Monday, September 17, 2018

வைகோ பொதுவாழ்வில் பொன்விழா


வைகோ பொதுவாழ்வில் பொன்விழா
------------------------------------------------- 
நேற்று (15/09/2018) வைகோவின் பொதுவாழ்வில் பொன்விழா மலருக்கு மதிமுக சார்பில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈரோடு அ. கணேசமூர்த்தி வைகோவைப் பற்றி ஒரு கட்டுரை வேண்டுமென்று என்னிடம் கேட்டிருந்தார். வரவேற்புக் குழுத் தலைவராக இருந்து இன்றைக்கு மதிமுக ஈரோடு மாநாட்டில் அந்த மலர் வெளியிடப்பட்டுள்ளது. அந்த மலருக்கு நான் அனுப்பிய கட்டுரை வருமாறு.

தமிழ் மண் அனைத்தையும் தன் திருவடியாலேயே அளந்த வைகோவே!!!
- வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்
செய்தித் தொடர்பாளர், திமுக.
இணையாசிரியர், கதைசொல்லி.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் அண்ணாச்சி வைகோ அவர்களுடைய பொது வாழ்வுப் பொன்விழா நடப்பது மகிழ்ச்சி தருகின்றது. அவர் கடந்து வந்த சுவடுகள் கவனிக்கப்பட வேண்டியவை. 1970களில் இருந்து ஊராட்சி மன்றத் தலைவர், குருவிகுளம் ஒன்றியப் பெருந்தலைவர், திருநெல்வேலி மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பொறுப்புகளும், திமுகவின் கலிங்கப்பட்டி கிளைக் கழகத்தின் அடிப்படைப் பொறுப்பிலிருந்து பொதுக்குழு, திருநெல்வேலி மாவட்ட தி.மு.கழக செயற்குழு, மாநில திமுக மாணவரணி இணைச் செயலாளர், தேர்தல் பணிச் செயலாளர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் என திமுகவில் 1993 வரை பரிணாமித்தவர். பின், மறுமலர்ச்சி திமுக பொதுச் செயலாளர், மக்களவை உறுப்பினர் என்ற நிலையில் தமிழக அரசியல் களத்தில் தடம் பதித்தார். இதெல்லாம் திரும்பிப் பார்க்கும் போது சற்று பெருமையாகவும், சிலருக்கு நம்மாலும் முடியுமா? என்று மலைப்பாகவும் இருக்கும்.

ஆரம்பக் கட்டங்களில் அவருடன் இருந்தவன் என்ற நிலையில் எந்த நிகழ்வைச் சொல்ல என பல சம்பவங்கள் மனதுக்குள் முட்டி மோதுகின்றன. அவ்வளவு பிரச்சனைகளையும் நேர்கொண்டு அணுகியவர் வைகோ அவர்கள்.

 எங்கள் குருவிகுளம் ஒன்றியத்தின் பெருந்தலைவராக இருந்தபோது; வானம் பார்த்த கரிசல் மண்ணில் குடிநீர் பிரச்சனை கோடைக் காலங்களில் அதிகமாக இருக்கும். வேகாத வெயிலில் திருநெல்வேலியில் மெத்தப் படித்த வழக்கறிஞராக, நீதிபதி இரத்தினவேல் பாண்டியன், பேரவை முன்னாள் தலைவர் செல்லப்பாண்டியனோடு பணியாற்றினாலும், கிராமம் கிராமமாக வந்து எந்த கிணற்றில் தண்ணீர் இல்லை, அதை தூர் வார வேண்டும், தண்ணீர் வசதிக்காக அடிபம்பாவது போட்டுத் தரவேண்டும் என்று அப்போது பணியாற்றுவார். கிராமங்களுக்கு மின் இணைப்பு, தெரு விளக்கு போன்ற கிராம ஆதாரப் பணிகளை 1960களின் இறுதிகளிலேயே அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களுக்கு நெருக்கமாக இருந்தாலும், அந்த பந்தா, பகட்டில்லாமல் கிராமிய முன்னேற்றங்களில் வைகோ அவர்கள் அக்கறை காட்டியவர். இந்த காட்சிகளை நானே நேரடியாக பார்த்ததுண்டு.

அருகாமையில் உள்ள சங்கரன்கோவில் ஒன்றியப் பெருந்தலைவராக இருந்த சண்முகச்சாமி, மேலநீலிதங்கநல்லூர் ஒன்றியப் பெருந்தலைவர் முத்துப்பாண்டியன், கோவில்பட்டி ஒன்றியப் பெருந்தலைவர் நந்திராஜ்,  கயத்தாறு ஒன்றிய பெருந்தலைவராக இருந்த கோதண்டராமத் தேவர், வெம்பக்கோட்டை ஒன்றியத் தலைவர் சிப்பிப்பாறை இராமசாமி நாயக்கர் போன்றவர்கள் எல்லாம் வைகோ அவர்களைப் பார்த்து கிராமங்களின் பிரச்சனைகளை தீர்க்க செல்ல வேண்டிய நிலைக்கு அப்போது தள்ளப்பட்டனர். இதை அவர்கள் சொல்லியே நான் அறிந்தேன்.

திருநெல்வேலி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைவராக இருந்த போது, வறுமைக் கோட்டிற்கு கீழுள்ளவர்களுக்கும், ஏழை விவசாயிகளுக்கும் தங்கு, தடையின்றி கடன்கள் கிடைக்கவும், டிராக்டர்கள் வாங்கவும் என சகல தரப்பினருடைய சிக்கல்களை அறிந்து எளிதாக திட்டங்களின் பயன்பாட்டை பெற வழி செய்தார். மேடைதளவாய் குமாரசாமி முதலியார் கூட்டுறவுப் பயிற்சி நிலையத்தில் மாணவர்கள்  குறிப்பாக ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் படிக்க அனைத்து உதவிகளை செய்தார்
இப்படி படிப்படியாக கிராம அளவில் இருந்து மாநிலம், இந்திய அரசியல் வரை எழுந்து தன்னுடைய ஆளுமையை வெளிப்படுத்தியவர். முதலமைச்சர் அறையிலும் இருப்பார். நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் இருப்பார். சங்கரன்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்திற்கும் மக்களின் குறைகளைத் தீர்க்க நேரடியாகச் செல்வார். குருவிகுளம் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் அமர்ந்தும் எந்தக் குறைகள் வந்தாலும் உடனுக்குடன் தீர்த்து வைப்பார். இப்படியான வாய்ப்பு பொது வாழ்வில் யாருக்கும் கிட்டியிருந்தால் அபூர்வமே. ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டம், அப்போது தூத்துக்குடி மாவட்டம் பிரியவில்லை. திமுக மாவட்டச் செயலாளர் தேர்தல் நடந்த போது, மறைந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி இரத்தினவேல் பாண்டியனும், தூத்துக்குடி நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் போட்டியிட்டனர். இரத்தினவேல் பாண்டியன் மாவட்டச் செயலாளராக வெற்றி பெற அப்போது வைகோ அவர்களின் அரும் உழைப்பு அனைவராலும் பேசப்பட்டது.
சாத்தூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த எஸ்.ஆர். நாயுடு காலமானதை ஒட்டி இடைத்தேர்தலை சங்கரபாண்டியபுரம் முதலாளி சீனிவாச நாயக்கர் போட்டியிட்ட போது, எந்த ஆர்ப்பாட்டமுமில்லாமல் சாத்தூர் தொகுதியில் கிராமம், கிராமமாக பிரச்சாரம் செய்தார். அப்போது நெடுமாறனுடன் நானும் அங்கு தேர்தல் பணிகளில் இருந்தபோது, மீந்துளி கிராம ஊராட்சித் தலைவர் பாபு (கீழநீலியநல்லூர்) சந்தித்தபோது, எங்கே வந்தீர்கள் என்றேன். சேர்மேனுடன் பிரச்சாரத்திற்காக இங்கு வந்தேன் என்றார். கொஞ்ச தூரத்தில் தேர்தல் பிரச்சாரப் பணியில் வைகோ அவர்கள் மக்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது, எளிமையாக வாக்காளர்களை அணுகி வேட்பாளரை வெற்றிபெறச் செய்ய வேண்டுமென்ற அவருடைய உழைப்பை அங்கு பார்க்க முடிந்தது. அப்போது வைகோ அவர்களை எங்கள் வட்டாரத்தில் சேர்மன் என்று வாஞ்சையோடு அழைப்பார்கள்.

ஈழத்தமிழர் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் வைகோ அவர்கள் எழுப்பியதைக் குறித்து திரு.நெடுமாறன் அவர்கள் 1983-84 காலக்கட்டங்களில் மகிழ்ச்சியாக பாராட்டியதுண்டு. வைகோ அவர்கள் தனதுநாடாளுமன்றத்தில் நமது குரல்என்ற நூலை நெடுமாறன் அவர்களிடம் வழங்கவேண்டும் என்று விரும்பினார். இந்த நூல் எழும்பூர் புதுப்பேட்டை சித்ரா திரையரங்கம் அருகில் 1984இல் நடந்த பொதுக் கூட்டத்தில் கலைஞர் அவர்கள் வெளியிட்டார். வைகோ அவர்களுடைய நாடாளுமன்ற பேச்சுகள் அடங்கிய இந்த நூலை நெடுமாறன் அவர்களிடம் முதன்முதலாக 20/03/1984இல் சந்தித்து வழங்கினார். அப்போது நெடுமாறனுடைய மயிலை, சுந்தரேசத் தெரு வீட்டிற்கு ஆர்.ஆர்.சபா அருகில் காத்திருந்து அழைத்துச் சென்றதெல்லாம் இன்றைக்கு நினைவிற்கு வருகிறது. அப்போது நெடுமாறன் அவர்களுடைய குறிஞ்சி ஏட்டைப் பற்றி வைகோ அவர்கள் குறிப்பிட்டதெல்லாம் மறக்க முடியவில்லை. வைகோ அவர்களுடைய இரண்டாவது நாடாளுமன்ற பேச்சுத் தொகுப்புஇரத்தம் கசியும் இதயத்தின் குரல்நூல் வெளியீட்டு விழா கலைவாணர் அரங்கில் சிறப்பாக நடந்தது. தலைவர் கலைஞர் அவர்கள் வெளியிட பேராசிரியர் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

நாஞ்சிலார், சாதிக் பாட்ஷா, முரசொலி மாறன் போன்ற திமுக முன்னணித் தலைவர்கள் எல்லாம் இந்த விழாவில் உரையாற்றினார்கள். இந்த விழாவில் வைகோ அவர்களுடைய நன்றியுரை அரங்கம் நிறைந்த கூட்டத்தை கவர்ந்தது. இந்த நிகழ்வுக்கு ஏற்பாடுகளை ஆயிரம் விளக்கு உசேனும், நானும் இணைந்து கவனித்தோம். ஈழத்தமிழர்கள் சிக்கல்கள், நிகழ்வுகளை எவ்வளவோ சொல்லலாம். நெடுமாறன் அவர்கள் இலங்கைக்கு 30-10-1985இல் ரகசியமாக புறப்பட்டுச் சென்ற செய்தியை கேள்விப்பட்டு உடனே தொலைபேசியில் வைகோ ஆர்வத்தோடு விசாரித்ததும், அன்றைக்கு தலைவர் கலைஞரிடம் இது குறித்து நெடுமாறன் தனியாக அனுப்பிய கடிதத்தையும் நான் வழங்கியதைக் குறித்தும் வைகோவிடம் சொன்னேன். கலைஞர் என்ன சொன்னார் என்று கேட்டார்.

சென்னையில் பாண்டி பஜாரில் 19-05-1982 அன்று நடந்த துப்பாக்கிச் சூட்டிற்கு பின் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் சென்னை மத்திய சிறையில் இருந்த போது, டெல்லியிலிருந்து தொலைபேசியில் அழைத்து திரு. பிரபாகரன் அவர்களை பார்க்க வேண்டும். நாளை வருகின்றேன் என்று வைகோ என்னிடம் கூறினார்கள்.  வைகோ அவர்கள் 24-06-1982 அன்று சென்னை மத்திய சிறையில் இருந்த பிரபாகரனை காலை 11 மணிக்கு சந்தித்தார். நானும் உடனிருந்தேன். அப்போது வைகோ, ‘திமுக சார்பில், கலைஞர் தலைமையில் ஈழ விடுதலை மாநாடு இராமநாதபுரத்தில் மாவட்ட செயலாளர் சத்தியேந்திரன் நடத்துகின்றார். உங்களின் கருத்துக்களை அந்த மாநாட்டில் பிரதிபலிக்கிறேன்என்று சொல்லிவிட்டு அன்று மாலை இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸில் சென்று ஈழப் பிரச்சனை குறித்து உரையாற்றினார். அந்த மாநாட்டில் அவர் ஆற்றிய உரை ஈழப் பிரச்சனை கொழுந்துவிட்டு எரியும் நேரத்தில் தமிழகத்தை ஈர்த்தது. இந்த காலக்கட்டத்தில் விடுதலைப் புலி இயக்க நிர்வாகிகளோடு எம்.ஜி.ஆரை சந்திக்க வாய்ப்புகள் கிடைத்தன.

அதனால் எனக்கு அவரிடம் அறிமுகம். ஒரு சமயம் அன்றைய அமைச்சர் காளிமுத்து, எம்.ஜி.ஆரிடம், “அண்ணே, இவர் வை.கோபாலசாமி பக்கத்து ஊர்க்காரர்ண்ணேஎன்றார். அப்போது எம்.ஜி.ஆர் என்னிடம், “அப்படியா? இலங்கை பிரச்சனையில் வைகோ டெல்லியை அதிர வைக்கிறாரே.” என்றார். எம்.ஜி.ஆர் ஆட்சியில், கிட்டு வீட்டுக்காவலில் திருவான்மியூரில் இருந்தபோது, அதை கண்டித்து அவரை சந்திக்க சென்றபோது, வைகோ கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். மீண்டும் செல்ல முயன்ற போது, கைது செய்யப்பட்டு அடையாறு காவல் நிலையத்தில் ஒரு நாள் முழுவதும் வைத்து இரவு 10 மணிக்கு விடுதலை செய்தனர்.

இந்த செய்தியை கேள்விப்பட்டு, பிரபாரகன், பாலசிங்கம், பேபி சுப்பிரமணியம் போன்ற அந்த இயக்கத்தின் முன்னணியினர் எல்லாம் தங்களுடைய நன்றியை வெளிப்படுத்தினர். குட்டிமணி, தங்கத்துரை போன்றவர்ககளை கலைஞர் தான் கைது செய்தார் என்று எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, பகிரங்மாக குற்றஞ்சாட்டியதை மறுத்து குட்டிமணியிடம் இருந்து கைப்படக் கடிதம் வாங்கி, வழக்கறிஞர் கரிகாலன் மூலமாக கலைஞரிடம் கொடுத்து எம்.ஜி.ஆருக்கு தக்க பதிலை வழங்கியதெல்லாம் அப்போது பரபப்பாக பேசப்பட்டது.யோகேஸ்வரன், கரிகலான், நிர்மலா நித்யானந்தம், நித்யானந்தம் போன்றோர்களெல்லாம் அன்றைக்கு இலங்கையில் இருந்து தப்பிவந்த போதெல்லாம் பல தமிழ் தலைவர்களை எல்லாம் வைகோ சந்தித்து ஆறுதல் கூறி, தன் இல்லத்திற்கு அழைத்து உபசரித்ததெல்லாம் இன்றைக்கும் காட்சிகள் எல்லாம் என் கண்முன் தெரிகின்றது. கிட்டு 12-09-1988ல் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட போது தலைவர் கலைஞர் அவர்கள் சென்று சந்தித்து வாருங்கள் என்று கூறினார்.

வைகோ தலைமையில் திரு. என்.வி.என்.சோமு, அடியேனும் 22-09-1988இல் சென்னை மத்திய சிறையில் கிட்டுவை சந்தித்து மத்திய அரசு உடனடியாக கிட்டுவை விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்த இடத்தில் ஒரு செய்தியை நினைவுபடுத்த வேண்டும். பழ.நெடுமாறனும், வீரமணியும் ஈழத்தமிழர் பிரச்சனையில் மதுரையில் இருந்து புறப்பட்டு, தூத்துக்குடி துறைமுகத்தில் இலங்கைக்கு அத்தியாவசியப் பொருட்கள் அனுப்புவதை கண்டித்து மறியல் போராட்டத்தை 20-02-1987இல் அறிவித்தார்கள். அப்போது வைகோ அவர்கள் டெசோ உலகத்தை ஈர்த்துள்ளது. இப்படி தனியாகப் போய் போராட்டம் நடத்துவது சரிதானா? யோசிக்க வேண்டாமா? என்ற நிலையில் 08-02-1987இல் நெடுமாறனையும், வீரமணியையும் சந்தித்து பேச சென்றபோது, உடன் சென்றேன். வீரமணியை அவரது அடையாறு வீட்டிலும், நெடுமாறனை மயிலாப்பூரிலும் சந்தித்து பேசினோம். டெசோ என்ற அமைப்பு தங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று ஈழத்தமிழர்கள் முழுமையாக நம்புகின்றனர் என்று வைகோ அவர்கள் கூறினார். அதில் ஒரு சேதாரம் ஏற்பட்டு விடக்கூடாது என்று ஆதங்கத்தோடு சொல்லி வந்தார். நான் இதைக் குறித்து தலைவர் கலைஞரிடமும் பேசியுள்ளேன் என கூறினார்.

எந்த பிரச்சனையிலும் அரசியல் மனமாச்சரியங்களைக் கடந்து ஈழப்பிரச்சனையில் ஒரே குரலாக ஒலிக்க வேண்டுமென்று ஆதங்கத்தோடு அன்றைக்கு பேசியது எதிர்காலத்தில் ஒரு கட்சியின் தலைவர் ஆவோம் என்ற எதிர்பார்ப்பில்லாமல் தமிழர்களுடைய நலனுக்காக பேசியது அன்றைக்கு மனதில் பட்டது.

இன்னொரு சம்பவத்தையும் இந்த இடத்தில் குறிப்பிட வேண்டும். 1989 தேர்தலுக்குப் பின் பிப்ரவரி 5ஆம் தேதியென்று நினைக்கின்றேன். நண்பர் குட்டி மூலமாக தலைவர் கலைஞருக்கு கடிதம் கொடுத்துவிட்டு ரகசியமாக ஈழச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார். மறுவாரம், ஜூனியர் விகடன் கழுகுப் பகுதியில் இந்த செய்தி வெளிவந்தது. அதன் ஆசிரியராக இருந்த சுதாங்கனும், ராவும் பிப்ரவரி 7ஆம் தேதி என்னிடம் தொலைபேசியில் இது என்ன உண்மைதானா? என்று கேட்டதற்கு நான் ஒன்றும் தெரியவில்லை என்று மறுத்தேன். ஆனால், அரசல் புரசலாக ஈழ நண்பர்கள் மூலமாக காதுக்கு வந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. இந்த செய்தி வந்தவுடன் சட்டமன்றத்தில் குமரி அனந்தன் கேள்வி நேரத்தில் எழுப்பினார். அப்போது உயர்நீதிமன்றத்தில் வழக்குப் பணியில் இருக்கும்போது, முதலமைச்சர் கலைஞர் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டேன். உனக்கு ஏதாவது தெரியுமா? என்று கேட்டார். எனக்கு தெரியாது என்று சொல்லிவிட்டேன்.

வைகோ அவர்கள் இந்தியாவிற்கு 03-04-1989அன்று மாலை திரும்பியதாக என்னுடைய நினைவு. அந்த சமயத்தில், தினமும் நீதிமன்றத்திலிருந்து அண்ணாநகரில் அவருடைய வீட்டிற்கு சென்றுவிட்டு அங்கு சற்று நேரம் இருந்துவிட்டு 7 மணிக்கு தான் என்னுடைய வீட்டிற்கு திரும்புவேன். நாடு திரும்பிய அன்றைய தினமே வைகோ அவர்கள் தொலைபேசியில் என்னை அழைத்து விடியற்காலை 5 மணிக்கெல்லாம் வீட்டிற்கு வந்துவிடுங்கள் என்றார். அடுத்த நாள் 04-04-1989ஆம் தேதி, அண்ணா நகர் - ஒய் பிளாக் வீட்டிற்கு விடியலில் சென்றபோது, முகம், கால் எல்லாம் கறுத்து உடல் மற்றும் மனம் அலுப்பாக காட்டிக் கொள்ளாமல், எப்போதும் போல சிரித்துக் கொண்டு பேசினார். நேராக தலைவர் கலைஞருடைய கோபாலபுரம் இல்லத்திற்கு சென்றோம். கலைஞர் அவர்களை தனியாக சந்தித்து பேசினார். பத்திரிக்கையாளர்களை சந்திக்க வேண்டுமென்றார். அதற்கான ஏற்பாடுகளை செய்தேன். அறிவாலயத்தில் அன்றைக்கு தொலைபேசி மேசையிருக்கும் இடம் இன்றைக்கு செய்தியாளர் கூடமாக மாறிவிட்டது. அந்த இடத்தில் அன்றைய சென்னை மாவட்டச் செயலாளர் டி.ஆர்.பாலு உடனிருக்க பத்திரிக்கையாளர் மத்தியில் என்னுடைய சொந்த விருப்பமும், பொறுப்பின் காரணமாக இலங்கைக்குச் சென்றேன்.

கலைஞர் அவர்களுக்குத் தெரியாது என்று குறிப்பிட்டார். அன்று மாலையும், மறுநாள் பத்திரிக்கைகளிலும் இவை தலைப்புச் செய்திகளாக வந்தன. அன்று மாலையே நெல்லை எக்ஸ்பிரசில் புறப்பட்டு நெல்லைக்கு வைகோ அவர்கள் பயணித்தார்கள். அன்றைய பிரதமர் ராஜீவ்  காந்தியே வைகோ அவர்கள் நல்லவிதமாக திரும்ப வேண்டுமென்று தான் ஆர்வப்பட்டார். இதை பிரச்சனையாக்கி வழக்கறிஞர் கோபாலன், வைகோ அவர்கள் கடவுச்சீட்டில் விசா இல்லாமல் இலங்கைக்கு ரகசியமாக சென்றது தவறு என (வழக்கு எண். 3269/1989) கோ - வாரண்டோ வழக்குத் தொடுத்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி. பி.எஸ். மிஸ்ரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நான் நடத்தினேன். வைகோ அவர்களும் பதில் மனுவில் ஈழப் பிரச்சனைக்காக விசா இல்லாமல் தான் போனேன். மறுக்கவில்லை என்று தான் மனு செய்ய வேண்டும். அப்படியென்றால் தான் நான் கையொப்பமிடுவேன் என்று பிடிவாதமாக இருந்தார். இது மாதிரி ஒரு காலக்கட்டத்தில் தான் உண்மையான அரசியல் சட்டத்தை தான் கொழுத்தினேன் என்ற நிலைப்பாட்டையும் நீதிமன்ற வழக்குகளில் கடந்த காலங்களில் சமயத்திற்கேற்றவாறு மாற்றாமல் உள்ளது உள்ளபடி பேசக் கூடியவர்.
பிறகென்ன செய்ய, அதே மாதிரி மனுத்தாக்கல் செய்து கையொப்பமிட்டு மனுசெய்து விசாரணைக்கு வந்தது. அட்வகேட் ஜெனரல் அழகிரிசாமியும், சி.பி.. வழக்கறிஞர் என்னுடைய சகலை பி. ஸ்ரீராமுலு, மத்திய அரசு வழக்கறிஞர். சந்திரசேகரும், கோபாலனும் எதிர் தரப்பில் வாதாடினர். என்னுடைய சீனியர் காந்தி இந்த வழக்கிற்கு வரமுடியாத நிலையில் நான் தான் வாதாடினேன். பல கேள்விகள் நீதிபதி என்னிடம் எழுப்பினார். ஆனால் உள்ளபடியே இந்த வழக்கு என்னாகுமோ? என்று இரண்டு நாட்கள் மனதை போட்டு வாட்டியது. ஆனால் 19-07-1990 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், வைகோ மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் இந்திய அரசு எடுக்க முடியாது, வேண்டுமென்றால் இலங்கை அரசு இந்திய அரசு மூலமாக முயற்சிக்கலாம் என்று தீர்ப்பு வந்தவுடன் சற்று ஆறுதலடைந்தேன்.

சி. நாராயணசாமி நாயுடு தலைமையில் அன்றைக்கு இருந்த தமிழக விவசாயிகள் சங்கம், 31- 12-1980 அன்று தமிழ்நாடு தழுவிய பந்த் போராட்டத்தினை அறிவித்த போது, அமைதியாக என்னுடைய சொந்த குருஞ்சாக்குளம் கிராமத்தில் பந்த் நடத்தியபோது காவல்துறை கிராமத்தில் புகுந்து அத்துமீறி நடந்து கொண்டு சாத்துரப்ப நாயக்கர் (55), ரவீந்திரன் (17) /பெ பெருமாள் சாமி,  இரா.வரதராசன் (30) /பெ இராமசாமி நாயக்கர், ரெ.வெங்கடசாமி (22), ராமசாமி நாயக்கர் (60), . வெங்கடசாமி நாயக்கர் (50), பெ.இரவிச்சந்திரன், என 8 விவசாயிகளை எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் காவல் துறையினர் சுட்டுத் தள்ளினர். இதில் 5 பேர் இறந்தனர். இந்த 5 பேருடைய உடல்களை நல்லடக்கம் செய்யக் கூட உறவினர்களிடம் வழங்காமல் காவல் துறையே திருநெல்வேலி அருகேயுள்ள சிவந்திப்பட்டி மயானத்தில் தகனம் செய்தது. இந்நிலையில் எங்கள் கிராமத்தில் பெண்களைத் தவிர யாரும் குடியிருக்க முடியாத நிலையில், வைகோ அவர்கள் நேரடியாகச் சென்று அங்குள்ள நிலைமைகளை அறிந்து கலைஞர் அவர்களிடம் விரிவான அறிக்கைகள் தந்து, பேராசிரியர் அவர்களை அழைத்துச் சென்று திருவேங்கடத்தில் கண்டனக் கூட்டத்தையும் நடத்தினார்.

விவசாயிகள் போராட்டம் 1979இல் நடந்தபோது சங்கரன்கோவில் அருகேயுள்ள பணவடலியில் விவசாயிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தச் சென்ற பணவடலி காவல் நிலையத்தின் துணை ஆய்வாளர் அய்யாபழம் மீது கல்லாலும், ஆயுதங்களாலும் அடித்து கொன்றுவிட்டார்கள் என்று நாராயணசாமி நாயுடு, பரமசிவ தேவர் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் .சுப்பிரமணியம், நானும் வழக்கை நடத்தி விடுதலைப் பெற்றுவிட வேண்டுமென்ற முழுமுயற்சியில் வைகோ அவர்கள் ஈடுபட்டதெல்லாம் இன்றைக்கும் நினைவில் உள்ளது. அதே போல, விவசாயிகள் மீது இதுவரை இறுதியாக ஜெயலலிதா ஆட்சியில் 29/03/1993இல் கோவில்பட்டியில் நடந்த விவசாயிகள் அகிலாண்டபுரம் இருதய ஜோசப் ரெட்டியார், வெங்கடாசலபுரம் எத்திராஜலு நாய்க்கர் காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டினால் சாகடிக்கப்பட்டனர். டெல்லியில் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இருந்த வைகோ இரவோடு இரவாக கோவில்பட்டிக்குச் செல்ல என்னை பணித்தார். அவரும் அதிகாலை டெல்லியில் இருந்து புறப்பட்டு மதியம் கோவில்பட்டி வந்தடைந்தார்.
அன்றைய ஜெயலலிதா தலைமையிலான அரசு இந்த இருவரும் துப்பாக்கிச் சூடுக்கு சாகவில்லை உடல்நல பாதிப்பால் இறந்தார்கள் என்று கூறியதை  கடுமையாக வைகோ அவர்கள் கண்டனம் தெரிவித்தார். எத்திராஜலு நாயக்கருடைய உடலை வெங்கடாசலபுரம் எடுத்துச் சென்று இறுதி அடக்கம் செய்துவிட்டு என் தலைமையில் நடந்த நிகழ்வில் வைகோ அவர்கள் அடிக்கடி இந்த வட்டாரத்தில் விவசாயிகள் அரசின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியாகிறார்கள். இனிமேலும் அந்த கொடிய சூழலை உருவாக்க விடமாட்டேன் என்று பேசியதெல்லாம் இன்றைக்கும் மனதில் ரீங்காரமிடுகின்றது. அப்போது என்னிடம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜோசப் இருதய ரெட்டியார் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று அவர் பெயரிலேயே நான் வழக்குத் தொடுத்தேன். நீதிபதி. கே.எஸ். பக்தவச்சலம் வைகோ அவர்களின் இந்த வழக்கை விசாரித்து மறுபிரேத பரிசோதனை செய்யலாம் என்று 1993, ஏப்ரல் 20ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இப்படி விவசாயிகளுடைய பிரச்சனைகளில் மிகவும் அக்கறையும், ஆர்வமும் எடுத்து இதயசுத்தியோடு பொது தளத்தில் போராடியதெல்லாம் உடனிருந்தவன் என்ற வகையில் சொல்கின்றேன்.
இன்று எட்டுத் திக்கும் தூக்கு தண்டனை கூடாதென்று உரத்தக் குரலில் போர்க் குணத்தோடு எழுகின்றது. 1984லேயே மரண தண்டனைக்கு எதிராக வைகோ அவர்கள் எடுத்த நடவடிக்கைகளை நாம் கவனிக்க வேண்டும். உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்து, குடியரசு தலைவருக்கு மூன்று முறை கருணை மனு வழங்கி மூன்று முறையும் (1977 ஜூன் 15, இரண்டாவது முறையாக 1981 செப்டம்பர் 15 மற்றும் மூன்றாவது முறையாக 1984 ஜூன் 21 ஆகிய நாள்களில் கருணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.) கருணை மனுக்களை தள்ளுபடி செய்து, இனிவேறு வழியில்லை என கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, தூக்குதண்டனை உறுதி செய்யப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசு குருசாமி நாயக்கரை 48 மணி நேரத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவிருந்ததை வெறும் இரண்டு வார்த்தை தந்தியால் காப்பாற்றி; பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு வைகோ அவர்களின் முயற்சியால் விடுதலையும் செய்யப்பட்டார். அந்த நிகழ்வுகளை சற்று திரும்பிப் பார்த்தால் பிரம்மிப்பாக இன்றும் உள்ளது. பாளையங்கோட்டை மத்திய சிறையிலிருந்த தூக்கு தண்டனை கைதி குருசாமி நாயக்கரை காப்பாற்றிய இந்த வழக்கை நான்தான் தாக்கல் செய்தேன்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள்  வி.இராமசாமி, டேவிட் அண்ணுசாமி அடங்கிய பெஞ்சில் 27/09/1984 அன்று (வழக்கு எண். W.P. No 6262/1984) தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. 1984 ஜூன் 14 அன்று குருசாமிக்கு ஜூன் 21ம் தேதி காலையில் தூக்கு தண்டனை வழங்குவது என உறுதி செய்யப்பட்டது. இத்தகவல் நெல்லையிலிருந்து திரு. குட்டி அவர்கள் வைகோ அவர்களுக்கு தெரியப்படுத்தியதும், கலந்தாலோசித்த பின்பு, டெல்லியில் உச்ச நீதிமன்றத்துக்கும், சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கும் பாளையங்கோட்டை சிறையில் இருக்கும் குருசாமி நாயக்கர் தன்னை காப்பாற்ற தந்திகளை தனித்தனியாக கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் இரண்டு தந்திகள் குருசாமியிடமிருந்து முறையாக வந்து சேர்ந்தன. அந்த தந்திகளையே மனுக்களாக்கி விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அன்றைய தலைமை நீதிபதி கே.பி.என்.சிங் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ஆகையால், அவர் தங்கி இருந்த சென்னை அரசினர் விருந்தினர் விடுதிக்கு நான் விரைந்து சென்று அனுமதியைப் பெற்றேன்.
அந்த அனுமதியின் அடிப்படையில் தந்திகளை ரிட் மனுவாக்கி, அதற்கு ரிட் மனு எண் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழங்கப்பட்டு சென்னை உயர்நீதிமன்ற நான்காவது கோர்ட்டில் அமர்ந்திருந்த நீதிபதிகள் வி.ராமசாமி, டேபிட் அன்னுசாமியிடம் மறுநாள் திங்கள்கிழமை 11 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றவியல் வழக்குகளை நடத்தி வந்த அரசு தலைமை பப்ளிக் பிராசிக்யூட்டர் பத்மினி ஜெசு துரை அவர்களை முன்கூட்டியே உரிய நோட்டீஸ் கொடுத்ததன் அடிப்படையில், இவ்வழக்கை விசாரிக்க அரசுத்தரப்பில் ஆஜரானார். இவ்வழக்கில் மூத்த வழக்கறிஞர்கள் என்.டி.வானமாமலை, .சுப்பிரமணியம் ஆஜரானார்கள். நீதிபதிகளிடம் தந்தியை ரிட் மனுவாகப் பாவித்து குருசாமிக்கு தூக்குத் தண்டனையிலிருந்து விடுவிக்க இடைக்காலத் தடை வேண்டும் என்று வாதாடப்பட்டது. நீதிபதிகள் என்.டி.வி.யின் வாதங்களைக் கேட்டு மதியம் 2.45 மணியளவில் குருசாமி தூக்குக் கயிறுக்கு இடைக்காலத் தடை உத்தரவை வழங்கினர்.
அத்தோடு அரசு வழக்கறிஞர் பத்மினி ஜேசுதுரையிடம் இந்த இடைக்கால உத்தரவை தமிழக  அரசுக்கும், பாளையங்கோட்டை சிறை நிர்வாகத்திற்கும் சொல்லப்பட்டுவிட்டதா? தூக்குத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுவிட்டதா போன்ற விவரங்களை உரிய ஆதாரங்களோடு நாங்கள் மாலை நான்கு மணிக்கு இந்த நீதிமன்றத்திலிருந்து எழும்பும்போது தவறாமல் சொல்ல வேண்டும் என்ற உத்தரவையும் நீதிபதிகள் பிறப்பித்தனர். இவ்வாறு குருசாமியை அன்றைக்குக் காப்பாற்றியது இரண்டு வார்த்தை தந்திதான். இதற்கு கர்த்தாவாக விளங்கியவர் வைகோ அவர்கள் தான். இன்றைக்கு இருப்பது போல கைபேசியோ, பிரதி எடுக்க நகலக வசதிகளோ கூட அப்போது கிடையாது. ரெமிங்டன் தட்டச்சு மூலமே பிரதி எடுக்க வேண்டும். ஆனால் இந்த வழக்கில் எந்த தட்டச்சு மனுவும் இல்லாமல் வெறும் தந்தியை மனுவாக பாவித்து தூக்குதண்டனையை நிராகரித்தது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமில்லாமல் ஒரு அதிசயமாகவும் பார்க்கப்பட்டது. உச்சநீதிமன்றத்திலும் பிரசித்திப் பெற்ற வழக்கறிஞர் கார்க் ஆஜராகி அங்கும் இடைக்காலத் தடையும் வழங்கப்பட்டு பின்னால் அந்த மனு திரும்பப் பெறப்பட்டது.
இந்தப் பிரச்சினையில் ஒவ்வொரு நடவடிக்கையும் என்ன நடக்கப் போகிறதோ என்ற பரபரப்போட கடமைகள் ஆற்றப்பட்டன. இந்த வழக்கில் இடைக்காலத் தீர்ப்பு வந்ததை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் வெகுவாக பாராட்டினார்கள். இன்னொரு முக்கிய செய்தியை சொல்ல வேண்டும். அவசர நிலைக் காலத்திற்குப் பிறகு திமுக திருச்சிக்குத் தெற்கே சட்டமன்றத் தேர்தலில் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியை தவிர வேறெங்கும் வெற்றி பெறவில்லை. அது வைகோவின் சொந்தத் தொகுதி. வைகோவின் நேரடிப்பார்வையில் தேர்தல் பணிகளால், சுப்பையா (முன்னாள் அமைச்சர் தங்கவேலுவின் சகோதரர்) வெற்றி பெற்றார். திருச்சியில் இருந்து கன்னியாகுமரி வரை அந்த ஒரு தொகுதியில் தான் வெற்றி பெற முடிந்தது. அடுத்து 1984 சட்டமன்றத் தேர்தல்களில் தென் மாவட்டடங்களில் திமுக வெற்றிபெற்ற சிலத் தொகுதிகளில் விளாத்திக்குளம் தொகுதியில் குமரகுருபர இராமநாதன் வெற்றி பெற்றார். இதற்கு வைகோவின் பிரச்சாரம் அடிப்படைக் காரணமாகும்.

சட்டமன்றத் தேர்தல் 1989ஆண்டில் நடப்பதற்கு முன், தலைவர் கலைஞர் அவர்களும், முரசொலி மாறனும் என்னிடம் வைகோ அவர்களின் முன்னிலையில் ஒன்றுபட்ட திருச்சி மாவட்டம், தஞ்சை மாவட்டம், நாகை மாவட்டம், தென் ஆற்காடு மாவட்டம், செங்கல்பட்டு மாவட்டம், வட ஆற்காடு மாவட்டம், சேலம் மாவட்டம், ஈரோடு மாவட்டம், கோவை மாவட்டம் மற்றும் நீலகிரி மாவட்டம் வரை, அந்த மாவட்டங்களில் இருந்த ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சென்று திமுகவின் வெற்றி வாய்ப்புகளை கள ஆய்வு செய்து, ஒவ்வொரு தொகுதியிலும் மக்கள் செல்வாக்குள்ள வேட்பாளர்கள் யார் என்று கண்டுவர பணித்தார்கள். வைகோ அவர்கள் அப்போது என்னை தனியாக அழைத்து ராதா, தலைவர் நம்பிக்கையோடு கொடுத்திருக்கிறார். மிகவும் கவனமாக செய்யுங்கள். இதில் எந்தவொரு தவறோ, பிழையோ ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கவனம் தேவை என்றார். நான் ஆறு மாத காலம் என்னுடைய அம்பாசிடர் காரில் பயணித்து இந்த பணிகளை மேற்கொண்டேன்.
அவ்வப்போது வைகோ அவர்களும் தொலைபேசியில் தொடர்புக் கொண்டு பேசுவார். நான் அந்த பணிகளைப் பற்றிய விவரங்களை சொல்வதுண்டு. நான் இந்த பணிகளை செய்த மாவட்டங்களில் நான் வழங்கிய இந்த அறிக்கையில் இருந்த பெயர்களை தான் கழக வேட்பாளர்களாக 70% பேர் அறிவிக்கப்பட்டனர். நான் தலைவர் தலைமையில் நடக்கும் தேர்தல் நேர்காணலுக்கு இந்த பணியின் காரணமாக செல்லமுடியவில்லை. அப்போது கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. அப்போது வைகோ அவர்கள் நேர்காணலுக்கு வராமல் வாய்ப்பு பெற்ற ஒரே நபர் நீங்கள் தான் என்று குறிப்பிட்டார்கள். அப்போது பொன்முடியின் பெயரை தெய்வாசிகாமணி என்றும், கே.என்.நேருவை சேர்மன் என்றும் சொன்னதாக நினைவுகள். நாடாளுமன்றத்தில் ஈழப்பிரச்சனை, கண்ணகி கோவில் பிரச்சனை, சேது கால்வாய்த் திட்டம், கச்சத் தீவு, நதிநீர்ச் சிக்கல்கள் போன்ற தமிழகத்தின் பலப் பிரச்சனைகளைக் குறித்தெல்லாம் வைகோ அவர்கள் எழுப்பிய போது, ஒரு சாமானியனாக அணிலாக இருந்தோம் என்ற ஒரு மனதிருப்தி. இப்படியான சம்பவங்கள் பல உண்டு. இன்னும் சொன்னால் பல பக்கங்கள் ஆகிவிடும். இந்த சம்பவங்கள் யாவும் 1992வரை பதிவு செய்துள்ளேன்.
மனிதன் பிறந்து, வாழ்ந்து இந்த மண்ணுக்கு இருக்கின்ற காலத்தில் இயன்றதை செய்வோம் என்பது தான் மானிடத்தின் கோட்பாடு. ஆனால், வைகோ அவர்கள் இதையும் தாண்டி இயன்றதற்கு மீறியும் கடமையாற்றியுள்ளார். எவ்வளவோ மக்கள் மத்தியில் விழிப்புணர்வு நடைப் பயணங்கள், மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தவும், அரசின் அழிவு, நச்சுத் திட்டங்களை புறந்தள்ளவும் தமிழக மண்ணையே நடந்தே அளந்துள்ளார். அவருடைய போராட்ட வாழ்க்கை, சிறை வாழ்க்கை, நாடாளுமன்றப் பணிகள், இலக்கிய பணிகள், மேடைதோறும் அவருடைய ஒரே வீச்சுகள் யாவும் வரலாறு மட்டுமல்லாமல், வாழ்வின் இலக்கணமாகவும் எதிர்கால சமுதாயத்திற்கு விளங்கும். அவர் பணிகள், செயல்பாடுகள் வரலாற்றில் மற்றவர்களுக்கு பாலபாடமாக அமையும்.

 ///

#வைகோ_பொது_வாழ்வில்_பொன்விழா
#Vaiko_50years
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
16-09-2018

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...