தற்சார்பு மரபுகளையெல்லாம் மீறி டெல்லி கிரிஷி பவன் அதிகாரிகள் கைகளில் விவசாயம் போனால் இந்தியா எப்படி உருப்படும்.
--------------------------------------------



என்னுடைய கிராமத்தில் எனக்கே நினைவுகள் உள்ளன. குறிப்பாக சம்பா வகை நெல்வகைகள் அப்போது பயிரிடப்பட்டன. அந்த நெல் பயிரிடுவதற்கு முன், நாற்றுப் பாவதற்கு முன்னால் ஆவரை, கொழிஞ்சி இலைகளை கொண்டு தண்ணீர் நிரப்பி கலப்பையால் மண்ணை பக்குவப்படுத்தி சம்பா நெல் நாற்றை நட்டுவதுண்டு. இன்றைக்கு அந்த கொழிஞ்சி இலைகளோ ஆவரை இலைகளே இல்லாமல் பிஏபி, யூரியா, பொட்டாஷ் ஆகியவற்றை மண்ணில் கலந்து நெல் நாற்றை நட்டுகிறார்கள். இது மண்ணுக்கும், விளைவிக்கும் நெல்லுக்கும் நஞ்சைத்தான் பரப்பும். சம்பா பயிரோடு நிறுத்திவிட்டு 1968 காலக்கட்டங்களில் இந்தோனேசியா அரிசி ரகத்தோடு இணைந்து கலப்பு நெல் விதையான ஐஆர் 8 என்ற நெல்வகை விவசாயிகள் மத்தியில் அறிமுகப்படுப்பட்டது. இந்த அறிமுகம் எங்கள் ஊரில் அருகில் உள்ள கோவில்பட்டி நகரத்தில் உள்ள அரசு விவசாயப் பன்ணையில் இருந்து (இன்றைக்கு தமிழ்நாடு விவசாயிகள் வேளாண் ஆராய்ச்சி மையமாக மாறிவிட்டது.) அதிகாரிகள் வந்து ஒவ்வொரு கிராமமாக இந்த ஐ.ஆர் 8 வகையை பிரபலப்படுத்தினார்கள். இதே மாதிரி சேலம் ஆத்தூர் விவசாயப்பன்னையும், தஞ்சை மாவட்டம் ஆடுதுறை விவசாயப்பன்னையும் இதற்கான முக்கியப் பணிகளை மேற்கொண்டதால் நம்முடைய பாரம்பரிய நெல்விதைகளுடைய அன்றைக்கு தான் வெளிப்படையாக தொலைக்க ஆரம்பித்தோம். அதற்கு பிறகு இன்றைக்கு பலவிதமான கலப்பின நெல் விதைகள் வந்துவிட்டன. இந்த 1968 காலக்கட்டத்தில் எங்கள் ஊர் அருகேயுள்ள கழுகுமலை சர்வோதய மண்டலத்தின் சஞ்சாலக் பொறுப்பில் இருந்த என்னுடைய உறவினர் இராமானுஜம் அவர்கள் வினோபாவின் சீடராவார். அவர் 1964இல் தமிழ்நாட்டிலேயே சர்வோதய மாநாட்டினை ஜெயப்பிரகாஷ் நாராயணனை அழைத்து கழுகுமலையில் எழுச்சியாக நடத்தியவர். அவர் ஊர்ஊராக சென்று ஐ.ஆர் 8 வகையை பயன்படுத்தாதீர்கள். எதிர்காலத்தில் நமக்கு ஆரோக்கியத்தையும், மரபு ரீதியான விவசாயத்தையும் அழித்துவிடும் என்று பிரச்சாரத்தை மேற்கொண்டதெல்லாம் எனக்கு நினைவில் உள்ளன. எங்களுடைய கிராமத்தின் ஒரு பகுதி குளத்துப் பாசனம், கிணற்று பாசனம், மானாவரி நிலங்களும் உண்டு. அந்த நீர் வசதியில்லாத மானாவரி நிலங்களிலேயே அந்த காலத்தில் புழுதிபிரட்டி என்ற நெல்லை உற்பத்தி செய்தோம். இன்றைக்கு அப்படியான மானாவரி விவசாயம் செய்ய முடியுமா என்பது கேள்விக்குறி. ஏனென்றால் நமது மரபுரீதியான விவசாயத்தை விட்டுவிட்டு பாரம்பரிய பழக்கவழக்கங்களை தொலைத்துவிட்டோம். இதற்கு அரசும் ஒரு காரணம். நேருவின் அமைச்சரவையில் இருந்த உணவு அமைச்சர், காந்தியின் சகாவுமான கே.எம்.முன்ஷி தொடர்ந்து இயற்கை, மரபுரீதியான விவசாயத்தை பாழ்படுத்திவிடாதீர்கள் என்று நேரு தலைமையில் நடந்த ஒவ்வொரு மத்திய அமைச்சரவைக் கூட்டத்திலும் வாதிட்டார். இவர் ஒரு சிறந்த கல்வியாளர். பாரதிய வித்யா பவனை நிறுவியவர். அரசியலமைப்புச் சாசனத்தை எழுதும்போது முக்கியப் பங்கு வகித்தவர். கே.எம்.முன்ஷி கீழிருந்து மேலாக வளர்ந்து செல்ல வேண்டியது தான் விவசாயம், மண்ணும், நிலமும் தான் அடிப்படை ஆதாரம் என்று வலியுறுத்தினார். அந்த மண்ணும், நிலமும் தான் கிராமம். கிராமம் தான் நாடு என்று பிரகடனப்படுத்தினார். அந்த கிராமங்களில் இருந்து தான் உபரியையும், சந்தையையும் அமைக்க வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தினார். தற்போது நடக்கும் விவசாயம் முக்கியமாக சந்தையை வைத்தே வியாபாரமாக நடக்கின்றது. நிரந்தரமான விவசாயம் இல்லை என்று 72 ஆண்டுகளுக்கு முன்னாலேயே எச்சரித்தார். முன்ஷி சொன்ன கருத்தை தான் சற்று விசாலமான பார்வையில் இயற்கை விவசாய ஆர்வலர்கள் இன்றைக்கு இந்த அரிய பணியை மேற்கொண்டு வருகின்றனர். நிரந்தர வேளாண் அமைப்பு பெர்மாகல்ச்சர் 1. நிரந்தர வேளாண் அமைப்பு செய்யப்பட்ட இடத்தில் மீண்டும் மீண்டும் உழவு செய்யத் தேவை இருக்காது. தொடர்ந்து விதைத்தலும், அறுவடை செய்தலுமே செயல்பாடாக இருக்கும் 2. நீர், காற்று, சூரிய ஒளி மூன்றையும் சரியான முறையில் பயன்படுத்துவது இதன் சிறப்பு. பெர்மாகல்ச்சர் எனும் சொற்பிரயோகத்தை ஆஸ்திரேலிய வேளாண் விஞ்ஞானி திரு. பில்மொலிஸன் தான் முதலில் கொண்டு வந்தார். அதன் தமிழக வடிவமே திரு டாக்டர். கோ. நம்மாழ்வார் சொல்லும் வட்டப் பாத்தி, சதுரப் பாத்தி, மடிப்பாத்தி வகைகள். விவசாய மண் சார்ந்து இப்போது விவசாயம் நடக்கவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. இன்றைக்கு விவசாயத்தின் அடிமட்டமான நிலம், மண், கிராமம் என்றில்லாமல் நகர்புறத்தில் உள்ள சந்தையில் இருந்து துவங்கினால் அது எப்படி உண்மையான விவசாயமாக இருக்க முடியும். ஒவ்வொரு வட்டார கிராமப் பகுதிகளுக்கு, தட்ப வெட்ப நிலை, சுற்றுச் சூழல், நிலவளம், நீர்வளம், பயிர்வளம் என்பது மரபுரீதியாக வித்தியாசப்படும். கடற்கரைப் பகுதியில் வாழை பயிர் செய்யமுடியாது. புஞ்சை, நஞ்சை என்று நிலங்களுக்கேற்ற பயிர்களைத் தான் நாம் மரபு ரீதியாக பயிர் செய்ய முடியும். அந்த மரபுகளையெல்லாம் மீறி டெல்லியில் உள்ள கிரிஷி பவனில் உள்ள அதிகாரிகளின் கைகளில் விவசாயம் போனால் இந்தியா எப்படி உருப்படும். நீர் சுழற்சி, பயிர்களுக்கு ஊட்டச்சத்து சுழற்சி இரண்டும் இருந்தால்தான் தானியங்களும், விளைப் பொருட்களும் சத்தாக இருக்கும். மாறாக இன்றைக்கு இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதால் அதில் விளையும் பொருட்களை உண்டு நமக்கு நாமே நோய்களை உருவாக்கிக் கொள்கிறோம். இந்த நிலையில் நவீன விவசாயம் என்று ரசாயன உரங்களை அள்ளி நிலங்களில் வீசுவதால் மண்ணின் இயற்கைத் தன்மையும் மாறி நம்முடைய மண் வாசனையை நாசப்படுத்துகிறோம். இது நியாயம் தானா என்று நினைக்க வேண்டும். இந்த அத்துமீறல்கள் அரசாங்கத்தின் ஆதரவாலும், ஒத்துழைப்பாலும், தீவிரப் பிரச்சாரங்களாலும் நமது மரபு ரீதியான விவசாயங்களை தூக்கி எறிந்துவிட்டு நம் மண், நிலத்தையும் நாசப்படுத்திவிட்டு நம்முடைய உடம்பையும் கெடுத்துக் கொள்கிறோம். அதுபோக பாரம்பரியமான விதைகளையும் அழித்துவிட்டோம். ஆயிரக்கணக்கான பண்டைய நெல் ரகங்கள் இன்றைக்கு நம்மிடையே இல்லை. ஒரு சில நெல் நீர்ப்பாசன வசதி இல்லையென்றாலும் குறுகிய காலத்தில் 110 நாட்களில் ஒரு ஏக்கருக்கு மரபு ரீதியான நெல்வகைகள் கடந்த 1960வரை 2100 கிலோ நெல் தானியத்தை அறுவடை செய்யப்பட்டது. இது வானம் பார்த்த இராமநாதபுரம் மாவட்டத்திலும் இந்த மாதிரி நெல் ரகங்கள் விளையும். அவற்றில் சில, “புழுதிபுரட்டி, பாற்கடுக்கன், பனைமூக்கன், சிறைமீட்டான், மலைமுண்டன், கருஞ்சூரை, யானைக்கொம்பன், போரிறங்கல், வாள்சுருணை வாலன், தென்னரங்கரன், செம்பாளை, கறுத்ததிக்கராதி, கண்டசாலி, திருக்குறுங்கை, காடைக்கழுத்தன், குடவாழை, முத்துவெள்ளை, திருப்பதிசரம்” என நூற்றுக்கணக்கில் உள்ளது. இதற்கெல்லாம் பாசன வசதி குறைவு தான். அன்றைக்கு நம் முன்னோர்கள் எல்லாம் இது மாதிரி இரசாயன உரங்களை பயன்படுத்தாமல் தங்களுக்கான உரங்களை பாரம்பரிய முறைப்படி எரு, கொழிஞ்சி இலை, மண்புழு போன்றவற்றை கொண்டு விவசாயம் மேற்கொண்டார்கள். இன்றைக்கு இதே இராமநாதபுரம் பெரியகுளம் நிரம்பினால் தான் நெல் விவசாயம் செய்ய முடியும் என்கிற நிலைமை. இதற்கு காரணம் என்ன? மரபு ரீதியான விவசாயத்தினை தொலைத்தோம், மண்ணைத் தொலைத்தோம், நிலத்தை தொலைத்தோம், நம் ஆரோக்கியத்தை தொலைத்தோம். இது தான் நவீன விவசாயம். இதற்கு ஆதரவாக டெல்லியிலுள்ள கிரிஷி பவனும், நம்முடைய பாரம்பரியத்தை தொலைத்துக் கட்ட கடுமையாக பாடுபடுகிறது. விதியே, விதியே தமிழ் சாதியே!!! வேறென்ன சொல்ல முடியும்.
-தொடரும்...
நன்றி, படங்கள்.
ஆரண்யா பெர்மாகல்ச்சர்
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
05-09-2018
No comments:
Post a Comment