Sunday, September 9, 2018

*எழுவர் விடுதலை

*எழுவர் விடுதலை - கவர்னருக்கு எந்த வேலையும் கிடையாது. தமிழக அரசு தீர்மானத்தை ஏற்றுக் கொள்வது தான் அவருடைய கடமையாகும்.*
------------------------
இன்றைக்கு (09/09/2018) மாலை தமிழக அமைச்சரவை கூடி இராஜீவ் படுகொலையில் குற்றவாளிகளாக 27 வருடம் சிறைக் கொட்டடியில் வாடி இரணப்பட்டவர்களை விடுதலை செய்யலாம் என்று தீர்மானத்தை நிறைவேற்றி தமிழக ஆளுநருக்குப் அணுப்பியுள்ளனர். 

இந்த விடயத்தில்,
1. இந்த தீர்மானம் ஆளுநருக்கு கிடைத்தவுடன் தாமதமில்லாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதன்பின், *தமிழக அரசே இந்த 7 பேரை விடுதலை செய்யலாம்.*

2. சிறைக்கொட்டடியில் நீண்டகாலம வாடுபவர்களை குறிப்பிட்ட முக்கியமான விழா நாட்களில் விடுவிப்பதும் நடைமுறையில் உண்டு. 

3. ஆளுநர் இதைப் பெற்றுக்கொண்டு தேவையில்லாமல் காலந்தாழ்த்துவதோ, மத்திய அரசிடம் கேட்க வேண்டுமென்றோ, குடியரசுத் தலைவரிடம் தெரிவிக்கவேண்டும் என்று சொல்வதற்கெல்லாம் அவசியமே கிடையாது. *Council of Ministers Advice is Paramount* என்ற பிரிட்டிஷ் நாடாளுமன்ற (Westminister System) கொள்கையின் அடிப்படையில் தமிழக அமைச்சரவையின் இந்த தீர்மானத்தை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டியது தான் கவர்னரின் கடமையாகும். இதில் அந்த வழக்கு இந்த வழக்கு என்று சொல்லவும் கவர்னருக்கு எந்தவித அதிகாரம் கிடையாது. ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் இராஜீவ் படுகொலை வழக்கு என்றாலும், கொலை வழக்கு என்று தான் பார்க்க வேண்டுமென்றும், *மாநில அரசுக்கு தான் முழுமையான அதிகாரம் இருப்பதாக தீர்ப்பளித்த பிறகு ஆளுநருடைய விருப்பத்திற்கேற்றவாறு நடக்க முடியாது*. 

4.கடந்த  திமுக ஆட்சிக் காலங்களில் கலியபெருமாள், தியாகு அவர்களுடைய சகாக்கள் இருவர் என்று மொத்தம் நான்கு பேரை கலைஞர் முதல்வராக இருந்தபோது;அமைச்சரவை கூடி இந்த நான்கு பேரை விடுதலை செய்யவேண்டுமென்று என்ற தீர்மானங்களை அன்றைய ஆளுநர் ஏற்றுக் கொண்டார். அதே போல 1996-2000 திமுக ஆட்சிக்காலத்தில் இராஜீவ் படுகொலையின் குற்றவாளி நளினியின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க கலைஞர் தலைமையில் அன்றைய தமிழக அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பியது. அன்றைய ஆளுநர் பாத்திமா பீவியும் அதை ஏற்றுக் கொண்டார். இந்த காலக்கட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இது குறித்த பரிசீலனைக்குச் சென்றபோது, நீதிபதி கோவிந்தராஜ் அமைச்சரவை தீர்மானத்தை ஆளுநர் ஏற்றுக் கொள்ள வேண்டிய அரசியலமைப்புக் கடமை உள்ளது என்ற உத்தரவையும் பிறப்பித்தார்.

5. இந்த 7 பேரும் 27 ஆண்டுகளுக்கு மேலாக தங்களுடைய இளமையை பலியிட்டு, கொட்டடியில் சிறைவாசத்தில் சொல்லமுடியாத தண்டனையையும் பெற்றுவிட்டனர். இதை மனதில் கொண்டே இவர்களை விடுதலை செய்ய வேண்டும். ஏனெனில், 1983இல் வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசான குருசாமி நாயக்கர் ஒரு கொலை வழக்கில் தூக்கு தண்டனை திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் அளித்து, சென்னை உயர்நீதிமன்றமும், இந்திய உச்ச நீதிமன்றமும் அதை உறுதி செய்தது. அதற்கு மேல் குடியரசுத் தலைவரிடம் வழங்கப்பட்ட கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. அந்த நிலையில் தூக்கு தண்டனை இரண்டு, மூன்று நாட்களில் நிறைவேற்றப்பட வேண்டிய நேரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில், "*என்னை காப்பாற்றுங்கள். நான் நீண்ட நாட்கள் சிறையிலிருந்துவிட்டேன்*" என்று அனுப்பிய தந்தியை வழக்கு மனுவாக பாவித்து நீதிபதிகள் வி. இராமசாமி, டேவிட் அன்னுசாமி அடங்கிய சென்னை உயர்நீதிமன்ற அமர்வு தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி அதன்பின் இரண்டு ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கை நான்தான் நடத்தினேன்.

அந்த வழக்கின் தீர்ப்பில் *கொலை வழக்காக இருந்தாலும் தனிமைக் கொட்டடியில் குருசாமி இருந்ததும், அவருடைய இளமைக் காலம் பலியானதும் கணக்கில் கொண்டு அவருடைய தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து இரண்டாண்டுகளில் அவரை விடுதலை செய்ய வேண்டுமென்று தீர்ப்பு வழங்கினர்*. மரண தண்டனையை குறைத்து ஆயுள் தண்டனையாக ஆக்கியதும், சிறையில் வாழ்க்கை முடியும் வரை சிறையில் இருக்க வேண்டிய அர்த்தம் கிடையாது என்ற சூழ்நிலையில் பொருள்படாது. எனவே இந்த 7 பேரின் தூக்கு தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக்கிவிட்டனர். மேலும் 27 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்துவிட்டனர். அவர்ளை உடனடியாக விடுதலை செய்யவேண்டிய நியாயங்கள் முழுமையாக உள்ளன. 

6. இத்தகைய சூழலில் தமிழக ஆளுநர் இந்த 7 பேரின் விடுதலை குறித்தான தீர்மானத்தை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும். அப்படி மாறுபட்டாலும் தமிழக அரசு இரண்டாவது முறை (*Second Reading*) தீர்மானத்தை நிறைவேற்றி அதையும் ஆளுநர் ஏற்றுக் கொள்ளவில்லையென்றால் தமிழக அரசே அவர்களை நேரடியாக விடுதலை செய்யலாம். இது தான் நிலைப்பாடு. 

7. பிரிட்டிஷ் நாடாளுமன்ற முறை, அங்குள்ள அமைச்சரவை செயல்பாடுகளை குறித்தே இந்திய ஜனநாயகம் இயங்குகிறது. அந்த அடிப்படையில் உச்சநீதிமன்ற தீர்பபின்படி தமிழக அமைச்சரவை முழுமனதாக நிறைவேற்றிய தீர்மானம் அப்படியே செயல்பாட்டுக்கு வரவேண்டியது தான் சரியான சட்டப்பூர்மானதாகும். 

இந்த நிலைகளையும் மீறி ஆளுநர் மேற்கொண்டு எதுவும் செய்யமுடியாது. அப்படியே அவர் ஏதாவது மத்திய அரசிடமோ, குடியரசுத் தலைவரிடமோ ஒப்புதல் பெறவேண்டுமென்று சொன்னால் அது தவறான முன்னுதாரணமாக ஆகிவிடும். *சட்டத்தின் ஆட்சி* என்ற வகையில் இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமாக போய்விடும். அரசியலமைப்பு சாசனத்தை காக்கப்பட வேண்டிய நிலை அனைவருக்கும் உண்டு. அதிகார வர்க்கம் சட்டத்தின் ஆட்சியையும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டே நடந்து கொள்ள வேண்டும்.

#இராஜீவ்_படுகொலை
#Rajiv_Assassination
#Release_7_innocent_people
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
09-09-2018


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...