Tuesday, September 11, 2018

எட்டையபுரம் பாரதி பிறந்த இல்லமும், தலைவர் கலைஞரும்.எனது பார்வையும்.......







---------------------------------

கலைஞர் முதல்வராக இருந்தபோது, அப்போது ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டம் எட்டையபுரத்தில் 12/05/1973 அன்று பாரதி பிறந்த இல்லத்தினை நாட்டுடமையாக்கி அதை நினைவில்லமாக அறிவித்தும் திறந்தும் வைத்தார். அந்த நிகழ்வில் கூட்டுறவு அமைச்சராக இருந்த சி.பா.ஆதித்தனார், உணவு அமைச்சராக இருந்த மன்னை பா. நாராயணசாமி, அன்றைய அகழ்வராய்ச்சி இயக்குநர் நாகசாமி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ரா. சண்முகசிகாமணி, இ.ஆ.ப., ஆகியோர் பங்கேற்று சிறப்பாக நடைபெற்றது. 

கலைஞர் இந்த இல்லத்தை திறந்துவைத்து நினைவுப் கல்வெட்டையும் திறந்துவைத்தார். எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் 1981இல் பாரதியின் நூற்றாண்டு விழா எட்டையபுரத்தில் நடந்த போது கலைஞர் திறந்துவைத்த நினைவு கல்வெட்டுப் பலகையை பாரதியார் நினைவில்லத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு காணாமல் செய்துவிட்டனர். 

அடியேன் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக போட்டியிட்டேன். திமுக 1989இல் தமிழகத்தில் ஆட்சி அமைத்தது. அப்போது கோவில்பட்டி தொகுதியில் கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்வது எனது வாடிக்கை. ஒரு முறை எட்டையபுரத்திற்கு 1990களில் சென்றபோது, பாரதியால் நினைவில்லத்திற்கு சென்றேன். பாரதி நினைவில்லத்தில் இருந்த நண்பர்கள் இந்த நினைவில்லத்தினை திறந்து வைத்த கலைஞர் பெயர் அடங்கிய கல்வெட்டினை எம்.ஜி.ஆர் ஆட்சியில் எடுத்துவிட்டார்கள். அதை வைக்க வேண்டுமென்றும் என்னிடம் வலியுறுத்தினார்கள். அதற்ககான பணிகளை நான் மேற்கொண்டபோது 1991ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. பல்வேறு அரசியல் சூழ்நிலைகளால் அந்த முயற்சியை மேலும் தொடர்ந்து என்னால் எடுக்க இயலாமல் போய்விட்டது. 

இந்த நிலையில் ஒன்றை அழுத்தமாக சொல்லவேண்டும். அந்த பகுதியில் வலம் வந்த கட்சி முக்கியப் பிரமுர்களுக்கு இதைப் பற்றிய அக்கறை இல்லை. 1990இல் இந்த முயற்சியில் நான் இறங்கியபோது, வெட்டிப் பேச்சை பேசிய சவுடல் நாட்டாமை செய்த ஒருவர் பாரதியார் விட்டிற்கு இந்த கல்வெட்டு தேவைதானா என்று அவர் பேசும்போது, இப்படியெல்லாம் பேசாதீர்கள் என்று கடுமையாக எச்சரித்தேன். அவர் இன்றைக்கு இல்லை. அந்த காலக்கட்டத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய எங்களுக்கான அரசியலில் மரியாதை இருந்தது.

பாரதி நினைவில்லத்தில் 29 ஆண்டுகளாக கலைஞருடைய கல்வெட்டினை அப்புறப்படுத்தப்பட்டதை அறியாதவர்கள் எல்லாம் அந்த வட்டாரத்தில் வெற்று சவடால் அடித்து கொண்டு வலம்வந்தது தான் வேடிக்கையான செய்தி. இந்த ‘போர்டு’(கல்வெட்டு என்று சொல்ல தெரியாத பிரகஸ்பதி)  எதற்கென்று சொல்பவர் தான் நல்லவராக பிற்காலத்தில் திகழ்ந்தார். 

திரும்பவும் கடந்த 2009இல் இதற்கான முயற்சிகளில் நான் ஈடுபட்டேன். தமிழக அரசின் அனுமதியையும் பெற்று அப்புறப்படுத்தப்பட்ட கலைஞர் பெயரோடு இருந்த நினைவுக் கல்லை பாரதி இல்லத்தில் வைக்க தமிழக அரசின் உரிய அனுமதி பெற்று கடந்த 11/12/2009இல் பாரதி நினைவில்லத்தின் சுவற்றில் பதிக்கப்பட்டது. 

அந்த சமயம் திருச்செந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தல் பணியில் இருந்தபோது, திரும்பவும் கல் வைக்கும் நிகழ்ச்சியில் நானும், அன்றைய நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ச. தங்கவேலு மட்டும்  கலந்து கொண்டோம்.பலரை அழைத்தும் வேறு யாரும் கலைஞர் சம்பந்தமான நிகழ்வுக்கு வரவில்லை,.  அவர்களுக்கு இதை விட முக்கிய பணிகள் அன்று இருந்திருக்கலாம்.

இந்த செய்திகள் அனைத்து ஏடுகளிலும் அப்போது வந்தது. தினமணி 12/12/2009லும், அந்த வாரம் ஜுனியர் விகடனில் வெளிவந்த பெட்டிச் செய்தியையும் இத்துடன் இணைத்துள்ளேன். பதவிகள் இல்லை என்பதிலும் வருத்தம் கிடையாது. 
செய்ய வேண்டுவதை செய்கின்றோம் கடமையாற்றுகின்றோம் என்ற நிம்மதியோடு, 
“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின் றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்ன உரைப்பது கேட்டிரோ!”

என்று நம்முடைய பயணத்தை செய்தால் நமக்கு நல்லது. பதவி, பவுசுகளுக்காக சுமைகளை தூக்குவதும், நமக்கு அவசியமில்லை, கடமைகள் ஆற்றிக் கொண்டிருப்போம். பொது வாழ்வில் 48 ஆண்டுகள் பதவிகள், விளம்பரங்கள் இல்லாமல் பயணித்த சுவடுகளை திரும்பிப் பார்க்கும்போது செய்த பணிகள் ஏராளம். அது கம்பீரத்தையும், பிரம்மிப்பும் தருகிறது. பெரிய பதவியில் இருந்தவர்கள் கூட இந்தளவு பணிகளை செய்துள்ளார்களா என்பது காலத்திற்கும், இயற்கைக்கும் தெரியும். தொடர்ந்து என்னுடைய அரசியல் வாழ்க்கை தகுதியே தடை என்ற நிலையில் அமைதியாக இயங்கிக் கொண்டு தான் இருக்கிறேன். மனதில் தெம்பும், உடலில் வலுவும் இருக்கின்றது. இந்த பாரதியின் நினைவில்ல கல்வெட்டு பணிகளை பெரிய பொறுப்பில் இருந்தவர்கள் செய்திருக்கலாம். ஏன் செய்யவில்லை. 

இன்று பாரதியின் 97வது நினைவு நாள். திரும்பவும் கலைஞரைக் குறித்தான செய்தி. 

முண்டாசுக் கவி பாரதியாரை குறித்து தலைவர் கலைஞர் அவர்கள் அக்கினிக் குஞ்சு என்ற தலைப்பில் ஒரு அருமையானநீண்ட சொற்பொழிவாற்றியிருந்தார். அந்த சொற்பொழிவு பேச்சு திமுக தலைமைக் கழகத்தால் ஒரு பிரசுரமாக வெளியிடப்பட்டது.

#Bharathi
#பாரதி
#KSRPostings
#KSRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
11/09/2018

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...