Saturday, September 15, 2018

சேது கால்வாய் திட்டம்

*மெரினா கடற்கரை மணலில் அன்றைய பிரதமர் வாஜ்பாய் 

 ்தை அறிவித்து சரியாக இன்றோடு 20 ஆண்டுகள் கடந்துவிட்டன...* எனது பார்வை ...........
-------------------------------------
கடந்த 15/09/1998இல் வைகோ, நடத்திய அண்ணா பிறந்தநாளும், மதிமுக எழுச்சிப் பேரணியும் சென்னை கடற்கரையில் கலங்கரை விளக்கின் பின்புறம் பிரம்மாண்டமான மேடை 
அமைக்கப்பட்டு சிறப்பாக நடந்தது. 

அன்றைய நிகழ்ச்சிகள் முழுவதையும் நானும், அன்றைய தென்சென்னை மாவட்டச் செயலாளரான தியாகராஜனும் கவனித்துக் கொண்டோம். இந்நிகழ்வில் அன்றைய பிரதமர் வாஜ்பாய், அன்றைய உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி, அன்றைய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ், காஷ்மீர் முதல்வராக இருந்த பாரூக் அப்துல்லா, பஞ்சாப்பின் முதல்வராக இருந்த பிரகாஷ்சிங் பாதல், இன்றைய பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் போன்ற அகில இந்தியத் தலைவர்களெல்லாம் பங்கு கொண்டார்கள். இந்த தலைவர்கள் அனைவரும் Z+ பாதுகாப்பு பிரிவைச் சார்ந்தவர்கள். பத்து நாளில் இந்த எழுச்சி நாள் பணிகளையும் ஏற்பாடுகளையும் மின்னல் வேகத்தில் முடித்தோம். 

பிரதமர் கலந்து கொள்ளும் மேடை மட்டுமல்ல,  Z+ பாதுகாப்பு பிரிவை சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர்கள் உள்ள மேடைகளில் 15 பேருக்கு மேல் அமர முடியாது. பிரதமர் அலுவலகத்தைச் சார்ந்த மத்திய அரசின் பாதுகாப்பு படையினர் 4 நாட்களுக்கு முன்பாகவே சென்னைக்கு வந்துவிட்டனர். மேடை இப்படி இருக்க வேண்டும், கடற்கரையின் கிழக்குப் பக்கம் முழுமையாக மூட வேண்டும், கடற்கரை தெரியக்கூடாது என்று மிகக் கடுமையாக நிபந்தனைகள் விதித்தனர் என்றனர். மேடையில் 15 பேருக்கு மேல் அமர அனுமதி கிடையாது என்றெல்லாம் கூறிக்கொண்டே இருந்தனர். நான் அதெல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் உங்களின் வேலையைப் பாருங்கள் என்று ஆட்சேபித்துவிட்டு என்னுடைய பாணியிலேயே அமைத்துவிட்டோம்.அனைத்து விதிகளையும் களைந்து மதிமுக மாவட்டச் செயலாளர்கள் உட்பட கட்சி முன்னணியினர் 65 பேரை அமரவைத்தேன். மத்திய பாதுகாப்புத் துறையினர் கடுமையான ஆட்சேபனை தெரிவித்தனர். இருந்தாலும் திறந்த மேடையாக கடல் காட்சிகள் இரவில் ரம்மியமாக தெரியும்படி கீழ்புறத்தில் அமைத்தோம்.இதில் என்ன வேடிக்கை என்றால் ஜார்ஜ் பெர்னான்டஸ், அத்வானி இருவரும் அதிகாரிகள் எந்த இடத்தில் மேடை மூடியிருக்க வேண்டுமென்று சொன்னார்களோ அந்த இடத்திலேயே அமர்ந்து கடற்கரையை ரசித்துக் கொண்டே சூடாக கேசரியை சாப்பிட்டனர். 

இப்போது சொல்ல வேண்டிய செய்திக்கு வருகிறேன்.

அப்போது மதிமுகவும், அதிமுகவும் பாஜக கூட்டணியில் இருந்தது. ஜெயலலிதா திமுக ஆட்சியைக் கலைக்க வேண்டுமென்ற கோரிக்கையை மத்திய அரசிடம் வைத்தார். வாஜ்பாய் அரசு அப்போது அதை ஏற்கவில்லை. எனவே கூட்டணியில் இருந்தாலும் தன்னுடைய அதிருப்தியை காட்டும் வண்ணம் இருந்தார். பிரதமர் வாஜ்பாய் மதிமுக பேரணியில் கலந்து கொள்கிறார் என்று முடிவான போது, ஜெயலலிதா திண்டுக்கல்லில் அண்ணா பிறந்தநாள் விழா என்று அறிவித்துவிட்டு அங்கு சென்றுவிட்டார். பிரதமர் வாஜ்பாயை சந்திப்பதைக்கூட தவிர்த்துவிட்டார். 

இந்நிலையில் 15/09/1998 அன்று காலையில் வாஜ்பாய் மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வரவிருந்தார். காலை 10.30 மணிக்கு வாஜ்பாயை வரவேற்க வைகோவுடன் நானும், சில நிர்வாகிகளுடன் சென்றோம். அன்றைக்கு தமிழகத்தின் முதல்வராக கலைஞர் இருந்தார். கலைஞரும், அவருடைய அமைச்சரவையைச் சேர்ந்த அமைச்சர்களும், முரசொலி மாறனும், டி.ஆர்.பாலு ஆகியோருடன் வந்திருந்தார். வைகோ 1993இல் திமுகவிலிருந்து வெளியேறி மதிமுக உருவாகிய பின் கலைஞரை சந்திக்க வேண்டிய சூழல் அப்போது ஏற்பட்டது. வைகோவுடன் நானும் மதிமுகவினருடன் ஒரு பக்கம் விமான நிலையத்தில் இருந்தோம்.கலைஞர் மற்றும் அமைச்சர்கள் மற்றொருபுறம் இருந்தனர். 
ஒரு காவல்துறை அதிகாரி என்னிடம் வந்து உங்களை முதல்வர் அழைக்கிறார் என்று சொன்னபோது எனக்கு ஒன்றும் புரியவில்லை.பக்கத்திலிருந்த மு.கண்ணப்பன் போய்ட்டு வாங்க என்றார். நானும் சென்றேன்.
கலைஞர் என்னிடம், என்னய்யா எப்படி இருக்க? என்றார்.
நானும் நல்லாருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க என்றேன். 
அவர்,நலம் தான் என்றார் . பிரதமர் உங்க கூட்டத்திற்கு தானே வருகிறார். வைகோவை வரச்சொல்லி அழைத்தார். நான் சென்று கூறினேன். சிறிது நேரம் கழித்து திரும்பவும் அழைத்தார். 

வைகோ அவர்கள் கலைஞரிடம் சென்று அண்ணே நல்லாருக்கீங்களா என்று பேசினார். அனைவரும் இணைந்து வாஜ்பாயை வரவேற்றோம். அன்றைய செய்தித்தாளில் அந்த படங்கள் எல்லாம் பெரிதாக வந்தன. 

விமான நிலையத்திற்கு வந்திறங்கிய அன்றைய பிரதமர் வாஜ்பாய் வரவேற்பு நிகழ்ச்சிகள் முடிவடைந்தவுடன், ராஜ் பவன் செல்ல தயாரான போது என்னிடமிருந்த சேது சமுத்திர திட்டம் சம்பந்தமாக வைகோ எழுதியிருந்த அவர் கடிதத்தை வாங்கி பிரதமரிடம் “சேது சமுத்திர கேனால்....” என்று சொல்லி கொடுக்கும்போதே தன் கைகளைக் காட்டி......  “கடிதத்தை வைத்துக் கொள்ளுங்கள்.. சேது சமுத்திர திட்டம் பற்றிய மனுதானே...  இன்றைக்கு மாலை அதைப் பற்றி அறிவிப்பேன்” என வை.கோவிடம் கூறினார்.Vaiko ji"I will announce Sethu Canal, as per the demand of Vaiko, a long pending project more than 100 years." என்று பதிலளித்தார். அதன்பின்னர், வாஜ்பாய் கிளம்பி ராஜ்பவன் சென்றுவிட்டார். சிரித்துக் கொண்டே சொன்னார்.

மிகப்பெரிய பேரணி. பிரசிடென்ஸி ஹோட்டலின் அருகே இருந்து தலைவர்கள் பார்த்தனர். 

திட்டமிட்டவாறு அன்று மாலை  எழுச்சியான மாநாடு  நடைபெற்றது . கூட்ட மேடைக்குப் பின்புறம் தமிழக உணவு வகைகள் சுடச்சுட மணக்கும் வகையில் தயாராகி இருந்தது. சமையல் எரிவாயு சிலிண்டர்கள் எல்லாம் அங்கே தனியாக ஒரு அறை மேடையின் பின் அமைத்து சூடாக இட்லி, வடை, ரவா தோசை, கேசரி, பொங்கல் என்று சட்னி, சாம்பாரோடு சூடாக அனைத்து தலைவர்களுக்கு பரிமாறப்பட்டது. அனைவரும் சாப்பிட்டுவிட்டு பிரதமரும் தன்னுடைய பாதுகாப்பு விதிகளை விடுத்து சுவைத்து உண்டார். பின்னர் வைகோவை அழைத்துப் பாராட்டினார். இதுபோன்ற உபசரிப்பை நாங்கள் கண்டதில்லை என்று அனைவரும் பாராட்டினர். மேடையிலேயே தலைவர்களுக்கு பில்டர் காபியும், தேநீரும் சுடச்சுட அளித்தோம். அதுபோன்ற விருந்தோம்பலை அவர்கள் கண்டதில்லை என்று மனமகிழ்ந்தனர். மேடைக்குப் பின்புறம் வந்த பிரதமர் வாஜ்பாய் இதைப்பார்த்தவுடன் வை.கோவிடம் “சாப்பிடலாமா” என்று உரிமையுடன் கேட்டு ருசித்துச் சாப்பிட்ட பின்,  சமையல்காரரைப் பார்த்து “நன்றாக இருந்தது” என்று சந்தோசத்தோடு  பாராட்டவும் செய்தார்.  இதை தன்னோடு நிகழ்ச்சிக்கு வந்திருந்த எல்.கே.அத்வானி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், பாருக் அப்துல்லா, பிரகாஷ் சிங்  பாதல், வெங்கைய்யா நாயுடு போன்றவர்களிடம் “நான் தமிழக உணவுகளை நேசிக்கிறேன். நீங்களும் சாப்பிடுங்கள்”என்றுசொன்னத
யெல்லாம் மறக்க முடியாது.

மாநாட்டில் மேடையில் பிரதமர் வாஜ்பாயிடம், வைகோ சேது சமுத்திர திட்டத்தை  ஒரு சின்ன தாளில் எழுதிக் கொடுக்கட்டுமா என்று கேட்டார். வாஜ்பாய் உடனே அதை மறுத்து, "I know Mr. Vaiko certainly I am going to announce. We will implement Sethu Sammudra Canal Project for the interest of Tamil Nadu" என்று சொல்லியவாறே மாநாட்டில் வாஜ்பாய் அறிவித்து ;அதற்கான பணிகளும் நடந்தன. ஆனால் திட்டம் தான் நிறைவேறவில்லை. சேது சமுத்திர திட்டத்தின் நோக்கத்தினையும் புரிதலையும் தெளிவாக கடற்கரையோர மக்களுக்கு சொல்லியிருக்க வேண்டும். தென்னிந்திய கடலோர பாதுகாப்பினை பலப்படுத்தவும், இலங்கை இராணுவம் உள்ளே வந்து நமது மீனவர்களை சுடுவதை தடுத்திருக்கவும் முடியும். அத்தனை வாய்ப்புகளை கொண்ட இந்த திட்டத்தை ஏனோ தடுத்துவிட்டனர். இன்றுடன் 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. 

இந்த சேது கால்வாய் திட்டத்திற்காக அண்ணா முதலமைச்சரானவுடன் சேது சமுத்திரத் திட்டம், தூத்துக்குடி துறைமுக விரிவாக்கம், சேலம் இரும்பாலை, தமிழ்நாடு முழுவதும் எழுச்சிநாள் என்று பொதுக் கூட்டங்களை நடத்தி இது குறித்தான தீர்மானத்தை நிறைவேற்றியது.

அதற்கு அடுத்த தினம் 16-9-1998 காலை பிரதமரை வழியனுப்ப மீண்டும் விமான நிலையம் சென்றபோது, வைகோ அவர்கள் வாஜ்பாயிடம், நேற்றிரவு நன்றாக தூங்கினீர்களா? என்றார். அவர் உடனே 12 மணிவரை மாநாட்டை நடத்தினால் எப்படி தூக்கம் வரும் என்று சிரித்தார். பின்னர் எந்த இடையூறுமின்றி நன்றாக தூங்கினேன் என்றார். 

பின்னர் கலைஞரிடம் வாஜ்பாய் MDMK என்றால் என்ன என்று கேட்டார். அதற்கு நெஞ்சைத் தொட்டு கலைஞர் MDMK is our DMK என்றார். எப்படியோ அண்ணன் தம்பி சேர்ந்தால் சரி, சென்று வருகிறேன் என்று கூறிவிட்டு 16/09/1998இல்  காலை 9 மணிக்கு டெல்லிக்கு திரும்பினார். 

அதன்பின்னர் ஆட்சிக்கு வந்த காங்கிரசும் அறிவித்தது. ஆனால் செயல்பாட்டுக்கு வரவில்லையே. 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. இது ஒன்றும் சாதாரண காலக்கட்டம் அல்ல. பார்த்ததையும், பணியாற்றியதை குறித்து பலர் புரிதலுக்காக இந்த பதிவு. 

செயல்படுவம்தில்லை, கொள்கை புரிதலும் இல்லாதவர்கள் பதவிகளில் அமருகிறார்கள். என்ன செய்ய? நமது சந்தை ஜனநாயகம் (Marketing Democracy)விருட்சமாக வளர்கிறது.........

*இனி சேது சமுத்திரத் திட்டம் நடைமுறைக்கு வருமா............?*

#சேது_சமுத்திர_திட்டம்
#Sethu_Project
#Vajpayee_Vaiko_Kalaignar
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
15-09-2018

No comments:

Post a Comment

*What lies behind you and what lies before you are tiny matters compared to what lies within you*.

*What lies behind you and what lies before you are tiny matters compared to what lies within you*. Believe in yourself. You know personal de...