Thursday, September 13, 2018

கோவையில் அமைதியாக நடக்கும் அற்புதமான கம்பன் கழகம், இளங்கோவடிகள் இலக்கிய மன்றத்தின் தமிழ் பணிகள்

கோவையில் அமைதியாக நடக்கும் அற்புதமான கம்பன் கழகம், இளங்கோவடிகள் இலக்கிய மன்றத்தின் தமிழ் பணிகள்
-----------------------------------

கோவை கம்பன் கழகமும், இளங்கோவடிகள் இலக்கிய மன்றமும் வருடாவருடம் சிறப்பாக இலக்கிய விழாக்களை எடுத்து கம்பன் மலர், சிலம்பு மலர் என்று அற்புதமான ஆய்வுக் கட்டுரைகளோடு வெளியிடப்படுகிறது.
 கோவை கம்பன் கழகம் பழமை வாய்ந்தது. தமிழறிஞர் அ.ச.ஞானசம்மந்தன் தொகுத்த கம்பராமாயணம் மூலப்பாடல்களும், உரைகளும் எட்டுத் தொகுதிகளாக கம்பன் அறநிலை 20 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டது. கோவை லட்சுமி மில் ஆலை அதிபரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜி.கே. சுந்தரம் அவர்களின் சீரிய முயற்சியால் வெளியானது. பாப்பிநாயக்கன்பாளையம் மணி மேல் நிலைப் பள்ளியில் இதன் அலுவலகம் இயங்கி வருகிறது. கம்பன் அறநிலையின் கீழ் கம்பன் கழகம் கோவை மக்களுக்கு இலக்கியக் கூட்டங்களை நடத்தி வருகிறது.

இந்த அமைப்பில் திரு. எஸ். பதி, திரு. சி. சௌந்தர்ராஜ், வி.செல்வபதி, சுனிதா சாந்தாராம், ஆர்.ஆர். பாலசுந்தரம், க. முருகேசன், முரளி, நஞ்சுண்டன் ஆகியோர் இந்த அமைப்பை கட்டிக் காத்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான கம்பன் 44வது ஆண்டின் சிறப்பு மலரை திரு. ஆ.நஞ்சுண்டன் பதிப்பித்துள்ளார். மறைந்த தமிழறிஞர்கள் பேராசிரியர் மு. இராகவையங்கார், போராசிரியர் மு. அருணாசலம், வெள்ளக்கால் வெ.ப. சுப்ரமண்ய முதலியார், கோவைக்கிழார் சி.எம். இராமச்சந்திர செட்டியார், ஏ.வி.சுப்பிரமணிய ஐயர் போன்றோர்களின் இராமாயணம் குறித்தான 1944, 1955, 1975, 1980களில் எழுதிய கட்டுரைகள் வெளியாகியுள்ளன. முழுவதும் படித்தேன். நல்ல ஆய்வு கட்டுரைகள். இராம காதையைப் பற்றி அற்புதமான ஆய்வுக் கட்டுரைகள்.

கோவையில் இயங்கும் இளங்கோவடிகள் இலக்கிய மையமும் பாப்பிநாயக்கன்பாளையத்தில் இருந்து செயல்படுகிறது. மேலே இதே நிர்வாகிகள் இதை நடத்தி வருகின்றனர். 29 ஆம் ஆண்டு சிலப்பதிகார விழா மலரும் சிலம்பைப் பற்றி அற்புதமான ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. திரு. மா.பொ.சி, டாக்டர். மு.வரதராசனார், திரு. பெ.சிதம்பரனாதன் போன்ற தமிழறிஞர்களின் கட்டுரைகள் சிலம்பைப் பற்றி இடம்பெற்றுள்ளது. இந்த மலரும் சிறப்பாக ஆய்வுக்கு பயன்படும் மலராகத் திகழ்கின்றது. இளங்கோவடிகள் இலக்கிய மன்றம் சார்பில் டாக்டர். தமிழ் தாத்தா. உ.வே.சா பெயரில் விருதுகள் வழங்கப்படுகின்றன. திரு. சிலம்பொலி செல்லப்பன், தினமணி முன்னாள் ஆசிரியர் ஐராவதி மகாதேவன், பாரதி ஆய்வாளர். சீனி விஸ்வநாதன், ஏ.ஜெகந்நாதன், பேராசிரியர் ஸ்ரீசந்திரன், வாகீசகலாநிதி ச. கணபதிராமன், முனைவர். பெ.ஞானசுந்தரம், முனைவர் ச.வே.சுப்ரமணியன், பன்முக அறிஞர் முனைவர் திருமதி பிரேமா நந்தகுமார், மகாவித்வான் மயிலம் வே.சிவசுப்ரமணியன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
கோவையில் அமைதியாக, ஆர்ப்பாட்டமில்லாமல் அற்புதமான தமிழ் பணியை ஆற்றுகின்ற கம்பன் கழகத்தையும், இளங்கோவடிகள் இலக்கிய மன்றத்தையும் தமிழ் கூறும் நல்லுலகம் பாராட்ட வேண்டும். அதனுடைய இலக்கிய வெளியீடுகளை பெற்று படிக்கவும் வேண்டும்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்


13-09-2018

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...