*இன்றைய (6-9-2018)புதிய தலைமுறை நேர்ப்பட பேசு நிகழ்ச்சியின் விவாதத்தில் பங்கேற்றபோது
ஏழவரின்விடுதலை குறித்து நான் வைத்த கருத்துகள்,*
ஏழவரின்விடுதலை குறித்து நான் வைத்த கருத்துகள்,*
1. உச்சநீதிமன்றம் தமிழக அரசே இந்த எழுவரின் விடுதலையைக் குறித்து தீர்மானிக்கலாம் என்று தன்னுடைய தீர்ப்பில் சொன்னபின், உடனே தமிழக அமைச்சரவைக் கூடி விவாதித்து அவர்களை விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பவேண்டும். ஆளுநர் அதை பரிசீலித்து தான் ஆகவேண்டும். Advice of Cabinet is the Paramount என்ற நிலையில் ஆளுநர் அதை ஏற்றுக் கொள்ள தான் வேண்டும். அதில் ஆளுநர் ஏதாவது தேவையில்லாமல் தாமதமோ அல்லது வேறு ஏதாவது தடங்கல் செய்தால் நேரிடையாக தமிழக அரசே இரண்டாம் முறை அமைச்சரவையை கூட்டி இந்த ஏழு பேரை நேரடியாக விடுதலை செய்யலாம். பிரிட்டிஷ் நாடாளுமன்ற முறையும் (West Minister System), அமைச்சரவை (Cabinet System) என்ற முறையில் இதை நடைமுறைப்படுத்தலாம்.
2. ஆளுநர் என்பவர் மத்திய அரசின் பிரதிநிதி தான் (Agent). மத்திய அரசின் பிரச்சனை என்றால் மட்டுமே அவர் நேரடியாக தலையிட முடியும். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் மாநில அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளதால் கவர்னருக்கோ, மத்திய அரசுக்கோ இதில் எந்த பங்களிப்பும் கிடையாது. எனவே மாநில அரசின் கைகளில் தான் பந்து உள்ளது. திமுக ஆட்சிக் காலத்தில் கலைஞர் முதல்வராக இருந்தபோது கலியபெருமாள் மற்றும் தியாகு அவருடைய சகாக்கள் இருவரை என நான்கு பேரை தூக்கு தண்டனையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட முன்னுதாரணங்கள் உள்ளன.
3. இந்த 7 பேரும் 27 ஆண்டுகளுக்கு மேலாக தங்களுடைய இளமையை பலியிட்டு, கொட்டடியில் சிறைவாசத்தில் சொல்லமுடியாத தண்டனையையும் பெற்றுவிட்டனர்.
4.இன்றைக்கு தான் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட வேண்டுமென்று கடந்த 10, 15 ஆண்டுகளாக உலகளவில் எட்டுத் திக்கும் கேட்கிறது. 1983இல் வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசான குருசாமி நாயக்கர் ஒரு கொலை வழக்கில் தூக்கு தண்டனை திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் அளித்து, சென்னை உயர்நீதிமன்றமும், இந்திய உச்ச நீதிமன்றமும் அதை உறுதி செய்தது. அதற்கு மேல் குடியரசுத் தலைவரிடம் வழங்கப்பட்ட கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. இந்த நிலையில் தூக்கு தண்டனை இரண்டு, மூன்று நாட்களில் நிறைவேற்றப்பட வேண்டிய நேரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் என்னை காப்பாற்றுங்கள். நான் நீண்ட நாட்கள் சிறையிலிருந்துவிட்டேன் என்று அனுப்பிய தந்தியை வழக்கு மனுவாக பாவித்து நீதிபதிகள் வி. இராமசாமி, டேவிட் அன்னுசாமி அடங்கிய சென்னை உயர்நீதிமன்ற அமர்வு தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி அதன்பின் இரண்டு ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கை நான்தான் நடத்தினேன்.
அந்த வழக்கின் தீர்ப்பில் கொலை வழக்காக இருந்தாலும் தனிமைக் கொட்டடியில் குருசாமி இருந்ததும், அவருடைய இளமைக் காலம் பலியானதும் கணக்கில் கொண்டு அவருடைய தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து இரண்டாண்டுகளில் அவரை விடுதலை செய்ய வேண்டுமென்று தீர்ப்பு வழங்கினர். மரண தண்டனையை குறைத்து ஆயுள் தண்டனையாக ஆக்கியதும், சிறையில் வாழ்க்கை முடியும் வரை சிறையில் இருக்க வேண்டிய அர்த்தம் கிடையாது என்ற சூழ்நிலையில் பொருள்படாது. எனவே இந்த 7 பேரின் தூக்கு தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக்கிவிட்டனர். மேலும் 27 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்துவிட்டனர். அவர்ளை உடனடியாக விடுதலை செய்யவேண்டிய நியாயங்கள் முழுமையாக உள்ளன. முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகிய நால்வரின் மரண தண்டனையை துவக்கத்தில் உறுதி செய்து, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், இரவிச்சந்திரன் ஆகியோரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு, 19 பேர் விடுதலையும் செய்யப்பட்டனர். திமுக ஆட்சிக் காலத்தில் 2000ஆம் ஆண்டில் நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
அதன்பின், கருணைமனுக்கள் 11 ஆண்டுகள் தாமதமாக இருந்த காரணத்தால் உச்ச நீதிமன்றம் 2014இல் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையையும் ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்தது. தொடர்ந்து கருணை மனுக்கள் அனுப்பி குடியரசுத் தலைவர் மாளிகையும், ஏனைய அரசு நிர்வாகங்கள் மறுத்தும் இன்றைக்கு (06/09/2018) இந்த ஏழு பேருடைய விடுதலையை தமிழக அரசு முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று சொன்னபின்னர் குடியரசுத் தலைவருக்கோ, மத்திய அரசுக்கோ எந்த அதிகாரமும் கிடையாது. தமிழக ஆளுநரும் உச்ச நீதிமன்றத்தின் நிலையை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை தான்.
இறுதியாக, பல முறை தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகின்றேன். இராஜீவ் படுகொலையை யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். நியாயப்படுத்தவும் முடியாது. இது படுபயங்கரம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கிடையாது. ஆனால், இராஜீவ் படுகொலையில் திமுகவோ, சம்மந்தமில்லாதவர்களும் தண்டிக்கப்பட்டார்கள் என்பது தான் நம்முடைய கவலை. இந்த குற்றத்தில் சம்மந்தப்படாதவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். துவக்கத்திலிருந்தே இந்த வழக்கில் சரியான புலனாய்வு இல்லை. தெளிவான பார்வை இல்லை. தவறான வழக்குப் புனைவு. உண்மையான குற்றவாளிகள் மீது கவனம் செலுத்தவில்லை என்பதை பல விரிவான பதிவுகளை ஆதாரப்பூர்வமாக பல பத்திரிக்கைகளிலும், இன்றுவரை சமூக ஊடகங்களிலும் செய்து வருகிறேன். இந்த நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்கள் இதில் எங்களுக்கு சம்மந்தமில்லை. புலனாய்வு சரியாக செய்யப்படவில்லை என்று பேபி சுப்பிரமணியம் மூலமாக பிரபாகரன் சொல்லியதும் உண்டு. உண்மையான குற்றவாளிகள் தப்பித்துவிடக் கூடாது என்ற விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிர்வாகிகளுக்கு செய்திகளை நான் அனுப்பியதும் உண்டு. ஏனோ அவர்கள் இதில் மெத்தனம் காட்டினர் தெரியவில்லை.
உண்மையாக விசாரனை நடத்தப்பட்டிருந்தால் சர்வதேச அளவில் இராஜீவ் படுகொலையில் பல உண்மைகள் வெளிவந்திருக்கும். ஜெயின் கமிசன், வர்மா கமிசன், பன்முக நோக்கு விசாரணை என்று மூன்றும் நீண்ட காலம் விசாரணை நடத்தியும் எந்தப் பயனும் இல்லாமல் சரியான போக்கில் செய்யப்படவில்லை. இந்த மூன்று குழுக்களுக்கும் அரசு கஜானாவின் பணம் தான் வீணாக செலவானது. பழி பாவங்கள் எல்லாம் திமுகவின் மீதும் அப்பாவி மக்களின் மீது குற்றஞ்சாட்டப்பட்டது தான் கொடுமையிலும் கொடுமை. இந்தியாவின் தலைவராக விளங்கிய இராஜீவ் காந்தியை படுகொலை செய்த குற்றத்தில் சம்மந்தப்பட்ட உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை சர்வதேச அளவில் கண்டுகொள்ளவில்லை என்பது தான் நம்முடைய கவலை.
இந்த வழக்கில் புலனாய்வு செய்த அதிகாரிகளும், கே.டி.தாமஸ் போன்ற நீதிபதிகளும் இராஜீவ் படுகொலை குறித்த விசாரணை போக்குகள் சரியாகப் அணுகப்படாமல் தவறாக சென்றது என்பதை பலர் ஒப்புக் கொண்டதையும் நாம் கவனிக்க வேண்டும். அப்போது இந்த வழக்கு உண்மையான திசையில் சென்றதா என்பது கேள்விக்குறிதானே.
இராஜீவ் படுகொலை நடந்தது என்பது வேதனையான விடயம் தான். சில அப்பாவிகளும் தண்டிக்கப்பட்டனர். அவர்களும் 27 ஆண்டுகள் யாரும் அனுபவிக்கமுடியாத வகையில் இரணப்பட்டுவிட்டனர். இப்போதாவது விடுதலை என்ற காற்றை சுவாசிக்க வேண்டுமென்று எல்லா மணமாச்சரியங்களையும் கடந்து மனித நேயத்தோடு சிந்திக்க வேண்டும் என்று கூறினேன். கோட்சே காந்திக் கொலையில் சம்மந்தப்பட்டவர் என்று தெரிந்தும் விடுதலையாகவில்லையா என்று என்னுடைய வாதங்களை விவாதத்தின்போது வைத்தேன்.
#இராஜீவ்_படுகொலை
#Rajiv_Assassination
#Release_7_innocent_people
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
06-09-2018
No comments:
Post a Comment