Sunday, September 16, 2018

*கி.ரா. 96 விழா*







------------------------
கி.ரா. 96 - விழா புதுவை மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தில் இன்று காலை சாகித்திய அகாடெமி விருதுபெற்ற மூத்தப் படைப்பாளி *இளம்பாரதி* அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

 நானும், பேராசிரியர் பஞ்சாங்கம், சிலம்பு செல்வராஜ், பக்தவச்சலம் பாரதி போன்றோர் பங்கேற்றோம். அந்த விழாவில் கி.ரா.வின் புதல்வர் பிரபியுடைய ‘*கரிசல் மண்ணில் மறக்கமுடியாத மனிதர்கள்*’ என்ற நூலை இளம்பாரதி வெளியிட முதல் பிரதியை நான் பெற்றுக் கொண்டேன். 

இந்த நிகழ்வில் நான் கலந்து கொண்டு உரையாற்றும் போது, மறைந்த கவிஞர் மீரா அவர்கள் என்னை சந்திக்கும்போதெல்லாம் கி.ரா.வுக்கு முனைவர் பட்டம் வழங்கியிருக்க வேண்டாமா என்று ஆதங்கத்தோடு சொல்வார். இங்கு குறிப்பிடுவது இன்றைக்குள்ள முனைவர் பட்டமல்ல. நான் சொல்வது 40 ஆண்டுகளக்கு முன்னால்  1970, 80 துவங்கிய காலகட்டம். அப்போது தமிழகத்தில் இரண்டு பல்கலைக்கழகங்கள் தான் சென்னை மற்றும் மதுரை பல்கலைக்கழகங்கள் தான்.
மேலும், இலக்கியத்திற்காக வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருது அகிலன், ஜெயகாந்தனுக்கு பிறகு தமிழ் படைப்புலகில் யாருக்கும் வழங்கப்படவில்லை. அந்த விருது கி.ராவுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். இது ஒரு வேதனையான விடயமாகும்.  ஏனெனில், மலையாள மொழிக்கு 3 முறையும், கன்னடத்திற்கு 4 முறையும், தெலுங்கிற்கு 3 முறையும், வங்காளத்திற்கு 4 முறையும், இந்திக்கு பல முறையும் இந்த ஞானபீட விருது வழங்கப்பட்டுள்ளது. 

டெல்லி உச்சநீதிமன்றத்தில் அரசியலமைப்பு சாசன வழக்கறிஞர் ராவ் அவர்கள் ஒரு மணி நேரத்திற்கு பல லட்சங்களை தனது வழக்கு கட்டணமாக வாங்குபவர். அவர் ஒரு முறை கி.ரா.வின் கோபல்ல கிராமம்  நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பை படித்துவிட்டு அவரை பாராட்டியதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. 

இன்றைக்கும் 96 வயதிலும் கிரா தனது படைப்புகளில் இயங்கிக் கொண்டே இருக்கிறார். ஒரு விவசாயி. விவசாயிகள் சங்க போராட்டத்தை நடத்தி 1970களில் பாளையங்கோட்டை சிறைக்கு சென்றவர். ஒரு பொதுவுடைமைவாதி 1950களிலேயே திருநெல்வேலி சதி வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர். நாட்டுப்புறவியல் அறிஞர், வாழ்வியல் அறிஞர். படைப்புலகின் மூத்த முன்னத்தி ஏர், ரசிகமணியின் தோழர் என்று பல அடையாளங்களில் இயங்கிக் கொண்டேயிருக்கிறார். அவர் பல்லாண்டு வாழ்க. 

*கி.ரா. அவர்கள் பேசியதன் சுருக்கம்.*

பேச்சுத் தமிழ்தான் மொழியின் ஆதாரம். அதை புறந்தள்ள முடியாது. தமிழ் இன்றைக்கும் கன்னித் தன்மையை கொண்டது. ஹீப்ரூ, லத்தீன் போன்ற பழைய மொழிகள் அழிந்த பின்னும் தமிழ் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. சமஸ்கிருதத்தில் தாலாட்டு, ஒப்பாரி ஆகியன கிடையாது. தமிழ் மொழியின் இயல்புகள் சமஸ்கிருதத்தில் கிடையாது. அதை கொண்டாடும் போது நாம் தமிழை உச்சத்தில் வைத்து பார்க்க வேண்டாமா? பேச்சுத் தமிழும், வழக்குச் சொற்களும் எல்லா மொழிகளிலும் உண்டு அதை தொடர்ந்து பாதுகாப்பது ஒவ்வொருவருடைய கடமை. சந்தன மரம் வளர வேண்டுமென்றால் வேறு மரங்கள் பக்கத்தில் வளர வேண்டும். புலமைப்பித்தன் சொல்வார். எந்த மொழியையும் யாராலும் அழிக்க முடியாது. அதை பேசுபவர்களால் தான் அதற்கு பாதகம் ஏற்படும். நரிக்குறவர்களில் ஒருவர் இருந்தாலும், அவர்கள் பேசும் பாஷைகள் இருந்து கொண்டு தான் இருக்கும். மொழிக்கு இறுதி கிடையாது. மனிதர்கள் வருவார்கள், போவார்கள். மானிடமும், மொழியும் என்றும் நிரந்தரமானவை. அதை பாதுகாப்பதன் பொறுப்பு அந்தந்த மொழியை பேசுபவர்களின் கைகளில் தான் உள்ளது. 

உலகில் இதுவரை ஆயிரக்கணக்கான மொழிகள் அழிந்துள்ளதாக தகவல். நாட்டுப்புறவியலையும், பண்பாட்டையும் சிலர் கவனிக்கத் தவறுகின்றனர். ஒவ்வொரு மண்ணின் இயல்பு, மண்வாசனை, கலாச்சாரம், வழக்காறுதல் ஆகியவற்றை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதென்பது தங்களது பிள்ளைகளை பாதுகாப்பது போன்று தார்மீக பொறுப்பாக ஒவ்வொரு மனிதருக்கும் உண்டு. 
நான் பிறந்தநாள் விழா கொண்டாடுவதில்லை. என் நண்பர்கள் இந்த மேடையை அமைத்துவிட்டார்கள். என்னை வாழ்த்திய அனைவருக்கும் என்னுடைய மனங்கனிந்த நன்றிகள்.

#கி_ரா_96_உரை
#Ki_ra_96_Birthday_Speech
#KSRPostings
#KSRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
16/09/2018

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...