--------------------------------------
டாக்டர் பட்டம், விருதுகள் வேண்டாம். புகழை தேடினால் சீரழிவுதான். தேர்தலில் யோக்கியனையே தேர்ந்தெடுக்க மறக்காதீர்கள் என்று எழுத்தாளர் கி.ரா என்ற கி. ராஜநாராயணன் வாசகர்கள், நண்பர்களிடம் தெரிவித்தார்.
எழுத்தாளர் கி. ராஜநாராயணன் என்ற கி.ராவின் 96வது பிறந்தநாள் மற்றும் அவரது 65வது திருமணநாளையொட்டி புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் சந்திப்பு நிகழ்வு இன்று நடந்தது. கிரா நூற்றாண்டை நோக்கி என்ற தலைப்பில் சந்திப்பும், வாழ்த்துப்பெறுதலும் என்ற தலைப்பில் நடந்த நிகழ்வில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் எழுத்தாளர் *கி.ரா.* பேசியதாவது:
‘‘நண்பர்களோடு சந்தோசமாக பேசி நேரத்தை கழிக்கவே விருப்பம். டாக்டர் பட்டம் யாருக்கு வேண்டும்? சாகித்ய அகாதெமி விருது தருவதாக கூறியபோது வேண்டாம் என்று மறுத்துவிட்டேன். விருதுகள் வேண்டாம். என்னை விளம்பரப்படுத்துவதையும் வெறுக்கிறேன். புகழை தேடி சென்றால் சீரழிவுதான். அதை தள்ளி விட்டால் தானாக வரும்.
என் மகன் புத்தகம் எழுதி அதையும் வெளியிடுகிறோம். உற்சாகப்படுத்துவது அவருக்கு விருப்பம். ஆனால், நான் எழுதத்தொடங்கிய போது யார் உற்சாகப்படுத்தினார்கள்? எதிர்ப்புதான் அதிகம். இப்படி எழுதக்கூடாது என்றனர். உண்மையி்ல்தமிழில் உரைநடை இலக்கியம் சரியாக வளரவில்லை. மக்கள் பேசும் தமிழில்தான் ஜீவனுள்ளது.
அழிந்து வரும் மொழிகளில் தமிழ் எட்டாம் இடத்தில் உள்ளதாக தெரிவித்து பலரும் பயந்தார்கள். ஒருகாலும் தமிழ் அழியாது. நாம் பேசும் வரை தமிழ் இருக்கும். மொழி தனது சட்டையை உரிக்கும். அதுதான் வளர்ச்சி. வதந்திதான் தானாக பரவும். நல்ல விசயம் பரவ காலதாமதம் ஆகும்.
பயணம் நல்லதுதான். ஆனால் பயணிப்பது மட்டுமே எழுத்தாளனுக்கு முக்கியமல்ல. சிறையில் இருந்தும்கூட பல காவியங்கள், கீர்த்தனைகள் உருவாகியுள்ளன.
ஒரு விஷயத்தை தீர்மானிக்கும் போது மக்களை அரசியல்வாதிகள் கண்டுகொள்வதில்லை. தேர்தலில் நல்ல மனிதர்களை தேர்வு செய்யுங்கள். பாதகமான கட்சிகளில் நல்லவர்கள் இருந்தாலும் அவரை தேர்வு செய்ய தயங்காதீர்கள்.
தேர்தலில் வாக்களிக்க பணம் கொடுத்தால் வாங்கிகொள்ளுங்கள். அது அவர்கள் பணமல்ல. நம் பணம்தான். அவ்வாறு பணத்தை வாங்கினாலும் போட்டியிடுவோரில் நல்ல மனிதரையே தேர்வு செய்யுங்கள். தேர்தலில் யோக்கியனையே தேர்ந்தெடுக்க மறக்காதீர்கள்" என்று குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் கிராவின் மனைவி கணவதி அம்மாள், வழக்கறிஞர் கே.எஸ.ரராதாகிருஷ்ணன், பேராசிரியர் பஞ்சாங்கம் உட்பட பலர் பங்கேற்றனர். கிராவின் மகன் பிரபி எழுதிய கரிசல் மண்ணில் மறக்க முடியாத மனிதர்கள் நாவல் வெளியிடப்பட்டது.
#கிரா_96உரை
#Ki_ra_96_Birthday_Speech
#KSRPostings
#KSRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
17/09/2018
No comments:
Post a Comment