Tuesday, September 11, 2018

உண்மையான கூட்டாட்சியை உருவாக்குவது எப்படி?

மின்னம்பலம் இணைய இதழில் கூட்டாட்சி, மாநில சுயாட்சி பற்றி உண்மையான கூட்டாட்சியை உருவாக்குவது எப்படி? என்ற தலைப்பில் வெளியாகிய எனது பத்தி வருமாறு. தொடர்ந்து இதை குறித்தான என்னுடைய கட்டுரைகளில் இறுதியாக இன்றைக்குள்ள அரசியல் நிலையில் கூட்டாட்சியும், மாநில சுயாட்சி பற்றியதொரு சுருக்கமான செய்திக் கட்டுரையாகும்.
இணைப்பு 1 - http://www.minnambalam.com/k/2018/09/10/4 இணைப்பு 2 - https://minnambalam.com/k/2018/09/09/9

சிறப்புக் கட்டுரை
***

இந்திய அரசியலில் ஆளுநர்களின் இடம் என்ன?
----------------------------------------------------------------------------------
ஆங்கிலேயர்கள் ஆட்சி நீங்கியவுடன் நம்முடைய அரசியலமைப்பு சாசனத்தை உருவாக்குவதற்கான பணிகள் நடந்தபோது, “உடைத்து நொறுக்க முடியாத மாநிலங்களைக் கொண்ட, நொறுக்க இயலாத கூட்டமைப்பு” என்ற கோட்பாட்டின்படி அமெரிக்க அரசியலமைப்புக்கு முற்றிலும் மாறான வகையில், “உடைத்து நொறுக்கக்கூடிய மாநிலங்களைக் கொண்ட, உடைத்து நொறுக்க இயலாத கூட்டமைப்பு” என்ற அடிப்படை நோக்கத்தில் நமது அரசியலமைப்பு சாசனத்தை நமக்கு நாமே உருவாக்கி அர்ப்பணித்துக்கொண்டோம்.
ஆனால், இந்தியத் துணைக் கூட்டாட்சிக் காரணிகள் வெறும் ஒப்புக்குத்தான் உள்ளன. பிரபல அரசியல் சாசன நிபுணர் பேராசிரியர் கே.சி.வியர் இந்தியத் துணைக்கண்டம் பெயரளவில் கூட்டாட்சி என்ற வித்தியாசமான அரசியலமைப்பைக் கொண்டுள்ளது என்று தனது கூட்டாட்சி நூலில் குறிப்பிடுகின்றார்.

மத்திய மாநில உறவில் சிக்கல்கள்

இந்திய அரசியல் சாசன நிபுணரும், இது குறித்தான ஆய்வு நூல்களைப் படைத்தவருமான க்ரான்வில் ஆஸ்டின், வலுவான ஒரு மத்திய அரசை உருவாக்கி அதே சூழலில் பலவீனமான மாநில அரசுகளை உருவாக்காமல் ஒத்துழைப்பு நிரம்பிய ஒரு கூட்டாட்சிதான் இந்தியா என்று சொல்கின்றார். கடந்த 72 ஆண்டுகளில் இந்தியக் கூட்டாட்சி அமைப்பு பல்வேறு நிலைகளைக் கடந்துள்ளது. கூட்டணி அரசியல், கட்சி அமைப்பினைக் கூட்டமைப்பாக மாற்றுவது, நீதித் துறையில் சில தலையீடுகள், வலுவான வட்டாரத் தலைவர்கள் மாநிலங்களில் உருவானது, மாநில ஆட்சிகளைக் கலைக்கும் பிரிவு 356, மத்திய அரசு தன் விருப்பம்போலப் பாதுகாப்புப் படைகளை மாநில அரசினுடைய அனுமதியில்லாமல் இறக்குவது, ஆளுநர்களை மத்திய அரசு தனது விருப்பம் போல நியமித்து மாநில அரசுகளுக்குத் தேவையில்லாத உருவாக்குவது போன்ற அணுகுமுறைகளில் இந்தியக் கூட்டாட்சி பல ஏற்ற, இறக்கங்களைக் கண்டுள்ளது. இப்போது டெல்லி மாநில அரசுக்கும், புதுவை மாநில அரசுக்கும் அங்குள்ள துணைநிலை ஆளுநர்களுக்கிடையே ஏற்படும் பிரச்சினைகளும் களையப்படாமல் இருக்கின்றன.
டெல்லி மாநில அரசுக்கு எதிரான துணைநிலை ஆளுநரின் போக்கை உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலை 2018, 4ஆம் தேதியன்று கண்டித்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்குத்தான் அதிகாரம் உள்ளது. அதில் தலையிட்டுத் துணைநிலை ஆளுநர் பிரச்சினைகளை எழுப்புவது நியாயமில்லை. பிரிட்டிஷ் காலனியாட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட ஆளுநர் பதவியை நிர்வாகி என்றுதான் இந்திய அரசியலமைப்புச் சாசனம் கூறுகிறது.
இந்திய அரசியலமைப்பு அவையில் ஆளுநர் என்பவர் வெறும் சம்பிரதாயத்திற்கு, பெயரளவில் ஒரு நிர்வாகி என்றுதான் அன்று விவாதிக்கப்பட்டது. அந்தச் சமயத்தில் அரசியலமைப்பு அவையின் உறுப்பினர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிஸ்வநாத் தாஸ் (இவர் பின்னாளில் உத்தரப் பிரதேச மாநில ஆளுநராகவும் இருந்தார்), ஆளுநரே நிர்வாகி. அவர் பெயரால் அரசுப் பணிகள் செய்ய வேண்டுமென்று கூறுவது சரியல்ல எனக் கூறினார். இதே கருத்தை மற்றொரு உறுப்பினரான கே.டி.ஷாவும் வழிமொழிந்தார்.

யாருக்கு அதிகாரம்?
நியமனப் பதவியான ஆளுநர், தனது கடமைகளை நிறைவேற்ற உரிய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென்று பண்டித ஜவகர்லால் நேரு, கே.எம்.முன்ஷி, தேஷ்முக் ஆகியோர் அரசியல் நிர்ணய சபையில் வலியுறுத்தினர். ஆனால், மகாத்மா காந்தியோ கீழ்மட்ட அமைப்புகளுக்கு, அதாவது உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்க வேண்டுமென்பதற்கு ஆதரவாக இருந்தார். இதுகுறித்து காந்தி 1947 டிசம்பர், 21ஆம் தேதி ஹரிஜன் இதழிலும் விரிவாக எழுதியிருந்தார். ஆளுநர் துலாக்கோல் நிலையில் இருந்து நடுநிலையாகத் தன்னுடைய பணிகளை ஆற்ற வேண்டுமேயொழிய தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்கு இடம் கொடுக்கக் கூடாது என்பது இந்த விவாத நேரத்தில் முன்வைக்கப்பட்டது.
ஆளுநருக்கு மாநில சட்டமன்றம், நிர்வாகம், நிதி, நீதி போன்ற துறைகளில் இருந்த பரவலான அதிகாரங்களைத் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு கோலோச்சிவருவது வாடிக்கையாகிவிட்டது. அது மட்டுமல்லாமல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மை பெற்ற ஒரு கட்சி ஆட்சியமைக்கும்போது, அரசியலமைப்பு சாசனப் பிரிவு 164இன்படி முதலமைச்சரை நியமிப்பது, சட்டமன்றத்தைப் பிரிவு 174இன்படி கூட்டுவது, ஒத்தி வைப்பது, அதைச் செயல்படாமல் நிறுத்தி வைப்பது, பிரிவு 356இன்படி குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரை செய்வது என்பதெல்லாம் இதுவரை பெரும் குழப்பங்களையும் பல சமயங்களில் உருவாக்கியுள்ளது.

தலைக்கு மேல் தொங்கும் கத்தி
உத்தராகண்ட் மாநிலத்தில் ஹரிஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசை மத்திய அரசு கலைத்துள்ளது. இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இதுவரை அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 356, 126 முறை பயன்படுத்தப்பட்டு மாநில அரசுகள் கலைக்கப்பட்டுள்ளன. முதல் முறையாக 1959ஆம் ஆண்டு காங்கிரஸ் இல்லாத நம்பூதிரிபாட் தலைமையில் அமைந்த கேரள மாநில அரசு நேரு பிரதமராக இருந்தபோது கலைக்கப்பட்டது. கேரளத்தில் நிலச் சீர்திருத்தச் சட்டம், புதிய கல்விக் கொள்கை என்ற பிரச்சினையால், கேரளாவில் நிலவிய சிறிய போராட்டங்களைக் காரணம் காட்டி அந்த அரசு கலைக்கப்பட்டது.
பிற்காலத்தில் இந்திரா காந்தி பிரதமராக இருந்த 16 ஆண்டுகளில் 50 மாநில அரசுகளைப் பிரிவு 356ஐக் கொண்டு கலைத்தார். இந்தியாவில் மொத்தத்தில் இதுவரை 126 முறையில் 88 முறை காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது மாநில அரசுகளைக் கலைத்தது. பண்டித நேரு 1947லிருந்து 1964 வரை ஆட்சியில் இருந்தபோது 8 மாநில அரசுகளைக் கலைத்துள்ளார். அவசரநிலைக் காலத்திற்குப் பின், ஜனதா அரசு மொரார்ஜி தலைமையில் அமைந்தபோது, மூன்று ஆண்டுகளில் (1977 - 1979) காங்கிரஸ் ஆளும் 16 மாநில அரசுகளைக் கலைத்துள்ளார்.
இந்திரா காந்தி மத்தியில் பிரதமராக இருந்தபோது ஜம்மு - காஷ்மீரில் ஃபரூக் அப்துல்லா ஆட்சியைக் கலைத்து, ஷா தலைமையில் ஒரு பொம்மை ஆட்சி அப்போது நிறுவப்பட்டது. ஆந்திரத்தில் என்.டி. ராமாராவ் ஆட்சியைக் கலைத்து பாஸ்கர் ராவ் தலைமையிலும் ஆட்சி அமைக்கப்பட்டது. சட்டப்பேரவையில் பெரும்பான்மை இருந்தும் ஜம்மு-காஷ்மீரிலும் ஆந்திரத்திலும் சட்டத்திற்குப் புறம்பாக அபத்தமாகக் கலைத்தபோது இந்தியாவே வெகுண்டு எழுந்தது. அப்போது என்.டி. ராமாராவ் தனக்குப் பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்கின்றது என்று காட்ட, தெலுங்கு தேச சட்டமன்ற உறுப்பினர்களோடு, டெல்லி ராஷ்டிரபதி பவனுக்கே சென்று பேரணி நடத்திக் குடியரசுத் தலைவரைச் சந்தித்தார்.
திமுக ஆட்சி இரண்டு முறை கலைக்கப்பட்டது. 1991இல் இரண்டு வருடம் ஆண்ட திமுக ஆட்சியை ஆளுநர் பர்னாலா பரிந்துரை இல்லாமலேயே அன்றைக்கு மத்தியில் இருந்த சந்திரசேகர் அரசு கலைத்தது.
பிரதமர் வாஜ்பாய் தலைமையில் 1999 லிருந்து 2004 வரை பொறுப்பில் இருந்த அரசு 5 மாநில அரசுகளைக் கலைத்தது. இந்தக் காலகட்டத்தில்தான் கர்நாடகாவில் அரசு கவிழ்க்கப்பட்டதற்காக எஸ்.ஆர்.பொம்மை தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ள மோடி அரசு மகாராஷ்டிரா, ஆந்திரா, ஜார்க்கண்ட், அருணாசலப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் ஆட்சியைக் கலைக்க 356ஐப் பயன்படுத்தியுள்ளது. இப்படி 356 என்பது மாநில அரசுகளின் தலைக்கு மேல் தொங்குகின்ற கத்தியாக இன்றைக்கும் இருக்கிறது.
உத்தராகண்ட்டில் ஆட்சி கலைக்கப்பட்ட பின் அம்மாநில உயர் நீதிமன்றம், இது தவறு என்று சொல்லி முதல்வராக இருந்த ஹரீஷ் ராவத், தனது பெரும்பான்மையை நிரூபிக்கலாம் என்று உத்தரவிட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் குடியரசுத் தலைவர் 356ஐப் பயன்படுத்தும்போது அமைச்சரவையின் பரிந்துரை இருந்தால் நீதித்துறை தலையிட முடியாது என்ற கருத்தை வெளியிட்டது.

பிரிவு 356 என்ன சொல்கிறது?
பிரிவு 356, மாநில அரசுகளைக் கலைத்துக் குடியரசுத் தலைவரின் ஆட்சியை நடைமுறைப்படுத்தும் உரிமையை மத்திய அரசுக்கு அளிக்கிறது. அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டபோது, இப்பிரிவு அடிக்கடி பயன்படுத்தப்படும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. டாக்டர் அம்பேத்கர் இப்பிரிவு செல்லாப் பிரிவு (Dead Letter) என்று கூறினார். இப்பிரிவு மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்குலையும்போதோ அல்லது மாநில அரசால் கையாள முடியாத நெருக்கடி நிகழும்போதோ மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதுதான் அரசியல் நிர்ணய சபையின் எதிர்பார்ப்பாக இருந்தது.
ஆனால், நடைமுறையில் இச்சட்டம், மத்திய அரசால், தனது அரசியல் எதிராளிகளைப் பழிவாங்கவும், தங்களுக்குச் சாதகமான அரசை மாநிலங்களில் அமைக்கவுமே பயன்படுத்தப்பட்டது.
ஜனதா கட்சியின் தலைவர் எஸ்.ஆர். பொம்மை ஆகஸ்ட் 1988இல் கர்நாடக மாநிலத்தின் முதல்வரானார். செப்டம்பர் 1988இல் ஜனதா கட்சியும் லோக் தளம் கட்சியும் இணைந்து ஜனதா தளம் என்ற புதிய கட்சியை உருவாக்கின. ஏற்கனவே சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு பெற்றிருந்த பொம்மைக்கு மேலும் 13 உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர். சில நாட்கள் கழித்து கே.ஆர். மொலகேரி என்னும் ஜனதா தள உறுப்பினர் மாநில ஆளுநரைச் சந்தித்து, தன்னை 19 உறுப்பினர்கள் ஆதரிப்பதாகவும், தன்னை ஆட்சியமைக்க அழைக்க வேண்டுமெனக் கூறினார். அதனை ஏற்ற ஆளுநர், பொம்மை சட்டசபையில் பெரும்பான்மையை இழந்துவிட்டதால், அவரது ஆட்சியைக் கலைத்துவிடலாம் என்று பரிந்துரைத்தார். ஆனால், மொலகேரி குறிப்பிட்ட உறுப்பினர்கள் தாங்கள் கட்சி மாறவில்லை என மறுத்தனர்; பொம்மை சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பை வழங்காமல், 1989 ஏப்ரல் 19ஆம் நாள், பிரதமர் ராஜீவ் காந்தியின் பரிந்துரையின் பேரில், குடியரசுத் தலைவர் வெங்கட்ராமன், பொம்மையின் அரசைக் கலைத்தார். கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைக்கு வந்தது. இதனை எதிர்த்து எஸ்.ஆர். பொம்மை தொடர்ந்த வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டபின், பொம்மை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
1994ஆம் வருடம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இவ்வழக்கை நீதிபதி குல்தீப் சிங் தலைமையில் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்புச் சட்ட பெஞ்சு விசாரித்தது. பொம்மையின் அரசைக் கலைத்தது செல்லாது என்று அறிவித்த நீதிபதிகளின் தீர்ப்பில் (S. R. Bommai V. Union of India, AIR 1994 Page 1918) பின்வரும் முக்கிய சட்ட விளக்கங்கள் இடம் பெற்றிருந்தன:
1. குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்துவது, நீதிமன்றப் பரிசீலனைக்கு உட்பட்டதாகும். தீய உள்நோக்குடன் (malafide) ஆட்சி கலைக்கப்பட்டிருக்குமெனில், கலைக்கப்பட்ட ஆட்சியை மீண்டும் பதவியில் அமர்த்த நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உண்டு.
2. பிரிவு 356இல் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரம் வரம்புக்கு உட்பட்டதே. நிபந்தனைகளுக்கும் மேற்பார்வைக்கும் உட்பட்டதே.
3. மத்திய அமைச்சரவை, குடியரசுத் தலைவருக்குச் செய்யும் பரிந்துரை நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் வராவிட்டாலும், அப்பரிந்துரை எந்தச் சான்றுகளின் அடிப்படையில் செய்யப்பட்டதோ அவற்றை நீதிமன்றங்கள் பரிசீலித்து ஆய்வு செய்யலாம்.
4. மாநில அரசுகளைக் கலைக்கும்போது காரண காரியங்கள் நேர்மையாகவும் உண்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க வேண்டும். கலைக்கப்பட்ட பின் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலை அவசியம் பெற வேண்டும்.
5. அரசியலமைப்புச் சட்டத்தைத் தவறாக பயன்படுத்தி ஆட்சி கலைப்பு செய்யப்பட்டிருக்கிறது என்று நீதிமன்றங்கள் கருதினால், கலைக்கப்பட்ட அரசை மீண்டும் பதவியிலமர்த்தும் உரிமை நீதிமன்றங்களுக்கு உண்டு.
6. இந்தியக் குடியரசின் மதச்சார்பின்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் ஊறு விளைவிக்கும் வகையில் செயல்படும் மாநில அரசுகளைக் கலைக்கும் உரிமை மத்திய அரசுக்கு உண்டு.

கூட்டாட்சியை வலுப்படுத்திய தீர்ப்பு
இத்தீர்ப்பின் பயனாக, பிரிவு 356இனைப் பயன்படுத்தி மாநில அரசுகள் கலைக்கப்படும் சம்பவங்கள் வெகுவாகக் குறைந்துவிட்டன. இத்தீர்ப்பு, மத்திய - மாநில அரசுகள் உறவில், மாநில அரசுகளின் நிலையைப் பலப்படுத்தியதன் மூலம் இந்தியக் குடியரசில் கூட்டாட்சியை (Federalism) பலப்படுத்தியுள்ளது.
பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்கள், அரசியல் சூழல்கள் உள்ள இந்தியாவில் பன்மையில் ஒருமை என்ற தத்துவத்தில் கடந்த 69 ஆண்டுகளாகப் பல சிக்கல்களைச் சந்தித்து அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட இந்தியாவில் சேதாரம் இல்லாமல் மக்களாட்சி நடைபெறுவது பன்னாட்டு அளவில் ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமைக்குரியதாகும்.
‪‪1977இல் ராஜஸ்தான் அரசு கலைக்கப்பட்டபோது, உச்ச நீதிமன்றத்தை அணுகியபோது, நீதிபதி பகவதி பிரிட்டிஷ் ஆட்சியைப் போல் அல்லவா இந்த 356 இருக்கிறது என்று வினா எழுப்பினார். இது இந்திய அரசியலில் அப்புறப்படுத்த வேண்டியது என்று கூறினார் (The State of Rajasthan vs. Union of India1977).
உச்ச நீதிமன்றத்தில் பொம்மை வழக்குக்குப் பிறகு, Kihoto hollohan vs Zachillhu and other & ‎Rameshwar Prasad and others vs Union of India 2005 என்ற இரண்டு வழக்குகள் பிரிவு 356ஐ எதிர்த்து விசாரணைக்கு வந்தன. அப்போது இந்தியா ஒற்றையாட்சி என்பதை விட கூட்டாட்சி என்று சொல்லாவிட்டாலும் ஒற்றையாட்சி - கூட்டாட்சியின் கலவை என்று கருதிக்கொண்டு 356ஐ மூத்த அண்ணன் மாதிரி விருப்பத்திற்கு ஏற்றவாறு பிரயோகிப்பது குடியாட்சி இல்லை என்ற கருத்தை உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இந்திய அரசியல் சட்டத்தில் செல்லாப் பிரிவு என்று சொல்லப்பட்ட பிரிவு356ஐக் கொண்டு பழிவாங்கல் நடந்ததை எல்லாம் வரலாறு சொல்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைத் தஞ்சாவூர் பொம்மையைப் போல ஆட்டி வைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை. இருப்பினும் மத்திய அரசு ஆணவத்தோடு கடந்த 69 ஆண்டுகளாகப் பிரிவு 356ஐக் கொடுமையாகப் பயன்படுத்திக்கொண்டுதான்வருகிறது. இந்த நிலையில் கூட்டாட்சி என்ற நிலைப்பாடு காட்சிப் பிழையாகிவிடக் கூடாது.
மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இல்லாத கட்சி ஒரு மாநிலத்தினை ஆட்சி செய்தால் அங்கு ஆளுநருடைய அணுகுமுறையும், நிலைப்பாடும் எப்படி இருக்கும் என்று கேள்வி பிஸ்வநாத் தாஸ் அரசியல் நிர்ணயச் சபையில் 1949 மே, 31 அன்று எழுப்பினார்.

பூர்த்தியாகாத மாநில அபிலாஷைகள்
மத்திய, மாநில உறவுகளில் இருக்கும் சிக்கல்களை அறிய 1966ஆம் ஆண்டு மத்திய அரசு அமைத்த நிர்வாக சீர்திருத்தக் கமிஷன், 1969ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் தமிழக அரசு அமைத்த இராஜமன்னார் குழு, மத்திய அரசு 1983ஆம் ஆண்டு அமைத்த சர்க்காரியா குழு, 2000ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டச் செயல்பாடுகளை பரிசீலிப்பதற்கான தேசிய கமிஷன், காஷ்மீர் மாநிலத்தில் ஃபாரூக் அப்துல்லா அமைத்த காஷ்மீர் சுயாட்சி குறித்தான ஆய்வுக் குழு, மத்திய அரசு 2007இல் அமைத்த நீதிபதி பூஞ்ச் கமிஷன் போன்ற குழுக்கள், கர்நாடக முதல்வராக ராமகிருஷ்ண ஹெக்டே இருந்தபோது, காங்கிரஸ் அல்லாத முதல்வர்கள் மாநாடு, என்.டி.ராமராவ் ஐதராபாத்தில் கூட்டிய காங்கிரஸ் அல்லாத மாநாடு, மேற்கு வங்க முதல்வராக இருந்த ஜோதிபாசு அவர்கள் கூட்டிய காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் மாநாடு, ஸ்ரீநகர் மாநில சுயாட்சி மாநாடு என மாநாட்டுத் தீர்மானங்களும், பிரகடனங்களும், அறிக்கைகளும் வெளியிடப்பட்டுள்ளன. இவை அனைத்துமே மாநில அரசுகளின் தேவைகளையும் அபிலாஷைகளையும் எடுத்துச் சொல்கின்றன. ஆனால், இவற்றின் மீது மேல் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

மாநில அரசுகளின் அபிலாஷைகள் பூர்த்தியாகாமலேயே உள்ளன.
பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள் கொண்ட பரந்த இந்தியாவில் நாட்டின் ஒற்றுமை, அரசியல் ரீதியான நிலைத்தன்மை தொடர்ந்து உறுதிபட இருக்க மாநிலங்களுக்கு உரிய அதிகாரங்களை வழங்கி, அவற்றின் இறையாண்மையைப் பாதுகாக்கக்கூடிய வகையில் மத்திய அரசு தன் கடமைகளை ஆற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம். அப்படியான நடவடிக்கைகள் இல்லையென்றால், இது குறித்து சர்க்காரியா கமிசன் அறிக்கையில் குறிப்பிட்டவாறு மத்திய அரசுக்கு ரத்த அழுத்தம் ஏற்படுத்தும் என்பதோடு, மற்றொரு பக்கத்தில் சோகை நோயை உருவாக்கி இறுதியில் செயலற்ற நிலைக்கு மத்திய அரசு சென்றுவிடும் என்ற எச்சரிக்கையையும் செய்துள்ளது.
கவர்னர்கள் காவல்காரன் என்று சொன்னாலும், அந்தக் காவல்காரர்களை யார் காவல் காப்பது என்பதுதான் இன்றைக்கு நிலைமை.
ஜனநாயகம் என்ற போர்வையில் மத்திய அரசு, மாநிலங்களுடைய அதிகாரங்களில் தலையிட்டு தேவையில்லாத பிரச்சினைகளை உருவாக்கும்போது, நிலைமை சீர்கெட்டுவிடும் என்பதை மத்திய அரசு உணர வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். மாநிலங்களைத் தன்னுடைய சாகாக்கள் என்று தோழமையோடு அழைத்துச் சென்றால்தான் இந்தியா பன்மையில் ஒருமையைக் காண முடியும். எனவே இன்றைய நிலையில் மத்திய மாநில உறவுகளில் பெரும் மாற்றங்கள், வர வேண்டியது அவசரமும் அவசியமுமானது.

கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
12/09/2018

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...