Sunday, May 19, 2019

ஓட்டப்பிடாரம் இடைத் தேர்தலும்... பாழ்ப்படுத்தப்பட்ட ரூபிகாவின் ரணங்களும்.......

ஓட்டப்பிடாரம் இடைத் தேர்தலும்....... பாழ்ப்படுத்தப்பட்ட ரூபிகாவின் ரணங்களும்....... 
________________________
விவசாயிகளின் கஷ்ட நஷ்டங்களும்........ பெரியகுளமும்,மலர்க்குளமும், கோராம்பள்ளம் வெள்ளதடுப்பும்....
_______________________
கடந்த மார்ச் 21 லிருந்து கவிஞர் கனிமொழிக்கான தேர்தல் பணிகள்,கோவில்பட்டி, விளாத்திகுளம் பகுதிகளில் ஆற்றக் கூடிய சூழல் ஏற்ப்பட்டது. ஏப்ரல்22லிருந்து ஓட்டப்பிடாரம் பகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தலில் கழக வேட்பாளர் சண்முகய்யாவை ஆதரித்து தேர்தல் பணிகள் தொடர்ந்தன.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே சண்முகய்யா ஓட்டப்பிடார வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதனால் அப்போதே அவர்க்கான பிரச்சாரப் பயணம் தொடங்கப்பட்டு அத்துடன் கனிமொழியின் நாடாளுமன்றப் பிரச்சாரமும் நடைபெற்றது.

இந்த தேர்தலுக்காக ஏறத்தாழ ஐம்பது கிராமங்களுக்கு ஆதரவு திரட்ட செல்ல நேர்ந்தது.அந்த கிராமங்களில் உள்ள நிலையை அறிந்து பணியாற்ற கழகத் தலைவர் தளபதிஅவர்களும்,தேர்தல் பொறுப்பாளர் அண்ணன் நேரு அவர்களும், மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களும் என்னை அறிவுறுத்தினார்கள்.

கடந்த முப்பது நாட்களுக்கும் மேலாக ஓடடப்பிடாரம் தொகுதியில் களப்பணியாற்றியதில்,நீண்டநாட்களுக்குப் பின்னர் திரும்பவும் அந்த வட்டாரத்தில் பழைய நண்பர்கள், வேண்டியவர்களை எல்லாம் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியதில் மகிழ்ச்சி.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கும் முன்னால் காயலூரணி கிராமத்தைச் சேர்ந்த19 வயது ரூபிகா என்ற பெண் கொடுமையாக பாழ்படுத்தி சாகடிக்கப்பட்ட வேலி காட்டில் தூக்கி வீசப்பட்ட சமபவம் அந்த வட்டாரத்திலுள்ள மக்களை அப்பொழுது வேதனைப்படுத்தியது.
அந்தக் குடும்பத்தினர் எனக்கு வேண்டப்பட்டவர்கள். காயலூரணி சென்றபோது அந்தப் பெண்ணின் தந்தையையும், சகோதரியையும் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது.
அந்த சமயத்தில் ரூபிகாவின் தந்தை நீங்கள் என் பெண்ணிற்கு நேர்ந்த அநீதிக்காக நீதி கேட்பு பேரணியில் கலந்து கொண்டீர்கள் என்பதை ஞாபகப்படுத்தினார்.

ரூபிகாவைப் பாழ்படுத்தி சாகடித்தப் பிரச்சனை கொளுந்து விட்டு எரிந்தபோது இந்த வட்டார மக்களே வேதனையில் துடித்தபோது தூத்துக்குடியில் இது பற்றிய நீதி கேட்புப் பேரணிக்கும் அனுமதியும் வழங்கப்படவில்லை.

பேரணி நடத்த மறைந்த வலசை.செல்வராஜ்,வி.எஸ்.ராமன், தூத்துக்குடி காசிராஜன் போன்றோர் தூத்துக்குடி நகரில் இவ்வட்டார மக்களின் பேரணியை நடத்தி இறுதியில் நடந்த கூட்டத்தில் உரையாற்றபலரைஅழைத்திருந்தனர். அதில் நானும் பங்கேற்றேன்.பேரணி துவங்கியபோது அனுமதி மறுத்த காவல்துறைக்கும் எனக்கும் கடும் வாக்குவாதம் ஏற்ப்பட்டது.
உடன் தூத்துக்குடி கதிர்வேல், செல்லச்சாமி போன்றோர் இருந்தனர்.
ரூபிகா பரிதாபமாக பலாத்காரம் செய்யப்பட்டு சாகடிக்கப்பட்ட நிகழ்வை நீங்களாவது இந்த தேர்தல் களத்தில் பேசியிருக்கலாமே என்ற ஆதங்கத்தை நாங்கள் பிரச்சாரத்திற்கு சென்ற கிராமங்களில் உள்ள மக்களும் குறிப்பாக பெண்கள் கவலையுடன் கேட்டார்கள்.ஆம் உண்மைதான் பேசியிருக்கலாம்.
செய்த களப்பணிகள் என்றும் மக்கள் மனதிலிருந்து நீங்காமல் இருக்கத்தான் செய்கிறது என்பதை இந்த சம்பவம் எடுத்துக் காட்டத்தான் செய்கிறது.
ரூபிகா பிரச்சனைக்கு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குற்பட்ட தற்போதுயுள்ள ஆளுங்கட்சியின் இப்பகுதியின் நிர்வாகிகள் தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டார்கள், என்பதை நீங்கள் நன்கறிவீர்கள், அதில் நீங்கள்தானே எங்களுக்கு துணையாய் இருந்தீர்கள் ஏன் அதைப்பற்றி நீங்கள் பரப்பரையில் பேசவில்லை என்று வினவினார்கள்.
அதுமட்டுமல்லாமல் புதியம்புத்தூர் மலர்குளம், பராக்கிரம பாண்டியனால் வெட்டப்பட்ட பெரிய குளம் ஆகிய குளங்கள்,தூர்வாரி மராமத்து செய்யவும் மற்றும் மழைக்காலத்தில் வெள்ளமானது கோரம்பள்ளம் வரை வந்து கடலில் கலந்து வீணாகும் நீரைப் பயன்படுத்த வழிவகைசெய்யவேண்டுமென
ஓட்டப்பிடாரம் சட்டமன்றத்திற்குட்பட்ட சுமார் ஐம்பது கிராமங்களைச் சேர்ந்த மக்களின் கோரிக்கையாக வைக்கப்பட்டது.
ஓட்டப்பிடாரம் முழுவதும் கிராமப்பஞ்சாயத்துகள் அடங்கிய பகுதிகளாகும்.நகராட்சியோ, பேரூராட்சியோ கிடையாது.அனைத்தும் கிராமங்களே.
கடந்த1989 முப்பதாண்டுகளுக்கு முன்பு திமுக சார்பில் முத்தையா வெற்றி பெற்றார்.அவரின் வெற்றியை எதிர்த்து
1984 ல்காங்கிரஸின் சார்பில் வென்ற சட்டமன்ற வேட்பாளர் ஒ.எஸ்.வேலுசாமி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.அந்த வழக்கை நான்தான் நடத்தினேன்.
ஒ.எஸ்.வேலுசாமி தன் மனுவில் ஓட்டப்பிடாரத்தில் போட்டியிட்ட ஜான் பாண்டியன் கிருத்துவர் என்றும் இது தனித் தொகுதி இதில் அவர் போட்டியிட முடியாதென்றும், எனவே திமுக பெற்ற வெற்றி செல்லது என்றும் வாதாடினார் அவரின் சார்பில் வழக்கறிஞராக இ.பத்மநாபன்வாதாடினார்.பிற்
காலத்தில் இ.பத்மநாபன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியானர்.
இருவரின் வாதங்களையும் கேட்ட நீதிபதி டி.எஸ். அருணாசலம் திமுக வேட்பாளரின் வெற்றி செல்லும் என்று தீர்ப்பளித்தார்.
வறட்சியால் வானம் பார்த்த விவசாய பூமிதான் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் 1989 தேர்தலுக்குப் பிறகு இங்கு திமுக வெற்றி பெரும் சூழல் அமையவில்லை.
அதுபோல விளாத்திகுளம் தொகுதியில் இரத்தினசபாபதி, 1984 ல் குமரகுரு இராமநாதன்,1996 ல் இறுதியில் வென்றதுதான்.
கோவில்பட்டியில் துவக்கத்தில் அ.பூ .சின்னச்சாமி,1977 ல் அ.கோ.சி.தங்கபாண்டியன்,1989,1996 காலகட்டங்களில் நான் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழக்க நேரிட்டது.
அது போலவே 2001,2016 லும் திமுகவின் வெற்றி வாய்ப்பு நழுவியது.

தூத்துக்குடி மாவட்டத்தை உள்ளடக்கிய தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் அடங்கியுள்ள கோவில்பட்டி,விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், இவைகளின்
நில அரசியல் மாறுபட்டது.உளவியல் ரீதியாக இந்த மூன்று தொகுதிகளின் மண்வாசனையும் தூத்துக்குடி,திருச்செந்தூர்,ஸ்ரீவைகுண்டம் ஆகிய மூன்று தொகுதிகளிருந்து
கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் ஆகிய இம்மூன்று தொகுதிகளும் கலாச்சார ரீதியாகவே சற்று மாறுபட்டவை.

#கோவில்பட்டி.,#விளாத்திகுளம், #ஓட்டப்பிடாரம் இம்மூன்று தொகுதிகளின் தொடர்பும் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி,விருதுநகர் மாவட்டம்.,சத்தூர், சிவகாசி, இராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிகளுடன் தான் அதிகத் தொடர்புடையவை.
. கோவில்பட்டி,விளாத்திகுளம்,ஓட்டப்பிடாரம் தொகுதிகளின் தேர்தல் போக்குகள்1949 ல் நடந்த தேர்தல் களிலிருந்தே வித்தியாசமானவை.
அந்தப்பகுதியில் வரலாற்று ரீதியாக கட்டபொம்மன்,சுந்தரலிங்கம்,அழகு முத்து கோண், வ.உ.சி, சுப்ரமணிய பாரதியார்.,எட்டையபுரம் சமஸ்தான அணுகு முறைகள் என்று அனைத்தும் வித்யாசமானவைகள் தான்.

ராஜாஜி கம்யூனிஸ்ட் இயக்கத்தை தடைசெய்து முடக்கியபோது கம்யூனிஸ்ட் தலைமறைவாக கோவில்பட்டி வட்டாரத்தில் வாழ்ந்தனர்.
திமுகவின் நெல்லை மாவட்ட முதல் மாநாட்டை பேரறிஞர் அண்ணாவும் தலைவர் கலைஞரும் முன்னின்று நடத்திய ஊர்தான் கோவில்பட்டி.

உத்தமர் காந்தியும், ஓமந்தூராரும் அடிக்கடி விரும்பி வரும் ஊராக கோவில்பட்டி இருந்தது.
பெருந்தலைவர் காமராஜர் விருதுநகரில் பிறந்தாலும் விடுதலைப் போராட்டத்திலும் காங்கிரஸ் கட்சியின் ஆக்கப்பூர்வ பணிகளுக்கும் தோள் கொடுத்தது கோவில்பட்டி.
நாங்கள் பங்கேற்க விவசாயப் போராட்ட காலத்தில் நாராயணசாமி நாயுடு தலைமையில் விவசாயிகளின் உரிமைக்காக திரண்டெழுந்த
போது இந்த வட்டாரத்தில் மட்டுமே 16 பேர் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் பலியானார்கள்.அப்படிப்பட்ட மண்ணில் தான் 1984 ல் நாராயணசாமி நாயுடு காலமானார்.

பத்திரிக்கையாளர்கல்கி, ஏ.என்.சிவராமன்,மாலன் போன்றோர் தொடர்புள்ள பூமி இது. கு.அழகிரிசாமி,கிரா போன்ற 40 க்கும் மேற்பட்ட படைப்பாளிகளை வழங்கிய மண் இது.இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் இம்மண்ணின் மகத்துவத்தை.....எனினும் இம்மண் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டே வருகிறது.

இம் மண்ணின் உளவியலை யாராலும் புரிந்து கொள்ள முடியாது.எங்களைப் போன்றவர்கள் பிரவேசித்த, போர் குணமான இந்த மண்ணை, கரிசல் பூமியை வணங்குகிறோம்.

வாழ்ந்த காலங்கள் அதிகம், வாழப்போகிற எஞ்சிய காலம் குறைவு.ஆனால் இந்த மண்ணுக்காக உழைத்தது அதிகம்.நாற்பத்தெட்டு ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் உழைப்பை அங்கீகரிக்கவே இல்லைதான்.ஆனாலும் நாங்கள் இம்மண்ணை நேசிக்கிறோம். 
ஆனால் நேர்மையான உழைப்பு வெளிப்படும்.இந்த #கரிசல்மண்ணின் பழைமையான போக்குகள் மாறினாலும் அதன் தனித்தண்மை, மனம் என்றும் மாறாது.

#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
18-05-2019

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...