போல் புறப்படுவோம் 
இனி ஒரு விதி செய்வோம் 

-தொடரும்...

#தற்சார்பு_விவசாயம்
#மரபுரீதியான_விவசாயம்
#பசுமைப்_புரட்சி
#கே_எம்_முன்ஷி
#உத்தமர்_காந்தி
#பூமிதான_இயக்கம்
#குமரப்பா
#Green_Revolution
#Mahatma_Gandhi
#J_C_Kumarappa
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
23-09-2018

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...